June 22, 2007

படிக்கும் உரிமை (புனைகதை)

ஆங்கில மூலம் - ரிச்சர்ட் ஸ்டால்மன்
தமிழில் - மு.மயூரன்

(இத் தமிழாக்கம், நூலகம் திட்டத்திற்குப் படையல்...)

கலைச்சொற்கள்:

இடைத்தவணைச் செயற்றிட்டம் - Mid-Term Project
மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபை - Software Protection Authority
காப்புரிமைக் கண்காணி - copyright monitor
உரிமப்படுத்தல் நடுவம் - Central Licensing
உசாவல் - Reference
வழுத்திருத்தி - Debugger
ஆணைத்தொடர் - code
இறுவட்டு - CD
தரவிறக்கம் - Download
நிரலாளர் - Programmer
தீயரண் - Firewall
கருனி - kernel
இயங்குதளம் - Operating System





*ஆசிரியரின் இப்படைப்பு Communications of the ACM இன் பெப்ரவரி 1997 வெளியீட்டில்(Volume 40, Number 2) இடம்பெற்றது.
* தைக்கோ என்பது நிலவில் காணப்படும் கிண்ணக்குழிகளில் பரப்பால் பெரிதான ஒன்று.

---

(2096 இல் நிலாநகரில் வெளியிடப்பட்ட "தைக்கோவுக்கான பாதை" என்ற, நிலவுப்புரட்சியின்போது நடந்த சம்பவங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நூலிலிருந்து... )


டான் ஹால்பர்ட் டை பொறுத்தவரைக்கும் தைக்கோவுக்கான பாதை, கல்லூரியில் அவனுடைய கணினியை - லிசா லென்ஸ் இரவல் கேட்டபோது - ஆரம்பிக்கிறது.

அவளுடைய கணினி பழுதாய்ப்போய்விட்டது. இன்னொன்றை இரவல் வாங்காவிட்டால் இடைத்தவணைச் செயற்றிட்டத்தில் அவள் தோல்வியடைய நேரும். டானைத்தவிர இதனை அவள் துணிந்து கேட்பதற்கு வேறு யாரும் இல்லை.

இது டானின் நிலையைத் தர்மசங்கடமாக்கிவிட்டது. அவனுக்கென்னவோ அவளுக்கு உதவவேண்டியிருந்தது. ஆனால் தன்னுடைய கணினியை இரவல் கொடுத்தால் அவனுடைய புத்தகங்களை அவள் படித்துவிடக்கூடும்.

மற்றொருவரை உங்கள் புத்தகங்களை வாசிக்கவிட்டமைக்காகப் பலவருடங்கள் சிறைவாழ்க்கைக்கு போகவேண்டியிருக்கும் என்ற உண்மை ஒரு புறமிருக்க, அவள் தனது புத்தகங்களைப் படித்துவிடக்கூடும் என்ற நினைப்பே அவனை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எல்லோரையும் போல அவனும் தொடக்கப்பள்ளியிலிருந்தே புத்தகங்களை மற்றவரோடு பகிர்தல் தவறானதென்றும் கெட்ட பழக்கம் என்றும், கொள்ளைக்காரர்கள் மட்டுமே செய்யக்கூடிய செயல் என்றும் கற்பிக்கப்பட்டிருந்தான்.

கூடவே 'மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபை' அவனை பிடிக்கத்தவறுவதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கவில்லை. ஒவ்வொரு புத்தகமும் காப்புரிமைக் கண்காணியொன்றினைத் தம்மகத்தே கொண்டிருக்கும் என்றும், யாரால், எப்போது, எங்கே அந்தப்புத்தகம் படிக்கப்படுகிறது என்ற தகவலை 'உரிமப்படுத்தல் நடுவத்திற்கு' அறிவிக்கும் என்றும் கற்றிருக்கிறான் (படிக்கும் கொள்ளைக்காரர்களைப் பிடிப்பதற்காக மட்டுமல்லாது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கள் பற்றிய தகவல்களைச் சில்லறை வர்த்தகர்களுக்கு விற்கவும் இந்த வசதியை அவர்கள் பயன்படுத்தினார்கள்).

அடுத்த தடவை அவனது கணினி வலையமைப்பில் இணைக்கப்பட்டதுமே நடுவம் இதனைக் கண்டுபிடித்துவிடும். கணினியின் உரிமையாளன் என்ற வகையில் நடந்த குற்றத்தினை தடுக்க முயலாமைக்காக கடுமையான தண்டனையினை அவன் பெற வேண்டியிருக்கும்.

