ஒரு கொழும்புப்புகைவண்டியில் திரையிட்ட குறும்படம்
[11/26/2004 அன்று வலைபதிந்த குறிப்பு இது. காணாமற்போய் இன்றைக்குத்தான் கண்டுபிடித்தெடுத்தேன். "ம்..." இல் இதை மறுபடி சேர்க்குமுகமாகவே இந்த மீள்பதிவு.]
அம்மாவின் ஆசிரியத்தொழிலின் தயவில் எனக்கு இரண்டாம்வகுப்பு உறங்கலிருக்கை பயணம் சிலவேளைகளில் இலவசமாக கிடைப்பதுண்டு.
அப்படியானதொரு இலவச இரண்டாம்வகுப்பு கொழும்புப்பயணத்தின் போது என்னிரு நண்பர்களை ஒரே பெட்டியில் சந்தித்தேன்
சில மாதங்களுக்குமுன்.
ஒருவர் சமூக செயற்பாட்டாளர்.
இன்னொருவர் நாடகத்துறை கலைஞர், செயற்பாட்டாளர்
அப்பால் தமிழ் வலைத்தளம் பற்றி நான் பேசிக்கொண்டிருந்தபோது நாடகத்துறை நண்பர், திருக்கோணமலையில் குறும்படங்கள் ஏதாவது எடுத்து திருப்தி பெற்றுக்கொள்ள முடியுமா என்ற பரப்பில் பேச ஆரம்பித்தார். (இக்கனவினை சாத்தியமாக்கும் வல்லமை அவருக்கு உண்டு. விளைபொருள் எப்ப வரும் என்றுதான் தெரியவில்லை)
தன்னிடம் ஒரு நல்ல கதைக்கரு இருப்பதாகவும் , அதனையே குறும்படமாக்கினால் என்ன என்றும் கேட்டார்.
நாமிருவரும் சேர்ந்து அந்தக் கருவை விருத்திசெய்து, படமாக்கி , வண்டியின் பலகணித்திரையில், பனியிருள் பின்னணியில் திரையிட்டு மகிழ்ந்தோம்.
இடம் - உட்துறைமுக வீதி உவர்மலையை வந்தடையும் கடற்கரைச்சந்தி.
மாவீரர்தின கொண்டாட்டங்கள் அவ்விடத்தில் அமைந்திருக்கும் கலாச்சார மண்டபத்தில் மும்முரமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
வீதியின் இருமருங்கிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கடற்கரைக்காற்றில் சலசலத்துக்கொண்டிருக்கின்றன.
திருக்கோணமலையைச்சேர்ந்த மாவீரர்களின் புகைப்படங்கள் மண்டபத்தினுள்ளே நிரை நிரையாய் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
அவற்றை பார்த்து , அவற்றுக்கு வணக்கம்செலுத்துவதற்காக வருகைதந்திருக்கும் மக்கள்கூட்டம் மைதானமெங்கும் அலைமோதுகிறது.
எழுச்சிப்பாடல்களின் ஒலி அம்மக்களின் முகமெங்கும் வீரமிகு பெருமையை படரவிட்டிருக்கிறது.
உட்துறைமுக வீதி வழியாக போராளிகள் பல பணிகளை சுமந்தவர்களாய் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.
சற்றுத் தொலைவில் பேரூந்து நிறுத்தத்திற்கு அருகில் ஒரு மூதாட்டி கையில் பிளாஸ்டிக் பையுடன் உட்கார்ந்திருப்பது அப்போராளிகளின் கண்களில் அடிக்கடி பட்டவண்ணமிருக்கிறது.
போராளிகளில் ஒருவராய் கமரா அம்மூதாட்டியை நெருங்குகிறது.
மூதாட்டியின் முகத்தில் ஏமாற்றத்தின், இயலாமையின் சோகச்சுவடுகள்.
சோர்வு.
விரக்தி.
இவ்வுருவமைப்பு, போராளியை மூதாட்டியிடத்தில் மேலும் நெருங்கச்செய்கிறது.
"அம்மா, ஏன் இதில இருக்கிறீங்க? எங்க போகோணும்?"
"குச்சவெளிக்குப் போகோணும் தம்பி... ஆனா நான் இண்டைக்கு போகப்போறதில்ல."
" ஏன் பஸ் வரப் பிந்துதா அம்மா?... மாவீரர் தினத்துக்குத்தானே வந்தனீங்க? தேவையெண்டா சொல்லுங்க உங்கள கொண்டுபோய்விட ஏதாவது ஒழுங்கு செய்யலாம்"
"வேணாம் தம்பி .. மகன்ட போட்டோவை பார்க்காம நான் இங்கயிருந்து போகமாட்டன்."
