July 16, 2006

புலிகேசி மாமன்னர் நீடூழி வாழ்க..

இப்பொழுதுதான் புலிகேசி பார்த்துவிட்டு வந்தேன். வந்து நாட்களாகிவிட்டாலும் சினிசிட்டியின் இரண்டு திரையரங்குகள் நிரம்பிவழிய ஓடுகிறது.


புலிகேசியின் பாடல்கள் வெளியான காலம் தொட்டே, இதை வெகு ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தேன்.
இப்படி ஒரு படத்தை எடுக்கும் சவாலை எப்படி சமாளித்தார்கள் என்று பார்க்கும் ஆசை.


அத்தோடு படத்தில் சீரியசாக ஏதாவது சொல்ல முனைவார்களா என்ற நப்பாசை. (சூதாட்ட வடிவமான சினிமா தொழிற்துறைமீதான, அதே சூதாட்ட வடிவ எதிர்பார்ப்பு)

பூட்டிய கதவினை உடைப்போம் பாடலை படமாக்கிய விதம் தந்த ஏமாற்றத்திலும் பார்க்க படத்தின் முடிவு பெரிய ஏமாற்றமாகிப்போனது.

ஏகாதிபத்திய, உலகமயமாக்கல் எதிர்ப்புக்கு தமிழ் நாட்டில் நல்ல சந்தை உள்ளதென்பதை இந்த படத்தயாரிப்பாளர்கள் கண்டு பிடித்ததற்கு பின்னாலுள்ள வரலாற்றுக்காரணி, புறக்காரணி, தாரணி, பூரணி சூ மந்திரகாளி என்ன என்றுதான் புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறது.

இந்த உள்ளடக்கத்தைக்கொண்ட படங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பதன் பின்னணியை தமிழ் நாட்டில் வாழும் யாராவது விளக்குவீர்கள?

கம்யூனிசத்திலிருந்து அரைகுறையாக கருத்துக்களை பிடுங்கி பேசி பணம் பண்ணும் படங்கள் நிறைய வந்தாகிவிட்டது. ஈழத்தமிழர் ஆதரவு, புலி ஆதரவு, மட்டுப்படுத்தப்பட்ட தீவிரவாத ஆதரவு என்ற விலைபோகக்கூடிய சரக்குகள் ஏற்கனவே சந்தைக்கு வந்தாகிவிட்டது.


பல்தேசிய கம்பனிகளின், ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம்பற்றி திரையரங்குக்கு வந்து சிந்திக்கும் கூட்டம் நாட்டில் பெருகிவிட்டதா?

எனக்கென்னவோ இது உலகமயமாக்கலினால் தமது இருப்புக்கு ஆப்பு வந்துவிட்டதென உணரத்தொடங்கிவிட்ட ஆண்டபரம்பரையின் எச்சசொச்சங்கள் கூட்டம் நாட்டில் பெருகிவிட்டதற்கான அறிகுறி என்றே எண்ணத்தோன்றுகிறது.

தாம் அனுமதித்த ஒட்டகம் தனது கட்டிலிலேயே புரளத்தொடங்கிவிட்டதைக்கண்டு மிரண்டுபோன பிராமணீயம், அதிகாரவர்க்கம் இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்பை உளரத் தொடங்கிவிட்டதா?

புலிகேசியை அரசியல் ரீதியாக விமர்சிப்பதானால், இந்தப்படத்தில் புதிதாக எதுவுமில்லை. வழக்கமான அரசியல் நையாண்டிப்படங்களின் அதே உள்ளடக்கம் வித்தியாசமான வடிவத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தின் முற்போக்கு கூறுகளாக உணரப்படுபவை உண்மையில் படு பிற்போக்குத்தனத்தின் நுண்ணிய வடிவங்கள்தான்.

கோகா கோலாவினையும் பெப்சியினையும் வெறும் உள்நாட்டு உற்பத்தி வில்படாமல் போகிறதே என்பதற்காகவா எதிர்க்கிறோம்?