உண்மைதான், அவனுடைய புத்தகங்களைப் படிக்கும் நோக்கத்தினை லிசா அவசியமாகக் கொண்டிருக்கவில்லைதான். தன்னுடைய இடைத்தவணைத் தேர்விற்கு எழுதுவதற்கு மட்டுமே அவளுக்கு அந்தக் கணினி தேவைப்பட்டிருக்கக் கூடும். ஆனால், அவள் நடுத்தரவர்க்கக் குடும்பம் ஒன்றிலிருந்து வந்தவள் என்பதையும் புத்தகம் வாசிப்பதற்கான கட்டணங்கள் ஒருபுறமிருக்க, அவளுடைய பாடக்கட்டணங்களைச் செலுத்துவதற்கே சிரமங்களை எதிர்நோக்குபவள் என்பதையும் டான் அறிந்திருந்தான்.

அவனுடைய புத்தகங்களைப் படிப்பது மட்டுமே அவள் பட்டம்பெறுவதற்கான ஒரே வழியாகக்கூட இருக்கக்கூடும். இந்த சூழநிலையை அவன் புரிந்துகொண்டான். அவனே தான் வாசித்த ஆய்வுக்கட்டுரைகள் அனைத்துக்கும் பணம் செலுத்துவதற்குக் கடன்பட வேண்டியிருந்தது. (செலுத்தப்பட்ட பணத்தின் 10% அந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய ஆய்வாளர்களை சென்றடையும். கல்வித்தகைமை ஒன்றினை இலக்காகக்கொண்டவன் என்ற வகையில் டான், தனது சொந்த ஆய்வுக்கட்டுரைகள் அடிக்கடிப் படிக்கப்படும் பட்சத்தில் கடன்களை அடைத்துவிடுவதற்கு தேவையான பணத்தை அவை பெற்றுத்தரக்கூடும் என்று எதிர்பார்க்கமுடியும்).



எவர் வேண்டுமானாலும் நூலகங்களுக்குச்செல்லக்கூடிய, கட்டுரைகளை ஏன், புத்தகங்களிக்கூட காசெதுவும் கொடுக்காமல் வாசிகக்கூடிய காலமொன்று முன்னொருபோது இருந்தது என்பதை பின்னாட்களில் டான் அறிந்துகொண்டான். அரசாங்கத்தின் நூலக மானியம் இல்லாமலேயே ஆயிரக்கணக்கான பக்கங்களை படித்த சுயாதீனமான அறிஞர்கள் அப்போது இருந்திருக்கிறார்கள். ஆனால் 1990களில் வர்த்தக ரீதியான மற்றும் இலாபநோக்கற்ற வெளியீட்டாளர்கள் படிப்பதற்கான கட்டணங்களை அறவிட ஆரம்பித்துவிட்டார்கள். 2047ம் ஆண்டுவாக்கில் புலமை இலக்கியங்களை இலவசமாக பொதுமக்களின் உசாவலுக்கு வழங்கிய நூலகங்கள் எல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப்போயிற்று.

மென்பொருள் பாதுகாப்பு அதிகார சபையையும், உரிமப்படுத்தல் நடுவத்தையும் ஏய்ப்பதற்கான வழிகள் அப்போது இருக்கத்தான் செய்தன். அவை சட்டவிரோதமானவையாக இருந்தன.

டானுடன் மென்பொருள் வகுப்பில் கூடப்படித்த ஃப்ராங்க் என்பவன் சட்டத்திற்குப்புறம்பான வழுத்திருத்தி மென்பொருள் ஒன்றினைப் பெற்று வைத்திருந்தான். புத்தகங்களைப்படிக்கும்போது பதிப்புரிமைக் கண்காணி ஆணைத்தொடர்களை தவிர்த்து ஏய்ப்பதற்காக அதனை பயன்படுத்தினான். ஆனால் அவனோ ஒருதொகை நண்பர்களுக்கு அதைப்பற்றிச் சொல்லியிருந்தான். நண்பர்களில் ஒருவன் மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அவனைப் போட்டுக்கொடுத்துவிட்டான் (மிகுதியான கடன் பிரச்சினைகள் மாணவர்களை இப்படியான துரொகச்செயல்களுக்கு இட்டுச்செல்கிறது). 2047 இல் ஃப்ராங்க் சிறையிலடைக்கப்பட்டான். கொள்ளைக்காரத்தனமாக படித்ததற்காக அல்ல. மாறாக வழுத்திருத்தி மென்பொருள் ஒன்றை வைத்திருந்ததற்காக.


