October 12, 2004

இதோ தமிழ் கையெழுத்துணரி

தமிழுக்கான கையெழுத்துணரி ஒன்றினை வடிவமைக்கும் நோக்கில் இணையத்தை துருவியபோது சற்றே பிரயோசனப்படுத்தக்கூடிய VB செய்நிரல் ஒன்று கிடைத்தது.
ஒருவார முயற்சிக்குப்பின்னர் அச்செய்நிரலினை மேலும் சீர்படுத்தி தமிழ் கையெழுத்துணரி ஒன்றினை வடிவமைத்துள்ளேன்.
மூல செய்நிரல் vb 6 அமைப்பில் இருந்ததாலும். என்னிடம் vb.net இறுவட்டுக்கள் கைவசமில்லாததாலும். இச்செயலியை vb 6 இலேயே வடிவமைக்கவேண்டியதாகிற்று.
இதனால் ஏற்பட்ட பின்னடைவு, இச்செயலி யுனிகோட் எழுத்துக்குறிமுறையிலில்லாமல் திஸ்கி குறிமுறையிலேயே இயங்குகிறது.
இடைமுகப்பு வடிவமைப்பில் சற்றே காலத்தை செலவிட்டு கூடுமானவரைக்கும் எமக்கான இடைமுகப்பு பாரம்பரியம் ஒன்றினை உருவாக்க முனைந்துள்ளேன்.(மேற்கின் இடைமுகப்புப் பாரம்பரியத்தை அப்படியே பின்பற்றுவதால் ஏற்படும் உறுத்தல்களோடு எனக்கு உடன்பாடில்லை)
windows xp cleartype font அமைப்பில் இந்த இடைமுகப்பின் முழுமையான அழகினை அனுபவிக்கலாம்.
வின்டோஸ் இயக்குதளத்திற்கான இச்செயலியினை நீங்கள் இலவசமாக இணையத்திலிருந்து இறக்கி பார்வையிடலாம்.
இது வெறும் காட்சிப்படுத்தலுக்கான செயலி என்பதால் இதிலிருந்து உருப்படியான எந்த பயன்பாட்டையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது.
வேண்டுமானால் சின்னப் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருளாக பயன்படுத்தலாம்.
இதனை மேலும் மேலும் பயிற்றுவிப்பதன்மூலம் துல்லியமாக இயங்கவைக்கலாம்.
இதனை பார்வையிடும் உங்களிடம் பின்வரும் வேண்டுகோள்களை முன்வைக்கிறேன்.
1. தயவுசெய்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொண்டு இச்செயலியின் மூலச் செய்நிரலினை (ஆணைமூலம்?) பெற்றுக்கொள்ளுங்கள். mmauran@gmail.com
2. இதனை யுனிகோட் குறிமுறையை கையாளக்கூடியவாறு மாற்றியமையுங்கள். (vb.net பிரயோசனப்படக்கூடும்)
3. இதன் அடிப்படைகளைப் பயன்படுத்தியோ அல்லது வேறு மொழிகளைப்பயன்படுத்தியோ இதன் செயல்பாடுகளை மேம்படுத்துங்கள்.
4. கையால் எழுத, அதனை உணர்ந்து உரைச்செயலி ஒன்றில் அச்சிடுமாறு செய்யுங்கள். (அதுதானே இலக்கு?)
5. இது மிக மிக முக்கியம். நீங்கள் மேம்படுத்திய செயலியினை இலவசமாக விநியோகிப்பதோடு அதன் மூல செய்நிரலினையும் இலவசமாக வழங்குங்கள்.


தமிழ் உரைச்செயலிகளுடன் இணைப்பதற்கான தரமான கையெழுத்துணரி இந்தவருடமே உங்களிடமிருந்து வந்துவிடுமா?

3 பிற்சேர்க்கைகள்:

said...

நல்ல முயற்சி. VB தெரிந்த நண்பர்களிடம் பேசியபிறகு உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

said...

அன்புக்குரிய மயூரன்,

வணக்கம். உங்களுடைய கையெழுத்துணரியை பயன்படுத்திப்பார்த்தேன், வியக்கவைக்கிறது. பால்ம் பைலட்டின் கிராஃபிட்டியைப் (Palm Pilot - Graffiti) பயன்படுத்தி என்னால் எழுதமுடியாத காரணத்தால் அதன் பயன்பாட்டைத் தவிர்த்திருக்கிறேன். பின்னால் Win CE தொழில்நுட்பத்துடன்கூடிய பைக்கணினியில் இதுபோன்ற கையெழுத்துணரி தொழில்நுட்பம் இருந்தபடியால் அதைப் பயன்படுத்திவந்தேன். அதற்கு என்னுடைய கை(தலை)யெழுத்தைச் சொல்லிக்கொடுப்பதைவிட இலகுவாக உங்களின் கையெழுத்துணரிக்கு என்னுடைய தமிழை சொல்லிக்கொடுக்க முடிகிறது.

ஒன்று அல்லது இரு முயற்சிகளில் நான் எழுதும் அ ன் பு ச் ழ எல்லாம் பழகிவிட்டது. செ ழி போன்ற இரு எழுத்துக்கள் போன்ற வடிவத்துக்குத்தான் சற்று சிரமப்படுகிறது. உங்களது மூலச் செய்நிரலினை எனக்கு அனுப்ப இயலுமா? நானும் முயன்றுபார்க்கிறேன்(lsanbu@gmail.com).

அருமையான முயற்சி. சற்றுமுன்னர் அருள்குமரனிடம் சொல்லியதுபோல் - உங்களைப்போன்ற தொழில்நுட்பத்துடன் இயைந்த தமிழ் ஆர்வலகர்களால்தான் தமிழ் வளர்கிறது. தொடர்ந்து செய்யுங்கள். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

said...

மயூரன் தரவிறக்கி முயற்சி செய்து பார்த்தேன்.ஆரம்ப பிரயோசனம் ஒன்றுமில்லை.ஆனால் எதிர்காலத்திற்கு தேவையான தூண்டல் இந்த செயலியின்மூலம் கிடைக்கிறது.நீங்கள் கூறியபடி எழுதுவதை புரிந்து அச்சிடவோ சேமிக்கவோ முடிந்தால் இன்னமும் நன்று.