"ரீ" பிரச்சனை
ரீ மட்டுமல்ல, இன்னும் பல சந்தேகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டுக்காரருக்கு, ஈழத்தமிழ் உச்சரிப்பு தொடர்பில் உண்டு.
முதலில் மிக உறுதியாகவும் கடுமையாகவும் அனைவருக்கும் ஒன்று சொல்வேன்.
யாழ்ப்பாணம் தான் ஈழம் என்றில்லை.
அது ஈழத்தின் சிறு பகுதி.
யாழ்ப்பாணத்தமிழ் என்பது தமிழீழ பேச்சுவழக்கின் பல்வகைமையில் ஒரு கூறு.
அதுவே ஈழத்து மொழி வழக்கு அல்ல.
குமுதம் என்ற நிறுவனம், தன் இணையத்தளத்தில் யாழ்மணம் என்றொரு "ஈழத்து விசயங்கள் " தாங்கிவரும் சஞ்சிகை ஒன்றை வைத்திருக்கிறது.
அதன் பேரை பார்த்தபோது சகிக்கமுடியாத கோபத்துக்கு ஆளானேன்.
உச்சரிப்புக்களில் எது சரி எது தவறு என்ற வாதம் வீணானது. அர்த்தம் எதுவுமற்றது.
அவர்கள் ர என்வரிசை எழுத்துக்களை ர (ra) வாக உச்சரிக்காமல், இற்ற (tra) என்பதுபோல உச்சரிப்பர். இதில் எமது பிரதேசத்தில் ற்ற என்பதை தமிழ் நாட்டில் இட்ற என்பதுபோல உச்சரிப்பர்.
அதனால் தான் யாழ்ப்பாணதமிழர், தமது ஆங்கில சொற்களை தமிழில் எழுதும் முறையில் ரீவீ, ரீ, ரொரான்ரோ என்று தயக்கமின்றி பயன்படுத்துகின்றனர்.
அவ்வாறு உச்சரிக்காத எம் போன்றவர்களுக்கு இது பெரும் உறுத்தல்தான்.
விக்கிபீடியாவில் பொதுவாக பின்பற்றப்பட வேண்டிய வழிமுறையாக ரொரான்ரோ என்பதே பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அங்கே நான் அதை மறுத்திருக்கிறேன், விவாதம் நடைபெறுகிறது.
உச்சரிப்புக்கு பேர்போன பழைய இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் ர விசயத்தில் தெளிவாக பொதுவான உச்சரிப்பையே பயன்படுத்தினர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
யாழ்ப்பாண பிரதேச வழக்கை அவர்கள் அந்த விசயத்தில் தவிர்த்தே வந்தனர்.
புலம்பெயர் சூழலிலும் ஈழத்து இலக்கிய பொதுப்போக்கிலும், யாழ்ப்பாணத்தமிழர்களே பெரும்பான்மையாக இருப்பதால், இந்த பிரதேச வழக்கு ஏதோ பொதுப்போக்கு என்பது போல பயன்படுத்தப்பட்டும் அறிமுகப்படுத்தப்பட்டும் வருகிறது.
அடுத்து வரும் கேள்வி, அப்படியாயின் மயூரன் ரீ றீ இரண்டையும் ஒரே மாதிரித்தான் உச்சரிக்கிறீர்களா என்பது.
இல்லை.
Ri, ri இடையிலான வேறுபாட்டை தெளிவாகத்தான் நான் உச்சரிக்கிறேன்.
யாழ்ப்பாணத்தமிழருக்கு இதை எளிதாக விளக்க ஒரு வழி உண்டு.
நாங்கள் சின்ன வயதில் தமிழ் நெடுங்கணக்கு படித்தது நினைவிருக்கா,
அதில் ர் எழுத்த எப்படி சொவோம்?
ஈரன்னா என்று சொல்வோம்.
ஆம். அதுதான் நான் பயன்படுத்தும் உச்சரிப்பு.
