சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா?
சில காலங்களுக்கு முன்னர் aspell எனும் திறந்த மூலச் சொல்திருத்தி மென்பொருளினை தமிழுக்கு பயன்படுத்தும் நோக்குடன் ஏதோவொரு மடலாடற்குழுவில் உரையாடல் நிகழ்ந்தது.
இம்மென்பொருளுக்கான சொற்பட்டியல்களை ஆக்கும் பணிகளும் மும்முரமாக நடந்தது.
தற்போது புதிதாக வரும் க்னூ/லினக்ஸ் வழங்கல்கள் தமிழுக்கான சொல்திருத்தியாக aspell இன் தமிழ்ப்படுத்தப்பட்ட பதிப்பையே பயன்படுத்துகின்றன.
எனக்கென்னவோ இப்படியான சொல்திருத்திகளை தமிழ்ப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் வெட்டிவேலையாகவே படுகிறது.
நானும்சரி, எனக்கு தெரிந்த நண்பர்களும் சரி இத்தகைய தமிழ் சொல்திருத்தி மென்பொருட்களை பிரயோசனப்படுத்தியதாக நினைவில்லை.
மாறாக, தேவையற்ற தொல்லை என்று சொல்திருத்தியை முடக்கி வைத்துவிட்டே தமிழில் எழுதுகிறோம்.
தமிழுக்குச் சொல்திருத்தியே தேவையில்லை என்ற ஒரு வாதமும் இருக்கிறது.
எந்தச் சொல்லை எழுத்துப்பிழை என்பது? எந்த எழுத்துப்பிழையை தவறென்பது?
எந்த எழுத்துப்பிழைக்கு தமிழில் வேறு அர்த்தங்கள் கிடைக்காது?
ஆங்கிலத்தில் ஒரு கவிதை இருக்கிறது,
Eye halve a spelling chequer,
It came with my pea sea,
It plainly marques four my revue
Miss steaks eye kin knot sea.
Eye strike a key and type a word
And weight four it two say
Weather eye am wrong oar write
It shows me strait a weigh.
As soon as a mist ache is maid
It nose bee fore two long
And eye can put the error rite
Its rarely ever wrong.
Eye have run this poem threw it
I'm shore your pleased two no
Its letter perfect in its weigh,
My chequer tolled me sew.
இந்த கவிதையின் சொற்களை எந்தச் சொல்திருத்தியும் அடிக்கோடிட்டு தவறென்று காட்டாது.
ஆங்கிலத்திலேயே சொல்திருத்தி இவ்வளவு குறைபாடுடையதானால் தமிழில்?
தமிழில் சொல்திருத்திகள் இப்படி பயனெதுவுமற்று தேங்கிப்போய்க்கிடப்பதற்கான அடிப்படைக்காரணமாக நான் காண்பது, ஆங்கில நிலைச் சிந்தனை தான்.
நாங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலச்சட்டகங்களுக்குள் நின்று கொண்டு நாம் எமது மொழிக்கான தொழிநுட்பக்கருவி ஒன்றினை யோசிக்கும் போது ஏற்படுகின்ற தவறே இது.
ஆங்கிலம் எழுத்துக்கூட்டல் குழப்பங்கள் நிறைந்த மொழி.
எழுத்துப்பிழைகள் நிழ்வதற்கான சாத்தியங்கள் கூடிய மொழி. அத்தோடு எழுத்துக்கூட்டல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் கொண்ட மொழி.
ஆங்கிலத்தின் இந்த போதாமையிலிருந்தே சொல்திருத்திகளுக்கான தேவை எழுந்திருக்கவேண்டும்.
இன்று சிற்சில முன்னேற்றங்கள் கண்டிருந்தாலும், ஆங்கில சொல்திருத்திகளின் அடிப்படைச் செயற்பாடு பெரும் சொற்தொகுதி ஒன்றுடன் நீங்கள் தட்டெழுதிய சொல்லை ஒப்பிடுதலே.
மிக மட்டுப்பாடான சொற்களஞ்சியத்தைக்கொண்ட ஆங்கிலம் போன்ற மொழி ஒன்றுக்கு இந்த அணுகுமுறை பயன்மிக்கதுதான்.
