June 23, 2006

தமிழ் மண யாவாரம்.

எதிர்பார்த்தபடியே தமிழ் மணத்தை விற்பனை செய்வதற்கான காசியின் அறிவித்தல் வெளியாகியிருக்கிறது. எதிர்பார்த்தபடியே இத்தனை உழைப்புக்களையும் தன் தோளில் சுமந்த அந்த மனிதரின் மனதை புண்படுத்தும்படியான பின்னூட்டங்களும் அங்கே வெளியாகியவண்ணமுள்ளன.

சிலவேளை அவர்மட்டும் அறிய நிறைய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கலாம்.

அறிவித்தலை புன்னகைத்தவாறு வாசித்துவிட்டு பின்னூட்டம் கூட இடாமல் ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், பொஸ்டன் பாலாவுடைய பதிவை படித்த பிறகு கருத்துக்கூற வேண்டிய தேவை எழுந்துவிட்டது.

பொஸ்டன், இந்த தமிழ் மண யாவாரத்தை எப்படி இலாபகரமானதாக காணலாம், இதிலுள்ள வியாபார நலன்கள் கேடுகள் பற்றி சில குறிப்புக்களை கொடுத்துள்ளார்.

இணையத்தளங்களின், வலைவாசல்களின், இணையத்தளத்தை அடிப்படையாகக்கொண்ட மென்பொருட்களின் வியாபாரம் என்பது இன்றைக்கு தெளிவான இயல்புமாற்றத்தைப்பெற்று புதியதொரு பரிணாமத்தை எட்டியிருக்கிறது.

சைபர் உலகில் நாம் கண்ணெதிரே காண்கின்ற பெரு மாற்றம் இது.

இதில் பழைமை பேண முயலும் மைக்ரோசொஃப்ட் போன்ற நிறுவனங்கள் தோற்றுக்கொண்டு போகின்றன.

இன்று கடைக்கோடிப்பயனருடன் நேரடியாக கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளும் வியாபாரம் படிப்படியாக அற்றுப்போய்க்கொண்டிருக்கிறது.

இந்த பின்னணியில், தமிழ் மணம் மென்பொருளையும் அதன் பயனர்களையும் வாங்குவதால் பெறப்படக்கூடிய இலாபம் பற்றி அவ்வளவு எளிமையாக கணக்குப்போட்டுவிட முடியாது.

தமிழ் மணம் மென்பொருள் பல திறந்த ஆணைமூல தொழிநுட்பங்களைக்கொண்டு உருவாக்கப்பட்டது.

கோடிக்கணக்கான மனிதர்கள் தமது உழைப்பை இலவசமாக கொடுக்க, அதனை செலவில்லாமல் பெற்ற காசி என்கிற மனிதர் தமிழ் மணம் மென்பொருளை நெய்தெடுத்தார்.

தமிழ் எழுத்துச்சூழலின் பரிணாமம் வலைப்பதிவுகளை நோக்கி திசைமாற்றம் பெற்றுக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், இந்த திசை மாற்றத்தின் ஆரம்ப கட்டத்தில் தமிழ் மணம் போன்ற ஒரு மென்பொருளுக்கான தேவை, தமிழ் மணம் போன்ற வலைத்தள சேவை ஒன்றுக்கான தேவை கொதிநிலை அடைகிறது.

மதி அக்கா முயன்றார். சுரதா முயன்றார், இன்னும் பலர் முயன்றனர். கடைசியில் தமிழ் மணம் தக்கதாய் பிழைத்துக்கொண்டது. இந்த சூழலில் யாவாரம் சூடு பிடிக்காததால், தமிழ் மணத்தை ஏற்றுக்கொண்டு எல்லோரும் தமிழ் மணத்தோடு கைகோர்த்துக்கொண்டார்கள்.

மதி, வெங்கட் போன்றவர்கள் (தற்போது நினைவில் நிற்கும் பெயர்கள் இவைதான். மற்றவர்கள் மன்னிக்க) தமிழ் மணத்திற்கு உதவிகள் புரிந்தார்கள். தமது உழைப்பை தமிழ் மணத்துக்கு வழங்கினார்கள்.தமிழ்மணத்தை சூழ்ந்துகொண்ட பயனர்களால், மேலும் மேலும் தமிழ் மணத்தின் தேவையும் மதிப்பும் போக்குவரத்தும் அதிகரித்தது.

தற்பொது தமிழ்மணத்திற்கு ஒரு பெறுமதி குறிப்போமானால், அப்பெறுமதி, காசியின் உழைப்பு, காசிக்கு உதவிய ஏனைய தொழிநுட்பவியலாளர்களின் உழைப்பு, தமிழ் மணத்தோடு இருக்கும் ஆயிரத்தை தொடப்போகும் வலைப்பதிவாளர்களின் பங்குபற்றல், தமிழ்மணத்தின் வழங்கி, ஆள்களப்பெயர் போன்றவற்றின் கூட்டு மதிப்பாகவே இருக்கும்.

திடீரென இன்றிரவு தமிழ் மணத்திலிருக்கும் அத்தனை வலைப்பதிவாளர்களும் தம்மை விலக்கிக்கொண்டு தேன்கூடு போன்ற வேறொரு சேவைக்கு பெயர்வார்களானால், தமிழ் மணம் மென்பொருளுக்கு குறிக்கப்பட்ட விலை அதள பாதாளத்தை நோக்கி சரியும். மற்ற தொழிநுட்பவியலாளர்களது உழைப்பு என்பதை கவனத்தில் எடுக்காவிட்டால், தமிழ் மணத்தின் உண்மையான பெறுமதி, இவ்வாறு சரிந்தபின் ஏற்படப்போகும் பெறுமதியே.

