"திரு" - தேவை தீர்ந்ததுவோ?
செப்டெம்பர் மாத காலச்சுவடு தந்தை பெரியார் சிறப்பிதழ் ஒன்றினை தாங்கி வெளிவந்திருக்கிறது.
பெரியார் சிறப்பிதழில், "அந்தக்காலத்தில் காப்பி இல்லை" பாணியில் இரா வெங்கடாசலபதி கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார்.
தமிழர் விளிப்பு வழக்கில் "திரு " எப்படி வந்துசேர்ந்தது, அதன் பின்னாலுள்ள அரசியல் என்ன என்பது பற்றியெல்லாம் பொருத்தமான ஆதாரங்களோடு சுவைபட தொகுத்துத் தந்திருக்கிறார்.
அக்கட்டுரை வாசித்த அனுபவத்துடன் பலகாலம் என்னுள் கிடந்த"திரு" பற்றிய அபிப்பிராயத்தையும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அத்ற்கு முன்னால் அக்கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதை சுருக்கமாக தந்துவிடுகிறேனே..
1.மனிதர்களை மதிப்புடன் விளிப்பதற்கான ஏற்பாடு தமிழில் பல காலமாக இருந்துவந்துள்ளது.
2. சங்க இலக்கியத்தில் "ஆர்" விகுதி இத்தேவைகருதியே பயன்பட்டது.
3.பக்தி இயக்க காலத்தில் "திரு" மதிப்பைக்குறிக்க பல வகையில் பயன்பட்டுவந்தது.
4.சோழர்காலத்தில் சமூக, படிநிலை ஏற்ற தாழ்வுக்கமைய இம்மதிப்பு முன்னொட்டு, அல்லது பின்னொட்டு மாறிக்கொண்டிருந்திருக்கிறது.
5.ஏற்ற தாழ்வுகளை பின்னுக்குத்தள்ளுமளவுக்கு சமூகமொன்று நவீனமயமாகும்போதுதான் எல்லோருக்கும் பொதுவான மதிப்பு விளிப்பு ஒன்று சாத்தியம்.
5.தமிழ் சமூகம் நவீனமயமாகத்தொடங்கிய காலனியாதிக்க காலத்தில், அச்சியந்திரங்களின் வருகையோடு இதன் தேவை அதிகரிக்கிறது
7. இக்காலத்தில் "அவர்கள்" எனும் பின்னொட்டு இத்தேவைக்காக சேர்க்கப்பட்டது.
8.மகா-ள-ள-சிறீ என்ற முன்னொட்டும் அவர்கள் என்ற இன்னொட்டும் சேர்த்து பயன்படுத்தப்பட ஆரம்பித்தது.
9.இனக்குழுமம், மதம் போன்ற பிரிவுகளுக்கிசைய, காரு, வாரு, ஜனாப், Mr, ஸாகிப் போன்றவை பயன்படுத்தப்பட்டுவந்தன.
10. காலனியாதிக்கவாளர்களின் வர்க்கச்சார்புக்கு சான்றாக, 50 ரூபாய்க்கு குறைந்த சம்பளம் பெறுபவர்களுக்கு எந்த முன்னொட்டும் பின்னொட்டும் சேர்க்கப்படவில்லை.
11.ராஜாஜீ காலத்தில் இந்தியர்களுக்கு பொதுவான மரியாதை முன்னொட்டாக "சிறீ" பயன்படுத்தப்படவேண்டும் என சட்டம் ஆக்கப்பட்டது.
12. எதிர்பார்த்தபடியே இது திராவிட இயக்கத்தின் பலமான எதிர்ப்பினை சம்பாதிய்த்தது.
13.பின்னொட்டுக்கள் அனைத்தையும் நீக்கிவிடுமாறும், சகலருக்கும் பெயருக்கு முன்னால்மரியாதை முன்னொட்டாக "சிறீ" இனை பயன்படுத்துமாறும் ராஜாஜீ ஆணையிடுகிறார்.
14."சிறீ" சமயம் சார்ந்ததாக , ஹிந்து பாரம்பரியத்துடன் இருப்பதால் சகலருக்கும் பொதுவான "திரு" பொதுவான முன்னொட்டாக திராவிட கழகத்தை சேர்ந்தவர்களால் முன்மொழியப்படுகிறது.
15. இந்தி எதிர்ப்பினை நசுக்கியதுபோலவே, இக்கோரிக்கையையும் ராஜாஜீ புறந்தள்ளுகிறார்.
16.காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகலுக்குப்பின்னர், பல்வேறு கருத்துக்கணிப்புகளுக்கும் பிறகு, பெரியாரின் இடையறாத போராட்டங்களின் விளைவாக "திரு" தமிழர்களுக்குப்பொதுவான மரியாதை முன்னொட்டாக நிலை பெறுகிறது.
மிக மேலோட்டமான கட்டுரையின் சாரம்தான் மேலே சொல்லப்பட்டது.