ஆங்கில சொற்களை தமிழில் எழுதுவதற்கான நியம முறை ஒன்று இன்னமும் எம்மிடத்தில் இல்லை. தேவையா என்பது தெரியவில்லை. இது இன்னொரு விவாதத்துக்கான தொடக்கப்புள்ளியாக இருக்கும்
விக்கிபீடியாவில் இவ்வாறான பிரதேச வழக்கு, பொதுவான பயன்பாட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது, வேதனையளிக்கிறது


27 பிற்சேர்க்கைகள்:
toranto
டொரான்டோ
றொரான்றோ
ரொரான்ரோ
மூன்றில் அது ஆங்கில உச்சரிப்பை ஓரளவு சரியாக உச்சரிக்கிறது என்றால்
முன்றாவது தான் அதை விக்கிபீடியா சொன்னதில் என்ன தப்பு
எனக்கு பிரதேச வழக்குகளின் நுணுக்கம் அறியும் அளவுக்கு தமிழில் புலமை இல்லை. ஆனால், பரிந்துரைக்கப்படட சொல் ரொறன்ரோ. தமிழ்நாதத்தில் இப்படித்தான் குறிப்பிடப்படுகின்றது.
ர என்பது ta தானே.
ற என்பது ra or Ra தானே.
அப்படி இல்லையெனில், ta என்பதை எப்படி தமிழில் சொல்வது.
//மூன்றில் அது ஆங்கில உச்சரிப்பை ஓரளவு சரியாக உச்சரிக்கிறது என்றால்
முன்றாவது தான் அதை விக்கிபீடியா சொன்னதில் என்ன தப்பு//
இதுபற்றி நானும் பல இடங்களில் விவாதம் செய்து இருக்கிறேன். toranto
என்பது ரொரான்ரோ என்ற உச்சரிப்பை ஒத்திருக்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? எங்களுக்கு டொராண்டோ என்பதைத்தான் ஒத்து இருக்கிறது!!!!
இதுபற்றிக் கருத்து கூறிய மூத்த சகோதரி சந்திரவதனா அவர்களே முன்பு சொன்னார், ஆங்கிலத்தைத் தமிழ் படுத்தும்போது அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ப மாறுபடும். எனவே அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி பேசிக் கொள்ள வேண்டியதுதான்!
It's Toronto, not toranto !!!
ஓ ஆமாங்களா? அப்ப Toronto வேற toranto வேறங்களா? இரண்டுக்குமான உச்சரிப்பு மாறுமுங்களா? குழைக்காட்டான் toranto என்றுதானே எழுதி இருந்தார்?
நானும் நீங்களும் Toranto வை எப்படி உச்சரிக்கிறோம் என்பதைவ விடுவம். இந்தப் பெயரை Toranto வில் வதியும் ஆங்கிலேயர்கள் எப்படி உச்சரிக்கிறார்கள்? என்று அறிய ஆசை!
மூர்த்தி அவர்களே சந்தேகம் இருந்தால் விக்கி சென்று பாருங்கள்.
http://en.wikipedia.org/wiki/Toronto
:-)
//ர என்பது ta தானே. //
ஐயா சத்தியமா புரியலை. அப்ப toastஐ ரோஸ்ட்னு சொல்லனுமா? அர்த்தமே மாறிடுதே.
வணக்கம் மயூரன் நட்சத்திரத்துக்கு தாமதமான வாழ்த்துக்கள்.
ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் போகாத ஊருக்கு வழி சொல்வது என்று.இந்த விவாதம் போகாத ஊருக்கு வழி சொல்வது போன்றது தாங்கள் சொல்வது தவறென்று யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சயந்தன் சொல்வது போல ஆங்கிலேயர் எப்படி உச்சரிக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்
|||||
//
ஐயா சத்தியமா புரியலை. அப்ப toastஐ ரோஸ்ட்னு சொல்லனுமா? அர்த்தமே மாறிடுதே.//
// ர என்பது ta தானே.
ற என்பது ra or Ra தானே.