இதனை இன்னொரு வலமாக விளங்கப்படுத்தினால், திடீரென இன்றிரவு காசி அத்தனை வலைப்பதிவாளர்களையும் தமிழ் மணத்திலிருந்து நீக்கிவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

திடீரென வலைப்பதிவுலகில் ஸ்தம்பிதம் ஏற்படும்.

ஒரு மாதகாலத்துள் மிகச்சிறந்த மாற்றோடு வலைப்பதிவுலகம் மீள எழுந்து தன் பயணத்தை தொடரும்.

இங்கே தீர்மானிக்கும் காரணி வலைப்பதிவுகளின் தேவையும், வலைப்பதிவுகளை மையங்கொள்ளும் தமிழ் எழுத்தின் எதிர்காலமும், அதற்கான சமூக பொருளாதார காரணிகளும்தானே தவிர, தமிழ் மணம் என்கிற ஒற்றைச்சிறு மென்பொருளும், அதை வைத்திருக்கும் வலை மனையும் அல்ல.

தமிழ்மணத்தை வாங்கிவைத்துக்கொண்டு வலைப்பதிவுலகின் இலாப ஏகபோகத்தை பெற முடியுமா என்றால் , ஒருபோதும் அது சாத்தியமில்லை.

இந்த வலைப்பதிவு பெருக்கம் ஒரு மென்பொருளைத்தேடிக்கொண்டதே தவிர, தமிழ் மணம் என்கிற சேவையால் வலைப்பதிவு தேவை எழவில்லை. ஆனால் வலைப்பதிவாளர்களை ஈர்த்துக்கொள்ள தமிழ் மணம் உதவியது.

தமிழ் மணத்தின் வெற்றி, வேறெல்லா காரணங்களையும்விட அதன் ஜனனாயக தன்மையினாலேயே ஏற்பட்டது. எந்தக்கட்டணமும் இல்லாமல் எவரும் இணைந்துகொள்ளக்கூடியதாயிருந்தமையே அதன் பலம். மறுமொழி மட்டுறுத்தல், வலைப்பதிவாளரை தூக்குதல் போன்ற முடிவுகளால் தமிழ்மணம் தன் ஜனனாயக தன்மையை சற்றே இழந்தது. அப்போதே ஒரு தமிழ் மணத்தின் உதிர்வு ஆரம்பித்துவிட்டது.

ஆனால், நடைமுறையில் எண்ணிக்கையற்று பெருகிய வலைப்பதிவு வரவாளர்களால் மறுமொழி மட்டுறுத்தல் வலைப்பதிவாளருக்கு சாதகமாகவே இயங்கத்தொடங்க, தமிழ் மணம் மறுபடி தன்னை தக்கதாய் நிலைநிறுத்தக்கூடியதாய் இருந்தது.

சிலவேளை இந்திய தேசத்தின் நன்மைக்கு புறம்பான வலைப்பதிவுகள் "தூக்கப்படும்" என்று காசி அறிவித்திருந்தாரானால், சடாரென ஒரு பிளவு தோன்றியிருக்கும்.

இந்த உதாரணங்களை சொவதற்கு காரணம், தமிழ் மணம் போன்ற ஏகபோக திரட்டிகளை தீர்மானிப்பது வலைப்பதிவுகளின் தேவை என்கிற காரணியே அன்றி, திரட்டிகளின் சேவை அல்ல என்பதை விளக்குவதுதான்.


காசி என்கிற நபர், தமிழ் மணம் திரட்டி என்கிற மென்பொருளினதும் அதை சூழவுள்ள சமுதாயத்தினதும் விலை என்ன என்பதை குறிக்கும் அதிகாரத்தை, இவை இரண்டையும் யாருக்கு கொடுப்பது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளார்.

மென்பொருளுக்கான உரிமை அவருடையது என்பதாலும், அதை தன் தோளில் தூக்கி பராமரிப்பதாலும், வழங்கிக்கு காசு கொடுப்பதாலும் அந்த அதிகாரம் அவரை சென்றடைகிறது.

காசி சில நிபந்தனைகளை முன்வைத்து இந்த பொதியை விற்கக்கூடும்.

சில வேளைகளில் இம்மென்பொருளின் ஆக்குநர் காசி தான் என்கிற பெயர் பொறிப்பு அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறக்கூடும். அவ்வாறு இடம்பெறாவிட்டால், மென்பொருளின் உரிமை கைமாற்றப்படுவதோடு மென்பொருளுடனான தொடர்பையும் காசி இழந்துவிடுவார்.

அவர் "நல்ல ஆட்களுக்கே' மென்பொருளை விற்பதாக இருந்தாலும். கொள்கையளவிலாவது அவர் பெயரை இழந்துவிடுவார்.

அப்படியே பெயரை காப்பற்றும்படியான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டாலும்கூட, விலை கொடுத்து வாங்கும் நிறுவனம்/மனிதர் தன் பெயரை முன்னிறுத்தவே முயல்வார். ஆக காசியின் "பெயர்" என்கிற விஷயம், தமிழ் மணம் மூலம் அவர் சம்பாதித்த "மரியாதை" போன்றன நாளடைவில் உதிர்ந்துபோகும்.

விலை சார்ந்த போட்டி ஒன்றும் இங்கே இருப்பதால், "விலை' கொடுத்து வாங்கும் அணி, கட்டாயம் இலாபத்தை எதிர்பார்க்கும். உறுப்புரிமைக்கு கட்டணம் வாங்கக்கூடாது என்பது போன்ற ஒப்பந்தங்களை காசி செய்தாலும்கூட நாளைடைவில் இந்த இலாப நோக்கம் தமிழ்மணத்தின் நேர்த்தியை, சனனாயகத்தன்மையை பாதிக்கும்.