இந்த பானங்கள் மீதான, கிரிக்கட் மீதான விமர்சனங்கள், வெகுமக்கள் மத்தியில் பிரபலமடைந்த விஷயங்களை விமர்சிப்பதன்வாயிலாக அந்த வெகுமக்களை கிளர்வடையச்செய்வதற்கான உத்திதானே அன்றி வேறில்லை.

இந்தப்படத்தின் அந்தப்புரப்பெண்களை கிளர்வூட்டும் கருவிகளாக படமாக்கியது எந்த மனநிலையோ, அதே மனநிலையே அமெரிக்க பானங்களை, கிரிக்கட்டை விமர்சிபப்தும். எந்த வித்தியாசமும் இல்லை.


படத்தை ஷங்கர் தயாரித்ததாலோ என்னவோ, அதே ஷங்கர் பாணி சலித்துப்போன சீர்திருத்தக்கருத்துக்களை தான் படம் முழுக்க சப்புகிறார்கள்.
அடிக்கடி முகத்தில் துப்புகிறார்கள்.

கடைசியாக உன்னத புனித புலிகேசி மாமன்னர் உதிர்த்த பத்து கட்டளைகளும் படத்தில் கொஞ்சநஞ்சமேனும் இருக்கலாம் என எதிர்பார்த்த கனதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

அரச வம்சத்தில் பிறந்த உத்தமபுத்திரன் ச்சீ உக்கிர புத்தன் மகக்ள் புரட்சிப்படையை கட்டி தலைவனாகிறான். கடைசியாக இந்த புரட்சிப்படை அதே மன்னர் பரம்பரையை அரியணை ஏற்றுவதற்கு உபயோகிக்கப்பட்ட்ட வெறும் துணைப்படைதான் என தெரியவருகிறது.

நேபாள விஷயத்தில் இந்தியாவின் கபடத்தனத்துக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

சமகால நிகழ்வுகள் இந்த காட்சிகளை நேபாளத்தோடு பொருத்திப்பார்க்க மக்களை உந்தும் என்று தெரிந்து நாசூக்காக தமது கருத்து கயமையை புகுத்தியிருக்கிறார்கள்.

மன்னர் பரம்பரையைச்சேர்ந்த படித்த இளைஞன் ஒருவன் மக்கள் படையை கட்டுவதற்காக அழகாக குதிரையேறி ஹீரோ வலம் வருவதுதான் மக்கள் புரட்சி.

பரவாயில்லை உழைக்கும் மக்களை ஒரு சில பிரேம் களில் காட்டினார்கள். இந்த பதிவில் திருடிப் போட அந்த படங்களை கூகிளில் தேடிச்சலித்தேன். அந்த மக்களின் படங்கள் அகப்படவே இல்லை.

அதிகம் அகப்பட்டது வடிவேலின் மீசையும் நடிகைகளின் வயிறுகளும்தான்.

இந்த கூகிள் தேடல் முடிவே இந்தப்படம் என்ன செய்தியை மக்களிடையே விதைக்கப்போகிறது என்பதற்கு நல்ல நிரூபணம்.

படத்தின் கதை நேபாளத்தை வேறு ஞாபகப்படுத்திவிட்டதால், கடைசில் மனந்திருந்திய மன்னர் பரம்பரைக்கே முடிசூட்டி ஆண்டபரம்பரைக்கு சனாதன அதிகாரத்தை வழங்கியதும், தளபதி தளபதியின் இடத்தில் தான் இருக்கவேண்டும், மக்கள் மக்களின் இடத்தில் தான் இருக்கவேண்டும், வைத்தியன் வைத்தியன் இடத்தில் தான் இருக்கவேண்டும் என்ற உள்ளூர் சனாதனிகளின் எதிர்பார்ப்பினை எந்த வகையிலும் புண்படுத்தாமல் படத்தை முடித்து விடைபெற்றதும் கெட்ட எரிச்சலை வரவழைத்தது.