ஈழத்தை பொறுத்தவரையில் 'சிறீ" என்ற முன்னொட்டு பயன்படுத்தவே படாதநிலையில் "திரு" மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ஈழத்துக்கிறிஸ்தவர்களும் "திரு" வை எந்தவித தயக்கமுமின்றி தமிழ் சொல் என்ற வகையில் ஏற்றுக்கொண்டிருப்பதாகப் படுகிறது.
இந்த இடத்தில் ஈழத்தில் நிகழ்ந்த "சிறீ" அழிப்பு கலவரத்தை நினைவுபடுத்துவது பொருத்தமானது.
சிறீ எனும் முன்னொட்டு சிங்கள மேலாதிக்கத்தின் குறியீடாக ஈழத்தமிழர் மத்தியில் பதிந்துவிட்டது. சிறீ லங்கா எனும் பெயர் குறியீட்டு ரீதியான வன்முறையாகவே ஈழத்தமிழர்கள்ஆல் உணரப்படுகிறது.
தமிழக திராவிட இயக்கம் சிறீ இனை வடமொழி மேலாதிக்கக்குறியீடாக கருதி வெறுக்க, ஈழத்தமிழர்கள், அதனை சிங்கள மேலாதிக்கத்தின் குறியீடாக கருதுகின்றனர்.
இந்த மனநிலையின் விளைவே நான் உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் பலர் சிறீ இற்குரிய சரியான வரிவடிவத்தை எழுத விரும்பாமல், அதனை வேண்டுமென்றே சிதைத்து 'சிறீ", "சிறீ லங்கா" என்று எழுதும் போக்கு.
தற்போது, ராம , ஆஞ்சனேய கபட வருகை, ஈழத்தில் இந்திய இந்துத்துவத்துக்கு பல்லக்குத்தூக்குபவர்களுடைய அறியாமை காரணமாக சிறீ யின் மதிப்பு படிப்படியாக உயர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இது இன்று நேற்றல்ல பல கலமாக வே காணப்படுவதற்கு, சிறீலசிறீ ஆறுமுக நாவலர் எனும் பெயர் நல்ல உதாரணம். இதே ஆறுமுக நாவலர் சைவ வேளாள ஆதிக்கத்தை நிலை நாட்ட தமிழை கையிலெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அப்போ ஈழத்தில் "திரு" இந்தளவுக்கு பரவலானமைக்கு உண்மையான காரணம் எது?)
இவ்வாறு குறியீட்டு ஒடுக்குமுறைகளின் எதிர்ப்பாக வந்து நிலை பெற்று விட்ட "திரு" இன்றைக்கும் முற்போக்கான பாத்திரத்தில் தான் காணப்படுகிறதா என்ற கேள்வி பலகாலமாக என்னுள் இருக்கிறது.
நாங்கள் ஒழுங்குபடுத்திய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள் அனுப்புகின்றபோதே இந்த பொறி எனக்குள் பற்றியது.
"திரு" என்எனும் முன்னொட்டு சகலருக்கும் பொதுவானதா?
அதிலும் குறிப்பாக மனிதருக்குப் பொதுவானதா?
இந்தக்கேள்வியுடன்தான் திருவின் மறுபக்கத்தின் மீது எமது பார்வை திரும்பவேண்டியதாகிறது.
"திருமதி " என்று ஒன்று இருக்கிறதே ஞாபகமிருக்கிறதா?
"திரு" சகலருக்கும் பொதுவான முன்னொட்டாக இருந்தால், திருமதி எதற்கு?
'திருமதி" என்பது பெண்ணினம் மீதான மிகக்கேவலமான வன்முறை.
பெண்ணை ஆண் உரிமையாக கருதும் போக்கின் வெளிப்பாடே இந்த திருமதி எனும் முன்னொட்டும் அதனோடு இணைந்த கணவனின் பெயரை சேர்த்து எழுதும் போக்கும்.
பூப்பு நீராட்டுவிழா கொண்டாடுவதற்கு சமமான நாற்றமடிக்கும் கேவலம்தான் "செல்வி" திருமதி" எனும் பிரிப்பு.
இது ஆங்கிலேயர்களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட போக்கு. இப்போ அவர்கள் Ms எனும் பொதுவான விளிப்பை பயன்படுத்த ஆரம்பித்தபின்னும் தொலைந்தபாடில்லை.
பெண் திருமணமானவரா இல்லையா என்பதை முன்னொட்டுப்போட்டு அடையாளம் காணும் சிறுமையை எப்படி சொல்வது?
ம்ரியாதைக்கு போடப்படும் முன்னொட்டா, அல்லது அவமரியாதை செய்வதற்கான முன்னொட்டா?
பாலின வேறுபாடுகளை முன்னிறுத்தும், முதன்மைப்படுத்தும், எல்லா விடயத்திலும் சிறப்புறுத்திக்காட்டும் போக்குத்தான், பெண்ணடிமைத்தனத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் காரணிகளில் முதன்மையானது.