சனனாயக தன்மையே தமிழ்மணத்தின் இருப்பை தீர்மானிப்பதால், இந்த மாற்றம் தமிழ்மணத்தின் இருப்பையே பாதிக்கும்.

வாங்குகின்ற அணி, இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். சனனாயக தன்மையின், இலாபநோக்கற்ற நிலையில் இருக்கும் நேர்த்தியின் மீது கைவைக்காமல் புத்திசாலித்தனமாக யாவாரம் பண்ணினால் தான் நிலைக்க முடியும்.

இலாப நோக்கற்ற்று செயலாற்றினால், இருப்பும் நிலைப்பும் மிகவும் உறுதியாக இருக்கும்.

காசியின் முடிவு புரிந்துகொள்ளப்படத்தக்கதுதான்.

அதில் எந்த கேள்வியும் இல்லை.

இனி வாங்கும் அணியே அதிகம் சிந்திக்கவேண்டியுள்ளது.

ஏகபோகம் என்பது இணையத்தில் இன்றைக்கு சாத்தியமில்லை. கணினி உலகிலேயே சாத்தியமில்லை.
தமிழில் இப்போதைக்கு உடைந்துபோகாமல் ஏகபோகம் செலுத்தப்போகின்ற ஒரே ஒரு செயற்றிட்டம் விக்கிபீடியாதான். ஏனெனில் அங்கே திறந்த நிலை இருக்கிறது.
திறந்த நிலை செயற்பாடுகளே பிளவுபடாமல் உதிராமல், ஏகபோகம் செலுத்த முடியும். பயனுள்ள ஏகபோகம்.

நூலகம் திட்டம்கூட எனது பார்வையில், தனது நிர்வாகத்தை, பணக்கையாள்கையை கவனிப்பதற்கான சனனாயக முறையிலமைந்த இலாப நோக்கற்ற ஒழுங்குமுறையான நிர்வாக சபையினை, நிர்வாக நிறுவனத்தினை கொண்டிருக்காவிட்டால் தேங்கி தனித்துப்போகும். மெட்டாவிக்கியின் நிர்வாகத்தில் விக்கி பீடியா இயங்குவது நல்ல உதாரணம்.

இவ்வாறானதொரு நிர்வாகக்கட்டமைப்பிடம் தமிழ் மணம் கைமாறுமானால் அதன் நிலைப்பு உறுதியானது. இல்லாவிட்டால் தமிழ்மணத்தை கொண்டு செய்யக்கூடிய யாவாரம் மிக புத்திசாலித்தனமானதாக இருக்கவேண்டும்.

தமிழ் மணத்தை விற்பதன்மூலம் காசி இந்த புத்திசாலித்தனமான உழைப்புக்கான வாய்ப்பை இழக்கிறார்.

தமிழ்மணம் குறை சொல்ல முடியாதளவு தமிழ் சூழலில் மிகத்தரமான மென்பொருள். மிகவும் பெயர்போன, மதிப்புப்பெற்ற இணைய சேவை. இதன் நிர்வாகியாக இருத்தல் என்பது காசிக்கு கிடைத்த மிகப்பெரிய சன்மானம். ஏனெனில் இந்த அடையாளத்தை கொண்டு காசி பல்வேறு சேவை வழங்குதலுக்கான, மென்பொருள் விருத்திக்கான ஒப்பந்தங்களை பெறலாம். இவ்வளவு காலத்துள் காசி இவ்வாறான வாய்ப்புக்களை பெறத்தொடங்கியிருப்பார்.

இனி தமிழ் மணத்தை கையகப்படுத்தப்போகும் நிறுவனம் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். இந்த வகையான யாவாரத்துக்கு தமிழ் மணம் மேலும் மேலும் இலவசமாக, சனனாயகத்தன்மையுடையதாய் இருத்தல் அவசியம் என்பதால் இந்த இயல்புகளுக்கு பாதிப்பில்லை.

இன்றைக்கு "சமூக சேவை' "தன்னார்வ கூட்டு முயற்சி" போன்ற சுலோகங்கள் தான் கொழுத்த யாவாரத்துக்கான வசதியான முக மூடிகள் என்பதால் இதே சுலோகங்களுக்குள் தமிழ் மணத்தையும் சோடித்து நன்றாக யாவாரம் பண்ண முடியும் (ஓர் எல்லை வரை)

இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்த கைமாற்றத்தின் போதான அறம் சார்ந்த கேள்விகள் எழுதல் பற்றி யாராவது சிந்திக்க முனைந்தால், என்னால் சில புள்ளிகளை தொட்டுக்காட்ட முடியும்.

1. தமிழ் மணம் சமுதாயத்தையும் சேர்த்தே விலை குறிக்கப்படுவதால், இச்சமுதாயமே பெரும் பேரம் பேசும் சக்தியை காசிக்கு வழங்குவதால், ஒப்பந்தம் என்ன என்பதையும் தெரிவு எவ்வாறு இடம்பெறுகிறது என்பதையும் அறிந்துகொள்ளும் முழு உரிமையும் இந்த சமுதாயத்துக்கு இருக்கிறது. இதனை வெளிப்படையாக செய்தலே அறம்.

2.தமிழ் மணம் மென்பொருள் பொதுமக்கள் உரிமத்தினடிப்படையில் வெளியிடப்படுதலும், அதனை திறந்த செயற்றிட்டமாக sourceforge.net போன்ற தளம் ஒன்றில் பதிவு செய்துகொள்ளலும் தமிழ் மென்பொருள் விருத்தி உலகுக்கு பெரும் கொடை. அத்தோடு தமிழ் வலைப்பதிவாளர்களுக்கான மிகச்சிறந்த மென்பொருள் வேகமாக நேர்த்தியாக விருத்தியடைவதற்கான வழியும் திறக்கும்.