ஆனால் தமிழுக்கு?
அன்னம் எழுதப்போய் அண்ணம் என்று தவறிழைத்தால் , அதைச் சொல்திருத்தி பிழை என்று சொல்லுமா?
பெரும் சொற்தொகுதி ஒன்றுடன் ஒப்பிட்டுப்பார்த்து எழுத்துப்பிழை திருத்துதல் தமிழுக்கு எப்படி பயன்தரும்?
எனவே இந்த "ஆங்கில மாதிரி" சொல்திருத்திகள் எமக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.
ஆங்கிலேயர்கள் தமக்கென உருவாக்கி வைத்திருக்கும் சொல்திருத்திக்கான சொற்களஞ்சியம்போன்ற ஒன்றை உருவாக்க முனைவது வீண்வேலை. அதனால் எந்த பயனுமில்லை. தயவு செய்து எவரும் அப்படியான ஒரு வேலையில் காலத்தை வீணடிக்க வேண்டாம்.
அப்படியானால் தமிழுக்கான சொல்திருத்திகள் எப்படி அமையவேண்டும்?
தற்போது அங்கிலத்தில் பேசுபொருள் சார்ந்த சொல்திருத்திகள் பற்றிய உரையாடல் ஆரம்பித்திருக்கிறது. அதாவது ஒரு வாக்கியம் என்ன பொருளை சொல்ல வருகிறதோ அதன் அடிப்படையில் எழுத்துக்கூட்டலை சரிபார்ப்பது.
மேலே உள்ள கவிதையின் எழுத்துக்கூட்டலைச் சரிபார்ப்பது இந்த வகையிலேயே அடங்கும்.
ஆனால் இதை அடைவதற்கு இன்னமும் நிறைய காலம் நாம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
அத்தோடு "மின்னற்பூ" என்று எவராவது கவிதை எழுதினால் அதை பிழை என்று சொல்லும் இந்த பொருள்சார் சொல்திருத்தி. ;-)
இன்னொரு வழி இருக்கிறது. அதுதான் இலக்கணத்தை திருத்துவது.
முன்பொருமுறை பேச்சொன்றின் போது முத்து நெடுமாறன் இதுபற்றி குறிப்பிட்டார். தமிழுக்கு தேவையானது இலக்கணத்திருத்தியேயன்றி சொல்திருத்தி அல்ல என்று
சில இலக்கண வரம்புகளோடுதான் தமிழிற் சொற்கள் அமைய முடியும்.
மெய் எழுத்தில் சொல் தொடங்காது.
இது ஓரளவு நல்ல அணுகுமுறைதான் என்றாலும் ஏராளம் குழப்பங்கள் உண்டு.
முடிஞ்ச் போச்! ப்ளீஸ்! போன்ற தமிழகச் சஞ்சிகத்தமிழை இச்சொல்திருத்தி எப்படி திருத்தும்?
ஆனாலும் இந்த இலக்கணத்திருத்தி என்ற எண்ணக்கரு கவனிக்கப்பட வேண்டியது. ஏனென்று பிறகு சொல்கிறேன்.
அப்படியானால் எமக்கான சொல்திருத்தி ஒன்றை எப்படி உருவாக்குவது?
இதற்கு ஒரே வழிதான் உண்டு .
எமது சிந்தனைமுறை மாற்றங்காணவேண்டும்.
நானூறு ஆண்டு அடிமைத்தனமோ என்னவோ, நாங்கள் எதற்கெடுத்தாலும் மேற்கின் சட்டகங்களூடாகதான் சிந்தித்துவருகிறோம்.
இந்த சிந்தனை முறையில் மாற்றம் ஏற்படும்போது எமக்கான எல்லாம் எமக்கு பொருத்தமானவையாகவே வந்தமையும்.
ஆங்கிலத்துக்கான சொல்திருத்தியின் அடிப்படை, பயன்பாடு வேறு. அதனை வைத்து நாம் எதுவுமே செய்ய முடியாது. அதை விட்டுத்தள்ளுவோம்.
எமக்கு தேவை அடிப்படையிலிருந்தே தலைகீழான, எமது மொழிக்கான சொல்திருத்தி.