ஒரு சாதாரண வடிவேலு நகைச்சுவைப்படத்தை இப்படி எல்லாம் விமர்சிக்க வேண்டுமா?

விமர்சிக்கத்தான் வேண்டும்.
இது ஒரு சாதாரண வடிவேலு நகைச்சுவைப்படம் என்பதால் தான் விமர்சிக்க வேண்டும்.

இது முற்போக்கான படமாக, அறிவுபூர்வமான படமாக நம் சனத்தால் உள்வாங்கப்பட்டுவிடக்கூடாது.
கலைப்படங்கள் நஞ்சை விதைப்பது அவ்வளவு பயங்கரம் இல்லை. இப்படியான ஜனரஞ்சகப்படங்கள் நஞ்சைவிதைப்பதுதான் படு பயங்கரம்..

படத்தில் முற்போக்கு கருத்துகளே இல்லையா என்று தோன்றலாம்.

இருக்கு.

அவை அரைகுறையாக விளங்கிக்கொள்ளப்பட்டு அரைகுறையாக, சுயநலத்தோடு வழங்கப்படுவதால், பிற்போக்கு சோற்றினில் முற்போக்கு கறிவைத்து வழங்கப்படுவதால் அவற்றால் எந்த பிரயோசனமும் இல்லை.

சீரிய கருத்துக்களை மலினப்படுத்துவதுதான் மிச்சம்.

இது நையாண்டி அடித்து மலினப்படுத்தும் திட்டம்.

ஐயா புலமைப்பித்தன் அந்த பாடலை என்ன எதிர்பார்ப்பில் எழுதினாரோ, பாவம்.

25 பிற்சேர்க்கைகள்:

said...
This post has been removed by a blog administrator.
said...

----
இது முற்போக்கான படமாக, அறிவுபூர்வமான படமாக நம் சனத்தால் உள்வாங்கப்பட்டுவிடக்கூடாது.
கலைப்படங்கள் நஞ்சை விதைப்பது அவ்வளவு பயங்கரம் இல்லை. இப்படியான ஜனரஞ்சகப்படங்கள் நஞ்சைவிதைப்பதுதான் படு பயங்கரம்
-----
Excellent ! Glad to see someone having a similar opinion on this movie

said...

/தாம் அனுமதித்த ஒட்டகம் தனது கட்டிலிலேயே புரளத்தொடங்கிவிட்டதைக்கண்டு மிரண்டுபோன பிராமணீயம், அதிகாரவர்க்கம் இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்பை உளரத் தொடங்கிவிட்டதா?/

மயூரன்!
மிகச்சரியான நோக்கு எனக்கருதுகின்றேன்.
நன்றி!

said...

நான் இன்னமும் பார்க்க வில்லை பார்க்கிறேன்

said...

விமர்சனம் நன்று.
//தாரணி, பூரணி சூ மந்திரகாளி//

இவர்கள் எல்லாம் யாராடா???

said...

கடைக்குச் செல்லும் ஒருவன், தான் விரும்பிய பொருள் கிடைக்கவில்லை என்பதற்காக, கடையைக் குறைசொல்லி எழுதிய மாதிரி தெரிகிறது. ஒரு படைப்பாளி, நம்மைப்போல சிந்திக்கவேண்டும், நாம் விரும்பியதைச் சொல்லவேண்டும் என்பது அவசியமில்லை.

said...

உங்கள் பதிவு நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. எந்தப் படங்களுமே எந்தவித உள்நோக்கங்களும் இன்றி லாபத்திற்காகவே எடுக்கப்படுகின்றன.

நீங்களாகவே உங்களுக்கு வேண்டியது போல கற்பனை செய்து கொண்டு அது தப்பு, இது தப்பு என்று சொல்கிறீர்கள்.