3. காசி தன் மென்பொருளை திறந்த ஆணைமூல தொழிநுட்பங்களின் வழி விருத்தி செய்திருப்பதால், பெற்றதை திருப்பி பெரியமனதோடு கொடுத்தல் என்ற அறத்தின் வழி மென்பொருளையும் திறந்த ஆணைமூல உரிமத்தின் அடிப்படையில் வழங்குவது மெச்சத்தக்கது. இந்த திறந்த ஆணைமூல மென்பொருள் திட்டத்துக்கான பெரும் நன்கொடையை வழங்கும் நிறுவனத்திடம் இதனை வைத்திருந்து சேவைசெய்யும் வாய்ப்பை, இந்த மென்பொருள் மூலம் பணம் பண்ணும் வாய்ப்பை வழங்குவது போன்ற வடிவத்தில் "விற்றலை" செய்யலாம். இதன்போது sourceforge.net இலிருக்கும் செயற்றிட்டத்தின் மேற்பார்வையாளராக காசியே தொடர்ந்து இருக்க வழி ஏற்படுவதுடன், மென்பொருளுக்கும் அவருக்குமான உறவும் துண்டிக்கப்படாது நீடிக்கும்.

4. வழங்கி, ஆள்களப்பெயர் போன்றவற்றை காசி விற்கலாம். உண்மையில் காசி தனது உழைப்பின் பெறுமதியை ஆள்களப்பெயரில் ஏற்றி அதற்கான விலையை குறிக்கலாம்.


5. என்னதான் காசி சரியானவர்களுக்கே தான் விற்பேன் என்றெல்லாம் அறிக்கை விட்டாலும், தமிழ் மணம் சுயநலமற்ற சேவையையே தொடர்ந்து வழங்குவதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது. மென்பொருள் திறந்த நிலையில் இருந்தால் நாளைக்கு ஜனனாயகம் மறுக்கப்படும் நிலையில் வேறு யாராவது மென்பொருளை பயன்படுத்தி வலைப்பதிவுலகுக்கு உதவ முடியும். இதன்மூலம் தமிழ் மணத்தை கையகப்படுத்தப்போகும் நிறுவனத்தின் வியாபார ஏகபோகத்தை மட்டுப்படுத்தலாம்.

அறம் சார்ந்த கடப்பாடுகள் வெறும் அறம் சார்ந்த கடப்பாடுகளே. இதைப்பற்றி சம்பந்தப்பட்ட தரப்புகள் கவனத்திலெடுப்பதும் விடுவதும் அவரவர் தெரிவு.
அதில் எந்த தலையீட்டையும் நாம் செய்ய முடியாது.

தமிழ் மணம் சமுதாயத்துக்கு இந்த இடைமாறுகாலகட்டத்தில் சொல்ல என்னிடம் செய்தி ஒன்று இருக்கிறது.

தமிழ் மணத்தின் பெறுமதியின் கணிசமான பங்கு உங்களால் உருவாக்கப்பட்டதே.
பதில் சொல்லும் கடமை சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இருக்கிறதோ இல்லையோ, இவ்விற்பனை வெளிப்படையாக இருக்கவேண்டும் என்று கோரும் முழு உரிமை உங்களுக்கு இருக்கிறது.
வலைப்பதிவுலகின் போக்கை தீர்மானிக்கும் சக்தி நீங்களே அன்றி மென்பொருட்கள் அல்ல.
தமிழ் மணத்தின் கைமாற்றம் உங்களை எந்த விதத்திலும் பெரிதாக பாதிக்கப்போவதில்லை.
தமிழ் மணம் தன் ஜனனாயக தன்மையை இழக்குமானால், நன்னோக்கங்களை இழக்குமானால், அதனை மிக இலகுவாக கைவிட்டுச்சென்றுவிடலாம். காலம் தரமான மென்பொருட்களையும் சேவை வழங்குனர்களையும் சரியான மாற்றுக்களையும் உருவாக்கும்.

தமிழ் மணம் கைமாறுவது தொடர்பான் செய்திகளை கேட்டு ரசிப்போம்.
தமிழ் மணத்தை வாங்கும் அணிக்கு இலாப நோக்கம் குறிக்கோளாக இருந்தால் அதற்கு அச்சுறுத்தல் மிக மிக அதிகமாக உள்ளது.



அதுசரி, கூகிள் எப்போது மொழிவாரியான வலைப்பதிவு திரட்டியை கொண்டுவரப்போகிறது? (ஹ ஹ ஹா)

20 பிற்சேர்க்கைகள்:

said...

நீங்கள் மதி அக்கா என்று குறிப்பிடும் மதி கந்தசாமி, தமிழ் வலைப்பதிவுகளுக்காக அப்படி என்னதான் செடய்திருக்கிறார்?

சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறோம்.

said...

//நீங்கள் மதி அக்கா என்று குறிப்பிடும் மதி கந்தசாமி, தமிழ் வலைப்பதிவுகளுக்காக அப்படி என்னதான் செடய்திருக்கிறார்?

சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறோம்.//

ஏனுங்க.. அவுங்கத்தானே வலைப்பூ-ன்னு வலைப்பதிவுகளுக்கான வ்லைப்பதிவு நடத்தினவங்க...?

said...

