முஸ்லிம்கள் தமிழ் மக்களுகெதிராக எப்போதாவது தாக்குதல்களை ஆரம்பித்ததாக நிரூபிக்க முடியுமா?
[இந்த கட்டுரை ஆமர்வீதி சந்தியில் இருக்கும் கடை யொன்றில் நான் வாங்கிய சிறு பத்திரிகை ஒன்றில் இருந்தது. அந்த பத்திரிகையின் பெயர் அல் ஜசீரா. பத்திரிகையின் கருத்து நிலை, நோக்கம் என்னவென்று நானறியேன். கட்டுரையை பகிர்ந்துகொள்ள விரும்பி மீள பிரசுரிக்கிறேன்.
பத்திரிகையுடனான தொடர்புகளுக்கு:
அல் ஜசீரா,
21A, Symond's Road,
Colombo -10
தொ.பே - 0777570639
மின்னஞ்சல்: mubarakump@yahoo.com]
வீரகேசரி 30406 இல் என்னால் எழுதப்பட்ட பதில் கட்டுரைக்கு 14-5-06 ல் செரூபி என்பவர் பிரான்சிலிருந்து பதில் எழுதியிருந்தார். அதற்குரிய இந்த பதிலை வீரகேசரிக்கு அனுப்பி வைத்தபோது அப்பத்திரிகை பிரசுரிக்கவில்லை. ஆனாலும் அவசியமான இதனை தமிழ் பேசும் சமூகத்துக்கு தரவேண்டும் என்பதால் இங்கு பிரசுரமாகிறது.
முஸ்லிம் - தமிழ் உறவுகள் சிதைந்தமைக்கான உண்மையான காரணங்களை பக்கசார்பின்றி சிந்திக்கத்தயங்கும் அநேக தமிழர்களின் அநேக தமிழர்களின் கருத்தையே செரூபி என்பவரும் முன்வைத்துள்ளார். தமிழர்களால் முஸ்லிம்களுக்கு பிரச்சனையா என இவர் கேட்டிருப்பதன்மூலம் இவர் இந்த நாட்டில் இல்லை, இங்கு என்ன நடக்கிறது என அறியாத நிலையில் வெளி நாட்டில் வாழ்கிறார் என்பது புரிகிறது.
தமிழர்களால் முஸ்லிம்களுக்கு செய்யப்பட்ட அநியாயங்களையும், முஸ்லிம்களால் தமிழர்களுக்கு செய்யப்பட்ட அநியாயங்களையும் பட்டிய போட்டால் மலைக்கு மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும். இஸ்ரவேலால் பாலஸ்தீன மக்களுக்கு பிரச்சனையா என அமெரிக்கா கேட்பதுபோல் அப்பாவித்தனமாக இவர் உள்ளார்.
90ம் ஆண்டு பாண்டிருப்பில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை அது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையாக இருப்பினும் அதற்கும் முச்லிம்கள் மீதே பழியைப்போட்டுள்ளார். முஸ்லிம் இராணுவ அதிகாரியின் கீழ் இக்கொலைகள் நடத்தப்பட்டன என இவரே ஏற்றுக்கொள்வதன் மூலம் இவை இராணுவத்தாலேயே செய்யப்பட்ட என ஏற்றுக்கொண்டுவிட்டு முஸ்லிம்கள் மீதும் பழியைப்போடுவதன்மூலம் முரண்பட்டு நிற்கிறார். முஸ்லிமான இராணுவ அதிகாரியின் செயல்களுக்கு முஸ்லிம் சமூகம் பொறுப்பாக முடியுமா?