"யார் உங்கட மகன்?"
" பாத்து பதினெட்டு வருஷமாச்சு தம்பி. இயக்கத்துக்குப் போகமுந்தி பாத்தது. அதுக்குப்பிறகு செத்துப்பொயிட்டான் எண்டுதான் தெரியும்.... கடைசியா எப்பிடி இருந்தான் எண்டுகூட தெரியாது.... அவன்ட போட்டோவை பார்க்காம நான் போகமாட்டன்"
" கவலப்படாதீங்க அம்மா. உங்க மகன் இந்தமாவட்டத்தை சேர்ந்தவர்தானே> அப்ப கட்டாயம் உள்ளுக்குள்ள அவருடைய படமும் இருக்கும். உள்ள போகமுடியாம இருக்கா..?"
"உள்ளுக்குள்ள மூண்டுதரம் சுத்திப்பாத்திட்டன் . அவன்ட போட்டோவும் இல்ல பேரும் இல்ல..."
" வடிவா பாத்தீங்களா அம்மா?... நான் வேணுமெண்டால் திரும்ப ஒருக்கா தேடிப்பாத்து வந்து சொல்லுறன்.... உங்கட மகன் எப்ப வீரச்சாவு?"
" எண்பத்தஞ்சில தம்பி சாவகச்சேரியில செத்துப்போனான்"
"எண்பத்தஞ்சிலயா? .... சாவகச்சேரியில எந்தமோதல் எண்டு தெரியுமா?"
"ஏதோ பொலிஸ் ஸ்டேசன் அடிக்கக்குள்ளயாம் எண்டு கேள்விப்பட்டேன்"
கமரா மௌனமாய் மாவீரர்படங்கள் அணிவகுத்திருக்கும் மண்டபத்தை நோக்கித் திரும்பியது.
கமராவாய் நின்ற போராளியுடன் கூட வந்தபோராளியின் கேள்வி பின்னணியில் கேட்க வெளிச்சம் மங்குகிறது....
" மகன் எந்த இயக்கம் அம்மா?...."
------------------------------
தமிழீழத்தில் நிகழும் எல்லா வைபவங்களிலும் நாம் தொடக்கத்தில் மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்துவதுண்டு.
இந்தவருட ஆரம்பத்தில் கொழும்பில் நடைபெற்ற திரு முத்து நெடுமாறன் அவர்களுடைய கணினிக் கருத்தரங்கின் தொடக்கத்தில் கூட இவ்வகவணக்கம் இடம்பெற்றது..
அப்பொதெல்லாம் மனதுள் சில பதில் தெரியா கேள்விகள் எழுந்துகொண்டேயிருக்கும்.
அந்நதக் கேள்விகளுக்கான பதிலை திருக்கோணமலையில் நடத்திய "பெயர்" சஞ்சிகையின் ஒவ்வொரு பொதுமக்கள் நிகழ்விலும் சொல்வதுண்டு.
"விடுதலைக்காய் உயிர்கொடுத்த அத்தனை போராளிகளுக்கும் இப்போது அகவணக்கம் செலுத்துவோம்"
இம்மூதாட்டியின் மகனை நாளைய சந்ததி மறந்துபோய்விடலாம்.
அவனைப்பற்றிய விபரம் மாவீரர் பதிவுகளில் இல்லை.
தங்கத்துரை குட்டிமணிக்குக்கூடவா இந்த நிலைமை ஏற்படக்கூடும்?
நானறிய திருக்கோணமலையிலிருந்து இயக்கத்துக்கு ஓடிய இளைஞர்களுக்கு தெரிந்ததெல்லாம் "சிங்களவனை திருப்பி வெட்டவேணும் " என்கிற வெறி தானேயொழிய எந்த இயக்கத்தில் போய்ச்சேரப்போகிறோம் என்பதல்ல.
சுடரவிருக்கும் நாளைய மாவீரர்தினத்துக்கு எனது வீரவணக்கங்கள்.
மாவ்வீரர்களான விடுதலைப்புலி வீரர்கள் உள்ளிட, விடுதலைக்காய் உயிர் நீத்த அத்தனை போராளிகளுக்கும் என் அகவணக்கங்கள்.
மக்களுக்கான பொதுவுடைமைத் தமிழீழத்தின் (இயலுமானால் தமிழீழ- சிறீ லங்கா பொதுவுடைமைக் கூட்டரசு) மலர்வுக்கான பயணத்திற்கும் அப்பயணத்தின் ராணுவத்தை தலைமைதாங்கி நடத்தும் சகோதரர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளுக்கும் என் வாழ்த்துக்கள்.
வெல்க விடுதலைப்பயணம்....!!!!!!


0 பிற்சேர்க்கைகள்:
Post a Comment