Mathy started Tamil Bloggers List sometime around june or july 2003. Mind you First blog was started only in Jan 2003 by Navan, followed by Badri in Feb 2003. Mathy, I believe started her own blog around May 2003. Her Tamil Bloggers List brought Tamil Bloggers together. It was where people came to checkout new blogs. She also started Valaippoo journal sometime around July 2003. She invited bloggers to be editors for a week. Thereby introducing new blog posts to readers and making the editor a familiar one. A novel approach which has metamorphised into thamizmanam natchaththiram.

Links: http://tamilblogs.blogspot.com
http://valaippoo.blogspot.com
http://valaippoo.yarl.net


She also wrote some help files for new bloggers.

blogs in tamil tips n tricks - http://tamilinblogs.blogspot.com She started this blog in May 2003. Probably within a few days after starting her own blogs. I remember trying to start a blog and failing. I made use of her tips n tricks blog to start one for myself. I remember going around pleading for help. Nobody came forward and shared their knowledge. They were all busy building up their presence in the blogworld.

Tamil software installation blog - http://tamilhowto.blogspot.com/ She formed this around june 2003.

some more blogs built by Mathy Kandasamy

http://imagesfaq.blogspot.com

http://thamizarhal.blogspot.com

She also formed a yahoo group for tamilbloggers.
http://groups.yahoo.com/group/tamilblogs

Kasi's first email to the group
http://groups.yahoo.com/group/tamilblogs/message/6?l=1
//நண்பர்களே,

எடுத்ததுமே 'எனக்கு என்ன வேணும்'னு சுயநலமா சிந்திக்கிறானேன்னு பாக்காதீங்க. இது நிறையப்பேருக்குத்
தேவையா இருக்கும்.
1. வலைப்பூவில் கருத்து இடும் சன்னலில் எப்படித் தமிழ் கருத்துக்களை வாங்கிக்கொள்வது? (மதி உதவுவதாகச்
சொல்லியிருக்கிறார்)
2. உலாவரும் நண்பர்கள் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்ளும் இலவசக் கருவிகளில் எது சிறந்தது?

இன்னொன்று அவசரத்தேவை: Bloggers என்பதற்குத் தமிழ்ப் பதம் கண்டுபிடித்தாயிற்றா? நாம் ஒருவரை
ஒருவர் வெறும் 'நண்பர்களே' என்று அழைக்காமல், *****களே என்று அழைக்க வேண்டாமா? 'வலைப்பூ
நண்பர்களே' ரொம்ப நீட்டம், இன்னும் சுருக்கமாய் ஏதாவது?

அன்புடன்,
-காசி
//

On top of all these, she was maraththadi's owner at that time. I believe she left that group for some reason. Some conflict with people over their conflict of interests.

My detailed elaborate answer stems from my doubt that the above sentence could have been the one prompting your comment.

துரும்பைத் தூக்கி அந்தப்பக்கம் போட வக்கில்லாததுங்கெல்லாம் வந்திருச்சுங்க.

tamil blogger since 2003

said...

Mathy started Tamil Bloggers List sometime around june or july 2003. Mind you First blog was started only in Jan 2003 by Navan, followed by Badri in Feb 2003. Mathy, I believe started her own blog around May 2003. Her Tamil Bloggers List brought Tamil Bloggers together. It was where people came to checkout new blogs. She also started Valaippoo journal sometime around July 2003. She invited bloggers to be editors for a week. Thereby introducing new blog posts to readers and making the editor a familiar one. A novel approach which has metamorphised into thamizmanam natchaththiram.

Links: http://tamilblogs.blogspot.com
http://valaippoo.blogspot.com
http://valaippoo.yarl.net


She also wrote some help files for new bloggers.

blogs in tamil tips n tricks - http://tamilinblogs.blogspot.com She started this blog in May 2003. Probably within a few days after starting her own blogs. I remember trying to start a blog and failing. I made use of her tips n tricks blog to start one for myself. I remember going around pleading for help. Nobody came forward and shared their knowledge. They were all busy building up their presence in the blogworld.

Tamil software installation blog - http://tamilhowto.blogspot.com/ She formed this around june 2003.

some more blogs built by Mathy Kandasamy

http://imagesfaq.blogspot.com

http://thamizarhal.blogspot.com

She also formed a yahoo group for tamilbloggers.
http://groups.yahoo.com/group/tamilblogs

Kasi's first email to the group
http://groups.yahoo.com/group/tamilblogs/message/6?l=1
//நண்பர்களே,

எடுத்ததுமே 'எனக்கு என்ன வேணும்'னு சுயநலமா சிந்திக்கிறானேன்னு பாக்காதீங்க. இது நிறையப்பேருக்குத்
தேவையா இருக்கும்.
1. வலைப்பூவில் கருத்து இடும் சன்னலில் எப்படித் தமிழ் கருத்துக்களை வாங்கிக்கொள்வது? (மதி உதவுவதாகச்
சொல்லியிருக்கிறார்)
2. உலாவரும் நண்பர்கள் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்ளும் இலவசக் கருவிகளில் எது சிறந்தது?

இன்னொன்று அவசரத்தேவை: Bloggers என்பதற்குத் தமிழ்ப் பதம் கண்டுபிடித்தாயிற்றா? நாம் ஒருவரை
ஒருவர் வெறும் 'நண்பர்களே' என்று அழைக்காமல், *****களே என்று அழைக்க வேண்டாமா? 'வலைப்பூ
நண்பர்களே' ரொம்ப நீட்டம், இன்னும் சுருக்கமாய் ஏதாவது?

அன்புடன்,
-காசி
//

On top of all these, she was maraththadi's owner at that time. I believe she left that group for some reason. Some conflict with people over their conflict of interests.

