கணினிக்கு ஆங்கிலம் தெரியவே தெரியாது!
இம்மாதம் வெளிவந்த மல்லிகையின் 42வது ஆண்டு மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. இக்கட்டுரையின் இலக்கு வாசகர்கள் இணையத்தமிழர்கள் இல்லை. இருந்தாலும் ஒரு ஆவணப்படுத்தலுக்காக வலைப்பதிவிடுகிறேன்.
தமிழ், கணினி கற்றுக்கொண்ட கதை
-மதுரண்யா
[குறிப்பு: கட்டுரையின் விளக்கமும் எளிமையும் கருதி தொழிநுட்ப விடயங்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. எளிமையாக்கம் துல்லியத்தையும் மிகச்சரியான விளக்கங்களையும் தரத்தவறக்கூடும்]
கணினிக்கு ஆங்கிலம் தெரியாதா?
கணினி என்றாலே ஆங்கிலம் தானே?
கணினி என்பது ஓரு கருவி. பருப்பொருட்களால் ஆக்கப்பட்ட ஓர் இயந்திரம். அதற்கு ஆங்கிலம் மட்டுமல்ல எந்த மொழியுமே தெரியாது. புரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் மின் சமிக்ஞைகள் மாத்திரமே. அதாவது மின்சாரம் இருக்கா இல்லையா என்ற தகவல்.
மின்சார ஏற்ற இறக்கங்களுக்கான கட்டளைகள் மூலமே நாம் கணினியை அடிப்படையில் இயக்குகிறோம். மின்துடிப்பொன்று வந்தால் அதை ஒன்று என்று புரிந்துகொள்ளும். வராவிட்டால் அதை சைபர் என்று புரிந்துகொள்ளும். கணினியின் மொழி இந்த ஒன்றுக்களாலும் சைபர்களாலேயுமே ஆக்கப்பட்டிருக்கிறது. "பரசிவவெள்ளம்" போல கணினியின் பார்வையில் இந்த உலகம் ஒன்றுக்களாகவும் சைபர்களாகவுமே காட்சியளிக்கும்.
ஆதிகாலத்தில் கணினியில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட மொழி ஆங்கிலம். அவ்வளவுதான்.
அப்படி பயன்படுத்துவதற்கு தேவைப்பட்ட மூலதன வளமும், மற்றவரை சுரண்டி பெருக்கிய தொழிநுட்ப வளமும் ஆங்கிலம் பேசுவோரிடமே அப்போது இருந்தது.
பின்னர் படிப்படியாக மூலதன வளம் பொருந்திய மற்றைய சில மொழிகளும் கணினி மீது தமது அதிகாரத்தை தகவமைத்துக்கொண்டன.
இந்த அதிகாரத்துக்கு எதிராக மற்றைய மொழிகளும், மூன்றாமுலக மொழிகளும் கணினியை தாமும் பயன்படுத்துவதற்கான போராட்டத்தினை இடையறாது நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இது வெறும் தொழிநுட்ப போராட்டம் மட்டுமே அல்ல.
சரி இனி, நாம் நடந்துவந்த பாதையை புரிந்துகொள்ள முயலலாம்.
== கணினியும் எழுத்தும் ==
கணினியில் மொழிப்பயன்பாடு என்பது பெரும்பாலும் கணினியில் எழுத்துக்களைதோன்றச்செய்வதும், கணினியில் எழுத்துக்களை கையாள்வதும் தான். வேறில்லை. எமது மொழி எழுத்துக்களை ஆங்கிலம் போலவே கணினியில் தோன்றச்செய்ய, கையாள முடிந்தால், ஆங்கிலத்துக்கு சமமாக எமது மொழியும் கணினியை ஆளத்தொடங்கிவிடும். மொழிசார் கணிமை (computing) என்பது இந்த மிக எளிய அடிப்படையைத்தான் கொண்டிருக்கிறது.
ஒளிசார் எழுத்துணரி, தமிழை உரத்துப்படித்துக் காட்டும் செயலி, குரல் உணரி என்று அடுத்த பாய்ச்சலுக்காய் தயாராக நிற்கும் நாம், இதுவரை கடந்துவந்த பாதை எல்லாம் கணினியில் எழுத்துக்களை தோன்றச்செய்ய, கையாள முயன்ற கதையாகவே நகர்ந்திருக்கிறது.
ஆரம்ப கால கணினிகளை பார்க்கும் வாய்ப்பு சிலருக்கு கிடைத்திருக்கலாம்.
கருந்திரையில் பச்சநிற எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கும் கணினிகளை பார்த்திருக்கிறீர்களா? அந்த கணினிகளில் எழுத்துக்கள் மட்டுமே உண்டு. உருவங்களோ சொடுக்கல்களோ கிடையாது. விசைப்பலகை மூலம் தட்டெழுதித்தான் எல்லா பணிகளையும் செய்தாகவேண்டும். வெறும் ஒன்றும் சைபரும் மட்டுமே தெரிந்த கணினிக்கு, இவ்வாறு எழுத்துக்களை திரையில் காண்பிக்கும் வல்லமை எப்படி கிடைத்தது?
இதற்கு, கணினியில் எழுத்தை தோன்றச்செய்வதற்கான அடிப்படைத்தொழிநுட்பத்தினை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
முன்னரே பார்த்ததுபோல மின்துடிப்பொன்று கிடைத்தால் அது ஒன்று, இல்லாவிட்டால் சைபர். இவ்வாறாக ஒரு கோலத்தில் மின்துடிப்புக்களை செலுத்தி கணினிக்கு கட்டளைகளை இட முடியும்.
எடுத்துக்காட்டாக, 10101100 என்றவாறு மின்துடிப்புக்களை அனுப்பினால் கணினித்திரையில் A என்ற எழுத்தை காட்டு என்று கணினிக்கு கட்டளை இட முடியும். இவ்வாறான மினுடிப்பு கோலங்கள் வாயிலாகவே கணினியில் எழுத்துக்கள் தோன்றச்செய்யபப்டுகின்றன. ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு மின்துடிப்புக்கோலம்.
ஆளாளுக்கு ஒவ்வொரு கோலத்தை எழுத்துக்கள் தோன்றுவதற்கு பயன்படுத்தத்தொடங்கினால், பரவலான கணினிப்பயன்பாடு குழம்பிப்போய்விடுமல்லவா?
இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டுமானால், உலகலாவிய ரீதியில் ஒரு குறித்த கோலத்துக்கு ஒரு குறித்த எழுத்து என்ற நியமம் உருவாக்கப்பட வேண்டும். எல்லோரும் அந்த நியமத்தை கட்டாயமக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் எல்லா கணினிகளிலும் இத்தகு எண்களையும் எழுத்துக்களையும் எந்த குழப்பமுமில்லாமல் ஒரே மாதிரியாக பயன்படுத்த முடியும்.
இந்த தேவையினடிப்படையில் உருவான நியமம் தான் ASCII எனப்படும் நியமம்.
இந்த ASCII நியமத்தின் அடிப்படயில் ஏழு பிட்டுக்களால் அமைந்த கோலம் ஒன்று, ஓர் எழுத்தை குறிக்கும்.
பிட்டு என்றால் ஒரு துடிப்பு. அதாவது ஒன்று அல்லது சைபர்.
ASCII நியமப்படியான எழுத்துக்களை வகைகுறிக்கும் அட்டவணை இதோ.
சரி, இப்போ ஒரு சின்ன கணக்கு கேட்கிறேன்.
இப்படி ஏழு ஏழு பிட்டுக்கள் அமைந்த கோலங்கள் எத்தனை உருவாக்க முடியும்?
1,0 என்ற இரண்டடிமான எண்களல் இக்கோலங்கள் ஆக்கப்பட்டிருப்பதால் இரண்டின் ஏழாமடுக்கு மொத்தம் 128 கோலங்களை உருவாக்க முடியும்.
ஆக, மொத்தம் 128 எழுத்து வடிவங்களை கணினியில் தோன்றச்செய்ய முடியும்.
தரப்பட்ட அட்டவணையை பார்த்தீர்கள் என்றால் புரியும் இந்த எண்ணிக்கையின் முதல் 128 இடங்களும் எண்களுக்கும், ஆங்கில பெரிய, சின்ன எழுத்துக்களுக்குமே போதுமானதாக இருக்கிறது.
போச்சு இருந்த 128 இடங்களும் தீர்ந்துபோயாச்சு.
இதில் மேற்கின் மற்ற மொழிகளை பயன்படுத்தவே வாய்ப்பில்லை தமிழை எங்கே பயன்படுத்துவது?
இதுதான் எமக்கு நிகழ்ந்த முதல் அநியாயம்!
இதனால்தான் நாம் வேறு வழியின்றி ஆங்கிலத்தையே கணினியில் பயன்படுத்த ஆரம்பித்தோம். தமிழை ஆங்கில வரிவடிவங்களை பயன்படுத்தி ivvaaRu எழுதத்தொடங்கினோம்.
