August 23, 2005

நூறுவீத லினக்ஸ் பதிவு - இதுவரை.



நான் ஒரு லினக்ஸ் வல்லுனன் அல்ல,.

தொழிநுட்பக் காரணங்களுக்காக லினக்ஸ் இயங்குதளத்துக்கு மாறிக்கொண்டவனோ, பயன்படுத்திக்கொண்டிருப்பவனோ அல்லன்.
அரசியல் நிலைப்பாடு காரணமாக அந்த திறந்த ஆணைமூல மென்பொருளுக்கு முயன்று மாறிக்கொண்டவன்.

முற்று முழுதாக லினக்சில் இருந்தபடியே என் சகல கணினிப் பணிகளையும் செய்துகொள்வதற்கு, அதிலும் குறிப்பாக வலைப்பதிவுகளை செய்வதற்கு மிகக்கடுமையான பாதைகளை கடந்து வந்திருக்கிறேன்.

தற்போது, மகிழ்வழிக்கக்கூடியவாறு வெற்றியும் கண்டிருக்கிறேன்.

அந்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசை.

தளையறுப்பு பயணத்தில் இணைந்துகொள்ள விரும்புவோருக்கு இப்பதிவு ஏதேனும் உதவிகள் செய்யுமாயின் மகிழ்வேன்.


1. Red Hat 9

என் வயதொத்த இலங்கை இளைஞர்களுக்கு முதலில் அறிமுகமாகும் லினக்ஸ் வழங்கல் இதுதான்.
லினக்ஸ் என்றால் என்ன என்று பார்ப்பதற்காகத்தான் இதனை நிறுவிக்கொண்டேன். ஒலியட்டை வழமைபோலவே வேலைசெய்யவில்லை. க்னோம் பணிச்சூழல் மிகவும் அநியமாயிருந்தது. தமிழ் எப்படி அங்கே பயன்படுத்தப்பட முடியும் என்ற பரிசோதனையில் அடிப்படையிலேயே தோல்விகண்டேன். எனக்கு அப்போது ஒரு எழுத்துருவை நிறுவுவது எப்படி என்று கூடத் தெரியாது.

2. Tamil Knoppix 3.0

கணினியில் இதனை நிறுவ எனக்கு அப்போது தெரியாது.

முழுக்க முழுக்க தமிழில் இருந்தமை மிகவும் மகிழ்ச்சி யூட்டியது. பலருக்கும் ஆசையாய் காட்டி மகிழ்ந்ததோடு சரி. நிகழ் வட்டு மிக வேகம் குறைவானதாகையா;ல் இதை பயன்படுத்தி எந்த பணியையும் செய்ய நான் முயலவில்லை. கணினியில் சேமிக்கப்பட்டிருந்த சில தமிழ் வலைப்பக்கங்களை படித்ததாய் நினைவு.


3. Knoppix 3.4

முதன்முறையாக நான் பணிகளை செய்ய பயன்படுத்திய லினக்ஸ் இயங்குதளம் இதுதான். நிறுவிக்கொள்ளும் விஷப்பரீட்சையில் இறங்கவில்லை. எனவே எழுத்துரு எதனையும் நிறுவ முடியவில்லை. ஆங்கிலத்தில் செய்யக்கூடியவற்றை செய்துகொண்டேன்.

பட்டுக்கேட்க உதவியது. தமிழ் கோப்புப்பெயர்களை காண்பிக்கவில்லை.

4. Mandrake 10.0

முழுமையாக நான் என் பணிகளை செய்யத்தொடங்கிய இயங்குதளம்.
தம்ழிலேயே அதன் பணிச்சூழல் இருந்தமை மிகவும் மகிழ்ச்சியளித்தது.

KDE தமிழ் கோப்பு பெயர்களை காண்பிக்கவில்லை. அதற்கு நாட்டிலஸ்ஸை பயன்படுத்தினேன்.
முதன்முறையாக தமிழில் பணியாற்ற முடியுமா என்பதை பரிசோதிக்க ஆரம்பித்தேன்.

