மேர்வின் சில்வா : மூத்திரத்தாலும் வெறுங்கையாலும் அடித்து தலையை உடைத்து சட்டத்துக்கு நீதி படிப்பித்த கதை
சட்டம் நிபுணர்களதும் நீதவான்களதும்
வழக்கறிஞர்களதும் காவற் துறையினரதும் கைகளில்
பத்திரமாகவே உள்ளதால்
கையும் மெய்யுமாக அகப்பட்ட கள்வனால் சட்ட நுணுக்கங்களின் இடைவெளிகளில் நுழைந்து தப்பி ஓட இயலுமாகிறது
பட்டப் பகலில் நடுத் தெருவிற் கொலை செய்தவன்
சட்ட நூலேணியிலேறி நழுவ முடிகிறது
குடிவெறியில் காரோட்டிய யம தூதனை
அளவோடு குடி என்று செல்லமாய்க் கண்டிக்க
நீதவானுக்கு முடிகிறது.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்களின் வசம் இருக்கிறது.
அதை வைத்திருக்கிறவர்கள் இருக்கிறவர்களின் கையில் இருக்கிறார்கள்.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தும்
உரிய வேலையைச் செய்ய வில்லை என்றெண்ணி
ஒரு பெண்ணை பஸ் மோதிக் கொன்றதற்காகச்
சட்டந் தெரியாதவர்கள் பஸ்களை நொறுக்கி நீதி வழங்கினார்கள்.
அப்போது சட்டத்தைக் கவனமாக வைத்திருக்கிறவர்கள்
“மக்கள் சட்டத்தைத் தம் கையிலெடுப்பது தவறு”
என்று கண்டித்தார்கள்.
மக்கள் உண்மையிலேயே சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொள்வார்களேயானால், எவ்வளவு நன்றாக இருக்கும்.
-சி.சிவசேகரம் (இன்னொன்றைப்பற்றி)
இன்று கொழும்பில் இலங்கைத் தேசியத்தொலைக்காட்சி நிலையத்தில் சட்டத்துக்கு நீதி வழங்கிய தொலைக்காட்சித் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் உரத்த குரலில் தெரிவித்தாகவேண்டியவனாகிறேன்.

"அதுதான் பொலிசிடம் பாரம்குடுத்தாச்சுத்தானே, அவர்கள் பாத்துக்கொள்ளுவாங்க... இனியென்ன..." என்று ஒரு ரவுடி அமைச்சன் தன் ரவுடிப்பரிவாரங்களுடன் கெஞ்சியபோது, அந்த பாதாள உலகப் பரிவாரங்களையும் கொலைகாரர்களையும் இலங்கைக் காவல் துறையும் சிறப்புப் படையினரும் தொலைக்காட்சித் தொழிலாளர்களிடமிருந்து காப்பாற்றிப் பாதுகாத்து வெளியில் கொண்டுவந்தபோது "சட்டத்" தினதும் "சட்ட ஆட்சி" யினதும் போலி முகமூடிகள் "நீதிக்கு" முன்னால் கிழிந்து தொங்கியது.

இலங்கைத் தேசியத் தொலைக்காட்சி என்பது இலங்கை அரசினது தொலைக்காட்சி சேவையாகும். ( சிறீ லங்கா ஜாதிக ரூபவாகினி). அரசாங்கமாகப் பதவியிலிருக்கும் நபர்களின் செயற்பாடுகளுக்கும் திட்டங்களும் ஒத்து ஊதுவதே அதன் வேலை. இலங்கை வரலாறு முழுவதும். இன்றைக்கும். அதிலிருக்கின்ற செய்தியாசிரியர்கள் என்பவர்கள், அரசாங்கம் சொல்வதை சிங்களத்தில் செய்திக்காக எழுதிக்கொடுக்கும் வேலையை செய்து சம்பாதிப்பவர்கள். அதை தமிழில் மொழிபெயர்த்து ஓதுவதற்கு அங்கே தமிழ்ச்சேவை ஒன்றும் உள்ளது.

அண்மையில் ஆழிப்பேரலை நினைவுக்கூட்டமொன்றில் மெர்வின் சில்வா என்கிற, அரசாங்கத்தின் அமைச்சன் பேசிய பேச்சின் பகுதியொன்றை அரசாங்கத்தின் ஊதுகுழலான "ஜாதிக ரூபவாஹினி" ஒளிபரப்பவில்லை என்பதற்காக இந்த ரவுடி அமைச்சன் ரூபவாகினி நிலையத்துக்குள் நுழைந்து தனது பாதாள உலக அடியாளொருவனைக்கொண்டு செய்தியாசிரியர் ஒருவரைத் தாக்கி இழுத்துக்கொண்டு திரிந்திருக்கிறான்.