இது நல்ல நகைச்சுவைப்படம். பார்த்துவிட்டுச் சிரிந்த்து விட்டு வாருங்கள்.

அதனைவிட்டுவிட்டு நேபாளத்தில் நடப்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு உள் செலுத்துவதில் என்ன லாபம் இருக்க முடியும்.

ஏதாவது வித்தியாசமாக எழுத வேண்டும் என்பதற்காக இப்படியா? :)

said...

அல்லாருக்கும் சொல்லுறது இன்னான்னா இந்தான்ட சினிமாவுல புலி
அப்படீன்னு ஒரு வார்த்த வந்துபுடுச்சு இல்லீங்களா மெருகத்தோட பெயர
வைச்சுபுட்டு கிண்டல் கேலி பண்ணிபுட்டாங்கோ அம்புட்டுந்தான்.

said...

உண்மையிலே படம் எனக்கு பிடித்திருந்தது. கவலைகளை மறந்து சிரிக்க ஒரு படம். வெகு நாட்களுக்கு பிறகு..

said...

//ஒரு படைப்பாளி, நம்மைப்போல சிந்திக்கவேண்டும், நாம் விரும்பியதைச் சொல்லவேண்டும் என்பது அவசியமில்லை.//

அவசியமில்லை.
அதைப்போலவே அந்தப்படைப்பாளியின் நேர்மைத்தன்மையை, படைப்பின் தாக்கத்தினை நான் சந்தேகப்படுமிடத்து, அப்படைப்பையும் படைப்பாளியையும் விமர்சிக்கும் உரிமை, அவசியம் எனக்கு உண்டு.

//நீங்களாகவே உங்களுக்கு வேண்டியது போல கற்பனை செய்து கொண்டு அது தப்பு, இது தப்பு என்று சொல்கிறீர்கள்.

இது நல்ல நகைச்சுவைப்படம். பார்த்துவிட்டுச் சிரித்து விட்டு வாருங்கள்.//

ஆம் இது நகைச்சுவைப்படம். பார்த்து நன்றாக சிரித்துவிட்டுத்தான் வந்தேன்.

படத்தின் தாக்கம் வேண்டத்தகாததாக இருப்பதாக நான் உணர்ந்ததால், அதனை விமர்சிக்கும் கடமையை செய்தேன்.

//அதனைவிட்டுவிட்டு நேபாளத்தில் நடப்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு உள் செலுத்துவதில் என்ன லாபம் இருக்க முடியும்.//

நேபாள பிரச்சனை தொடர்பான நேர்மையற்ற பார்வை அல்லது போதாமை நிறைந்த பார்வை படத்தின் படைப்பாளிகளுக்கு இருப்பதாக உணர்கிறேன். நேபாள மாவோவாதிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை நான் கொண்டிருப்பதால் அதனை இனங்காட்ட வேண்டிய தேவை எனக்கு உண்டு. அத்தோடு தமிழ் நாட்டு மக்கள், தமிழ் மக்களுக்கு அந்த பிரச்சனை தொடர்பான தவறான பார்வையை இந்தப்படம் வழங்குமானால், அதை விமர்சிக்க வேண்டிய தேவையும் உண்டு.

said...

கட்டுரை அருமை,சிந்திக்கதக்கதாகவும் இருந்தது.

said...

அட போங்கப்பா...
இப்படியெல்லாம் யோசிச்சி யாரும் படம் பாக்கிறதில்ல.. படத்தில இன்ஃப்ளுயன்ஸ் பண்ண காலம் எல்லாம் மலையேறி போச்சி...

எல்லா ச்ந்தோஷமா பார்த்து சிரிச்சிட்டு வர தான் போறாங்கோ... உங்களால எப்படியய்யா இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது.. அட போங்கப்பா!!!

said...

புலிகேசி பற்றிய ஒரு சுவையான சம்பவம் இன்று கேள்விப்பட்டேன்.