அரச இராணுவத்தில், பொலிசில் எத்தனையோ கிறிஸ்துவ உயரதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் தலைமையின் கீழும் தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் கிறிஸ்துவ சமூகத்தின்மீது ஏன் பழியைப்போடுவதில்லை? இராணுவத்திலுள்ள முஸ்லிம் உயரதிகாரிகளைவிட கிறிஸ்துவ அதிகாரிகளே அதிகமென்பது இவரைப்போன்றவர்களுக்கு தெரியாதா? சில பொலிஸ் உயரதிகாரிகளாக தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களால் பாதிக்கப்பட்ட யாராவது சிங்களவர் இதன்காரணமாக தமிழ் சமூகத்தின்மீது பழியைப்போட்டால் அவனை பைத்தியக்காரன் என்றுதான் சொல்வோம். இராணுவம் என்பது எந்த மதத்தவரை கொண்டிருந்தாலும் அது இராணுவம் தான்.. ஏன், புலிகளின் இராணுவத்தில் முஸ்லிம்களும் இணைந்திருந்தபோது ஏறாவூர் முஸ்லிம்கள் படுகொலையின்போது தமது தலைமைகளின் உத்தரவுக்கிணங்க முஸ்லிம் விடுதலைப்புலிகளும் பங்குகொள்ளவில்லையா? அதன்பின்னர்தான் முஸ்லிம் வாலிபர்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டு புலிகளை விட்டு பிரிந்தார்கள் என்பது வேறு விடயம்.
மேலும் தமிழ் போராளிகள் முஸ்லிம் பெயர்வைத்துக்கொண்டிருப்பதுபோல் (உதாரணம்: ராசிக்) சிங்கள இராணுவத்தினர் சிலரும் முச்லிம் பெயர் வைத்திருந்ததை 90களில் நாம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளோம். ஆனாலும் சில நடவடிக்கைகளின்போது முச்லிம்களும் சம்பந்தப்பட்டார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்கள் ஏன் சம்பந்தப்பட்டார்கள் என்பதை சரியாக ஆராயும் மனநிலை இன்னமும் தமிழர்களுக்கு இல்லாததுதான் கவலையாக உள்ளது. ஈராக்கில் அமெரிக்கா நுழைந்தபோது ஷியாக்கள் அமெரிக்க படைக்கு உதவினார்கள். ஏன் உதவினார்கள்? சதாம் ஷியாக்களுக்கெதிராக பாதகமாக நடந்துகொண்டதால்தான் அவர்கள் இவ்வாறு உதவினார்கள். இந்த உதாரணம் இங்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
முஸ்லிம்களால் தமிழர்கள் தாக்கப்பட்ட அனைத்து சம்பவங்களும் பதில் தாக்குதல்களாகவே அமைந்துள்ளன.
இல்லாவிட்டால், தான் உண்டு தன் சோலி உண்டு என குப்பறப்படுத்துக்கொள்கிற ஒரு சமூகமாகவே இநாட்டு முஸ்லிம்கள் உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு சமூகம் பற்றி, அதன் விடுதலை சுதந்திரம் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. ஆனால் தமிழர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டவை மிகவும் திட்டமிடப்பட்ட தாக்குதல்களேயாகும். இப்போதும்கூட முஸ்லிம்கள் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். திடீரென தமிழ் பேரினவாதிகளால் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டால், கடத்தப்பட்டால் உடனடியாக ஹர்தால் கதவடைப்பு என முஸ்லிம்கள் கொதித்தெழுவார்கள். இவ்வேளை சிங்கள இராணுவமும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும்.
இவை இரண்டிரு நாட்கள் தான். பின்னர் சோடாப்போத்தல் போல் முஸ்லிம்கள் அமைதியாகி மீண்டும் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள். தற்போது இலங்கை ராணுவம் பக்குவப்பட்ட நிலையில் உள்ளதால் முஸ்லிம்கள் கொல்லப்படும்போது அவர்களுக்கு உதவ முன்வருவதில்லை. ஆனால் தமிழ் ராணுவங்கள் இன்னமும் பக்குவப்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
ஆகவே முஸ்லிம் தமிழ் உறவு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதனை ஏற்படுத்துவதாயின் முஸ்லிம்களின் அரசியல் கலாசாரம் போன்ற எந்தவொரு விடயத்திலும் தமிழ் மக்கள் மூக்கை நுழைக்கக்கூடாது. அதேபோல் முஸ்லிம்கள் தமிழர்கள் விடயத்தில் தலையிடக்கூடாது. என்ற நிலைமை வரவேண்டும்.
அதேபோல் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரேவீட்டில் குடியிருக்க முனையாது தனித்தனி வீட்டில் இருந்துகொண்டே பரஸ்பரம் புன்னகைத்துக்கொண்டால் போதுமானது மிகவும் இலகுவாக முஸ்லிம் தமிழ் உறவை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.