My detailed elaborate answer stems from my doubt that the above sentence could have been the one prompting your comment.

துரும்பைத் தூக்கி அந்தப்பக்கம் போட வக்கில்லாததுங்கெல்லாம் வந்திருச்சுங்க.

tamil blogger since 2003

said...

மயூரன்...

அருமையான பதிவு.

said...

//எதிர்பார்த்தபடியே தமிழ் மணத்தை விற்பனை செய்வதற்கான காசியின் அறிவித்தல் வெளியாகியிருக்கிறது. எதிர்பார்த்தபடியே இத்தனை உழைப்புக்களையும் தன் தோளில் சுமந்த அந்த மனிதரின் மனதை புண்படுத்தும்படியான பின்னூட்டங்களும் அங்கே வெளியாகியவண்ணமுள்ளன.
//

அட! பாத்தீங்களா?? இவையாவும் தமிழ்மணத்திலேயே தான் வெளியாகியிருக்கிறது. அது தான் Irony!!!

said...

Anony 3
//Mind you First blog was started only in Jan 2003 by Navan, followed by Badri in Feb 2003. Mathy, I believe started her own blog around May 2003.
//
Why is it always should be Mr.Badri? I beleive Mr.KarthikRamas started his blog in Jan 2003...

http://karthikramas.blogdrive.com/archive/21.html

get the facts straight first!

said...

மயூரன், நீங்க தமிழ்மணத்தை ஓபன் சோர்ஸ் ஆக்கறதைப்பற்றி சொல்லியிருக்கீங்க. உங்க எண்ணம் உயர்வானதுதான். ஆனா அது தமிழ்சூழலுக்கு உதவாது. எவனாவது பார்ப்பன எதிரி ஒருத்தன் குறிப்பிட்ட பதிவுகளை குளறுபடி செய்யறமாதிரி எதாவது code எழுதி அதை எப்படியோ சேர்த்துட்டான்னா என்ன செய்வது? நிரலை மறைச்சு வெச்சிருக்கும்போதே இவ்வளவு பிரச்சினைகள் செய்யறாங்க. ஓபன் சோர்ஸ்ல சேர்த்துட்டு இதையெல்லாம் கண்காணிக்கறதைவிட ஏதோ ஒருசிலருக்கு மட்டும் நிரலை கொடுக்கறதுதான் நல்லது. ஓபன் சோர்ஸ் எல்லாம் ஓபன் மைண்ட், integrity இருக்கற, எதிர்ப்பையும் நாகரிகமா காண்பிக்கற சமுதாயத்துக்குதான் உதவும். இங்கே அதெல்லாம் வம்பு.

said...

மைக்ரோசாப்டுக்கும் ஹாட்மெயில் சபீர்பாட்டியாவிற்கும் நடந்த வியாபாரத்தை - சபீர் பாட்டியா விற்ற போது 2.2 கோடி பயனர்கள் கொண்ட விளம்பரதாரர்களால் மொய்க்கப்பட்ட ஹாட்மெயிலின் நிலை, விற்பனை நடந்த டாட் காம் எழுச்சிக்கு முந்தைய காலகட்டம், 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கிய மைக்ரோசாப்ட் அது ஹாட்மெயிலை "எடுத்துக்கொண்டதின்" பிண்ணனியில் இருந்த வியாபார நோக்கங்கள் - அதற்கு பின் வெற்றிகரமாக மற்றும் தோல்விகரமாக நிகழ்ந்த ஒரு சில டாட் காம் விற்பனைகள் ஆகியவற்றுடன் தமிழ்மண வியாபார அறிவிப்பையும் ஒப்புமைப்படுத்தி ஒரு பதிவு எழுதி கிடப்பில் போட்டேன்... (தற்போதைக்கு இது குறித்தான கருத்துக்கள் எதுவும் நான் வெளியிட விரும்பாததாலும், ஒரு சில விஷயங்களை என்னால் சுதந்திரமாக தொட முடியாது/கூடாது என்பதாலும்...)

நீங்கள் கோர்வையாக சொல்லியிருக்கிறீர்கள்.. // தமிழ் மணத்தை வாங்கும் அணிக்கு இலாப நோக்கம் குறிக்கோளாக இருந்தால் அதற்கு அச்சுறுத்தல் மிக மிக அதிகமாக உள்ளது // என்பது இலாப நோக்கம் அடையும் வழியை பொறுத்தது... பயனர் தளத்தில் - பயனர்களின் வலைப்பதிவுகளில் - விளம்பரம் அல்லது அறிவிப்பு என்று ஆக்கிரமிக்க முடியாதே தவிர (அதற்கும் ஒரு addendum தயாரித்து பயனர்களிடம் ஒப்புமை பெறலாம்) வேறு மாடல்களின் - bharatmatrimony மாடல் ஒரு உதாரணம் - மூலம் பயனர்களில் ஒரு பகுதியினரை கொண்டே இலாபம் ஈட்ட முடியும். உங்களின் மற்ற சில விஷயங்கள் குறித்து விவாதிக்க ஆசை... அவசியம் என்று தோன்றினால் வருகிறேன்.

said...

ம்...!
ஃஃ//எதிர்பார்த்தபடியே தமிழ் மணத்தை விற்பனை செய்வதற்கான காசியின் அறிவித்தல் வெளியாகியிருக்கிறது. எதிர்பார்த்தபடியே இத்தனை உழைப்புக்களையும் தன் தோளில் சுமந்த அந்த மனிதரின் மனதை புண்படுத்தும்படியான பின்னூட்டங்களும் அங்கே வெளியாகியவண்ணமுள்ளன.
//
இப்படித் தெளிவாக எழுதியுள்ளது தவிர மிச்சமெல்லாம் விளங்கிய பாதி விளங்காதது மீதிக் கதைதான்!
எப்படியோ உண்மை இதுதான்:
அட! பாத்தீங்களா?? இவையாவும் தமிழ்மணத்திலேயே தான் வெளியாகியிருக்கிறது. அது தான் Irony!!!

said...