அப்படி இல்லையெனில், ta என்பதை எப்படி தமிழில் சொல்வது. //
ta எப்படி ர ஆகும் என்பதை இந்தியத்தமிழர்கள் ஒருபோதுமே புரிந்துகொள்ள மாட்டார்கள்.
ta ஏன் ர ஆகாது என்பதை யாழ் வாசிகள் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
இந்தவிஷயம் எனக்கு நன்றாக தெரியும்.
இவ்விரு நிலைப்பாடுகளையும் புரிந்துகொண்டவன் என்ற வகையில் இந்த பிரச்சனையை தீர்த்துவைக்கும் பொறுப்பினை நான் ஏற்றுக்கொண்டேன்.
இதற்கு ஒரே வழி நான் ஒலிக்கோப்பு உஒன்றினை பதிவேற்றுவது. இடம் தேடிக்கொண்டிருக்கிறேன். விரைவில் செய்கிறேன்.
ரோஸ்ற் !!!
அவர்களும் பல விதமாகத்தான் உச்சரிப்பதாக தெரிகின்றது. :-))
ரகசியம்
ரமேஸ்
ரயில்வே
இது தமிழ் இலக்கணக் கொலை போல் உங்களுக்கு தெரிகின்றதா.
:-[
இரகசியம்
இரயில்
??
என்னென்னவோ எழுதுகிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை... ஒரு மொழயிலுள்ள அனைத்து எழுத்துக்கும் மற்ற மொழிகளில் சமமான எழுத்து இருப்பது சாத்தியமில்லாத ஒன்று. அந்த மொழியைப் பேசும் மக்கள் எவ்வாறு உச்சரிக்கிறார்களோ, அதற்கேற்பவே நமது எழுத்துக்களில் நெருக்கமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக "ட" என்பது Tக்கு சமமானது.
அழகப்பன் என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது நான் AZHAGAPPAN இவ்வாறுதான் எழுதுவேன். ஆனால் என்னுடைய தந்தையார் (அவர்கள் படித்தது 2ஆம் வகுப்பு வரை மட்டுமே. இலங்கை மண்ணிலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்) ஆங்கிலத்தில் Zம் Hம் அடுத்தடுத்து வராது. அவ்வாறு ஒரு வார்த்தைகூட கிடையாது என்று கூறி, ALAGAPPAN என்றே எழுதும்படி கூறுவார்கள். ஆனாலும் நான் மாற்றவில்லை என்பது வேறு விஷயம்.
பிறமொழி உச்சரிப்புக்களை தமிழில் எழுதுதல் தொடர்பான உரையாடலுக்கு இந்த பதிவு இட்டுச்செல்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும்.
சி.சிவசேகரம் தனது மொழி பெயர்ப்புக்களில் சர்ச்சைக்குரிய நடைமுறை ஒன்றை கையாள்கிறார், அதாவது உச்சரிப்புப்பிரச்சனை வரும் எழுத்துக்களை, ஆங்கிலமாகவே போடுவது.
உதாரணமாக,
க்யூbா
haரியானா
அவருடைய கவிதை பதிந்தேன் அல்லவா, அதில் நிறைய வருகிறது போய் பாருங்கள்.
(b க்கு பக்கத்தில் நான் யுனிகோடில் பிரச்சனை இல்லாமல் அரவு போட்டது லினக்சில் மட்டும்தான் சாத்தியம். கீ man ஆல் முடியாது.(என்று நினைக்கிறேன்);-)
மயூரன்
ta - ர
ra - ற
da - ட
இப்படி உச்சரிப்பதில் ஏன் தவறு காண்கிறீர்கள்?
அன்பின் மயூரன்,
நல்ல, ஆரோக்கியமான விவாதம்.
//யாழ்ப்பாணம் தான் ஈழம் என்றில்லை.
அது ஈழத்தின் சிறு பகுதி.
யாழ்ப்பாணத்தமிழ் என்பது தமிழீழ பேச்சுவழக்கின் பல்வகைமையில் ஒரு கூறு.
அதுவே ஈழத்து மொழி வழக்கு அல்ல.//
உண்மை. இதை நானும் ஆணித்தரமாகச் சொல்லிக்கொள்கிறேன். ஏற்கெனவே சொல்லியுமிருக்கிறேன்.