மான்ட்ரேக்கில் உழ்ள்ளடக்கப்பட்டிருந்த திறந்த எழுத்துருவான பரனர் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. தமிழ் வலைத்தளங்கள் எல்லாம் புதுப்பொலிவுடன் காட்சிதந்தது. ( என்னுடைய வலைப்பதிவிஉ இப்போது அந்த எழுத்துருவுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை லினக்சில், சீரமைக்கப்பட்ட எழுத்துரு தொழிநுட்பத்தில், பரனர் எழுத்துருவில் firefox கொண்டு என் வலைப்பதிவை பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கும் என்று..

சுரதா செயலி IE இற்கு மட்டுமே சிறப்பாக வேலை செய்துகொண்டிருந்தது.
தமிழ் உள்ளீடு என்கிற பெரும் பிரச்சனையை தாண்டுவதற்கு அதனை பயன்படுத்தும் பல்வேறு முயற்சிகள் தோற்றுப்போன நிலையில், சுரதா செயலியில் சில மாற்றங்கள் செய்தேன்.

தேவையற்ற அட்டவணைப்பகுதிகள், அலங்காரப்பகுதிகள், IE க்கு மட்டுமே அனுசரிக்கக்கூடிய ஜாவா ஸ்கிரிப்ட் பகுதிகள் எல்லாவற்றையும் நீக்கி, FIre Fox 1.0.1 பிரச்சனை இல்லாமல் இயங்கக்கூடியவண்ணம் அதனை வடிவமைத்து பயன்படுத்த ஆரம்பித்தேன்.
எனக்கு பிடித்த யுனி ஆவரங்கால் விசைப்பலகை வடிவமைப்புக்கென அதனை செய்ததால் , யுனி ஆவா எழுதி என்று பெயரிட்டு நண்பர்களுக்கு விநியோகித்தேன்.

லினக்சை பயன்படுத்தும் தமிழ் நண்பர்களுக்கு அது மிகவும் பிடித்துப்பொயிற்று.

ஆனால், சேமிக்கும் வசதி இன்மை, அடிக்கடி நகல் எடுத்து ஒட்டவேண்டியிருத்தல், நீண்ட கட்டுரைகளை எழுதுவது விஷப்பரீட்சையாக இருத்தல் போன்றவை பெரும் குறைபாடுகளாக இருந்தன.

அப்போதுதான் தமிழ் GTK IM பற்றி கேள்வியுற்றேன்.

ஆனால் அதனைஒ நிறுவ முடியாமல் போனது.

5. Mandrake 10.1

முதன் முறையாக வின்டோஸ் இல்லாமல் கணினியை பயன்படுத்தலாம் என்கிற நம்பிக்கையை தந்த வழங்கல் இதுதான்.

GTK IM இனை (தமிழ்) வெற்றிகரமாக நிறுவிக்கொண்டேன். ( புதிய வெளியீட்டுக்கான பதிப்பெண் மாறியிருந்ததால் முன்பு நிறுவ முடியாமலிருந்தது. பின்னர் ஒருவாறு, நிறுவிக்கொண்டேன்.)

இப்போது கிம்ப், ஜீஎடிட் போன்றவற்றில் பிரச்சனையின்றிதமிழை உள்ளிட முடிந்தது. ஆனால் அஞ்சல், தமிழ் 99 வகை விசைப்பலகை அமைப்புக்கள் கொஞ்சம் கடினம்தான் அஞ்சலில் அடிக்கடி உயர்த்தி விசையை அழுத்த வேண்டியிருக்கும் தொல்லை எனக்கு பிடிக்கவில்லை. அத்தோடு மறுபடியும் நகலெடுத்து ஒட்ட வேண்டிய பிரச்சனை. வேறு வழியின்றி, எனது யுனி ஆவா எழுதியையும், gedit ஐயும் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருந்தேன்.
இணைய இணைப்பு இல்லாததால் மேலதிக பிரச்சனைகள் தோன்றவில்லை.