இதைக்கண்ட தொலைக்காட்சி நிலைய ஊழியர்கள் அந்த செய்தி ஆசிரியரைக் காப்பாற்றியதுடன் அங்குள்ள அறையொனில் இந்த அமைச்சனைச் சிறை வைத்து முற்றுகையிட்டு நின்றிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் அனைவரினதும் முற்றுகையில் சிக்கிய இந்த அதிகார ரவுடிக்கு படிப்படியாக நிலமையின் தீவிரம் புரியவாரம்பித்திருக்கவேண்டும். ஜனாதிபதி தொடக்கம் அனைத்து அதிகார வர்க்கக் கூட்டாளிகளையும் உதவிக்கு அழைத்திருக்கிறது.
அதிகாரமும் ஆயுதங்களும் இல்லாத வெறும் ஊழியர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் முன்னால் இவையெல்லாம் உதவிக்கு வர முடியவில்லை.
கடைசியில் தனது பாதாள உலக அடியாட்களை அழைத்திருக்கிறது, வந்த "அடியாட்களும்" பயந்து ஓடிவிட்டார்கள்.
அறையொன்றில் குளிரூட்டியும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் வேர்க்க வேர்க்க நின்று மீசையில் மண்ணொட்டாத கதைகளை உளறிக்கொண்டிருந்த இந்த மெர்வின் சில்வா அமைச்சனுக்கும் அவனது பாதாள உலகக் கொலைகாரனுக்கும் சட்டத்தைக்காக்கும் பொலிஸ் படையும், சிறப்பு இராணுவமும் "பாதுகாப்பினை" நல்ல பொறுப்புணர்வோடும் மிகுந்த அக்கறையோடும் வழங்கிக்கொண்டிருந்த அவலத்தை இலங்கையே நேரடி ஒளிபரப்பில் வெற்றுக்கண்களால் பார்த்துக்கொண்டிருந்தது.

இயலாத கட்டத்தில் மன்னிப்பைக்கூட அதிகார எள்ளலோடு இந்த அமைச்சன் கேட்க முயன்றபோது.
ஊழியர்கள் சிவப்பு மைய்யால் இவனுக்கு அடித்தார்கள். மூத்திரத்தாலும் அடித்ததாக செய்திகள் கிடைக்கின்றன. அத்தோடு காயப்படுமடியும் அடித்தார்கள் பாருங்கள். அத்தோடு அதிகார வர்க்கம் ஆடிப்போனது. தலையில் ஐந்து தையல் போடும்படியான காயம். ரத்தம் ஒழுக ஒழுக காருக்குள் பயந்து பயந்து இந்த அதிகாரக் குறியீடு குனிந்த தலை நிமிராமல் தஞ்சம் கோரியது கண்கொள்ளாக்காட்சி.

---1----
ஜனநாயகம் செத்து நாளாச்சு, ரவுடிகளினதும் துப்பாக்கிகளினது அதிகாரம் ஓங்கியாச்சு. மக்கள் கையில் இனி என்ன இருக்கு, எதுவும் செய்ய முடியாது என்ற சோர்வின் கோட்பாடுகளை மக்கள் தமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றே அதிகாரத்தின் அராஜகங்களை ஊடகங்கள் காட்டுகின்றன. நிறுவனங்கள் ஓதுகின்றன.
சோர்வின் கோட்பாடுகளுக்கு அறிவுஜீவிகள் மயங்கும் தத்துவப்பின்னணியை வழங்கவென நவீனப்பின்னியப் பின்னல்கள் ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் பின்னப்படலாகிற்று.
வெறுங்கை ஊழியர்கள் ஒன்றுபட்டு மூத்திரத்தால் அடித்தபோது சோர்வின் கோட்பாடுகள் சோம்பல் முறித்ததை மக்கள் உணர்ந்திருக்கக்கூடும்.
ஒரு ரவுடி அமைச்சன் ரதம் ஒழுக ஒழுக பயந்தோடியபோது பாராளுமன்ற ஜனனாயகத்தின் பாதாள உலகப் பூச்சாண்டி கலைவதற்கான கால ரேகைகளை மக்கள் கண்டிருக்கக்கூடும்.