முதலில் அடிப்படைச்சிக்கல் என்னவென்றால், தமிழில் எழுதப்பட்டதை உச்சரிப்பதில்தான் எங்களுக்கிடையில் வேறுபாடு. அதாவது தமிழில் ‘ர’, ‘ற’ வரும் சொற்களை எழுதிவிட்டு வாசித்தால் நாமனைவரும் ஒரேமாதிரியாக வாசிக்கப்போவதில்லை. அதுதான் அடிப்படைச்சிக்கலேயல்லாமல், ஆங்கிலச்சொல்லைத் தமிழில் சொல்வதன்று. தாம் எப்படி ‘ர’ ‘ற’ வை உச்சரிக்கிறோமோ அதே உச்சரிப்பு ஆங்கிலத்தில் வரும்போது அந்தத் தமிழெழுத்தைப்போடுகின்றனர்.
நீங்கள் குறிப்பிடும் ‘ர’, ‘ற’ உச்சரிப்பு வித்தியாசங்களைப் புரிந்துகொள்கிறேன். ‘ர்’ என்பதை அது மெய்யாக வரும் சந்தர்ப்பத்தில் நீங்கள் சொல்வதைப்போல் தான் உச்சரிக்கிறேன். ஆனால் ‘ர்’, ‘ற்’ இரண்டுக்குமிடையில் நீங்கள் காணும் வேறுபாட்டைவிட நான் (அல்லது யாழ்ப்பாணத் தமிழ் கதைப்பவர்கள்) காணும் வேறுபாடு மிகமிக அதிகம். அதாவது ‘ர’ உயிர்மெய்யாக வரும்போது கிட்டத்தட்ட ‘ற்’ இன் வல்லின உச்சரிப்பைப் பெறும். இது எனக்குச் சில சந்தர்ப்பங்களை இலகுவாக்குகிறது. ‘Tin’, ‘Din’ என்பவற்றின் உச்சரிப்பைத் தமிழில் எழுதும்போது முறையே ‘ரின்’, ‘டின்’ என்று எழுதுவேன். ஆனால் பலருக்கு இரண்டுமே ‘டின்’ தான்.
மேலும் தமிழகத்தில் ‘ர’, ‘ற’ என்பவற்றிற்கிடையில் வித்தியாசமிருப்பதாக நினைக்கவில்லை. குறிப்பிட்ட எழுத்துக்களைப் பற்றிக் கதைக்கும்போது சின்ன ற, பெரிய ற என்றே விழிக்கின்றனர். ‘ரிக்கெட்’ என்று எழுதினாலும் ‘றிக்கெட்’ என்று எழுதினாலும் ஒரே உச்சரிப்பில்தான் வருகிறது. இதை முனைவர் அரசேந்திரன் உட்பட பலரிடமும் அவதானித்ததோடு அதுபற்றி அவர்களிடம் கேட்டுமுள்ளேன்.
நெற்றி, குற்றி, பற்றி, வெற்றி என்று ‘ற்’ ஐ அடுத்து அதே உயிர்மெய் வரும் சொற்களை எழுதி உச்சரித்தால் தமிழகத்தினரின் உச்சரிப்பும் எமதும் வேறுபடுகிறது. நாம் ‘ற்’ இன்பின்வரும் அதேஉயிர்மெய்க்கும் அந்த வல்லின உச்சரிப்பையே கொடுக்கிறோம். (‘R’ உச்சரிப்புக் கொடுப்பதில்லை). ஆனால் அவர்கள் ‘ற்’ க்கு எம்மைப்போலவே உச்சரிப்பைக் கொடுத்து, பின்வரும் உயிர்மெய்க்கு அதுதனியே வரும்போது நாம் சொல்லும் உச்சரிப்பை (அதாவது ‘R’) உச்சரிப்பைக் கொடுப்பார்கள்.