அந்த வகையில் இந்த "இலக்கணத்திருத்தி" என்ற எண்ணக்கரு கவனிக்கப்படவேண்டியது.
சரியானவற்றை பட்டியலிட்டு ஒப்பிட்டுப்பார்ப்பது எமது மொழிக்கு சாத்தியமில்லை. இது தவறு என்று கண்டுபிடிப்பது சாத்தியம் . அதனையே இந்த இலக்கணத்திருத்தி செய்கிறது. இந்த இலக்கணத்திருத்தியை ஆங்கிலத்தின் grammer check உடன் போட்டு குழப்ப வேண்டியதில்லை. அது வேறு.
ஆனால் இந்த இலக்கணத்திருத்திக்கான நிரல் வரைமுறைகளை எழுத, நிரலாக்கம் செய்ய காலமெடுக்கும்.
பெருமெடுப்பில் செய்யப்படவேண்டியது.
அதற்குமுன் மிக எளிமையான பயனுள்ள சொல்திருத்தி ஒன்றினை நாமே வீட்டில் தயாரித்துவிடமுடியும் ;-)
தேவையானது கொஞ்சம் நிரலாக்க அறிவு. அவ்வளவுதான்.
firefox 2.0 இல் எழுத்துப்பிழை திருத்தி வந்ததும் ஏற்பட்ட கடும் சிந்தனையின் விளைவாகவே இந்த யோசனைக்கு வந்து சேர்ந்தேன்.
தமிழுக்கு நாம் செய்யக்கூடிய திருத்தல் ஒன்று இருக்கிறது. அதுதான் பிழையான சொற்களைக் கண்டுபிடிப்பது.
தெளிவாக சொன்னால், சரியான சொற்களின் பட்டியலோடு ஒப்பிட்டுத் திருத்துவதற்கு மாறாக பிழையான சொற்களின் பட்டியலோடு ஒப்பிட்டுத் திருத்துவது.
இந்த குறிந்த இடைமாறு காலகட்டத்தில் இதனை நாம் பயன்படுத்தலாம். பின்னர் பொருள்சார் திருத்திகளுக்கு , இலக்கண திருத்திகளுக்கு என்று நாம் வளர்ச்சி அடைய வேண்டும்.
அடிக்கடி தமிழில் தவறிழைக்கப்படும் சொற்களைப் பட்டியலிடுவது.
பின்னர் உரை ஆவணத்தில் அச்சொற்களைத் தேடுவது. அவை இருந்தால் கோடிடுவது. சரியான பரிந்துரையினை வழங்குவது. இவ்வளவுதான்.
பிரச்சினை- பிரச்சனை, சித்திரிப்பு-சித்தரிப்பு போன்ற பயன்பாடுகளை திருத்த இது மிகவும் பயன்தரும்.
இந்த முறையிலமைந்த சொல்திருத்திகளின் வரவு அடுத்த தலைமுறை தமிழை சரியாக பயன்படுத்த ஒரு நல்ல வழியினை பெற்றுத்தரும்.
இவ்வாறான தவறான பயன்பாடுகளை தமிழ் புலமையாளர்கள் உருவாக்கலாம்.
ஆசிரியர்களுக்கே தமிழை சரியாக திருத்தமுடியாமலிருக்கும் இக்காலத்தில் இவ்வாறான சொல்திருத்தி ஒன்றின் வரவு நல்ல பெரிய மாற்றத்தினை உருவாக்கும்.


24 பிற்சேர்க்கைகள்:
உங்கள் கருத்துக்கள் ஏற்புடையவையே.
நமது உடனடி தேவை ஆங்கில/வடமொழி சொற்களுக்கான மாற்று
தமிழ்சொற்கள். பெரும்பாலோர் உடனடி மாற்றுச் சொற்கள் கிடைக்காமல், அகரமுதலிகளில் தேட காலமின்றி, ஆங்கில/வடமொழி சொற்களை பாவித்து வருகின்றனர்.
//நானூறு ஆண்டு அடிமைத்தனமோ என்னவோ, நாங்கள் எதற்கெடுத்தாலும் மேற்கின் சட்டகங்களூடாகதான் சிந்தித்துவருகிறோம்.