(சில பெண்ணியலாளர்களிடமிருந்து என்னுடைய இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு கிளம்பக்கூடும். பிற்போக்காளர்களிடமிருந்தும்கூட.)
அவ்வாறெனில் மரியதை முன்னொட்டாக எதனைப்பயன்படுத்துவது?
இதற்கான சரியான தீர்வினை இடதுசாரி இயக்கத்திடமிருந்தே பெற்றுக்கொண்டேன்.
"தோழர்" எனும் சிறப்பான விளிப்பு முறை.
இந்த விளிப்பு முறைக்கு மட்டுமே, ஏற்ற தாழ்வுகள் காட்டாத பொதுவான விளிப்புமுறை என்ற அங்கீகாரத்தை வழங்கலாம்.
[புதிய ஜனனாயக கட்சியின் "புதிய பூமி" பத்திரிக்கை "தோழியர் பார்வதி" என எழுதும் ஒருவருடைய கட்டுரைத்தொடரினை பிரசுரித்து வருகிறது. இது 'தோழர்" என்ற விளிப்பின் அர்த்தத்தை உணராத, அடிமடையர்கள் செய்யும் வேலை. இதனை அவர்கள் ஞாயப்படுத்துவார்களாக இருந்தால், அவர்களையும் நான் அடிமடையர் படியலிலேயே சேர்ப்பேன்]
தீவிர இடதுசாரி எதிர்ப்பாளர்கள், தாம் "தோழர் " என விளிக்கப்படுவதை விரும்பாத காரணத்தால அவர்களை "நண்பர்" என்று நான் விளிப்பது வழமை.
இயலாத கட்டத்தில் பெயரை சொல்லி பின்னால் அவர்கள் என்ற பின்னொட்டை சேர்த்துக்கொள்வதுண்டு.
ஆக "திரு" , "திருமதி" என்பதற்கான வழியை திறந்துவிட்டதன்மூலம் காலாவதியாகிவிட்டது.
ஏற்ற தாழ்வுகள் எதையுமே காட்டாத "தோழர்" என்பது, ஏற்றய்தாழ்வுகளை ஒழித்துவிடமுயலும் அதன்பின்னாலுள்ள தத்துவம் போலவே நிலைபெறப்போகிறது.
தனது போதாமைகளை களைந்து உருவாகும் புதிய சொல்லுக்கான வருகைக்கு வழியையும் திறந்துவிடப்போகிறது.



3 பிற்சேர்க்கைகள்:
good write up
hi, i just stopped by ur blog, and read most of the entries,
really nice.
Thodaraddum!
vazhththukkazhudan,
மயூரன், நீங்கள் குறிப்பிட்ட சுட்டியைப் படித்தேன். காந்தியை தங்களது அரசியல் தேவைகளுக்காக உயர்த்திப் பிடிக்கவேண்டிய தேவை ரஜினி ரசிகர்களில் சிலருக்கு இருக்கிறது. இன்றைய சூழலில் மற்ற எந்தக் கட்சிக்கும் அப்படியான அவசரத் தேவை இல்லை. ஏனெனில் ரஜினியின் அரசியல் வேலைத்திட்டம் என்ன? அதை தாங்கி நிற்கும் அரசியல் தத்துவம் என்ன? அதை அடைய எடுக்கும் வழிமுறை யாது? போன்ற ஆரம்பகட்ட கேள்விகளைக் கூட ரஜினியை அரசியலுக்கு இழுக்க நினைக்கும் 'அந்த' கூட்டத்தார் கண்டுகொண்டது கிடையாது; அவர்களுக்கு தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளை அழிக்க ஏதாவது துரும்பு கிடைத்தாலும் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் தயங்கமாட்டார்கள். ஆனால் தமிழ் நாட்டில் இன்னும் 50 வருடங்களுக்கு பெரியாரை பெயரளவிலேனும் ஏற்காத கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது. இந்நிலையில் சில படித்த ரஜினி ரசிகர்களுக்கு இப்படி ஒரு கொள்கையோ, வேலைத்திட்டமோ, வழிமுறையோ இல்லாமல் ஒரு தலைவரை (ரஜினியை) வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை (மாறாக ரஜினியை ஆதரிக்கும் சோ, தினமலர் இந்துத்துவ வாதிகளுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை, ரஜினி வந்தால் அடுத்த நாளே கொள்கை எல்லாம் உருவாக்கித்தர தங்களால் முடியும் என்பதால் அவர்கள் ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை) அனால் இந்த படிச்ச ரசிகர்கள் சிலர் தலைவருக்காக ஒரு அரசியல் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சியில் காந்தி வருகிறார். இதை சில பத்திரிக்கை அமைப்புகளும் இப்போது ஊக்குவிக்கின்றன. அதைத்தவிர ரஜினிக்கும், காந்திக்கும் என்ன் சம்பந்தம்?
Post a Comment