அரசு, பரிசு, மரம் போன்ற சொற்களை எழுதி வாசிக்கச்சொன்னால், ‘ர’கர வரிசைக்கு தமிழகப்பக்கமிருந்து வரும் உச்சரிப்பு ‘ra’ என்பதுபோன்று வரும். ஆனால் என்பக்கமிருந்து வரும் உச்சரிப்பு ‘ற்’ இன் வல்லின உச்சரிப்போடு வரும். உங்களது (மயூரனது) இவை இரண்டுக்குமிடையிலிருக்குமென்று நினைக்கிறேன்.
மேலும் ‘ர’கர வரிசை எழுத்துக்கள் எல்லாச் சந்தர்ப்பத்திலும் ‘ற்’ இன் உச்சரிப்பைப் பெறுமென்று சொல்லமுடியாது. இந்தப்பிரச்சினை ஒழுங்கற்ற, வரைவிலக்கணம் கொடுக்க முடியாத, விசித்திரமான தன்மை கொண்டது.
'ரொரண்டோ' என்பதையே எடுத்துக்கொள்ளுங்கள்,
இதில் முதலில் வரும் ‘ரொ’ ‘T’ என்ற உச்சரிப்பிலும் பிறகு வரும் ‘ர’ ‘R’ உச்சரிப்பிலும் வருகிறது. யோசித்துப்பார்த்தால் விசித்திரமான ஒரு உச்சரிப்பு முறையென்று புரியும்.
மேலும் இன்று யாழ்ப்பாணத்தவரே ‘ர’, ‘ற’ உச்சரிப்பில் தங்களுக்குள் பெருமளவு வேறுபடுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக,
ரவி, ராசா, ராணி என்று எழுதிவிட்டு உச்சரிக்கச்சொன்னால், பெரும்பான்மையானவர் ‘ற்’ உச்சரிப்பின்றி, ற உச்சரிப்பில்தான் உச்சரிக்கின்றனர், அதாவது அவர்களுக்கு றாசாவும் ராசாவும் ஒன்றுதான். (நான் இன்னும் ‘ற்’ உச்சரிப்புத்தான்)
மேலும் ரோஜா அல்லது ரோசா என்பதை யாரும் ‘ற்’ இன் வல்லின உச்சரிப்பில் உச்சரிப்பதில்லை. அதாவது ரொரண்டோ என்பதில் ‘T’ உச்சரிப்புப்போல ரோசாவை உச்சரிப்பில்லை. ரொட்டி, றொட்டி இரண்டையும் ஒரேமாதிரி உச்சரிக்கும் பல யாழ்ப்பாணத்தவருண்டு. எனக்கு முதலாவது ‘T’ உம் இரண்டாவது ‘R’ உம்தான்.
எனவே இதுதான் வரைவிலக்கணமென்றில்லாமலே சொற்களைப்பொறுத்தே உச்சரிப்புக்கள் மாறுபடுகிறது. தமிழ்ச்சொற்களை உச்சரிக்கும்போதே உச்சரிப்பு வேறுபாடுகள் உள்ளன. இவைதாம் ஆங்கிலச்சொல்லைத் தமிழில் எழுதும்போதும் வருகிறது.
மயூரன், ஒலிப்பதிவை வலையேற்றி வழங்குதல் சிறப்பானதே. அதன்பின் நானும் தேவையிருந்தால் ஓர் ஒலிப்பதிவை வலையேற்றுகிறேன். இதன்மூலம் எழுதுவது புரிபடாமற் குழம்பிப்போயுள்ள பலருக்குத் தெளிவு பிறக்கலாம். (பலர் வல்லினம், மெய், உயிர்மெய் என்று எழுதியவுடன் தலையிலடித்துக்கொண்ட நிகழ்வு முன்பு நடந்தது)
இறுதியாக, எந்த முறை சரியானதென்பதை நான் சொல்ல வரவில்லை. அது முடியாததும்கூட. ஆனால் உச்சரிப்பைப் பற்றிக் கவலைப்படாமலிருக்கவும் முடியாது. மொழியின் அடிப்படை உச்சரிப்புத்தான். வரிவடிவமெல்லாம் வெறும் கருவியே.