== ஆஹா தமிழ் தெரியுதே! ==
தேவைகளின் அலையடிப்பில் தடைச்சுவர்கள் நிலைப்பதில்லை.
கணினிப்பயன்பாடு அதிகரித்து படங்கள், வரைபுகளுடன் கூடிய கணினி இடைமுகப்புகள்(interface) அறிமுகப்படுத்தப்பட்டு, அச்சுக்கு, வலைத்தள வடிவமைப்புக்கு எல்லாம் கணினி பயன்படுத்தப்படத்தொடங்கிய காலத்தில் கணினிமூலம் தமிழை அச்சிடவேண்டிய, கணினியில் தமிழை கண்பிக்கவேண்டிய தேவை பேரலையாய் எழுந்து தடைச்சுவர்களை மோதிற்று.
எம்மவர்கள் ஆழ யோசித்தார்கள். முன்சொன்ன பிட்டுக்கோலத்தைக் கண்டவுடன் கணினி திரையில் எழுத்தை தோன்றச்செய்கிறது. அதாவது "எழுத்துரு" ஒன்றினை காண்பிக்கிறது. எழுத்துரு என்பது வரையப்பட்ட ஒரு படம். அவ்வளவுதான். A இற்கான மின்துடிப்புக்கள் கிடைத்தவுடன் A என்ற எழுத்து வரையப்பட்ட படத்தினை கணினி திரையில் காண்பிக்கிறது. "எழுத்துரு" (font) இனை மாற்றும்போது அதே A என்ற எழுத்து சரிவாக, எழிலாக, நெளிவாக காண்பிக்கப்படக்கூடிய வாய்ப்பினை பெறுகிறது.
ASCII நியமப்படி குறித்த கோலத்துக்கு குறித்த எழுத்தைத்தான் காண்பிக்க வேண்டும். ஆனால் அந்த எழுத்தை "எழுத்துருவை" (font) பயன்படுத்தி வெவ்வேறு வடிவங்களில் காண்பிக்க முடியும்.
இந்த வாய்ப்பை தமிழர்களும் மற்ற மொழிக்காரர்களும் பயன்படுத்திக்கொண்டார்கள்.
ஆங்கில எழுத்துரு ஒன்றினை எடுத்து அதிலுள்ள ஆங்கில எழுத்துக்களை அழித்துவிட்டு (எழுத்துரு என்பது ஒரு மென்பொருள் (software). அதை கையாலெல்லாம் எச்சில் போட்டு அழிக்க முடியாது. கணினி முறைகளூடாகத்தான் செய்யவேண்டும்) பதிலாக தமிழ் எழுத்துக்களை வரைந்து வைத்துக்கொண்டார்கள். a இனை அழித்துவிட்டு அங்கே "ய" இனை போட்டுக்கொண்டார்கள்.
இவ்வாறாக மாற்றியமைக்கப்பட்ட எழுத்துருவினை பயன்படுத்துமாறு கணினியையோ அல்லது குறித்த மென்பொருளையோ அமைத்து வைத்துக்கொண்டு (சிம்பிளா தமிழ்ழ சொன்னா, font இனை change பண்ணிவிட்டு) விசைப்பலகையில் a ஐ அழுத்தினால், என்ன அதிசயம்! திரையில் தமிழ் "ய" தெரிகிறது.!!
== தமிழ் ASCII எழுத்துருக்கள் ==
இவ்வாறாக தமிழை குறுக்கு வழிமுறகள் மூலம் கணினியில் தெரியவைக்கின்ற எழுத்துருக்களை ஈழத்தமிழர் ஒருவர்தான் முதன்முதலில் உருவாக்கினார் என்று கருதப்படுகிறது.
எழுத்துருவை பயன்படுத்தி தமிழை கணிப்பொறி மூலம் அச்சிட முடிந்தது. தமிழ் ஆவணங்களை தயாரிக்க முடிந்தது. தமிழ் வலைப்பக்கங்களை வடிவமைக்க முடிந்தது. எழுத்துருக்களின் அவசியத்தை கருத்திற்கொண்டு வர்த்தக ரீதியாகவும் இலவசமாகவும் பலரும் எழுத்துருக்கள் தயாரிக்க ஆரம்பித்தனர். பாமினி, கீரவாணி, ரவி, tam போன்ற பல எழுத்துருக்கள் அக்காலத்தில் உருவானவைதான். இன்றும் தமிழர் இவ்வாறான எழுத்துருக்களை பயன்படுத்திவருகின்றனர். அழகழகாய் விதம் விதமாய் ஆயிரக்கணக்கான எழுத்துருக்கள் இன்று கிடைப்பிலிருக்கின்றன.
இந்த எழுத்துருக்கள் யாவும் ஏற்கனவே ஆங்கிலத்திற்கென்று உருவான ASCII குறிமுறையை அடிப்படையாகக்கொண்டு, ஆங்கில எழுத்துக்களை அழித்துமாற்றுவதுபோன்ற குறுக்குவழி ஒன்றின் மூலம் தமிழை தெரியவைப்பனவாகையால் இவையாவும் ASCII எழுத்துருக்கள் என்றே அழைக்கப்பட்டன.
இந்த எழுத்துரு தோன்றிய காலத்தில் வலைப்பக்கம் வைத்திருந்த எழில் நிலா மகேன் அவர்கள் இந்த காலகட்டத்தை தன் வார்த்தைகளால் இவ்வாறு கூறுகிறார்,
"அப்போது பாவனையில் இருந்த 'ரசிகப்பிரியா' ( இது பாமினி ரகத்தைச்
சேர்ந்தது) என்னும் எழுத்துருவினை ஒரு குறுந்தகட்டில் போட்டு விற்றார்கள்.
கனடிய டொலர் 25.00 க்கு வாங்கி எனது முதற் கணனியான விண்டோஸ் 3.1 ல் ஏற்றினேன்.
பின்னர் கட்டுரைகள், கதைகள் போன்றவற்றின் தலைப்புக்களை அழகுபடுத்துவதற்காக சரஸ்வதி, சிந்துபைரவி என்னும் எழுத்துருக்களை ஒவ்வொன்றும் 25 டொலர் கொடுத்து வாங்கினேன். காரணம், கணனியில் தமிழைக்காணும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி.
[குறிப்பு:- இந்த எழுத்துருக்கள் எல்லாம் பாமினி வகையைச்சேர்ந்தனவே. இந்த
எழுத்துருக்களை Ethno Multimedia என்னும் தமிழ் கனடிய நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வந்தது.]
1996 ல் என்று நினைக்கின்றேன், தமிழில் வலைப்பக்கம் உருவாக்க வேண்டும்
என்ற ஆவல் மேற்கொள்ளவே அச்சேற்றுதலுக்குரிய எழுத்துருவாகக்
காணப்பட்ட 'பூபாளம்' என்னும் எழுத்துருவை விலை கொடுத்து வாங்கினேன்.
[குறிப்பு:- விலை கொடுத்து வாங்கினேன் என்று குறிப்பிடுவதன் காரணம்,
இப்போது இந்த எழுத்துருக்களும் இன்னும் நூற்றுக்கணக்கான எழுத்துருக்களும்
இணையத்தில் இலவசமாகப் பெறக்கூடியதாக இருக்கின்றன.]"
== நான் தட்டுவதே சரியான தட்டு! ==
இப்போது ஒரு புதிய பிரச்சனை உருவாகியது.
விசைப்பலகைகள் ஆங்கிலத்தில்தான் இருக்கும். அநேகமாக மிகவும் பிரபலமாகிவிட்ட qwerty வகை ஆங்கில விசைப்பலகைதான் எல்லாரிடமும் இருக்கும். ஆங்கில விசைப்பலகையில் a தட்டினால் திரையில் a தான் தோன்றும். z தட்டினால் திரையிலும் z தான் தோன்றும்.
எந்தெந்த விசையை அழுத்தினால் எந்த தமிழ் எழுத்து வரும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
எழுத்துரு தயாரிக்கும் ஒருவர் ஆங்கில a இருந்த இடத்தில் "ய" வை வைத்து எழுத்து தயாரிப்பார். இன்னொருவர் a இருக்கும் இடத்தில் "அ" இருந்தால்தான் தட்ட வசதியாய் இருக்கும் என்று நினைத்து அப்படி வைத்து விடுவார். சாதாரண பயனரின்பாடுதான் திண்டாட்டமாகிவிடும்.
ஓர் எழுத்துருவை மாறினால் ஒரு விதமாக தட்டெழுத வேண்டும், இன்னொரு எழுத்துருவுக்கு வேறு விதமாக தட்டெழுதவேண்டும். நான் எனக்கு பிடித்த எழுத்துரு ஒன்றை பயன்படுத்தி கட்டுரை தட்ட்ழுதி ஜீவாவுக்கு அனுப்பினால் அதிலுள்ள எழுத்து, இலக்கணப்பிழைகளை திருத்தி சஞ்சிகையில் போடுவதற்கு அவரால் முடியாமல் போய்விடும். அவர் பழகிவைத்திருக்கும் எழுத்துரு வேறாக இருக்கும்.