மதி பற்றி நான் தெரிந்து வைத்திருபதை விட பல புதிய விடயங்களை என் பதிவுக்கான பின்னூட்டம் ஒன்றின் மூலம் பெற்றுக்கொள்ள முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

முகமூடி, நீங்கள் கிடப்பில் போட்ட பதிவு மிகவும் சுவாரசியமானதாக படுகிறது. எழுதுங்களேன்.

திறந்த ஆணைமூலம் பற்றி வைக்க்ப்பட்ட கருத்துக்கு பின்னர் வருகிறேன்

said...

மிக நீளமான இந்தப் பதிவில் சிற்றிலக்கியத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு அரிய தமிழ்நடையைக் கையாண்டிருக்கிறீர்கள்.... படித்துப் புரிந்துகொள்ளவே ஒரு நாள் ஆகும் போல....

said...

Mauran, look at this comment.

http://thamizmanam.blogspot.com/2006/06/blog-post_19.html#c115077829114386358

And, specifically this: //அதே போல அடுத்த இரண்டு வருடங்களுக்கு இதே போன்றதொரு வலைப்பூ தொகுப்பு வலை தளத்தை தயாரிக்கவோ/ பின்னணியில் இருந்து இயக்கவோ மாட்டேன் என்றும் உறுதி கூற தயாரா?//

We have people like that. God knows what he was thinking!

You mention: //காசி என்கிற நபர், தமிழ் மணம் திரட்டி என்கிற மென்பொருளினதும் அதை சூழவுள்ள சமுதாயத்தினதும் விலை என்ன என்பதை குறிக்கும் அதிகாரத்தை, இவை இரண்டையும் யாருக்கு கொடுப்பது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளார்.//

I agree with most of what you have to say. But in the above statement, as for the software, what you say might probably be true - but as for the overstated 'society' you mention, it also includes people like those above - whose intentions are entirely different. You have also mentioned this. They definitely have the right to express their opinions, however warped they might be or seem to others that way - but with the way this article is written, I guess you are already very informed about every single detail of 'yaavaaram' of Thamizmanam. To begin with, if you can link to Noolaham from this post, you can also link to Boston Bala's article, I guess - let's start from there. If this is mainly a rebuttal to Bala's 'capitalistic' views, as I infer from //அறிவித்தலை புன்னகைத்தவாறு வாசித்துவிட்டு பின்னூட்டம் கூட இடாமல் ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், பொஸ்டன் பாலாவுடைய பதிவை படித்த பிறகு கருத்துக்கூற வேண்டிய தேவை எழுந்துவிட்டது.// - then it should be designated as such, and shouldn't be nebulous. This article, however noble your intentions may be, is locked in a seemingly harmless cusp; between what and what is something you can figure out. How somebody can make use of this cusp in a twisted way - I've quoted above in the comment by an anonymous, and you'll definitely see more in the days to come as you've rightly put it //தமிழ் மணம் கைமாறுவது தொடர்பான் செய்திகளை கேட்டு ரசிப்போம்.//. This is not to pick on you, and this comment would have been totally unnecessary if you had talked about 'viRpanai' instead of the saucy 'yAvAram'. That's your pespective - and that's OK, too, but don't we all want to pitch in to bake the analysis pie? ;-)

said...

அன்புள்ள மயூரன்

தமிழ்மணத்திற்கு நான் எந்தவகையிலும் எந்த பங்களிப்பையும் செலுத்தியதில்லை. தமிழ்மணத்துடன் நான் நெருங்கிவந்தது ஒரே ஒரு தருணத்தில்தான் - தமிழ் வலைப்பதிவுக்கான விக்கியை உருவாக்கியது (என்னால் இயக்கப்பட்டுவந்த தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளத்தில்). அதை அமைக்கும்பொழுது காசி அதையும் தமிழ்மணம் தளத்திலேயே இருத்துவது நல்லது என்று கருத்து தெரிவித்தார். ஆனால் அவர் கருத்துக்கு முன்பாகவே நான் விக்கியை சோதித்து, செயல்வடிவில் அமைத்திருப்பதாக் எழுத காசி அதுபோன்ற விக்கியொன்றை தமிழ்மணம் தளத்தில் நிறுவாது விட்டார். (ஆனால் தமிழ்மணத்தில் பயனர்களுக்கு உதவுவதற்காக மன்றம் (Discussion Forum) அமைக்கப்பட்டுவிட்டதால் ஊர்கூடி தேர் இழுக்க வேண்டிய விக்கி தமிழ்லினக்ஸ் தளத்தில் வளராது நின்றுவிட்டது. இன்னும் எப்படி தமிழை வாசிப்பது, எழுதுவது என்ற இத்யாதி கேள்விகளுக்கு நாமும் யாகூ குழு, மன்றம், கூகிள் குழு என்று அதே கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம்). எனவே தமிழ்மணம் விற்கப்படும்பொழுது அதில் என்னுடைய உழைப்பு இம்மியளவுகூட இல்லை என்பதை தெரிவிக்க வேண்டியது என் கடமையாகிறது. தமிழ்மணம் அமைக்கப்படும் காலத்தில் என்னுடைய மேம்போக்கான கருத்துக்களைச் சொன்னதையும், ஒரு சில தடவைகள் தமிழ்மணத்தின் சில மாற்றங்களைச் சோதிக்க அழைக்கப்பட்டபொழுது கருத்துக்களைச் சொன்னதையும்தவிர தமிழ்மணத்திற்காக நான் ஒரு துரும்பையும் கிள்ளிப்போட்டதில்லை. தமிழ்மணம் தளத்தின் அமைப்பைப் பொருத்தவரை காசி தன்னுடைய விருப்பபடியே முடிவுகளை எடுத்து வந்திருக்கிறார். உதாரணமாக, வலைப்பதிவுகளில் இயங்கு எழுத்துருக்கள் கூடாது என்று எதிர்த்தபொழுது காசி என் வாதங்களைப் பொருட்படுத்தவில்லை. (இயங்கு எழுத்துருக்களைத் தருவதன்மூலம் விரைவில் எல்லோரும் ஒரே குறியீட்டுக்கு மாற வேண்டிய அவசியம் தள்ளிப்போடப்படும் என்பது என் கருத்து. விகடனும், குமுதமும், தமிழ்மணமும் தங்களுக்கான தனிப்பட்ட குறியீடுகளையும் கூடவே இயங்கு எழுத்துருக்களையும் பாவித்துக் கொண்டிருக்கும்வரை ஒட்டுமொத்தமாக ஒரே குறியீட்டுக்கு மாறவேண்டிய அவசியம் தெரியாமலேயே போய் தமிழில் தகவல்கள் பல்வேறு அமைப்புகளில் சிதறித்தான் கிடக்கப்போகிறது). இப்படியிருக்க, என் பங்களிப்புகளை அவர் காசாக்க முயல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தச் செய்தி அவரை வருத்தமடையச் செய்யும் என்பது உண்மை, அது அவருக்கு நியாயமிழைக்காது.