//
முற்றிலும் ஆமோதிக்கிறேன்,
இலக்கணத்திருத்தி பயனுள்ளதுதான், யாராவது இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்களா?
இவற்றைவிட முக்கியமாக முற்றிலும் தமிழ் மயப்படுத்தப்பட்ட இயங்குதளம் வெளிவந்துவிட்டதா?
இந்தியாவில் சுஜாதா தலைமையில் இதற்கான முயற்சி நடைபெறுவதாக முன்னர் எங்கோ வாசித்த ஞாபகம், என்ன நடக்கிறது?
இங்கே தமிழ் விரிவுரையாளர்கள் அதிகம் இல்லாததால் பல்கலைக்கழகங்களில் அவைகுறித்த செயற்திட்டங்களுக்கு ஆதரவை அதிகம் எதிர்பார்க்க முடியாது.
இங்கிருந்து வெளிநாட்டுக்கு சென்ற தமிழ் விரிவுரையாளர்கள் அப்படியே அங்கு தங்கிவிட்டார்கள்.
ம்ம்..இங்கு லினக்ஸ் பெரிதாக பயன்படுத்த யாருமில்லை :((
புதிய சட்டங்கள் வந்து Microsoft எம்மவர்களின் கழுத்தை நெரிக்காதவரை இவர்களுக்கு புத்தி வரப்போவதில்லை.
எங்கே சென்று விட்டீர்கள் மயூரன்.? நீண்ட நாட்களாய் ஆளைக் காணோம். உங்களை விசாரித்து மடல் இட உத்தேசித்திருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்.
பதிவு தெளிவாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. பாராட்டுகள்.
மய+ரன்,வணக்கம்!எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி தேவை.அதாவது புதிய பையர் பொக்ஸ் இணைய உலாவியைத் தமிழ் மொழி வலைக்குள் பயன் படுத்த முடியாதுள்ளது.தமிழ் மணத்துக்கு அதன் மூலம் வருகை தந்தால் தமிழ் எழுத்துக்கள் மாறித் தெரிகின்றன.எவ்வளவோ முன்னேற்றமான இந்த உலாவியை நான் பயன்படுத்த முடியாதுள்ளது.இதில் ஏதாவது மாற்றஞ் செய்யணுமா?
முடிந்தால் பதில் தாருங்கள்.பழைய பையர் பொக்சுக்கு எந்தப் பிரச்சனையுமின்றி இருந்தது.இப்போது புதிதாகத் தரவிறக்கஞ் செய்து பயன் படுத்துவதால் தமிழை வாசிக்க முடிவதில்லை.எனது உபயோகத்திலிருப்பது இன்ரர் நெட் எக்ஸ்புளோரரே.
நல்ல பதிவு மயூரன்,
எங்கு சென்றிருந்தீர்கள்?
எனக்கு இந்த ழ,ள,ல குழப்பம் இருக்கு.இப்படி தமிழில இருக்கிற பொதுவான குழப்பங்கள் எல்லாவற்றையும் பாவித்து ஒரு மொழி திருத்தியை உருவாக்கலாம்.
உதுக்கு 'தமிழ் தூய்மையாக்கி' அல்லது 'திருத்தி' எண்டு பொதுவான பெயரை வைக்கலாம்.:-)
படியாதவன்,
//இவற்றைவிட முக்கியமாக முற்றிலும் தமிழ் மயப்படுத்தப்பட்ட இயங்குதளம் வெளிவந்துவிட்டதா?//
ஆம். KDE அலல்து GNOME பணிச்சூழலுடன் வெளிவரும் தற்போதைய எந்தவொரு புதிய லினக்ஸ் வழங்கலும் முழுமையான தமிழ் இயக்குதளமே.
ubuntu, fedora, suse, mandriva ஆகியவற்றை பரிந்துரைக்கிறேன்.