இந்த பிரச்சனை தமிழ் கணிமை வரலாற்றில் பாரிய பின்னடைவொன்றினை ஏற்படுத்தியது. இன்றும் இதன் தாக்கம் தொடர்கிறது.
நூற்றுக்கணக்கான விசைப்பலகை வடிவங்களை தமிழர்கள் உலகெங்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆளாளுக்கு பல நூற்றுக்கணக்கான எழுத்துருக்களையும் உருவாக்கி வருகின்றனர்.
பலபேர் பொழுதுபோகாவிட்டால் புதிய விசைப்பலகை தளக்கோலம் ஒன்றையும் அதற்கான எழுத்துருக்களையும் உருவாக்கத்தொடங்கிவிடுகின்றனர் ;-)
பழைய தட்டச்சுப்பொறி, புதிய தட்டச்சுப்பொறி, யாழ்ப்பாணம், ரங்கநாதன், சிறீலிபி என்று இந்த விசைப்பலகை தளக்கோலங்களினதும் அதற்கான எழுத்துருக்களினதும் பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது.
இதனை ஒரு நியமத்துக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் காலத்துக்குக்காலம் எடுக்கபப்ட்டு வந்தபோதும் எல்லாம் தோல்வியைத்தான் தழுவிக்கொண்டன.
== இன்னும் கொஞ்சம் கதிரைகள் ==
ஆங்கிலம் மட்டுமே கணினியில் பயன்படுத்ததக்கதாக இருக்கும் போக்கினை ஆங்கிலம்பேசுபவர்களுக்கு சமமான மூலதனச்செழுமை கொண்ட மற்ற மொழிக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மொழிப்பற்றினை அதிகமாகக்கொண்ட பிரான்சியர், ஜெர்மானியர் ஏற்றுக்கொள்வார்களா?
அவர்களுக்கும் தம் மொழியை கணினியில் பார்க்க விரும்பிய இன்னும் சிலருக்கும் ASCII இன் ஏழுபிட்டு கோலம் திருப்தியாய் இல்லை. அவர்களுக்கு "இடம்" தேவைப்பட்டது.
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். பிட்டுக்கள்தான் இருக்கே, அதை வஞ்சகமில்லாமல் அதிகமாக போட்டுக்கொண்டால் அதிக இடம் கிடைக்கும்தானே? ஏன் ஏழு பிட்டு என்று கஞ்சத்தனம் பண்ண வேண்டும்?
அக்கால கணினிகளின் செயலாக்கிகளின் திறனும் நினைவகத்தின் அளவும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஏழு பிட்டுக்களே அவற்றின் இயலுகைக்கு சவால்விடும் அளவுதான்.
காலமாற்றத்தோடு கணினியின் நினைவகம், செயலாக்கிகள் போன்றன வளர்ச்சியடைந்தன மேலும் திறன்பெற்றன. இந்த மாற்றத்தை ஒட்டி ASCII கோலத்தை இன்னொரு பிட்டுக்கு அதிகரிப்பதன்மூலம் 256 இடங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் ஆரம்பமாகின.
இந்த முயற்சிகளினதும் தேவைகளினதும் சூழ்நிலைகளினதும் விளைவாக ASCII குறிமுறை நீட்டிக்கப்பட்டு எட்டு பிட்டுக்களாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தின் விளைவாக 256 இடங்கள் எழுத்துக்கள் வைப்பதற்கென கிடைத்தன. இந்த புதிய நீட்டிக்கப்பட்ட ASCII குறிமுறைக்கு அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இயங்குதளங்களும் மென்பொருட்களும் ஆதரவளித்தன.
இந்த மாற்றமும் இட அதிகரிப்பும் ஐரோப்பிய மொழிகளுக்காகவே ஏற்பட்டது என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும்.
தொடர்ந்து இந்த ஐரோப்பிய மொழிக்காரர்கள் புதிதாய் கிடைத்த 128 இடங்களிலும் தமது மொழி எழுத்துக்களை போட்டுவைத்துக்கொண்டனர். எமக்கு மறுபடியும் ஆப்பு.
== We are தமிழர் ==
நீங்கள் யாராவது ASCII வகை தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்.
ஒரு கட்டுரையை முழுமையாக தட்டச்சு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த கட்டுரையில் இடையிடையே ஆங்கிலச்சொற்களும் வந்துபோகின்றன. தமிழ் பகுதிகளை தமிழ் font ஒன்றினை பயன்படுத்தியும் ஆங்கிலப்பகுதிகளை ஆங்கில font ஒன்றினை பயன்படுத்தியும் எழுதிக்கொள்கிறீர்கள். இந்த ஆவணத்தை சேமித்து எடுத்துக்கொண்டு உங்கள் மகளின் அலுவலகக்கணினியில் திறந்து பார்க்க முயல்கிறீர்கள். தொழிநுட்பவியலாளரான உங்கள் மகளுக்கு தமிழ் எழுத்துருக்கள் தேவைப்படவில்லையாகையால் அவரின் கணினியில் அவை இல்லை.
உங்கள் ஆவணத்திற்கு என்ன நிகழும்?
தமிழ் பகுதிகளும் ஆங்கிலப்பகுதிகளுமாக எல்லாம் ஏதோ குப்பையாக ஆங்கில எழுத்துக்களாக தெரியும்.
இது ஏன் நிகழ்கிறது?
ASCII வரைமுறைகளின் படி நீங்கள் தட்டெழுதிய ஆவணத்தை கணினி ஆங்கிலமாகத்தான் புரிந்துகொள்கிறது. அதனால்தான் எழுத்துப்பிழை திருத்தி கூட எல்லா இடங்களிலும் சிவப்பு கோடடித்து வைக்கிறது. நாங்கள் இடையில் அழித்து மாற்றிய எழுத்துருக்களை கொண்டு குறுக்கு வழியால் தமிழை தெரியவைக்கிறோம். இந்த "குறுக்குவழி" எழுத்துருக்கள் இல்லாத கணினிகளில் ஆவணங்கள் ஆங்கிலமாகவே தெரியும். அதிலுள்ள ஆங்கிலச்சொற்கள் எவை தமிழ்ச்சொற்கள் எவை என கணினியால் புரிந்துகொள்ள முடியாது. பிறகு திரும்ப் நீங்கள் எழுத்துருவை எல்லாம் நிறுவி, தமிழ்ப்பகுதிகளை தனியாக தெரிவு செய்து, ஆங்கிலப்பகுதிகளை தனியாக தெரிவு செய்து எழுத்துருவை எல்லாம் மாற்றிக்கொண்ட பிற்பாடுதான் கட்டுரை தனது சரியான வடிவத்தை பெறும்.
இந்த அனுபவம் உங்களில் பலருக்கு கட்டாயம் ஏற்பட்டிருக்கும். எல்லாவற்றையும்தெரிவுசெய்து எழுத்துருவை மாற்றும்போது ஆங்கிலம் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நீங்கள் எல்லோரும் கட்டாயம் யோசித்திருப்பீர்க்ள்.
You know, நாங்கள் Tamils எப்பவும் English mix பண்ணாம எந்த documents ஐயும் எழுத முடியாதவர்களாக வேறு இருக்கிறோம்.
இந்த பிரச்சனையை எப்படி தீர்க்கலாம் என்று யோசித்ததிலும், மற்ற மொழிக்காரர்களது யோசனைகளை உள்வங்கிக்கொண்டதிலும் ஒரு புதிய வழிமுறை கிடைத்தது.
== குறிமுறை ==
பாமினி போன்ற ASCII எழுத்துருக்களில் ஏன் ஆங்கிலத்தையும் தமிழையும் ஒன்றாக பயன்படுத்த முடியாமலிருக்கிறது? ஏன் சொற்பிழை திருத்தி கோடடிக்கிறது?
ஏனென்றால் ASCII குறிமுறை ஆங்கிலதுக்கென உருவாக்கப்பட்டது. அதாவது ஆஸ்கியின் ஒரு குறித்த எழுத்துக்கான கோலம் பெறப்பட்டதும் நியமப்படியான அதற்குரிய ஆங்கில எழுத்தையே கணினி எடுத்துக்கொள்கிறது. நாங்கள் இடையில் பூந்து தமிழெழுத்தை போட்டதெல்லாம் இந்த நியமக்குறிமுறைக்கு தெரியாது. நீங்கள் தட்டும் எழுத்தை அது ஆங்கில எழுத்தாய் காண்பிக்கமட்டும்தான் கணிப்பொறிக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது.
அதனால்தான் நீங்கள் எந்த எழுத்துருவைக்கொண்டு ஆங்கில ஆவணங்களை தட்டெழுதி வைத்தாலும் எங்கே திறந்த போதும் அது ஆங்கிலமாகவே தெரியும் வாய்ப்பு ஏற்படுகிறது.
அதுதான் குறிமுறை.