இன்று அலுவலகத்துக்கு வந்த தோழர் ஒருவர் சொன்ன கதை.

அவர் பயணம் செய்துகொண்டிருக்கும்போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாம். அழைத்தவர் சிங்கள ஊடகவியலாளர்.

புலிக்கு சார்பான படம் ஒன்று சினிசிட்டியில் ஓடுதாமே அது பற்றி ஏதும் தெரியுமா என்று கேட்டிருக்கிறார்.

குறிப்பிட்ட தோழருக்கு நன்கு தமிழ் தெரியும் என்பதால் அந்த ஊடகவியலாளர் தனக்கு கிடைத்த செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள அழைத்திருக்கலாம்.
இவரு அப்படியாக தான் எதுவும் கேள்விப்படவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
உடனே அந்த ஊடகவியலாளர்,

இல்லை இல்லை அந்த படம் முழுக்க முழுக்க புலிகளுக்கும் தீவிரவாதத்துக்கும் சார்பாக இருப்பதோடு அதில் வரும் பாடல் ஒன்று புத்தரை அவமதித்து, முழு நாட்டையும் கைப்பற்றி புலிகளின் பிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்ற வாறு அமைந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
இதை செய்தியாக போடலாம். நல்ல பரபரப்பான தகவல் என்றும் சொல்லியிருக்கிறார்.


சர்வ நிச்சயமாக இந்த படத்தை பற்றியும் இதிலுள்ள பாடல் பற்றியும் தமிழ் தெரிந்த ஒருவர்தான் இஏத ஊடகவியலாளருக்கு சொல்லியிருக்கவேண்டும்

ஆள்பவர்களிடமிருந்தும் நிலச்சுவாந்தர்களிடமிருந்தும் நிலங்களை கைப்பற்றி அதனை மக்களுடைமையாக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் பாடல் வருகிறது.

எப்படி எல்லாம் விளங்கிக்கொள்கிறார்கள் பாருங்கள்

said...

மயூரன், முரண்பாடுகளை நன்றாக சுட்டியுள்ளீர்கள். உள்ளூர் உற்பத்தி பற்றி வியாபார சினிமா கவலைப்படுவது நல்ல முரண். எதாவது விளம்பரம் தர மறுத்துவிட்டார்களோ தெரியவில்லை. தமிழ் படங்களில் அதிகார வர்க்க கெட்டவர்க்களை அதிகார வர்க்க நாயகர்களே எதிர்க்க திறன் வாய்ந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் சும்மா போன்றே பெரும்பாலும் காட்டுகின்றார்கள், இப்படமும் அப்படியே. எனினும், இப்படம் தமிழ் வழமையில் இருந்து சற்று வேறுபட்டதுதான்.

said...

Your Post is absolutely brilliant.

I swear,simbu-devan, the director of 23rd pulikesi is nothing, in front of your humour-sense.

thanking you - yours faithfully

24th pulikesi

said...

இதற்குள் புகுந்து இப்படியெல்லாம் சிந்திக்க உங்களால் மட்டுமே முடியும்.
ஏதோ படம் போனோமா. பார்த்துச் சிரித்துவிட்டு வந்தோமா என்றில்லாமல், உங்கள் எதிர்பார்ப்புகளை உணர்ச்சியோடு எழுதியிருக்கிறீர்கள்!
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுதல் உடலுக்கும், மனதுக்கும் நலம் தரும்!

said...

//ஒரு சாதாரண வடிவேலு நகைச்சுவைப்படத்தை இப்படி எல்லாம் விமர்சிக்க வேண்டுமா?

விமர்சிக்கத்தான் வேண்டும்.//

எனக்கும் இது சரி என்று தான் படுகிறது.

சிரிப்புக்காட்டுகிறேன் பேர்வழி என்று
சீரிய சிந்தனைப் போர்வையில் .. அரை வேக்காட்டுக் கருத்துகளை ,
கருத்துச் சார்பில்லாதா மனதில் உரமிடுவது அச்சமூட்டக் கூடியதே .