இந்தச்சம்பவம் நாளைக்கு மறக்கப்பட்டுவிடலாம். இந்தச்சம்பவத்தின் பெறுபேறுகள் எல்லாவற்றையும் இதே அதிகாரவர்க்கம் நாளைக்குக் கொன்று புதைத்து விடலாம். ஆனால் சோர்வின் கோட்பாடுகளை நாளயண்டைக்கு இவர்கள் ஓதத்தொடங்கும்போது இந்தச்சம்பவம் ஒரு கூரிய நினைவாக, வெறுங்கையின் சக்திக்கு எடுத்துக்காட்டாக நிற்கப்போகிறது. அதுவொன்றே போதுமானது.
சட்டமும் பொலிசும் ராணுவமும் யாரைக்காப்பாற்றும் , பாராளுமன்றம் யாருக்குப் பல்லாக்குத்தூக்கும் என்பதை "பயங்கரவாத" மாயைகளைத் தாண்டி சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. (தமிழ் மக்களுக்கு உணர்த்தும் தேவை இல்லை என்பதால்). சின்னஞ்சிறிய ஒளிப்பொட்டைப்போன்றதொரு சந்தப்பம்.
இலங்கையின் இந்த சம்பவம் உலகெங்கும் இதனை ஒளிப்படங்களாக, நிகழ்படங்களாகக் காட்டும்.
----2----
இந்தக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோதெல்லாம் மனதுக்குள் ஒரே ஒரு கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது.
ஊழியர்கள் ஒன்றுபட்டு வன்முறை வழியாக நீதி வழங்கிய நேர இடைவெளிகளில் அங்கிருந்த தமிழ் ஊழியர்கள் என்ன செய்திருப்பார்கள்?
மெர்வின் சில்வாவைக் கொலை செய்ய முயன்றதால்தான் இந்த பயங்கரவாதிகள் சுடப்பட்டார்கள் என்று அரசாங்கப்பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல சொல்லுமளவுக்கு ஏதேனும் நேர்ந்துவிடலாம் என்று பயந்திருப்பார்களா?
பயந்து கமராக்களில் படாமல் ஒளிந்திருப்பார்களா?
இதே சம்பவம் சிரச தொலைக்காட்சி நிலையத்தில் நடந்திருந்தால் எதிர்வினைகள் எவ்வாறு இருந்திருக்கும்?
----3----
ஆனாலும், சிங்கள மக்கள் சிங்கள அதிகாரத்தை எதிர்த்து வன்முறையை தூக்கும்போது, இன்னுமொருமுறை தமிழ்த்தலைமைகள் சிங்கள அதிகார வர்க்கத்தினை காப்பாற்றாமலிருக்கட்டும்.
அப்படியான சிங்கள மக்களின் போரட்டங்கள் தங்களுக்ககவும் தான் ஏதோ ஒரு வழியில் நடக்கிறது என்பதை "சிங்கள வெறியர்களை" கண்மூடித்தனமாக எதிர்முனையில் வைப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
----4----
இதற்கு முன் இந்த மேர்வின் சில்வாவினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் மக்களும் அஹிம்சை வழியில், சனனாயக வழியில் எவ்வளவோ போராடிப்பார்த்தனர். இந்த ரவுடியின் கார்களில் ஒன்றின் கண்ணாடியைக்கூட அசைக்க முடியவில்லை.
அடி உதவுற மாதிரி அஹிம்சை உதவப்போவதில்லை.
----5----
இந்த வலைப்பதிவை எழுதி முடித்தபின் எனது ஊடகத்துறை நண்பர்கள் இருவரைத் தொடர்புகொண்டேன். அதில் ஒருவர் ரூபவாஹினியில் பணியாற்றுபவர்.
அவர்கள் சொன்ன தகவல்களின் படி,
தமிழ் ஊழியர்களும் சேர்ந்தே போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். பின்வாங்கவில்லை.
செய்தி வாசிப்பாளர்களை முன்னால் வந்து பங்குகொள்ள மற்றவர்கள் விடவில்லை. காரணம், அவர்களது முகங்கள் மிகவும் பழக்கப்பட்டவையாதலால் அதனை இவன் பார்த்துவைத்து பிறகு ஏதாவது பழிவாங்கி விடுவான் என்ற அச்சம்.
அத்தோடு பெனாசிர் கொலை விவகாரம் உலக ஊடகங்களின் தலைப்புக்களைப் பிடித்துவிட்டதால் இந்த அருமையான சம்பவம் உலகத்தின் கண்களுக்குப்பட்டுவிடாமல் போய்விடக்கூடும் என்று ஒரு நண்பர் கவலைப்பட்டார்.