இந்த கோலத்துக்கு இந்த எழுத்து எனும் குறிமுறை. இந்த குறிமுறையையே பின்பற்றும்படி கணினிக்கு ஆணைவழங்கப்பட்டுள்ளது. தமிழெழுத்தை காண்பிக்க குறிமுறையோ தமிழெழுத்துக்கான தனியிடமோ உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டு நியமப்படுத்தப்படவில்லை.
== இருமொழி ஒரு எழுத்துரு, ஒருமொழி இரு எழுத்துரு!! ==
சரி ஆங்கில எழுத்துக்களை தமிழெழுத்துக்களாக காண்பிக்கும் எழுத்துருக்களை பயன்படுத்துவதால்தானே ஆங்கிலத்தையும் தமிழையும் ஒரே எழுத்துரு கொண்டு காண்பிக்க முடியாமலிருக்கிறது?
ஆங்கில எழுத்துக்களை அப்படியே வைத்துக்கொண்டு மற்ற இடங்களிலுள்ள எழுத்துக்களுக்கு பதிலாக தமிழை போட்டுவிட்டால்?
ஆம். இதுவே மிகப்பயன்தரக்கூடிய உத்தியாக மாறிப்போனது.
ஓர் எழுத்துருவில் ஆங்கிலத்தையும் தமிழையும் வைத்திருக்கும்போது இரு மொழிகளையும் ஆவணத்தில் பிரித்துக்காட்ட இரு வேறு எழுத்துருக்கள் தேவைப்படாது. ஏதாவது ஒரு மொழியை மட்டும் முன்னுரிமை கொடுத்து வைத்திருக்கும்போதுதான் இரண்டு எழுத்துருக்கள் தேவைப்பட்டு குழப்பங்கள் நேர்கிறது. ஈழத்தமிழர்களுக்கு இந்த அனுபவம் சொல்லி விளக்கத்தேவையில்லாதது :-)
இதற்குத்தான் நான் முன்னர் கூறிய நீட்டிக்கப்பட்ட புதிய ASCII குறிமுறை உதவியது.
இந்த புதிய ASCII இல் எட்டு பிட்டு கோலம் காரணமாக உருவான 256 இடங்கள் இருப்பதால் முதல் 127 ஆங்கில ஒதுக்கீட்டை அப்படியே விட்டுவிட்டு ஏனைய ஐரோப்பிய மொழிகள் குந்திக்கொண்டிருக்கும் இடங்களில் தமிழை வைத்துக்கொண்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமல்லவா?
இவ்வாறுதான் இருமொழி எழுத்துருக்கள் உருவாயின. அவை ஆங்கிலத்தையும் தமிழையும் ஒருங்கே கொண்டிருந்தன.
இந்த புதிய முறையை தமிழர் பரவலாக பயன்படுத்தத்தொடங்கினர். இந்த முறையில் ஆவணமொன்றிலுள்ள ஆங்கில எழுத்துக்கள் அப்படியே இருக்கும். எந்த எழுத்துருவை மாற்றினாலும் ஆங்கிலம் ஆங்கிலமாகவே இருக்கும். தமிழ் எழுத்துக்கள் தான் சூழ்நிலைக்கேற்ப ஏதாவது புரியாத ஐரோப்பிய வரியுருக்களாக காட்சியளிக்கும். தமிழ் இருமொழி எழுத்துருவை போட்டுக்கொண்டால் தமிழ் தமிழாக தெரியும்
இந்த உத்தி பரவலாக பயன்படுத்தப்பட்டது. அவரவர் தமது விருப்பப்படி இருமொழி எழுத்துருக்களை உருவாக்கத்தொடங்கினர். மிகுதி 128 இடங்களில் எந்த இடத்தில் எந்த தமிழ் எழுத்தை போடுவதென்ற ஒரு வரைமுறையே இல்லாமல் தம் விருப்பப்படியெல்லாம் போட்டு பலநூறு வகையான எழுத்துருக்களை உருவாக்கத்தொடன்கினர். வணிகப்போட்டி, தன்முனைப்பு எல்லாம் சேர்ந்து தாம் போட்டுக்கொண்ட முறையே சரியென்று வரிந்துகட்டி வாதாடவும் தொடங்கினர்.
ஆனாலும் இருமொழி எழுத்துருக்களின் பரவல் ஏதோ ஒரு வகையில் நிகழ்ந்துபோனது.
இதில் அவதானத்துக்குரிய விடயம் என்னவென்றால் இலங்கைத்தமிழர்கள் இந்த இருமொழி எழுத்துருக்களை உள்வாங்கிக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆதிகாலத்து பாமினி வகை எழுத்துக்களையே தொடர்ந்து பயன்படுத்திவந்தனர். வருகின்றனர். இதற்கு தமிழ் கணிமையில் நிகழும் மாற்றங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வாய்ப்பற்றவர்களாக அவர்கள் இருந்தமை காரணமாக இருக்கலாம். புலம்பெயர் ஈழத் தமிழர் கூட இருமொழி எழுத்துருக்களை உள்வாங்கிக்கொள்ளவில்லை. போதுமென்ற மனமாக இருக்கலாம். இன்றும் ஈழத்தமிழரின் வலைத்தளங்கள் மட்டும்தான் ஆங்காங்கே பாமினி வகை ASCII குறிமுறை எழுத்துக்களை பயன்படுத்துகின்றன.
== விசைப்பலகை இயக்கிகள் ==
இருமொழி எழுத்துருக்களின் வருகைக்குப்பின்னர்தான் புதிய சவால் ஒன்று எழுந்தது. அந்த சவால் பெரு நன்மையையும் தமிழ் கணினி பயனர்களுக்கு பெற்றுத்தந்தது.
ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக தமிழெழுத்தை போட்டுவைத்துக்கொண்டிருந்த காலத்தில் பரவாயில்லை. ஆங்கில எழுத்துக்களை விசைப்பலகையில் தட்டினால் அதற்குரிய தமிழெழுத்துக்கள் திரையில் தோன்றும். எழுத்துருவை மட்டும் மாற்றிக்கொண்டால் போதுமானது.
இரு மொழி எழுத்துருவில் ஆங்கிலம் ஆங்கிலமாகவே இருக்கும். ஆங்கில எழுத்துக்களை விசைப்பலகையில் தட்டினால் ஆங்கில எழுத்துக்களே வரும். அப்போ தமிழை எப்படி தட்டெழுதுவது. தற்போது தமிழ் எழுத்துக்கள் உள்ள "உயர் ASCII" எழுத்துக்கள் விசைப்பலகையில் இல்லையே?
ஆமாம். இது ஒரு பிரச்சனைதான். இருமொழி எழுத்துருக்களை பயன்படுத்தும்போது நீங்கள் நேரடியாக விசைப்பலகையை பயன்படுத்தி தமிழை தட்டெழுத முடியாது.
இப்போ தமிழை தட்டெழுத ஒரு மென்பொருளின் துணை வேண்டும். அதாவது. விசைப்பலகைக்கும் கணினிக்கும் இடையே ஒரு மென்பொருள் உட்கார்ந்திருந்துகொண்டு சில பணிகளை செய்தாகவேண்டும். இத்தகைய மென்பொருள் ஒன்றையே "விசைப்பலகை இயக்கி" என்கிறோம்.
இந்த மென்பொருளை நீங்கள் நிறுவிக்கொண்டால் அது உங்கள் கணினியின் செயற்பட்டையில்(taskbar) வந்து உட்கார்ந்துகொள்ளும். அங்கே எந்த மொழியில் நீங்கள் தட்டெழுத போகிறீர்கள் என்பதை தெரிவுசெய்யும் வசதி உண்டு. நீங்கள் ஆங்கிலத்தை தெரிவுசெய்து வைத்துக்கொண்டு தட்டினால் ஆங்கில எழுத்துக்களை கணினிக்கு அந்த விசைப்பலகை இயக்கி அனுப்பும். தமிழை தெரிவுசெய்துகொண்டால், நீங்கள் தட்டும் விசைக்குரிய தமிழ் எழுத்துக்கான உயர் ASCII கோலத்தினை அது கணினிக்கு அனுப்பும். கணினியும் தமிழ் எழுத்தை காண்பிக்கும்.
அடிப்படையில் விசைப்பலகை ஒன்றில் நீங்கள் A என்ற எழுத்தை தட்டும்போது, விசைப்பலகையானது அந்த எழுத்துக்கான ASCII கோலத்தினை கணினிக்கு நேரடியாக அனுப்புகிறது. கணினிக்கு தேவையானதெல்லாம் அந்த ஒன்றும் சைபரும் கோலம்தானே? கணினியும் தனக்கிடப்பட்ட ஆணைப்படி A என்ற எழுத்தை காண்பிக்கிறது.
இடையில் உட்கார்ந்துகொண்டிருக்கும் இந்த விசைப்பலகை இயக்கியானது விசைப்ப்லகை நேரடியாக இந்த கோலத்தை அனுப்பவிடாது இடையில் தலையீடு செய்கிறது.