இந்தியாவில் சமூகம்/ தனி மனிதன் சார்ந்த சிந்தனை மற்றும் கருத்துருவாக்கலில் சினிமாவின் பாதிப்பு நாமெல்லாம் நினைத்திருப்பதை விட மிக ஆழமானது .

said...

//வித்தியாசமான வடிவத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.//
அது தானே speciality. போனோமா, சிரித்தோமா என்றிருக்கவேண்டும். அவ்வளவே.

said...

//போனோமா, சிரித்தோமா என்றிருக்கவேண்டும். அவ்வளவே.//

என்ன செய்வது சீனு, அப்படி இருக்க முடியவில்லை.

சமூக குற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது அதை பார்த்து சிரித்துவிட்டு வரவா முடியும்?

said...

மயூரன்

உங்கள் திரை விமர்சனத்தை ஏற்க முடியவில்லை.

கலை கலைக்காகவே என நம்புகிறேன்.

பிரச்சாரப்படமாக இருந்திருந்தால் உங்கள் விமர்சனம் சரி என ஏற்றிருப்பேன்.காமடி படத்தில் உங்கள் கோட்பாடுகளை தேட நீங்கள் சொல்லும்

/இது முற்போக்கான படமாக, அறிவுபூர்வமான படமாக நம் சனத்தால் உள்வாங்கப்பட்டுவிடக்கூடாது.
கலைப்படங்கள் நஞ்சை விதைப்பது அவ்வளவு பயங்கரம் இல்லை. இப்படியான ஜனரஞ்சகப்படங்கள் நஞ்சை விதைப்பதுதான் படு பயங்கரம்./

என்ற காரணத்தை ஏற்க முடியவில்லை.

இதை எந்த ரசிகனும் முற்போக்கு,அறிவுபூர்வமான படமாக எடுத்துக் கொள்வான் என எனக்கு தோன்றவில்லை.

நன்றி
செல்வன்

said...

//இதை எந்த ரசிகனும் முற்போக்கு,அறிவுபூர்வமான படமாக எடுத்துக் கொள்வான் என எனக்கு தோன்றவில்லை.//

இங்கே நண்பர்கள் பலர் பத்தியில் அப்படியான கருத்து இருந்தது.

வலைப்பதிவுகளில் கூட அவ்வாறான கருத்து ஆங்காங்கே கூறப்பட்டது.

எனது நண்பர்களுக்காகவே இப்பதிவை எழுதினேன்.
என் நண்பர்கள் போன்று கருத்து கொண்டிருக்கும் அனைவரையும் நோக்கி இதனை வலைப்பதிவாய் இட்டேன்.

கலை கலைக்காகவோ என்னவோ, அதை மக்களிடம் காட்டித்தான் காசுபண்ணவேண்டியிருப்பதால், மக்களிடம் காட்டி காசுபண்ணும் கலைகள் மீது மக்கள் நிலை நின்று விமர்சனம் செய்யவேண்டியதாகிறது.

கலைப்படங்களால் ஏற்படும் ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவானதே. ஏனெனில் அதனை வெகுமக்கள் பார்ப்பது குறைவு.

"கலை கலைக்காகவே" கோட்பாட்டை முன்னிறுத்தி செய்யப்படும் படைப்புகள் மீது எனக்கு எதிர்ப்பெதுவும் இல்லை.

கலை கலைக்காக மட்டுமே இல்லை.

said...