யார்வேண்டுமானாலும் வழுத்திருத்தி மென்பொருட்கருவிகளை வைத்திருக்கக்கூடிய காலமொன்று முன்னொருபோது இருந்தது என்று டான் பின்னாட்களில் அறிந்துகொண்டான். இறுவட்டில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக அல்லது இணையத்திலிருந்து தரவிறக்கக்கூடியதாக ஏன், இலவச வழுத்திருத்தி மென்பொருட்கருவிகள் கூட அக்காலங்களில் இருந்திருக்கிறது.

ஆனால் சராசரிப் பயனர்கள் காப்புரிமைக் கண்காணிகளை ஏய்த்தோடுவதற்கு அவற்றை பயன்படுத்தத்தொடங்கவே நீதிபதியொருவர் நடப்பில் இதுதான் அவற்றின் முதன்மைப்பயன்பாடாக மாறிப்போய்விட்டது என்று தீர்ப்பளித்தார். இது வழுத்திருத்திகளை சட்டவிரோதமாக்கியது. வழுத்திருத்திகளை உருவாக்கிய மென்பொருளாளர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.


நிரலாளர்களுக்கு இப்போதும் வழுத்திருத்திகள் தேவையாயிருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் வழுத்திருத்தி விற்பனையாளர்கள் 2047 இல் குறிப்பிட்ட எண்ணிக்கையான நகல்களை மட்டுமே உற்பத்தி செய்தனர். அதுவும் உத்தியோகபூர்வமாக உரிமம் பெற்ற, ஒப்பந்தம் செய்துகொண்ட நிரலாளர்களுக்கு மட்டுமே. மென்பொருள் வகுப்பில் டான் பயன்படுத்திய வழுத்திருத்தி மென்பொருள் சிறப்புத் தீயரண்களுக்குப்பின்னால் வைக்கப்பட்டிருந்தது. அதனால் அவற்றை வகுப்பு பயிற்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்தது.

மாற்றியமைக்கப்பட்ட கருனி ஒன்றினை நிறுவிக்கொள்வதன் மூலமாகவும் காப்புரிமைக் கண்காணியினை ஏய்த்தல் சாத்தியமாக இருந்தது. இந்த நூற்றாண்டின் ஆரம்பங்களில் இருந்த கட்டற்ற கருனிகள், ஏன் கட்டற்ற இயக்குதளங்களைப்பற்றிக்கூட அவ்வப்போது டான் அறிந்துகொண்டான். ஆனால், அவை சட்டவிரோதமானவை என்பதனால் மட்டுமல்ல, உங்கள் கணினியின் மூலக்கடவுச்சொல்லை அறியாமல் - வழுத்திருத்திகளைப் போலவே - அவற்றையும் கணினியில் நிறுவிக்கொள்ள முடியாது என்பதாலும் அவற்றை உங்களால் பயன்படுத்த முடியாது. அத்தோடு உளவுத்துறையோ மைக்ரோசொஃப்ட் ஆதரவுச்சேவையோ உங்களுக்கு அந்தக்கடவுச்சொல்லை சொல்லப்போவதுமில்லை.

அவ்வளவு எளிதாக லிசாவுக்கு தன்னுடைய கணினியை இரவல் கொடுத்துவிட முடியாது என்ற முடிவுக்கு டான் வந்தான்.

ஆனால் அவனால் அவளுக்கு உதவ மறுக்க இயலவில்லை. ஏனென்றால் அவன் அவளை நேசித்தான். அவளோடு பேசக்கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அவனை பூரிப்பால் நிரப்பிவிடுகிறது. அத்தோடு உதவி கேட்பதற்கு அவள் அவனைத்தான் தெரிவு செய்தாள். அவளும் அவனை நேசித்தாள் என்று இது அர்த்தம் தரமுடியும்.

இவற்றை எல்லாம் விட நினைத்துக்கூடப்பார்க்கமுடியாத ஒரு வேலையைச்செய்து இந்த தர்மசங்கடத்திற்கு டான் தீர்வுகண்டான். அவளுக்கு கணினியை இரவல் கொடுத்ததோடு தன்னுடைய கடவுச்சொல்லையும் அவளுக்குச் சொல்லிவிட்டான்.

இதுவும் குற்றமாகவே இருந்தபோதும் மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபை தன்னியக்கமாக இதனை கண்டறியாது. லிசா அவனைப் பற்றி தகவல்கொடுத்தால் மட்டும்தான் அவர்களால் கண்டுபிடிக்கமுடியும்.