ஏற்கனவே விசைப்பலகை இயக்கியை நிரலாளர்கள் தயாரிக்கும்போது, விசைப்ப்லகைய்ல் A என்ற எழுத்து தட்டப்பட்டால் அதற்கான மின்துடிப்புக்களை விசைப்பலகையிலிருந்து வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக "அ" என்ற தமிழ் எழுத்துக்கான துடிப்புக்களை கணினிக்கு அனுப்புமாறு வடிவமைத்திருப்பார்கள். ஆக, நீங்கள் தமிழை தெரிவுசெய்துவைத்துக்கொண்டு A ஐ தட்டினால் திரையில் அ தோன்றுகிறது.
இந்த விசைப்ப்லகை இயக்கிகளின் வருகை தமிழ் கணினி பயனர்களுக்கு பெரிய நிம்மதியை தேடித்தந்தது.
எப்படி?
== எழுத்துருவிலிருந்து விசைப்பலகையை பிரித்தல் ==
முன்பெல்லாம் எழுத்துரு ஒன்றை பயன்படுத்த வேண்டுமானால் அந்த எழுத்துருவுக்கான விசைப்பலகை வடிவத்திலேயே தட்டெழுத வேண்டும்.
எடுத்துக்காட்டாக, பாமினி எழுத்துருவை பயன்படுத்தினால் பாமினிக்குரிய விசைப்பலகை வடிவத்திலும், சிறீலிபியை பயன்படுத்தினால் அதற்குரிய விசைப்பலகை வடிவத்திலும் தட்டெழுத வேண்டியிருதது.
விசைப்பலகி இயக்கிகளின் வருகைக்குப்பிறகு இந்த பிரச்சனை இல்லாமல் போய்விட்டது. எவரும் எந்த விசைப்பலகை வடிவத்தில் வேண்டுமானாலும் எந்த எழுத்துருவை பயன்படுத்தியும் தட்டெழுதக்கூடிய வசதி கிடைத்தது.
நீங்கள் ஏதாவதொரு விசைப்பலகை தளக்கோலத்தை பழகி வைத்திருப்பதே தேவையானது. பின்னர் நீங்கள் எந்த எழுத்துருவை வேண்டுமானாலும் எந்த குறிமுறையை வேண்டுமானாலும் நீங்கள் பழகி வைத்திருக்கும் தளக்கோலத்தை பயன்படுத்தியே தட்டெழுதிக்கொள்ளலாம். உங்களுக்கு தேவையானதெல்லாம் உங்கள் தளக்கோலத்துக்குரிய விசைப்பலகை இயக்கி மாத்திரமே.
அநேகமாக எல்லா தளக்கோலங்களுக்கு விசைப்பலகி இயக்கிகள் கிடைக்கின்றன.
க்னூ/லினக்ஸ் இயங்குதளத்திற்கு மிகவும் எளிய, வசதிகள் அதிகமான விசைப்பலகை இயக்கிகள் பல உண்டு ( SCIM, M17N, GTK IM)
வின்டோஸ் இயங்குதளத்திற்கும் மிகப்பிரபலமான எ-கலப்பை எனும் விசைப்பலகை இயக்கி உண்டு. இந்த ஏ-கலப்பை அநேகமாக எல்லா விசைப்பலகைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
== தமிழ் 99 ==
விசைப்பலகை வடிவங்களை ஆளாளுக்கு புதிதுபுதிதாக உருவாக்கிக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட பெரும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடுமுகமாக 1999ம் ஆண்டு தமிழ் நாட்டில் அடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் நியம விசைப்பலகையாக தமிழ் 99 வடிவம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எந்த மென்பொருள் செய்தாலும் அதில் மற்றைய வடிவங்க்ளை புகுத்துவதில் தவறில்லை. ஆனால் தமிழ் 99 வடிவம் கட்டாயம் ஒரு தெரிவாக இருக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்தியது.
தமிழ் விசைப்பலகைகள் பல இந்த வடிவத்தை பயனப்டுத்தி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இன்றும் நீங்கள் வாங்கும் தமிழ் விசைப்ப்லகைகள் தமிழ் 99 வடிவத்தையே கொண்டிருக்கின்றன.
இந்த வடிவமே தமிழை மிக இலகுவாக, வேகமாக தட்டெழுத ஏற்ற வடிவமாக கூறப்படுகிறது.
== ammaa ==
என்னதான் நியம விசைப்பலகையை அறிமுகப்படுத்தினாலும் எம்மவர்கள் புதிதாக ஒரு விசைப்பலகை வடிவத்தை கற்றுக்கொள்ள விரும்பவில்லை. புலம்பெயர் தமிழர்களோ, அவர்களது பிள்ளைகளோ தமிழை தட்டெழுத மிகவும் சங்கடப்பட்டார்கள். இவர்களுக்காகவும் ஆரம்பநிலைப்பயனரும் இலகுவில் தமிழை தட்டெழுதுவதற்காகவும் அஞ்சல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. முரசு அஞ்சல் நிறுவனம் இதனை அறிமுகப்படுதியது.
அதாவது தமிழை நேரடியாக ஆங்கிலத்தில் தட்டுவது. ஆங்கில ஒலிப்பியல் முறை எனக்ப்படுகிறது.
அம்மா எழுத வேண்டுமானால் உங்கள் விசைப்பலகை இயக்கியில் தமிழை தெரிவுசெய்து வைத்துக்கொண்டு ammaa என்ற ஆங்கில எழுத்துக்களை தட்ட வேண்டும்.
தமிழ் எழுதவேண்டுமானால் thamiz என்று தட்ட வேண்டும்.
திரையில், உங்கள் ஆவணத்தில் நீங்கள் எழுதும் அனைத்தும் தமிழ் எழுத்துக்களகவே காட்சியளிக்கும்.
இந்த விசைப்பலகை வடிவத்தின் அறிமுகம் மிக வேகமாக தமிழர் தமிழை உள்வாங்க வழியை ஏற்படுத்தியது. சாதாரண பயனர் ஒருவரும் இந்த வடிவத்தை மிக இலகுவாக கற்றுக்கொண்டு தமிழை தட்டெழுத வழி ஏற்பட்டது.
இந்த விசைப்பலகை வடிவம் மிகுந்த வரவேற்பை பெற்று பிரபலமாகி இருந்தபோதும், தமிழின் எதிர்காலத்துக்கு இவ்வடிவம் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று சில சிந்தனையாளர்கள் அஞ்சுகின்றனர் ஆங்கிலத்திலேயே தட்டெழுதுவதால் அடுத்த தலைமுறை தமிழ் எழுத்துக்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பை படிப்படியாக இழப்பர் என்றும், தமிழ் , தமிழ் எழுத்துக்களாக அன்று ஆங்கில எழுத்துக்களாகவே மனதில் பதிந்துவிடும் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
== குறிமுறைக்குழப்பம் ==
இந்த இருமொழி எழுத்துருக்கள் மிக நல்ல வசதிகளை தமிழுக்கு தேடித்தந்ததை தொடர்ந்து ஆளாளுக்கு இவ்வாறான இருமொழி எழுத்துருக்களை உருவாக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தயாரிக்க ஆரம்பித்தார்கள்.
வர்த்தக போட்டிகள் காரணமாகவும், தொடர்பாடல், ஒருங்கிணைப்பின்மை காரணமாகவும் பெருங்குழப்பங்களை எல்லாம் விளைவித்தார்கள். ஒருவர் ஆனா வைத்த இடத்தில் இன்னொருவர் தானாவை வைத்துவிடுவார் இப்படியாக ஏராளம் குழப்பங்கள். விளைவு, ஓர் எழுத்துருவை பயன்படுத்தி செய்யப்பட்ட ஆவணத்தையோ, வலைப்பக்கத்தையோ இன்னோர் எழுத்துருகொண்டு படிக்க முடியாமற்போனது. ஆங்கிலம் ஆங்கிலமாகவே இருக்கும் என்பதால் பிரச்சனை இல்லை. தமிழ் பகுதிகள் எழுத்துருவுக்கு எழுத்துரு குழம்பியும் மாறியும் காட்சியளிக்கத்தொடங்கியது.
ஒவ்வோர் ஆவணத்திற்கும் ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் தனித்தனியாக எழுத்துருக்களை நிறுவ வேண்டியதாயிற்று.
இந்த குழப்பத்தின் விளைவுகளின் பாரதூரத்தை உணர்ந்த தமிழ்க் கணிமையாளர்கள், இதற்கு ஒரு நல்ல தீர்வு காணப்பட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்கள்.
இந்த காலப்பகுதியில் உலகத் தமிழ் தகவற்தொழிநுட்ப செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் முன்கொண்டு செல்வதற்காகவும் "உத்தமம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது (தற்போது இவ்வமைப்பு செயலிழந்துவிட்டது)
== தகுதரம், தராதரம் ==
இத்தகைய அமைப்புக்கள், ஒருங்கிணைப்புக்கள் காரணமாக குழப்பங்களுக்கான தீர்வு உந்தப்பட்டு உருவாக்கப்பட்டது.
அதுதான் "திஸ்கி".
பெயர் ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? திஸ்கி என்றால் TSCII (Tamil Standard Code for Information Interchange)
இதை தமிழில் "தகுதரம்" என்கிறார்கள்.