6. VectorLinux SOHO 5.0.1

சரியான வழங்கலைத்தேடி அலைந்த நெடும்பயணத்தில், லன்கா லினக்ஸ் பயனாளர் குழும நண்பர்கள் மூலம் என்னை வந்தடைந்தது இது.
இந்த செக்கன் வரைக்கும் இதைப்போன்ற வேகமான வழங்கல் ஒன்றை நான் பார்த்ததில்லை.
இதில் பணியாற்றியவர்கள், வின்டோஸ் 98 ஐ புதிய கணினிகளில் நிறுவி பயன்படுத்தினாலேயொழிய மற்றைய எந்த இயங்குதளத்திலும் திருப்தி காண்பது நடவாத காரியம். அப்படி ஒரு வேகம்.

இதனை பயன்படுத்த தொடங்கிய காலத்தில் ஓரளவுக்கு லினக்சில்  தொழிநுட்ப விசயங்கள் கைவரத்தொடங்கியிருந்தது.

ஏறத்தாழ தமிழுக்கென எதுவுமே இல்லாத அடிப்படை உள்ளடக்கங்களை மட்டுமே கொண்டிருந்த இந்த வழங்கலில் எல்லாவற்றையும் நிறுவிக்கொண்டேன்.
கே டீ ஈ இன் தமிழ் பொதிகள் எல்லாம் போட்டபிறகு முழுத்தமிழ் இயங்குதளமாக மிளிர்ந்தது.

அங்கேயும் உள்ளீட்டுப்பிரச்சனை.

பழைய பல்லவி.

இறுதிக்காலத்தில் வன்பொருள் பிரச்சனை ஒன்றில் இவ்வழங்கல் வெறுத்துப்போனது.

இவ்வழங்கலை பயன்படுத்தும்போதுதான், என்னுடைய தமிழில் பெயர்வைக்கப்பட்ட கோப்புக்கள் ஏன் தெரிவதில்லை என்ற உண்மையை கண்டு பிடித்தேன்.
இதற்கான தீர்வை ஒருவாறு கண்டறிந்து ஆவணப்படுத்தியும் வைத்திருக்கிறேன்.

7. Open Suse 9.3 (Novell)

இதன் வருகையோடுதான் எனது முழு நேர இயங்குதளமாக லினக்ஸ் மாறியது. வின்டோஸ் எக்ஸ் பீ தொலைகாட்சி பார்ப்பதற்கும், வின்டோசில் மட்டுமே இயங்கும் என்ற நிலையிலிருக்கும் செயலிகளை பயன்படுத்த வேண்டிய தேவை வரும்போதும் மட்டுமே இப்பொது பயன்படுகிறது.

suse தன்னுள்ளே scim உள்ளீட்டு முறையை எனக்காக வைத்திருந்து உவந்தளித்தது.
ஏறத்தாழ, வின்டோசின் கீ man இற்கு சமமான இவ்வுள்ளேட்டு முறை என்னுடைய தமிழ் பணிகளை மிக இலகுவாக்கியது. மிகுந்த திருப்தி அளித்தது.

இந்த உள்ளீட்டு முறை ஏற்கனவே நான் பயன்படுத்திய மான்ட்ரேக் வழங்கல்களுள்ளும் இருந்திருக்கிறது. நான் தான் கண்டுகொள்ளவில்லை.

எதுவானாலும் என்னுடைய பரிந்துரை, தமிழர்களுக்கு suse 9.3, mandriva 10.2 தான். ( suse தமிழில் இடைமுகப்போடு இல்லை ஆனால் கே டீ ஈ இனை தமிழ்ப்படுத்தி பயன்படுத்தலாம்). fedora எனக்கு விருப்பமில்லை

தற்போது சுரதாவின் ஈழம் செயலி fire fox இல் வேலை செய்கிறதில்லை என்பதை தவிர ( அதற்காகவேதான் அதனை எனது தளத்திலிருந்து நீக்கியுள்ளேன்.) வேறு பிரச்சனைகள் இல்லை.

scim இற்கென யுனி ஆவா விசைப்பலகை வடிவத்துக்கான கோப்பு ஒன்றினை வடிவமைத்து தமிழ் லினிக்ஸ் குழுமத்தில் பதிவேற்றியுள்ளேன். எமக்கான விசைப்பலகை அமைப்பை நாமே வடிவமைத்துக்கொள்ளக்கூடியதாக இருப்பது, அதுவும் எளிமையாக இருப்பது scim இன் சிறப்பு.