தன்னுடைய சொந்தக் கடவுச்சொல்லை அவன் லிசாவுக்கு கொடுத்துவிட்டான் என்பதை எப்போதாவது கல்லூரி கண்டுபிடிக்குமேயானால் - அவள் அதனை எதற்கு பயன்படுத்தினாள் என்பதெல்லாம் எடுபடப்போவதில்லை - மாணவர்கள் என்ற வகையில், தொலைந்தார்கள் இருவரும்.

மணவர்களின் கணினிப் பயன்பாட்டைக் கண்காணிக்கும் கல்லூரியின் எந்த வழிமுறைகளிலும் செய்யப்படும் தலையீடுகள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு இட்டுச்செல்லும் என்பது கல்லூரியின் கொள்கையாக இருந்தது. பாரதூரமான வேலையொன்றினை நீங்கள் செய்தீர்களா இல்லையா என்பதெல்லாம் அங்கே எடுபடப்போவதில்லை. நிர்வாகிகள் உங்களைச் சோதிப்பதை சிரமமாக்கியமைதான் அங்கே குற்றம். நீங்கள் ஏதோ மறைவாகச் செய்கிறீர்கள் என்பதாகவே இது அர்த்தப்படும் என்றே அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அது என்ன என்பதை தெரிந்துகொள்ளும் தேவை அவர்களுக்கு இல்லை.

வழக்கமாக இதற்கு மணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவதில்லை. நேரடியாக அது செய்யப்படுவதில்லை. மாறாக அவர்கள் கல்லூரியின் கணினி முறைமைகளிலிருந்து தடை செய்யப்படுவர். இது இயல்பாகவே அவர்கள் பாடங்களிலெல்லாம் தோல்வியுறுதலில் வந்து முடியும்.

பெரும் எண்ணிக்கையான பல்கலைக்கழக மாணவர்கள் கணினியை பயன்படுத்த ஆரம்பித்தபோது, 1980 களிலேயே இம்மாதிரியான பல்கலைக்கழக கொள்கைகள் ஆரம்பித்தன என்பதை பின்னர் டான் அறிந்துகொண்டான்.

அதற்கு முன்பெல்லாம் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் ஒழுக்க விஷயத்தில் வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தன. பாரதூரமான விளைவுகளை உண்டாக்கிய நடவடிக்கைகளுக்கே தண்டனை வழங்கப்பட்டது. சந்தேகத்தின்படியெல்லாம் இல்லை.

மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு லீசா டானைப்பற்றி தகவலளிக்கவில்லை. அவளுக்கு உதவுவதென அவன் எடுத்த முடிவு அவர்களை திருமணத்தில் கொண்டுபோய் சேர்த்தது.

அத்தோடு சிறுவர்களாய் இருந்தபோது "கொள்ளையடிப்பது" பற்றி தங்களுக்கு கற்பிக்கப்பட்டவை மீதான கேள்விகளை நோக்கி அவர்களை உந்தியது.

காப்புரிமையின் வரலாற்றினைப்பற்றியும் , சோவியத் யூனியனைப்பற்றியும் அதன் "நகலெடுத்தல்" மீதான கட்டுப்பாடுகள் பற்றியும், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மூல அரசியல் யாப்பினையும் கூட அந்த சோடி தேடிப்படிக்க ஆரம்பித்தது.

தம்மைப்போலவே மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபையின் நீள் கரங்களைத்த்தாண்டி பறந்து சென்ற மற்றவர்கள் குடியிருந்த நிலவிற்கு அவர்கள் குடிபெயர்ந்தனர். தைக்கோ எழுச்சி 2062 இல் ஆரம்பமானபோது, அண்டந்தழுவிய "படிப்பதற்கான உரிமை" அதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக ஆகியது.

4 பிற்சேர்க்கைகள்:

said...

kathai nalla iruku anal sila idangalila english words aye use pani irukalamo endu thonuthu!

said...

சினேகிதி,

நீங்கள் சொன்ன கருத்து உபயோகமானது.
இப்பொழுது மேலே கலைச்சொற் பட்டியல் ஒன்றைச் சேர்த்திருக்கிறேன்.

நன்றி

said...

சினேகிதி..
ஆங்கிலச்சொற்களை பயன்படுத்தி இருந்தால் " முழுமையான தமிழ் மொழிபெயர்ப்பு" ஆகியிருக்காது அல்லவா?

ஆக மயூரன் உங்களது மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது.

- கலைச்சொற் பட்டியலை சேர்த்து இருப்பது சிறந்த உக்தி.

said...

கதை, சிறிய பிழைகள் களையப்பட்டு மீளப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.