அழகப்பன், தமிழின் ‘ழ’கரத்தை ஆங்கிலத்தில் எழுதுவது பற்றி என்கருத்தும் உங்கள் தந்தையினதே. ‘zh’ போடுவதைவிட தனியே ‘L’ போடுவதே சிறந்ததென்பது என்கணிப்பு. ஆங்கில மொழி பேசும் எவனும் ‘zh’ ஐ ‘ழ’ என்ற உச்சரிப்புக்குக் கிட்டவும் உச்சரிக்க மாட்டான். ‘குழு’ என்பதை ‘kuzhu’ என்று எழுதினால் ‘குசு’ என்றுதான் வெள்ளையர்கள் வாசிக்கிறார்கள். அதைவிட ‘L’ எவ்வளவோ மேல். இதுபற்றிக்கூட ஒரு பதிவு எழுத எண்ணமுண்டு.
நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.
எப்பிடிச் சொல்வது சரியென்று தீர்மானிக்க முடியாது. பொதுவாகப் பெரும்பான்மை வெற்றிபெறுகிறது. ஆனால் அதுதான் சரியென்று சொல்ல முடியாது.
//அழகப்பன் என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது நான் AZHAGAPPAN இவ்வாறுதான் எழுதுவேன். ஆனால் என்னுடைய தந்தையார் (அவர்கள் படித்தது 2ஆம் வகுப்பு வரை மட்டுமே. இலங்கை மண்ணிலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்) ஆங்கிலத்தில் Zம் Hம் அடுத்தடுத்து வராது. அவ்வாறு ஒரு வார்த்தைகூட கிடையாது என்று கூறி, ALAGAPPAN என்றே எழுதும்படி கூறுவார்கள். ஆனாலும் நான் மாற்றவில்லை என்பது வேறு விஷயம்.//
என்னை பொருத்தவரை பெயர்ச்சொற்களை மொழிமாற்றம் செய்யும் போது பரவலாக எப்படி உச்சரிக்கப்படுகிறது. அவ்வாறே உச்சரிக்க வேண்டும். அப்போதுதான் ஒலிமாற்றத்தால் குழப்பம் வராது. உதாரணமாக Toranto என்பதை ரொறாண்டோ என்றோ வேறு வகையிலோ உச்சரிப்பது சில சமயம் குழப்பமே உண்டாக்கும்.
அதே போல் Madras என்பதை 'சென்னை' என தமிழ்ப்படுத்திய போது ஆங்கிலத்தில் Chennai என்று எழுதுகிறோம். உண்மையில் இதை மீண்டும் தமிழ்படுத்தினால் 'ச்சென்னை' என்றே சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் அவ்வாறு மெய்யெழுத்தில் சொற்கள் தொடங்குவதில்லை. என்ன சொல்ல வருகிறேன் என்றால் சென்னை என்பதை Sennai என எழுதுவதுதான் சரி.
தந்தை சொல்லை கேளாதது அழகப்பனுக்கு அழகா? :-)
என்னை மாதிரி இலங்கைத் தமிழையும் இந்தியத் தமிழையும் கலந்து பாவிக்கும் ஆளுக்கு தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை.
http://mauran.blogspot.com/2005/08/blog-post_23.html#c112479068503432598
முக்கியமாக வசந்தனின் பின்னூட்டம்.
எனக்குத் தெரிஞ்சது இரண்டு விதயம்.
People pronounce Tronto as Tronno(majority), Toronno or Tronto.
To put files online:
http://putfile.com/
-மதி
நல்லடியாரே,
சென்னை என்பது சரி, அதற்குரிய ஆங்கில வரிவடிவமும் சரி.
'ச்' வரிசைச்சொற்கள் மொழிமுதலில் வரும்போது அவை வல்லின (ch)உச்சரிப்பைத்தான் பெறும். நாம் தான் தவறாக பல சொற்களை உச்சரிக்கத் தொடங்கிவிட்டோம்.
(ch)சட்டை (s)ஸட்டையானது.
(ch)சண்டை (s)ஸண்டையானது.