மேலதிகமாக . லினக்ஸ் தமிழ் உள்ளீட்டு முறைகள் பற்றி அறிய விரும்பினால் விக்கிபீடியாவுக்கு செல்லுங்கள்.

நீங்கள் மான்ட்ரேக் புதிய feடோரா வழ்ங்கல்கள், சூசி போன்றவற்றை பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பொதி மேலாண்மை செயலியில் (rpm drake, yast 2 போன்றவை) scim என தேடி வருகிற அத்தனை பொதிகளையும் நிறுவிக்கொள்ளுங்கள். அது போதும் இதை விட எளிமையாக உதவிக்குறிப்பு எழுத முடியாது. முழுமையான உதவிக்குறிப்பு தயாரித்து வருகிறேன். கட்டாயம் வலைப்பதிவாக இடுவேன்.





15 பிற்சேர்க்கைகள்:

said...

>>அரசியல் நிலைப்பாடு காரணமாக அந்த திறந்த ஆணைமூல மென்பொருளுக்கு முயன்று மாறிக்கொண்டவன்.<<
Nandru! vaalthukkal.
enakkum ithai viraivil seiya Ennam. atharkku ippathivu uthavum.
Nandrigal (please bear my tanglish)

said...

பயனுள்ள பல சுட்டிகளை தந்ததற்கு நன்றி மயூரன். சில காலமாக டிஸ்ட்ரொவாட்ச்சை நான் மறந்தே விட்டிருந்தேன். அதையும் கவனித்து வரவேண்டும் இனி.

விண்டோசை இன்னும் முழுமையாக விட முடியவில்லை, விட முடியுமா என்றும் தெரியவில்லை. இப்போதைக்கு இரட்டைக் குதிரை சவாரிதான்.

said...

சபாஷ்!!!!

said...

//தற்போது சுரதாவின் ஈழம் செயலி fire fox இல் வேலை செய்கிறதில்லை என்பதை தவிர ( அதற்காகவேதான் அதனை எனது தளத்திலிருந்து நீக்கியுள்ளேன்.)///

பயங்கரமான IE எதிர்ப்பாளனாய் இருப்பீர் போலிருக்கு. நானும் firefox தான் உபயோகிக்கிறேன். வீட்டு கணினி windows XP போட்டதால் spyware நிரம்பிப்போய் உபயோகிக்கமுடியாமல் போனது. நல்லதாய்ப்போச்சு என்று fedora லினக்ஸ் நிறுவினேன்(தமிழாக்கத்துடன்). ஆனாலும் பணியில் விண்டோஸ் செயலிகள் கட்டாயமாக உபயோகிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் விண்டோஸை விட்டொழிக்கமுடியவில்லை. மேலும் உங்க அளவுக்கு லினக்ஸ் ஆர்வம் ஏனோ இல்லை.

அப்புறம் உங்கள் மடல்களை தமிழ்லினக்ஸ் குழுமத்தில் அடிக்கடி பார்த்த ஞாபகம் இப்போது வருகிறது. நானும் ஒரு காலத்தில் தமிழ்லினக்ஸ் ஆர்வத்துடன் fedoraவை தமிழாக்கம் செய்யத்துவங்கினேன். ஆனால் பின்னர் கைவிட்டுவிட்டேன். இப்போது சுஜாதாவின் ழ குழுவினர் பெரும்பாலும் தமிழாக்கம் செய்துமுடித்துவிட்டனர்.

said...

சுஜாதாவின் குழுவினர் என்ன செய்தார்கள் என்று வெங்கட் இடம்தான் கேட்கவேண்டும்.