இந்த தகுதரம் என்பது, இருமொழி எழுத்துருக்களை உருவாக்கும்போது ஆனாவை எங்கே வைக்கவேண்டும், தானாவை எங்கே வைக்கவேண்டும் என்பதை எல்லாம் ஒரு நியமத்துக்குள் கொண்டுவந்தது. நீங்கள் தாராளாமாக உங்களுக்கு பிடித்த மாதிரி எழுத்துருக்களை உருவாக்கலாம் ஆனால் எந்த எழுத்துருவை போட்டாலும் ஆனா ஆனாவாகத்தான் தெரியவேண்டும் என்று இத்தராதரம் ஆணையிடுகிறது.
இந்த தகுதர தராதரத்தை பின்பற்றி உருவாக்கப்பட்ட எழுத்துருக்கள் எல்லாம் TSC_ என்று ஆரம்பிக்கும். தகுதரத்தின் வருகைதான் முதன்முறையாக தமிழருக்கென்று ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட எழுத்து குறிமுறையை கொண்டுவந்தது. உலகம்பூராகவும் பிரச்சனை இன்றி பரிமாறத்தக்க ஆவணங்களையும் வலைப்பக்கங்களையும் உருவாக்க வகை செய்தது.
== போதுமென்ற மனமே பிழையான போக்கு ==
திருப்தியின்மையாலும், உரிமைப்போராட்டங்களாலுமே வரலாறு முன்னோக்கி நகர்கிறது.
திஸ்கி வரைமுறை ஒரு நல்ல தீர்வுதானே இனி இதையே வைத்துக்கொண்டு கணினியிலும் இணைய உலகத்திலும் தமிழ் காலந்தள்ளிவிடலாம் என்ற மனநிலை முன்னோக்கி சிந்திப்பவர்களுக்கு இருக்கவில்லை.
இரு மொழியை கையாளக்கூடியவர்களாக இபோது நாம் இருந்தாலும், ஆங்கிலத்தை விட ஒரு படி கீழேதானே நிற்கிறோம்?
ஆங்கிலத்தில் ஒரு ஆவணத்தை தயாரித்தால் இந்த உலகின் எந்த கணினியிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் திறந்து படிக்க முடிகிறது. விண்வெளியில் சுற்றும் செய்மதியின் கணினியில் கூட அதே ஆவணத்தை அதே எழுத்துக்களால் படிக்கலாம். ஆனால் நமக்குத்தான் ஒரு எழுத்துருவை நிறுவ வேண்டியிருக்கிறது. எழுத்துரு இல்லாவிட்டால் பூச்சிகளும் பிறமொழி எழுத்துக்களுமாக ஆவணமும் வலைப்பக்கங்களும் பயங்காட்டுகின்றன.
ஏன் இந்த இரண்டாம்தர நிலை?
ஏன் எல்லாவற்றிலும் ஆங்கிலத்திற்கு ஒருபடி கீழேதான் நிற்கவேண்டியிருக்கிறது?
இந்த போர்க்குரல் தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல, இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட எல்லா மொழி தொழிநுட்பவியலாளர்களிடமிருந்தும் சாதாரண பயனர்களிடமிருந்தும் எழுந்தது.
பெரு நிறுவனங்களுக்கோ, இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டால்தான் பெரும் சந்தையை, பிறமொழிச்சந்தையை கைப்பற்ற முடியும் என்கிற நிலையும் ஏற்பட்டது.
தீர்வுக்கான உலகளாவிய முனைப்பும் முடுக்கிவிடப்பட்டது.
எமக்கு திஸ்கிபோல ஒவ்வொரு மொழிக்காரரும் ஒவ்வொன்றை தூக்கிக்கொண்டு வந்தனர்.
உலகளாவிய குழப்பமாக இது மாறிப்போனது. உலகம் முழுமைக்குமான ஒரு நியமமாக ஓர் ஒருங்கு குறியீடாக ஒரு தீர்வு பெறப்படவேண்டும் என்று பலமாக சிந்திக்கப்பட்டது.
வரலாற்றின் இயக்கம் தொழிநுட்பத்தை அடுத்த பாய்ச்சலுக்கு உந்தித்தள்ளியது.
விளைவு, "ஒருங்குறி" எனும் தீர்வு உலகுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
யுனிகோட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ஒருங்குறி குறிமுறை உலகின் சகல மொழிகளையும் கணினியில் சமமாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கியது.
எப்படி? இதன் சாத்தியப்பாடுகள் என்ன? ஒருங்குறி எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
== ஒருங்குறி ==
ஒருங்குறியைப்பற்றிய முழுமையான விளக்கத்தினை தரவேண்டுமானால் தனிப்புத்தகமே போடவேண்டும். மிக எளிமையாக அதன் அடிப்படைகளை மட்டுமே இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முன்னர் 7 பிட்டுக்களால் எழுத்துக்களை வகைகுறிக்க முயன்றபோது 128 இடங்கள் கிடைத்தன. அது ஆங்கிலத்துக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
பின்னர் ஐரோப்பிய மொழிக்காரர்களின் தேவைகள் கருதி 8 பிட்டுக்களாக மாற்றம் செய்யப்பட்டபோது 256 இடங்கள் கிடைத்தன. அது அந்த ஐரோப்பிய மொழிக்காரர்களுக்கே சரியாக போதாமற்போனது. நாம் அதை இருமொழி எழுத்துக்களுக்கு பயன்படுத்தினோம். பல குழப்பங்களோடு.
மேற்சொன்ன இரண்டு காலப்பகுதிகளிலும் ஏதாவ்தொரு மொழியின் எழுத்து இருந்த இடத்தில்தான் நாம் எழுத்துருக்களை பய்ன்படுத்தி தமிழை நுழைத்து வைத்திருந்தோம். எமக்கென சொந்த இடம் என்று ஒன்று இல்லாமற்போனது. தமிழில் ஏதாவது ஆவணம் தயாரித்தால் கணினியை பொறுத்தவரை அது ஏதாவ்தொரு மொழி தான். தமிழ் இல்லை.
எமக்கென்று சொந்த இடம் வேண்டும். எமது எழுத்துக்களுக்கென தனியான மின்துடிப்பு கோலம் வேண்டும். எமது எழுத்துக்களுக்கான கோலங்களை கண்டவுடன் கணினி, ஆ! தமிழ் வந்துவிட்டது என்று உணர வேண்டும். உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் ஆனா இருந்த இடத்தில் ஆனாதான் இருக்கவேண்டும். சந்திரனுக்கு போனாலும், செவ்வாய்க்கு போனாலும் அப்படியேதான் இருக்கவேண்டும். எழுத்துரு இல்லாமற்போனால்கூட தமிழ் எழுத்து இருந்த இடத்தில் வேறு எழுத்துக்கள் தெரியக்கூடாது.
இதற்கு என்ன வழி?
இதை தமிழர்கள் மட்டுமல்ல எல்லா மொழிக்காரர்களும் சிந்தித்தார்கள்.
8 பிட்டில் 256 இடங்கள் கிடைத்தன. அது போதவில்லை. இதையே 16 பிட்டுக்களாக மாற்றினால்?
65636 இடங்கள் கிடைக்கும்.
இது எல்லா மொழிகளையும் வைத்திருக்க போதுமானதல்லவா?
அதுதான் ஒருங்குறி!
யுனிகோட்!!
== ஒருங்குறி செய்த புரட்சி ==
ஒருங்குறி மூலமாக தமிழுக்கு தனி இடம் கிடைத்தமையானது தமிழ் கணிமையின் போக்கையே புரட்சிகரமாக மாற்றியமைத்தது.
ஆங்கிலம் மூலம் கணியில் செய்யக்கூடிய அனைத்தையும் தமிழ் மூலம் செய்துகொள்வதற்கான சாத்தியங்கள் வழிதிறந்தன.
தமிழ் எழுத்துக்கள் இருந்தல் அதனை தமிழ் எழுத்து என்று கணினி தானாகவே கண்டறிந்து சொல்லியது. குறித்த உரைப்பகுதியை தெரிவுசெய்து இது என்ன மொழி என்று கணினியிடம் கேட்டால் கணினி "இது தமிழ்' என்று துணிந்து கூறியது.
தமிழில் தட்டெழுதிவிட்டு எந்த எழுத்துருவை மாற்றிப்போடாலும், ஜப்பான் எழுத்துருவையே மாற்றினாலும் தமிழ் தமிழாகவே தெரிந்தது.
எழுத்துருக்களை நிறுவிக்கொள்ளாமலேயே வலைப்பகக்ங்களையும் மின்னஞ்சல்களையும் ஆவணங்களையும் தமிழில் படிக்க முடிந்தது.
தமிழ் வலைப்பக்கங்களும் வலைப்பதிவுகளும் ஒருங்குறியை பயன்படுத்திக்கொண்டு பலநூறாயிரங்களாக பெருகின.
தமிழ் கணினியில் தலை நிமிர்ந்து நடந்தது.