//இந்தியாவில் சுஜாதா தலைமையில் இதற்கான முயற்சி நடைபெறுவதாக முன்னர் எங்கோ வாசித்த ஞாபகம், என்ன நடக்கிறது?//
சுஜாதா ஆர்ப்பாட்டங்களுடன் சிறு பணி ஒன்றினை செய்தார். ஆர்ப்பாட்டமே இல்லாமல் ஏராளமான தன்னார்வலர்கள் பெரும்பணிகளை செய்துமுடித்திருக்கிறார்கள்.
முழுமையான தமிழ் இயங்குதளம் வந்து மூன்றாண்டுகள் ஆகப்போகிறது.
//இங்கே தமிழ் விரிவுரையாளர்கள் அதிகம் இல்லாததால் பல்கலைக்கழகங்களில் அவைகுறித்த செயற்திட்டங்களுக்கு ஆதரவை அதிகம் எதிர்பார்க்க முடியாது.//
விரிவுரையாளர்களும் பல்கலைக்கழகங்களும் ஆக்கபூர்வமான வேலைகளை செய்யும் என்று எதிர்பார்ப்பது பெருந்தவறு.
பல்கலைக்கழகங்களுக்கு வெளியேதான் தமிழ்ச்சூழலில் ஆக்கபூர்வமான நிறைய பணிகள் வரலாறு நெடுகிலும் நடந்துவருகிறது.
திறந்த மூல இயக்கங்களுடன் இணைந்துகொண்டால் இணையம் மூலம் இணையும் ஆயிரக்கணக்கான இணைய வாசிகளுடன் சேர்ந்ந்து பல வேலைகளை செய்துமுடிக்கலாம்.
//மெய் எழுத்தில் சொல் தொடங்காது. மெய்யெழுத்தில் சொல் முடியாது போன்ற சில இலக்கண வரம்புகள்.//
சொல் தொடங்காது சரி; எப்படி முடியாமற் போகும்? (நான் போச், மூச் - இதுகளைச் சொல்லவில்லை)
ஒற்று மிகும் நேரங்களில் என்ன செய்வது? (கடைக்குப் போனான்).
சொற்புணர்ச்சியே தேவையில்லையென்று சொல்லும் சிலரைப்போலவே நீங்களும் நினைக்கிறீர்களா?
மற்றும்படி நல்ல கட்டுரை, புதிய சிந்தனை.
சபாபதி சரவணன்,
//எங்கே சென்று விட்டீர்கள் மயூரன்.? நீண்ட நாட்களாய் ஆளைக் காணோம். உங்களை விசாரித்து மடல் இட உத்தேசித்திருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்.//
நன்றி சரவணன்
ஆமாம்.
நீண்டநாட்களாக வலைப்பதிவுப்பக்கம் வரவில்லை. தமிழ்மணத்தையும் தேன்கூட்டையும் பார்வையிடவில்லை.
சில வேறு பணிகளில் மூழ்கியிருந்தமை, எனது இணைய இணைப்பு சில நாட்கள் துண்டிக்கப்பட்டிருந்தமை, கணினியில் தொடர்ச்சியாக பல இயங்குதளங்கள் மாறிக்கொண்டிருந்தமை என்று பல காரணங்கள்.
முக்கியமான காரணம் சோம்பல்.
:-P
உங்கள் பதிவிலும் ஒரு மயூரன் பற்றி எழுதியிருந்தீர்கள். பார்த்தேன். இலங்கைக்கும் மிகச்சரியாக பொருந்திப்போகும் பிரச்சினை அது.
சிறீரங்கன்,
//தமிழ் மணத்துக்கு அதன் மூலம் வருகை தந்தால் தமிழ் எழுத்துக்கள் மாறித் தெரிகின்றன.எவ்வளவோ முன்னேற்றமான இந்த உலாவியை நான் பயன்படுத்த முடியாதுள்ளது.இதில் ஏதாவது மாற்றஞ் செய்யணுமா?
//
பெரும்பாலும் நீங்கள் உங்கள் இயங்குதளத்தில் ஒருங்குறி வசதியை நிறுவிக்கொள்ளாததுதான் பிரச்சினையாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
என்னுடைய மின்னஞ்சலுக்கு ஒரு screenshot அனுப்புங்கள் பதிலளிக்கிறேன்.
//'தமிழ் தூய்மையாக்கி' //
மிகச்சிறந்த பரிந்துரை அற்புதன்.