மயூரன்,

//எனது நண்பர்களுக்காகவே இப்பதிவை எழுதினேன்.//

நானும் உங்கள் நண்பர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்:)

நான் உங்கள் பதிவை நன்கு படித்தேன்.அதில் /எனது நண்பர்களுக்காகவே இப்பதிவை எழுதினேன்.என் நண்பர்கள் போன்று கருத்து கொண்டிருக்கும் அனைவரையும் நோக்கி/ இடப்பட்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.தற்போதுதான் சொல்லுகிறீர்கள்.எஸ்.கே மற்றும் சீனுவிடம் கூட இதை சொல்லவில்லை.ஒரு வேளை அவர்கள் உங்கள் நண்பர்களோ என்னவோ?:)

இனி இடும் பதிவுகளில் அனைத்து வகையான கருத்து கொண்டவரை நோக்கி இடப்பட்ட பதிவுகள் எவை,நண்பர்களுக்கு மட்டுமேயான பதிவுகள் எவை என தலைப்பிலோ அல்லது கட்டுரையின் உள்ளோ குறிப்பிட்டால் எனக்கு உதவியாக இருக்கும் என தோன்றுகிறது.இது என் ஆலோசனை மட்டுமே.

நன்றி

அன்புடன்
செல்வன்

said...

அடடா நான் சொன்ன பதில் இப்படி ஒரு விளகத்தை கொடுத்ததற்கு மன்னிக்கவும்.

பதிவினை எழுதத்தூண்டிய பின்னணியை தான் இப்படி குறிப்பிட்டிருந்தேன்.

புலிகேசி படம் அறிவுபூர்வமானதாக இருந்ததாக நான் கருதியதால் அல்ல, நண்பர்கள் அப்படி பேசிக்கொண்டதால், அந்த பின்னணியில் இருந்தே இப்பதிவுக்கான தேவை வந்தது என்று சொல்ல முயன்றேன்.

யாராவது என் பதிவை படிக்கக்கூடாது என்று நினைத்தால், நான் பதிவுகளை இட மாடேனே ;-)

said...

நன்றி மயூரன்

சரியாக புரிந்து கொள்ளாதது என் தவறுதான்.மன்னிக்கவும்.

வெகுஜன பொழுதுபோக்கு ஊடகங்களில் படைப்புக்கள் கலையை வைத்து பணம் செய்ய விரும்பும்(அதில் தவறு எதுவும் இல்லை) கலைஞர்களால் மக்களின் பர்சை நோக்கி குறிவைத்து எடுக்கப்படுகின்றன.

கமர்ஷியல் படங்கள் என்பதே ஒரு கலையாய் வளர்ந்தபின்,அதில் தம் சித்தாந்தங்களை பொருத்தி அதன் அடிப்படையில் செய்யப்படும் விமர்சனம் அந்த துறையையோ,கலைஞர்களையோ செம்மைப்படுத்த உதவாது என்பது எனது கருத்து.

அந்த சித்தாந்தங்களை வேண்டுமெனில் அவை மேம்படுத்த உதவலாம்.

எந்த கலையும் அந்த கலைக்காகவே இருக்க வேண்டும்,சித்தாந்தங்களுக்காக அல்ல என்பதே என் நம்பிக்கை.ஏனெனில் சித்தாந்தங்கள் வரும்,போகும்.அவை நல்லவையா,கெட்டவையா என்பது பற்றி ஆயிரம் கருத்துக்கள் இருக்கும்.

ஆனால் கலை அப்படிப்பட்டது அல்ல.அது சிரஞ்சீவித்துவம் பெறவேண்டுமெனில் அது தனக்காகவே வாழவேண்டும்

நன்றி
செல்வன்

said...

யப்போவ், இந்த கூத்தில் கமல ஹாசன் எங்கிருந்து வந்தார்? கமல் படம் போட்டிருக்கீங்க, அதனால கேட்டேன். இப்ப பார்க்கும் இடம், பொருள் எல்லாத்துலையும் உங்க கண்ணோட்டம் ன்னு ஒன்னை மாட்டிட்டீங்கண்ணு வைங்க. உலகத்தில ஒருத்தனும் சிரிக்க, ஏன் அழக் கூட முடியாது. உங்களுக்கு நல்லது, எனக்கு கெட்டதுன்னு போயிட்டே இருக்கும்.