== ஒருங்குறியால் நாம் பெற்ற புதிய வசதிகள் ==
1. எந்த விசைப்பலை வடிவத்தை பயன்படுத்தியும் தமிழ் எழுத்துக்களை தட்டெழுத முடிந்தது.
2. எப்படி, எந்த முறையில் தட்டெழுதியிருந்தாலும் அந்த ஆவணத்தை எங்கும் திறந்து படிக்க முடிந்தது. எவரும் எந்த முறையை பயன்படுத்தியும் திருத்திக்கொள்ளமுடிந்தது.
3. ஒருங்குறியில் செய்யப்பட்ட ஆவணமொன்றினை எழுத்துருக்கள் எதையும் மாற்றிக்கொள்ளாமலே படிக்க முடிந்தது.
4. கணினியில் கோப்புக்களுக்கும்(files) அடைவுகளுக்கும் (folders) தமிழில் பெயர் வைக்க முடிந்தது.
5. ஒரு கட்டுரையில் முப்பத்தாறு மொழிகளின் எழுத்துக்களை பயன்படுத்தியிருந்தாலும்கூட தமிழ் எழுத்துக்கள் எந்த எழுத்துரு மாற்றமுமின்றி தமிழாகவே காட்சியளித்தது.
6. கூகிள் போன்ற தேடு பொறிகளில் தமிழ் எழுத்துக்களால் அமைந்த சொற்களை கொண்டு தமிழ் பக்கங்களை தேட முடிந்தது.
7. எழுத்துருப்பிரச்சனை இன்றி தமிழில் மின்னஞ்சல்கள் அனுப்பமுடிந்தது yahoo, msn messenger போன்றவற்றில் தமிழிலேயே உரையாட முடிந்தது.
8. தமிழ் எழுத்துப்பிழை திருத்திகளை உருவாக்க முடிந்தது.
9. கணினியின் இடைமுகப்பினை முழுக்க முழுக்க தமிழிலேயே வைத்திருக்க முடிந்தது. அத்தனை சொற்களும் menuக்களும் எல்லாம் கணினிய்ல் தமிழிலேயே தோன்றும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்க்கணினிகள் பிறக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
10. ஒருங்குறி ஆதரவு மட்டுமே போதும் கணினியில் தமிழை பயன்படுத்த வேறெந்த எழுத்துருக்களையும் நிறுவிக்கொள்ள தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டது.
இன்னும் எத்தனை எத்தனையோ நன்மைகள் விளையத்தொடங்கியது.
== எழுத்துரு மாற்றிகள் ==
சரி, ஆதியில் ASCII இருந்தது. பிறகு TAM, TAB, TCSII எல்லாம் வந்தது. இப்போது ஒருங்குறி. இடையில் நூற்ற்க்கணக்கான குறிமுறைகளும் எழுத்துருக்களும். இந்த குழப்பத்தின் விளைவாய் எத்தனையோ பிரயோசனமான ஆவணங்கள் வெவ்வேறு எழுத்துருக்களால், குறிமுறைகளால் அமைந்து கிடக்கின்றன.
ஒருங்குறிக்குத்தன் எதிர்காலம் என்கிறீர்கள். ஒருங்குறியால் அமைந்த பக்கங்களைத்தான் கூகிள் தேடும் என்கிறீர்கள்.
அப்போ, நாம் முன்னர் முக்கி முக்கி தட்டெழுதிய ஆவணங்களுக்கெல்லாம் ஓர் அர்த்தம் இல்லையா?
அவை எல்லாம் செத்துப்போய் விட்டனவா? அவற்றை எல்லாம் திரும்ப இருந்து நாம் ஒருங்குறியில் தட்டெழுத வேண்டுமா?
இந்த கேள்வியை எல்லோரும் கேட்கத்தொடங்கிய சூழ்நிலையில், எழுத்துருக்க்ளை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுவதற்கான மென்பொருட்களின் தேவை அதிகரித்தது.
இவ்வாறான மாற்றிகளை முரசுநிறுவனம் உள்ளெட்ட ஏராளமானவர்கள் தயாரிக்கத்தொடங்கினர்.
இவற்றுள் மிக எளிமையானதாகவும் பிரபலமானதாகவும் இருப்பது சுரதா மாற்றிகளாகும்.
www.suratha.com/reader.htm முகவரியிலிருக்கும் சுரதா மாற்றியை பயன்படுத்தி இன்று தமிழில் புழங்கும் எந்த எழுத்துருவில், குறிமுறையில் அமைந்த உரைப்பகுதிகளையும் தமிழ் ஒருங்குறியில் மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.
இச்செயலியின் பெயர் "பொங்குதமிழ்".
== இனி என்ன? ==
தமிழ்க்கணிமை நடந்துவந்த பாதையை, ஒருங்குறியின் வருகைப்பின்னர் ஏற்பட்ட பாய்ச்சலை பார்த்தோம்.
இவ்வளவும் இறந்தகாலம். நிகழ்காலம் என்ன?
நிகழ்காலக் கணிமை உலகில் நிகழ்வன பற்றிய கட்டுரைகள் இந்த மல்லிகைச்சிறப்பிதழில் அடுத்தடுத்து இடம்பெறக்கூடும். இதுபற்றி அவையே பேசட்டும்.
தற்போது தமிழில் பல புதிய போக்குகள் எழுந்துள்ளன. புதிய வளர்ச்சிகள் தென்படுகின்றன.
வலைப்பதிவுகள் கற்பனைக்கெட்டாத அளவில் தமிழ் உள்ளடக்கத்தினை இணையத்திற்கு கொண்டுவந்து சேர்த்துக்கொண்டிருக்கின்றன. தமிழ் இணையக் குடிமக்கள் தமக்கிடையே ஒருங்கிணைவையும் மையப்படுத்தப்படாத ஒருங்கிணைந்த அசைவியக்கத்தையும் காண்பிக்கிறார்கள். தொடர்பாடுகிறார்கள்.
இணையவெளியில் தமிழ் தேசம் ஒன்று கட்புலனாகாமல் உருவாகிவருகிறது. அரசாங்கள் செய்யமுடியாத பல்வேறு பணிகளை இந்த மின்தமிழ் தேசம் எந்த தலைமையுமின்றி தானாக, தனித்தனி தீவுகளாக முன்னெடுத்துச்செல்கிறது.
திறந்த மூல இயக்கம், ஏகாதிபத்தியத்துக்கெதிரான தன் இலட்சியப்பயணத்தை தமிழ் வழியாகவும் நிகழ்த்துகிறது. விக்கிபீடியா, கட்டற்ற தமிழ் இயங்குதளங்கள் (தமிழ் லினக்ஸ்), விக்சனரி என இதன் பக்க உற்பத்திகள் தமிழுக்கு புது ரத்தம் கொடுக்கின்றன.
இணையத்தில் பயன்பாட்டிலுள்ள முதன்மை மொழிகளில் ஒன்றாக தமிழ் மாறியிருக்கிறது.
ஓர் ஆங்கிலப்பயனர் ஆங்கிலத்தில் செய்யும் பணிகளில் பெரும்பாலானவற்றை இன்று நாம் தமிழில் கணினியில் செய்கிறோம். தமிழ்க்கணிமை இலக்கியம் உருவாகிவிட்டது.
கணினி நுட்பங்களை, தொழிநுட்ப விஷயங்களை தமிழில் எழுதும் புதிய போக்கும், அதற்கான புதிய எழுதும் முறையும், எழுத்தாக்க வடிவங்களும் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. அதனை இந்த மல்லிகை சிறப்பிதழில் மற்ற நண்பர்கள் எழுதியுள்ள கட்டுரைகளில் இந்த புதிய போக்கினை இனங்காணலாம்.
அடுத்த கட்டத்துக்கான தயார்படுத்தல்களும் ஆரம்பித்தாகிவிட்டது.
தமிழ் ஒளிமுறை எழுத்துணரிகள், தமிழ் புத்தகங்களை கணப்பொழுதுகளில் மின்வடிவங்களாக மாற்றப்போகின்றன.
பார்வைச்சவால்கொண்டவர்களுக்காக தமிழ் உரைப்பகுதிகளை கணினி தமிழில் உரத்துப்படித்துக்காட்டப்போகிறது.
செல்பேசிகளில் தமிழ் வந்துவிட்டது. இனி அது தமிழ் கையெழுத்துக்களை இனங்காணப்போகிறது.
நீங்கள் தமிழில் பேசினால் அதை புரிந்துகொண்டு கணினி செயற்படப்போகிறது. நீங்கள் சொல்லச்சொல்ல கணினி தமிழில் எழுதப்போகிறது.
இவை எல்லாம் கனவுகள் அல்ல. அடுத்த ஐந்துவருடங்களில் நிகழப்போகும் மாற்றங்கள்.