இன்று நாம் தூய்மையான 'ச'கர ஒலியைச் சொற்களில் இழந்துவருகிறோம். அவ்வெழுத்து இடையில் வரும்போது ஒலிக்கவேண்டிய ஒலியை(s) மொழிமுதலாக வரும்போதும் ஒலிக்கிறோம். இது தவறு. இந்த 'ச'கரத்தை மீட்பதற்காகவே பேராசிரியர் குணாவால் ஒரு புத்தகம் ஒழுதப்பட்டுள்ளது.
பொட்டாசியம் எப்படி எழுத வேண்டும் ?
பொர்ராசியம என்றா?
டொராண்டோ ஆங்கிலத்திலும் Toronto தான்.. இதில் எங்கே "ற" "ர" வந்தது ?
அடப்போங்கப்பா...
( இதையும் அரப்போங்கப்பா என்று எழுதனுமோ ? )
மயூரன்,
ஒலிவடிவத்தை வலையேற்ற முடியவில்லையென்றால், எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவையும். ஏற்றிவிட்டு இணைப்பைத் தருகிறேன்.
முகவரி: vanniyan_25@yahoo.com
ரொறன்ரோ என்று தான் வரும். ரொரன்ரோ என்பதில் முதல் வருகிற ர வுக்கு ஒரு உச்சரிப்பும் அடுத்து வருகிற ர வுக்கு இன்னுமொரு உச்சரிப்பும் எப்படி கொடுக்க முடியும்?
எனது கேள்வி ரொறன்ரோவா? டொறன்ரோவா என்பது தான்.
அதாவது Tக்கு 'டி' என்றால் D க்கு என்ன உச்சரிப்பு தமிழில்? ஆங்கிலேயர்கள் T ஐ எப்படி உச்சரிக்கிறார்கள்.? TV ஐ அவர்கள் ரிவி என்றா டி வி என்றா உச்சரிக்கிறார்கள்?
இதோ மயூரனின் ஒலிப்பதிவு.
இதைக்கேட்பவர்களுக்கு ஓரளவு அடிப்படைச் சிக்கல் புரிபடக்கூடும். அதாவது தமிழெழுத்தை உச்சரிப்பதில்தான் அடிப்படைச் சிக்கல் இருக்கிறதென்பது புரிபடும்.
//அதாவது Tக்கு 'டி' என்றால் D க்கு என்ன உச்சரிப்பு தமிழில்? ஆங்கிலேயர்கள் T ஐ எப்படி உச்சரிக்கிறார்கள்.? TV ஐ அவர்கள் ரிவி என்றா டி வி என்றா உச்சரிக்கிறார்கள்?//
ஆங்கிலத்தில் ஒரு சொல் எவ்வாறு மொழியப்படுகிறதோ அதற்கேற்பவே நாமும் மொழிய வேண்டும். அதனை எழுதும்போதும் மொழிதலுக்கு மிகச்சமீபமான எழுத்துக்களைக் கொண்டு எழுதுவதே தமிழ் மட்டும் தெரிந்த மக்கள் ஓரளவு சரியாக மொழியமுடியும்.
தமிழில் பல எழுத்துக்கள் அவை கையாளப்படும் இடங்களைப் பொறுத்து மொழிதலில் வேறுபாடு கொண்டிருக்கின்றன. Tக்கு நிகராக (ட்) ட என்ற எழுத்தே அமையும். மாறாக ர என்பது Rக்கு சமீபமான எழுத்து. Television என்பதை தமிழில் எழுத வேண்டுமானால் (ட்)டெலிவிஷன் என்பதே சரியாக அமையும். மாறாக ரெலிவிஷன் என்று எழுதினால் தமிழ் மட்டுமே அறிந்த மக்கள் அதனை எவ்வாறு படிப்பார்கள்? மெய்யெழுத்து முதல் எழுத்தாக அமையமுடியாது என்ற காரணத்தால் டெலிவிஷன் என்று எழுதுவதே சாலச்சிறந்தது.
ஐயா சயந்தன்,
ஆங்கில 'T' க்கு தமிழில் 'ரி' என்று யார் சொன்னது?