பணியில் என்னென்ன செயலிகளை ( விண்டோசுக்கானவை) உபயோகிக்கிறீர்கள்? (கட்டாயம் பதில் சொல்லுங்கள்)

fedora வின் எந்த பதிப்பை உபயோகித்தீர்கள்?
மான்ட்ரிவா, சூசி பொன்றவற்றை ஒருமுறை முயற்சித்து பாருங்கள் ( அண்மைய பதிப்புக்களை மட்டும்)

தமிழ்லினிக்ஸ் எமக்கெல்லாம் பெரும் வரப்பிரசாதம்.

எத்தனையோ மடங்கு வசதிகளையும் நன்மைகளையும் உயர் தொழிநுட்பத்தையும் தரும் உலாவி ஒன்று இலவசமாக திறந்த நிலையில் கிடைக்கும்போது,
ஒன்றுமே இல்லாத IE இனை, மிcரொசொப்ட் இன் ஏகபோகத்தின் வடிவமொன்றினை பயன்படுத்துபவர்களின் அறியாமைதான் எரிச்சல் வர வைக்கிறது.

தளையறு மென்பொருள் உலகின் மிகப்பெரும் வெற்றிகளுள் ஒன்று firefox.

said...

//சுஜாதாவின் குழுவினர் என்ன செய்தார்கள் என்று வெங்கட் இடம்தான் கேட்கவேண்டும்//

அது சரி. ஆனாலும் வெங்கட் ரொம்ப டென்ஷன் ஆயிட்டார் ;)

என் பணியில் மின்னஞ்சலுக்கு outlook என்றாகிவிட்டது. ஏனென்றால் meeting maker அது இதென்று சில உபயோகங்களால். அப்புறம் Remedy என்கிற bug tracking system, fibre channel analyser அப்படினு எதை எடுத்தாலும் விண்டோஸ் தேவைப்படுதே. நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? நீங்களும் பணிக்கு செல்ல ஆரம்பித்தால் இது தவிர்க்கமுடியாதது.

//தளையறு மென்பொருள் உலகின் மிகப்பெரும் வெற்றிகளுள் ஒன்று firefox.//
நிச்சயமாக. அதுவும் IEன் ஓட்டைகள் பெரும் பிரச்சினையாக ஆகும் நேரத்தில் சரியாக வெளிவந்து பெரும் வெற்றி அடைந்துள்ளது. ஆனாலும் எத்தனையோ பேர் இன்னும் IEயை விடமாட்டேனென்கிறார்கள். இப்படி கணினி வல்லுநர்களே செய்வது வருந்தத்தக்கது.

said...

உங்க பரிந்துரைப்பு வசதி நட்சத்திரங்கள் வேலை செய்யமாட்டேங்குது. கொஞ்சம் கவனிங்க. ஒருவேளை IEல வேலை செய்யுமோன்னு பார்த்தேன் ;) இல்லை. இன்னோன்னும் பார்த்தேன் - 'your browser sucks. get firefox'. அடி சக்கை.

said...

கொஞ்சம் உயர் நுட்பம் என்று வரும்போது லினக்ஸ் சில வேளைகளில் கையை விரிக்கிறது. வர்த்தக ரீதியாக பெருவெற்றி அளிக்கும் என்ற நிச்சயம் உள்ள , ஆனால் மிகப்பெரும் செலவை கொள்ளும் மென்பொருள் தயாஅரிப்பில் வர்த்தக மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களே ஈடுபட முடிகிறது.

எனது நண்பர் ஒருவர் நூறு வீத லினக்ஸ் இணைய தொலைக்காட்சி ஒன்றை நடத்துகிறார்.
ஒளிப்பட தொகுப்புக்கான மென்பொருட்கள் விசயத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு பிடிவாதத்துடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.