மாற்றங்களை நாம் உள்வாங்கிக்கொள்ளவேண்டும். மாற்றங்களை ஏற்றுக்கொண்டு எம்மை தகவமைத்துக்கொள்ளவேண்டும். தொழிநுட்ப மாற்றங்களை உள்வாங்கி அதனை தமிழ் சார் அசைவியக்கங்களில் புகுத்தவேண்டும். தேங்கிப்போய்விடக்கூடாது.
[விளக்கம் : முழுமையான தமிழ் இடைமுகப்புடன் கூடிய தமிழ் லினக்ஸ் இயங்குதளத்தின் தோற்றம்]
இன்னும் எம்மவர்கள் பாமினி போன்ற எழுத்துருக்களிலேயே தட்டெழுதுகின்றனர். வலைப்பகக்ங்களை அமைக்கின்றனர். கஷ்டப்பட்டு அதற்கான விசைப்பலகை வடிவங்களை கற்றுக்கொள்கின்றனர். இது தேவையே இல்லை.
இன்னும் எம்மவர்கள் தமிழ் மென்பொருட்களை, தொழிநுட்பங்களை, தமிழ்க்கணினிகளை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை. ஆங்கிலத்திற்கு அடிப்பணிந்தே கிடக்கின்றனர்.
முழுமையான தமிழ் இயங்குதளத்தை, தமிழ் லினக்ஸ் இனை பயன்படுத்த யாரும் முன்வரவில்லை. அது முற்றிலும் இலவசம். மக்கள் உடமை என்று சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட கட்டற்ற மென்பொருள். ஆனாலும் இன்னும் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கருவியான வின்டோசையே தமது சாதாரண அலுவல்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.
இணையத்தமிழ் இயக்கங்களில் யாரும் இணைந்துகொள்ளவில்லை. இளைஞர்கள் புலமையாளர்களை அழைத்துவருவது மிக மிக குறைவு. இந்நிலையை மாற்ற வேண்டுமானால், புலமையாளர்மட்டத்தில் தமிழ் கணிமை தொடர்பான உரையாடல் நிகழவேண்டும்.
கணினி எல்லாவர்க்கங்களுக்கும் சென்று சேர்ந்த தொழிநுட்பம் இல்லைதான். ஆனால் சேர்ப்பிக்கப்படவேண்டிய தொழிநுட்பம். கணினி குட்டி முதலாளிகளின் ஆடம்பரப்பொருள் அல்ல. அவர்களிடம் இருப்பதால் அது அப்படி இருக்கிறது. மக்கள் கையில் அது சேர்க்கப்படும்போது, ஜனநாயகமயப்படும்போது பெரும் சக்தியாக மாறும். அதன் அடிப்படை மொழிசார் கணிமை.
தமிழரிடத்தில் கணினி தமிழில் பேசுவது, கணினிப்பயன்பாட்டுக்கு மொழி முட்டுக்கட்டையாக இல்லாமலிருப்பது முக்கியம்.
தமிழ் ஆர்வலர்கள் தமிழ் கணிமை தொடர்பான சந்திப்புக்கள் நிகழ்த்தவேண்டும். இலக்கியக்கூட்டங்களைப்போல் தமிழ்க்கணிமை தொடர்பான கூட்டங்கள் நடக்கவேண்டும்.
நிலைமை நிச்சயம் மாறும்.
உரையாடல் தொடங்கட்டும்.




5 பிற்சேர்க்கைகள்:
மிக அருமையான கட்டுரை மு.மயூரன்.
//கணினி எல்லாவர்க்கங்களுக்கும் சென்று சேர்ந்த தொழிநுட்பம் இல்லைதான். ஆனால் சேர்ப்பிக்கப்படவேண்டிய தொழிநுட்பம். கணினி குட்டி முதலாளிகளின் ஆடம்பரப்பொருள் அல்ல. அவர்களிடம் இருப்பதால் அது அப்படி இருக்கிறது. மக்கள் கையில் அது சேர்க்கப்படும்போது, ஜனநாயகமயப்படும்போது பெரும் சக்தியாக மாறும்// அருமையான வரிகள்.
ஆங்கிலமே படிக்காத தமிழ் வல்லுனர்களை உபயோகித்து புதுவித ஆராய்ச்சிகளில் இரங்கவேண்டும். அதாவது தமிழில் மட்டும் (அடிப்படையில்) சிந்திக்கும் திறன் கொண்டவராக இருத்தல் வேண்டும். நீங்கள் கூறும் 0,1 குறிகளை கொண்டு இது சாத்தியமானதே. நீங்கள் கூறியிருப்பது போல் கணினி இப்போதைக்கு சிறு முதலாளிகளிடம் அடை பட்டு கிடக்கிறது. இது உடனடியாக ஜனநாயக படுத்தப்படவேண்டும். தமிழில் மட்டுமே சிந்திக்கும் மக்கள் அவர்கள் பங்குக்கு புதிய கோணத்தில் பிரச்சினைகளை அனுகுவார்கள். நான் சொல்லும் இக்கருத்து முக்கியமானதாக படுகிறது.
உங்களுக்கு எப்படியோ!
மாசிலா.
மிக அருமையான கட்டுரை மு.மயூரன்.
//கணினி எல்லாவர்க்கங்களுக்கும் சென்று சேர்ந்த தொழிநுட்பம் இல்லைதான். ஆனால் சேர்ப்பிக்கப்படவேண்டிய தொழிநுட்பம். கணினி குட்டி முதலாளிகளின் ஆடம்பரப்பொருள் அல்ல. அவர்களிடம் இருப்பதால் அது அப்படி இருக்கிறது. மக்கள் கையில் அது சேர்க்கப்படும்போது, ஜனநாயகமயப்படும்போது பெரும் சக்தியாக மாறும்// அருமையான வரிகள்.
ஆங்கிலமே படிக்காத தமிழ் வல்லுனர்களை உபயோகித்து புதுவித ஆராய்ச்சிகளில் இரங்கவேண்டும். அதாவது தமிழில் மட்டும் (அடிப்படையில்) சிந்திக்கும் திறன் கொண்டவராக இருத்தல் வேண்டும். நீங்கள் கூறும் 0,1 குறிகளை கொண்டு இது சாத்தியமானதே. நீங்கள் கூறியிருப்பது போல் கணினி இப்போதைக்கு சிறு முதலாளிகளிடம் அடை பட்டு கிடக்கிறது. இது உடனடியாக ஜனநாயக படுத்தப்படவேண்டும். தமிழில் மட்டுமே சிந்திக்கும் மக்கள் அவர்கள் பங்குக்கு புதிய கோணத்தில் பிரச்சினைகளை அனுகுவார்கள். நான் சொல்லும் இக்கருத்து முக்கியமானதாக படுகிறது.
உங்களுக்கு எப்படியோ!
மாசிலா.
அருமையான கட்டுரை மயூரன். இந்த ஆண்டின் சிறந்த வலைப்பதிவுக் கட்டுரைகளில் ஒன்றாக நிச்சயம் கருதலாம். தமிழ்க் கணிமை வரலாறு குறித்து ஓரளவு அறிந்திருந்த என்னைக் கூட ஒரு மாணாக்கன் போல் பொறுமையாக ஆர்வமாக படிக்கத் தூண்டிய கட்டுரை நடை அருமை. இவ்வளவு நாட்கள் சிரமப்பட்டு இப்போது தான் கணினியில் தமிழ் படம் காட்ட முடிந்திருக்கிறது. இனி குதிரைப் பாய்ச்சலில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. இன்னும் பலர் இந்த முயற்சிகளில் இணைந்து கொள்வர் என்று எதிர்பார்ப்போம். மாசிலா சொன்னது போல் தமிழில் மட்டும் சிந்திக்க வல்லவர்கள் நிச்சயம் புது தமிழ் சார் கணிமைச் சிந்தனைகளை தர வல்லவர்களாக இருப்பார்கள்
சிறந்த கட்டுரை
திரு காசி அவர்களில் உன் கோடு, என் கோடு கட்டுரையை ஒட்டி இருந்தாலும், சொல்லப்பட்ட விதம் அருமை
அது போல் தமிழ் லினக்ஸ் பற்றி எழுதியிருக்கிறீர்கள்
இந்தியாவில் BOSS Linuxல் முற்றிலும் தமிழிலேயே எழுதலாம், மற்றும் இடைமுகம் தமிழில் உள்ளது
தற்பொழுது தமிழக அரசின் சார்பில் அரசு அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படும் கணினிகள் லினக்ஸ் இயங்குதளத்திலேயே இயங்கும் மாறு அளிக்கப்படுகின்றன
இது தொடரும் .... மேலும் வளரும் என்று எதிர்பார்க்கிறோம்
புருனோ,
தகவல்களுக்கு மிக்க நன்றி.
ஆம். அந்தக் காசியின் கட்டுரையை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியுமா?
எல்லாம் சரி, இந்தப்பதிவு ஏன் மீண்டும் தமிழ்மணத்துக்கு வந்தது என்று புரியவில்லை. நான் வேறொரு பதிவு எழுதி அதை தமிழ் மணத்துக்கு அனுப்பி இருந்தேன். இது எதற்கு வந்தது?
Post a Comment