---7---
இவளவு பெரிய பாதாள உலகத்தலைவன், அமைச்சன் இப்பிடி பீயாகிட்டானே என்று இரவு உணவுக்குப்போய் வந்த வழியில் சந்தித்த பலரும் சொல்லிக்கொண்டார்கள்.



20 பிற்சேர்க்கைகள்:
இதைப்பற்றி இப்படியும் பெருமைப்படலாம்... anti-hijacking and hostage rescue squad of army commandos deployed at the Rupavahini இதெல்லாம் இருக்குதெண்டு...
//சட்டமும் பொலிசும் ராணுவமும் யாரைக்காப்பாற்றும் , பாராளுமன்றம் யாருக்குப் பல்லாக்குத்தூக்கும் என்பதை "பயங்கரவாத" மாயைகளைத் தாண்டி சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.//
இந்த புரிந்துணர்வு நெடுங்காலமாகவே சிங்களவர்களுக்கு இருக்கிறது என்பது தான் என் அபிப்பிராயம்.அதுவும் வறுமைககோட்டுக்கு கீழ் இருக்கும் சிங்கள மக்களுக்கு நெடுங்காலமா இந்த மனோநிலை இருக்கிறது.
இது ஆதிக்க வர்க்கத்துக்கும் ஆதிக்க வர்க்கத்துக்கும் நடந்த பிரச்சனை.
இதுவே .. தமிழர்களால் மட்டும் நடாத்தப்பட்டு இருந்தால் பிரச்சனை வேறு விதமாய் இருந்து இருக்கும். அமைச்சர் மேர்வின் சில்வா காப்பாற்றபட்டு இருப்பார்
:)
ஒன்றாய் கூடி இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் பிரயோகிக்கப்பட்டு இருக்கும்
கூட்டம் கலைந்து ..ஓடியிருககும்.அதே நேரம் அதில் போராட்டம் நடாத்திய பத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணித்துவீழ்ந்திருப்பர்.மீதியிருப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு..அரசாங்க காவல் துறையினரால் இழுத்துச்செல்லப்பட்டு இருப்பர்.
ஆக மயூரன் …அதிகாரத்துக்கு எதிரான போரட்டங்கள் கூட ..சிங்களவர்களால் தான் செய்யப்படக்கூடியது.
என்கின்ற உண்மை உறைக்கிறது அல்லவா .?!!
அது நிற்க உங்கள் பொதுப்படையான கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.
//சோர்வின் கோட்பாடுகளுக்கு அறிவுஜீவிகள் மயங்கும் தத்துவப்பின்னணியை வழங்கவென நவீனப்பின்னியப் பின்னல்கள் ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் பின்னப்படலாகிற்று//
ம்….!!!!
கலக்கிட்டீங்க மயூரன்
இன்னொரு விடயம் இவன் மேர்வின் தன்னை அரசியலுக்கு கொண்டுவந்த சந்திரிக்காவின் குடும்பத்தைப் பற்றித்தான் அந்த கூட்டத்தில் தன் மொழியில்(ஆபாச மொழி) பேசினானாம்.
அதே நேரம் இதுவரை இவன் போன்றவர்கள் ஏனைய ஊடகங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தபொழுது அரச ஊடகங்கங்கள் கை கட்டி வாய் பொத்தி நின்றன இப்பொழுது இவர்களுக்கே பொறுக்கமுடியாமல் பொங்கி எழுந்துவிட்டனர்.
பொலிஸார் சப்பைக்கட்டுக்கட்டியதுதான் ஏன் எனத் புரியவில்லை.
உண்மையை ரசனையோடு எழுதியுள்ளீர்கள்.
உண்மையில் தரமான தகவல் ஒன்றை இங்கு பகிர்ந்திருக்கிறீர்கள் மயூரன். ஓர் ஊடகவியலாளன் என்ற ரீதியில் இந்த சம்பவம் எத்தனை மனநிம்மதியை எங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது தெரியுமா?
குடுகார குண்டர்களைக் கொண்டு தான் இவர் ஊடகங்களை அடக்கியாள முற்பட்டுக்கொண்டிருந்தார்.