IE ஐ விடமாட்டென் என்பவர்களின் ஒரேயொரு அடிப்படைக்காரணம், பழக்கதோஷம், புதியதற்கு மாறுவதற்கான இயல்பான தயக்கம். சிலருக்கு, பழகி வந்த ஒன்றை விட்டு மாற விருப்பமில்லை. எலாவிசயத்திலும்,. புதியதை தேடும் விருப்பம்- அதிசயம்தான்- என் நண்பர் மட்டத்தில் மிக மிக குறைவானதாகக்த்தான் இருக்கிறது. புதியதை துரு வி தேடி, ஆராயும் மநநிலை கொண்ட நண்பர்கள் வெகு சிலரே அவர்கள் எல்லோரும் இப்போது firefox பயன்படுத்துகிறார்கள்.

ஏற்கனவே இருப்பவற்றை பேசமல் ஏற்றுக்கொள்வதற்கு சோம்பலும் ஒரு காரணம், புதிதானால், அதற்கென நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், தேட வேண்டும் சும்மா போங்கய்யா....

இன்னுமொரு சுவையான விசயம்,

என் நண்பரும், பௌத்த துறவியுமாண மெத்தவிகாரை என்பவர் தான் லினக்ஸ் மட்டுமே பயன்படுத்துவதக்ற்கான காரணம் சொன்னார்.....

இல்லை இப்ப வேணாம், அது ஒரு தனிப்பதிவாக இருக்கட்டும் சுவாரசியமாய் இருக்கும்.

அங்கே சந்திப்போம்.

suse இப்போது திறந்த நிலையில் கிடைக்கிறது.
அண்மைய பதிப்பொன்றை கட்டாயம் பயன்படுத்திப்பாருங்கள் வெங்கட்ரமணி. இவ்வளவு சொல்கிறேனல்லவா?
அதில் உண்மையிலேயே கவர்ச்சியும் , வித்தியாசமும் இருக்கிறது

said...
This post has been removed by a blog administrator.
said...

பரிந்துரைப்பு பிரச்சனைதான். நட்சத்திரமாக இருப்பதால், நட்சத்திரங்களுக்கு கோபமோ என்னவோ...

இப்போது எமது சிறீ லன்கா ட்டெலிகொம் இன் வெளிநாடுகளுக்கான இணைய அகலப்பாட்டை இணைப்பு செயலிழந்துபோயிருக்கிறது. வெளி நாட்டு தளங்கள் மிக மெதுவாக இறங்குகிறது. blogger பக்கம் போகவே முடியாமலிருக்கிறது. மின்னஞ்சல் மூலம் தான் பதிவுகளை செய்துகொண்டிருக்கிறேன். படங்கள் ஊட போட முடியவில்லை.

வார்ப்புருவை சரிசெய்வது இப்போதைக்கு இயலுமான காரியமாக படவில்லை.

பாருங்களேன் இந்த நேரம் பார்த்து இலங்கையின் இணையம் காலை வாருகிறது..

said...

நிச்சயம் suse உபயோகித்து பார்க்கிறேன் நேரம் கிடைக்கும்போது.

//நட்சத்திரமாக இருப்பதால், நட்சத்திரங்களுக்கு கோபமோ என்னவோ...//
ஹாஹாஹா. சரி அப்புறம் சரிசெய்யுங்கள்.

said...

நல்ல உபயோகமுள்ள பதிவு!!!.(இதை IE இல் பதிவு செய்கிறேன் திட்ட வேண்டாம் மயூரன்)
..aadhi

said...

மயூரன்,
எனக்கு எல்லாமே நல்லா புரிஞ்சிரிச்சி.

ஆமா, இந்த 'லினக்ஸ்'ன்னா என்ன? எதுவும் சாப்டற ஐட்டமா??!!

said...

மயூரன்,
எனக்கு எல்லாமே நல்லா புரிஞ்சிரிச்சி.

ஆமா, இந்த 'லினக்ஸ்'ன்னா என்ன? எதுவும் சாப்டற ஐட்டமா??!!

said...

இந்த இடுகையில் உபுண்டுவைச் சேர்த்து இற்றைப்படுத்தலாமே :)