மாறாக என்னுடைய தனிப்பட்ட தளத்திற்கு காசி சில உதவிகளைச் செய்திருக்கிறார். இதுபோன்ற பல உதவிகளை நாம் பலருக்கும் பல இடங்களிலும் தனிப்பட்டு செய்கிறோம் என்றிருந்தாலும் என்னுடைய தளத்தை மூவபிள்டைப் பொதியிலிருந்து நியூக்ளியஸ் சி எம் எஸ் பொதிக்கு மாற்ற காசி செய்தவுதவிக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன். இதற்கான என்னுடைய நன்றிகளை என் வலைப்பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.

மேலும் ...http://domesticatedonion.net/tamil/?p=46

said...

தமிழ்பதிவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும்போது திரட்டிகளும் மற்றும் அது போன்ற மற்ற சேவைகளும் தமிழில் பல வரும்.
ஏற்கனவே தேன்கூடு இருக்கிறது. இன்னும் பல வரும்.....

உதாரணம் http://tamilblogs.com - இது என் சோதனை முயற்சி. அங்கே வந்து தட்டிப்பாருங்கள்.

said...

டேய்..எவண்டா இதில் இப்ப ஒரு பின்னூட்டம் போட்டது ? செத்து சுன்னாம்பாண ஒரு மேட்டரை இனிமேலும் பேசிக்கிட்டு இருக்கனுமா ?

ஏம்பா மயூரா ? உனக்கு ஒரு பக்கத்தில் எழுதவே தெரியாதா ?

said...

மயூரன், வெங்கட் எழுதியதற்கு உங்கள் எதிர்வினையைக் காணோம். உங்களிடம் இன்னும் நேர்மையை எதிர்பார்த்தேன்:-(

said...

காசி,

மிகப்பழைய பதிவொன்றுக்கு நீங்கள் இப்போது கருத்துச்சொல்லியிருப்பது மிகவும் ஆச்சரியமாகவும், அந்த கருத்து சொல்ல வரும் விடம் மிகவும் மனவருத்தமாகவும் இருக்கிறது.

வெங்கட் இன் கருத்தை இப்போது மீளவும் படித்தேன். இதுக்கு எந்த வகையில் நான் எதிர்வினையாற்றியிருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ தெரியவில்லை.


என்னுடைய நேர்மையீனமாக நீங்கள் கருதுவது எதுவாவது இருந்தால் தயங்காமல் சொல்லுன்கள்.
தவறு என்பக்கமிருந்தால் திறந்த மனதுடன் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

said...

மயூரன்://மதி, வெங்கட் போன்றவர்கள் (தற்போது நினைவில் நிற்கும் பெயர்கள் இவைதான். மற்றவர்கள் மன்னிக்க) தமிழ் மணத்திற்கு உதவிகள் புரிந்தார்கள். தமது உழைப்பை தமிழ் மணத்துக்கு வழங்கினார்கள்.//

வெங்கட்://தமிழ்மணத்திற்கு நான் எந்தவகையிலும் எந்த பங்களிப்பையும் செலுத்தியதில்லை. ...தமிழ்மணத்திற்காக நான் ஒரு துரும்பையும் கிள்ளிப்போட்டதில்லை....இப்படியிருக்க, என் பங்களிப்புகளை அவர் காசாக்க முயல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை...//

மயூரன்:????

said...

ஆமாம்.

காசி சுட்டிக்காட்டிய தவற்றை நான் ஒப்புக்கொள்கிறேன்.

இங்கே பின்னூட்டம் மூலம் தமிழ் மணத்திற்கு தனது பங்களிப்பு பெரிதாக இல்லை என்று வெங்கட்டே ஒப்புக்கொண்டுள்ளார்.
நான் ஆரம்பத்தில் தெரிவித்த கருத்து தவறானதே.

இக்கருத்துப்பட வரும் வசனங்கள் வெட்டப்பட்டுள்ளன.