உங்களது இந்த சொற்பரிந்துரை செய்யப்படவேண்டிய மென்பொருளின் பயன்பாடு குறித்த புதிய சிந்தனைகளை தூண்டுகிறது.
நன்றி.
வசந்தன்,
//சொல் தொடங்காது சரி; எப்படி முடியாமற் போகும்?//
ஆமாம். உங்கள் கருத்துச் சரியானது.
//சொற்புணர்ச்சியே தேவையில்லையென்று சொல்லும் சிலரைப்போலவே நீங்களும் நினைக்கிறீர்களா?//
இல்லை வசந்தன்,
சொற்புணர்ச்சி விதிகள் தேவை என்று உறுதியாக நம்புகிறேன். (அவற்றை சரியாக பின்பற்றுமளவுக்கு எனக்கு அறிவு போதாது என்றபோதுங்கூட).
புணர்ச்சி விதிகளின் படி எழுதும்போது படிப்பவருக்கு ஏராளம் நன்மைகள், வசதிகள் கிடைக்கிறது. மொழி அழகாக இருக்கிறது.
ஆனால் பின்பற்றாதவர்களை திட்டுவதற்கு எதுவுமில்லை.
தமிழில் எழுதுகிறார்களே, அதுவே பெரிய விசயமில்லையா?
நான் நிரலாக்கல் தேவைகளுக்காக பயன்படுத்துகிறேன்.
இதில் தமிழ்மொழிக்கு மாற்றும் option உண்டு. ஆனால் முழு இடைமுகமும் தமிழில் தோற்றமளிக்குமா?
மேலும் நான் செல்பேசியை பயன்படுத்தி இணையத்தில் இணைவது அதிகம்.
இதற்கு செல்பேசி மொடத்தின் driver install பண்ண வேண்டும்.
லினக்ஸில் என்ன செய்யலாம்?
நான் நிரலாக்கல் தேவைகளுக்காக Redhat பயன்படுத்துகிறேன்.
இதில் தமிழ்மொழிக்கு மாற்றும் option உண்டு. ஆனால் முழு இடைமுகமும் தமிழில் தோற்றமளிக்குமா?
மேலும் நான் செல்பேசியை பயன்படுத்தி இணையத்தில் இணைவது அதிகம்.
இதற்கு செல்பேசி மொடத்தின் driver install பண்ண வேண்டும்.
லினக்ஸில் என்ன செய்யலாம்?
படியாதவன்,
//நான் நிரலாக்கல் தேவைகளுக்காக Redhat பயன்படுத்துகிறேன்.//
சொல்திருத்தி ஒன்று செய்ய முயலலாமே?
//இதில் தமிழ்மொழிக்கு மாற்றும் option உண்டு. ஆனால் முழு இடைமுகமும் தமிழில் தோற்றமளிக்குமா?//
ஆம். ஆனால் நீங்கள் ரெhஆட் இன் எந்த பதிப்பை பயன்படுத்துகிறீர்கள் என்பதைப்பொறுத்தது.
தமிழ் இடைமுகப்புப்பொதிகள் rpm களாக கிடைக்கும். அவற்றை நிறுவிக்கொண்டால் சரி.
//இதற்கு செல்பேசி மொடத்தின் driver install பண்ண வேண்டும்.
லினக்ஸில் என்ன செய்யலாம்?//
bluetooth மூலமாகவா செய்கிறீர்கள்?
அப்படியானால் வாய்ப்பு உண்டு lib bluez மூலம் இதனை செய்யலாம். நான் ஒருபோதும் முயன்று பார்த்ததில்லை. சில மணி நேர கூகிளிடலில் இதனை கண்டுபிடிக்கலாம். செய்து வெற்றி பெற்றீர்களானால் ஒரு வலைப்பதிவாக போடலாமே? மற்றவர்கள் பயன்பெறுவர்.
redhat 9 பயன்படுத்துகிறேன்.
//சொல்திருத்தி ஒன்று செய்ய முயலலாமே?//
நிச்சயம் முயற்சிக்கிறேன்.
//செய்து வெற்றி பெற்றீர்களானால் ஒரு வலைப்பதிவாக போடலாமே?