ஆங்கிலேயர்கள் கூட இந்த உச்சரிப்புத்தான் என்று சொல்ல மாட்டார்கள். அவ்வெழுத்து சொற்களைப் பொறுத்து தன் உச்சரிப்பை மாற்றிக் கொள்ளும். 'tion' என்ற கூட்டெழுத்துக்கள் வரும் ஆங்கிலச்சொற்கள் நிறைய உள்ளன. அந்த 't'க்குப் பதிலாக 'ர' வைப்போடச்சொல்வீர்கள் போலுள்ளதே.
பொட்டாசியம் பற்றிக் கேட்டவருக்கும் சயந்தனின் கேள்விக்கும் வித்தியாசமில்லை.
cat இல் வரும் 't' கொண்டிருக்கும் உச்சரிப்புக்கும் cut இல் 't' கொண்டிருக்கும் உச்சரிப்புக்கும் election இல் 't' கொண்டிருக்கும் உச்சரிப்புக்குமிடையில் வித்தியாசமிருப்பது உங்களுக்குப் புரியவில்லையா?
ஆங்கில 't'க்கு 'ரி' அல்லது 'டி' போடு என்பவர்களின் வாதம் சுத்த முட்டாள் தனமானது.
அப்படியானால் ஆங்கில 'a'க்கு தமிழில் என்ன எழுத்துப்போடுவீர்கள்?
குறைந்த பட்சம் நாலைந்து எழுத்தைச் சொல்லலாம்? அது வரும் சொற்ளைப்பொறுத்து அவ்வெழுத்துக்களின் உச்சரிப்பு மாறுகிறது.
திரும்பவும் சொல்கிறேன். தமிழில் உச்சரிப்பதில் தான் எமக்குள்ளே வேறுபாடு. அதைத் தெளியாமல் ஆளாளுக்குக் கருத்துச் சொல்கிறீர்கள்.
அரசு, அரசன், மரம் என்று எழுதிவிட்டு வாசிக்கச் சொன்னால் யாழ்ப்பாண உச்சரிப்பு வேறாகவும் மயூரனின் உச்சரிப்பு வேறாகவும் இந்திய உச்சரிப்பு வேறாகவும் இருக்கும். ஆனால் ticket என்று எழுதிவிட்டு உச்சரிக்கச் சொன்னால் எல்லோரும் ஒரே மாதிரித்தான் உச்சரிப்பர்.
இது தான் பிரச்சினை. மற்றும்படி ஆங்கில 't'க்கு என்ன போடுவது என்று கேட்டால், கிரந்த 'ஷ' உச்சரிப்பிலும் ஆங்கில 't' வரும் ஏராளமான சொற்களுள்ளன.
மயூரன், முடிந்தால் இன்னும் கொஞ்சம் விரிவாக ஒலிக்கோப்பைத் தயார்செய்து அனுப்பும்.
அழகப்பன்,
'ர' என்பது 'R'க்கு சமீபமான எழுத்து என்பது இந்தியருக்குத்தான். யாழ்ப்பாணத்தவருக்கு 'ர' இன் உச்சரிப்பு அது உயிர்மெய்யாக வரும்போது பெரும்பாலும் 't' இன் உச்சரிப்புக்கு அருகாக வரும். மயூரனின் ஒலிப்பதிவைக் கேளுங்கள்.
'ரொறன்ரோ' என்று எழுதி யாழ்ப்பாணத்தவர் உச்சரிப்பதும், 'டொறன்டோ' என்று எழுதி இந்தியர் உச்சரிப்பதும் ஒரே உச்சரிப்பைத்தான்.
ஒருவரின் எழுதியவடிவத்தை மற்றவர் உச்சரிக்கும்போதுதான் மாற்றம் வரும். அதற்காக ஒருவர் இருவடிவங்களிலும் எழுதிக்கொண்டிருக்க முடியாது.
ஏதோ சமாளித்துப்போக வேண்டியதுதான். டி.வி. என்று எழுதப்பட்டால் நான் எழுதும் ரி.வி. யைத்தான் சொல்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது போல.
Post a Comment