//
லினக்ஸில் முயற்சி செய்து முடிந்தால் ,பதிவிடுகிறேன்..
மயூரன்,
//bluetooth மூலமாகவா செய்கிறீர்கள்?//
Bluetooth 10m தாண்டி வேலை செய்யாதே.. நான் GPRS ஐ பயன்படுத்துகிறேன்..
//Bluetooth 10m தாண்டி வேலை செய்யாதே.. நான் GPRS ஐ பயன்படுத்துகிறேன்..//
செல்பேசிக்கும் கணினிக்குமான தொடர்பு பற்றி கேட்டேன்.
கூகிள் உங்களுக்கு தெளிவான பதில்களை வழங்கும்.
cable இருக்குத்தானே..
Bluetooth இன்னும் மெதுவா இருக்கும்..
460 kbps இல connect பண்ணுது
சில சமயங்களில் நன்றாக என்னை குழப்பி விடுவதும் கூகிள் தான், எதையோ தேடப் போக ஏதேதோ எல்லாம் வரும்..
:)
நல்ல பதிவு மயூரன் வாழ்த்துக்கள்....
நீங்கள் சொல்வதை ஓரளவிற்கு ஏற்றாலும், சொல்திருத்தியால் பல நன்மைகளும் கொண்டுவரலாம்.
“வாலைப்பலம்” என்பதை சொல்திரித்தியால் பிழை கண்டுகொள்ளலாம்.
இந்த சொல்லுக்குப் பின்னால் ஈழத்தமிழன் கலவரவும் இருக்குதையா…! இதை ஒருவரிடம் சொல்லச் சொன்னால், அவன் சரியாகச் சொல்லவில்லை என்றால் [சரியானது: “வாழைப்பழம்”, எழுத்து அல்ல உச்சரிப்பே கவனிக்கப்பட்டது] , அவன் சிங்களவன் என்று இனங்கண்டு கொண்டார்கள். இப்படி சிங்களவனும் சில சொற்கள் வைத்திருந்தான். சொல்லவில்லை என்றால் வெட்டு/ எரி.
சரி, இப்படிப் பல சொற்களைக் திருத்திக்கொள்ளலாம் தானே?
இதைவிட தமிழ் இலக்கண விதிகளை தொல்காப்பியமும் அதற்குப் பின் வந்த நன்னூல் போன்ற பிற இலக்கண நூல்களும் வரையறுக்கின்றன. அந்த விதிகளைக் கொண்டும் பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். உ+ம்: மெய்யெழுத்தில் எந்தச் சொல்லும் தொடங்காது. இப்படிப் பல இருக்கு. “அன்த” என்று எழுதாமல் “அந்த” திருத்தவும் உதவும். மெய்யெழுத்தின் பின் ஒரு உயிர் எழுத்து வராது: “அக்க்அரை” என்று எழுதாமல் “அக்கரை” என்று காட்டும்.
மேலும் வாசிக்க இங்கே செல்லவும்:
http://1paarvai.adadaa.com/2007/02/13/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/
________
CAPitalZ
நான் சில நாட்களுக்கு முன்பு, vista நிறுவப்பெற்ற மடிக்கனினி வாங்கினேன். இடைமுகப்பு மட்டுமே மாற்றம். குடவே சில சிக்கல்கலுடன். Outlook Web Access, vistaவில் வேலை செய்வதில்லை.
Vista இடைமுகப்பு, Breyl இடைமுகப்பு போலவே உள்ளது, மைக்ரோசாப்ட் விதி மீறவில்லயா?
அப்பாஸ்
தமிழ் சொல் திருத்தி - பயர்பாக்ஸ் நீட்சி
இங்கு காணலாம்
http://tinyurl.com/6fegzc
இது இலக்கணபிழைகளை காட்டாது. உங்களது பதிவிலிருந்து சில யோசனைகள் எனக்கு தோன்றியது.
சொல் திருத்தியை பயன்படுத்திப் பாருங்கள். அதிலுள்ள குறைகளை சொல்லுங்கள்.
- பாலு என்கிற பாலச்சந்தர் முருகானந்தம்,
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
http://ulagam.net
Post a Comment