ஊடக அடக்குமுறைக்கு எதிராக நாங்கள்( ஊடகவியலாளர்கள்) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த வேளை அரை மணிநேரத்துக்கு முன்பாக சுமார் 30 குண்டர்களுடன் மேர்வின் அங்கு வந்து சேர்ந்தார். ஜனாதிபதிக்கு ஆதரவாக அவர்கள் கோஷமிட்டனர்.. அப்போது மேர்வின் ஊடகவியலாளர்களைப் பார்த்து '' உம்பலட கவுத வெட துன்னே?எவில்லா மகே புக ஹோதபல்லா..மொனவா கேகெவ்வாத் மாவ நவத்தன்ன பே..கவுறு ஹரி நிகங் மங்கென ப்ரவுர்த்தி தெம்மொத் மகே துவக்குவென் வெடி தியலா மாரனவா'' என சிங்களத்தில் கீழ்த்தரமாக ஏசினார்.
இதனை மறுநாள் நாம் பத்திரிகையில் பிரசுரித்த போதும் அரசாங்கமோ பொலிஸாரோ கண்டுகொள்ளவில்லை.. இவ்வாறான கீழ்த்தரமான நடத்தைகளுக்குத்தான் இந்தத் தண்டனை...
எல்லாருக்கும் ஒரு சபாஷ்
I understand and share feelings with the frustrated media workers as they face daily intimidations. But i believe the media workers should have staged their protest peacefully. If everyone took the law into their own hand where will it end up. Please think before you write. Finally the media workers have genuine causes but their actions cannot be defended.
We should welcome everything happened: both attack by Mervyn and counter attack by journalists. Both work for authorites and all are rich. So all affected are higher class people.
இவனெல்லாம் ஒரு அமைச்சர். இவன் பண்டாரனாயக்கா குடும்பத்தின் வேலைக்காரனாக இருந்தவன், இந்த நாய்க்கு தலையில் அடித்துப்பலனில்லை வாயில் அடிக்கவேண்டும், இவன் தான் ஒரு பிக்கு எம்பிக்கு ஆணுறுப்பில் தாக்கி அவரைப் பல நாட்கள் வைத்தியசாலையில் இருக்க வழிசெய்தவன்
தொடர்புபட்ட செய்தி ஒன்று:
நேற்றைய சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அரசாங்க உளவுத்துறை நேற்றைய போராட்டத்தில் முன்னின்றவர்களை இனங்காண எடுத்துவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் தொலைக்காட்சி நிலைய முன்றலில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.
கீர்த்தனா,
சிங்கள - தமிழ் நிலைப்பார்வயாக நீங்கள் சொல்லும் கருத்துக்கள் பெறுமதியானவை. நட்பு வட்டத்தில் சிங்களவர்களை அதிகமாகக்கொண்டிருக்கும் உங்களிடமிருந்துதான் நாம் இத்தகைய அவதானங்களைச் சரியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
//ஆக மயூரன் …அதிகாரத்துக்கு எதிரான போரட்டங்கள் கூட ..சிங்களவர்களால் தான் செய்யப்படக்கூடியது.
என்கின்ற உண்மை உறைக்கிறது அல்லவா .?!!//
ஆனால் அது அதிகாரத்தின் கைகளைக் கடந்து போகும் போது ஜே வீ பீக்கு நடந்தது தான் நடக்கும்.
இலங்கை இராணுவம் கொன்ற தமிழர்களை விட சிங்களவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. உண்மையில் அதிகாரத்தைத் தனிமைப்படுத்தி எதிர்க்க முனைந்தததால் சிங்களவர்களுக்கு நடந்த கொடூரம் அது.
நிர்ஷன்,
//ஓர் ஊடகவியலாளன் என்ற ரீதியில் இந்த சம்பவம் எத்தனை மனநிம்மதியை எங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது தெரியுமா?//
உங்களிடமிருந்து வந்திருக்கும் இந்த உணர்வுபூர்வமான வார்த்தைகள் தான் இந்த சம்பவத்தில் ஓங்கி ஒலிக்கும் நீதியாக தெரிகிறது.
வந்தியத்தேவன்,
அந்தக்கூட்டதில் என்ன பேசினார் என்பது குறித்து நான் சரியாக அறிந்திருக்கவில்லை. குறிப்பிட்டுக்காட்டியமைக்கு நன்றி.
முதலாவது பெயரிலி,
//But i believe the media workers should have staged their protest peacefully.//
இக்கருத்து இங்கே பின்னூட்டங்களில் எங்கேயாவது வந்துதான் ஆகும் என்று எதிர்பார்த்திருந்தேன்.
அநேகமாக இந்தக்கேள்விக்கு இப்பதிவே பதிலாகிறது.
//If everyone took the law into their own hand where will it end up.//
இதே மெர்வின் சில்வா இப்படி செய்தியாசிரியரை அடித்துத்துவைத்துவிட்டுப்போனபிறகு ஊடகவியலாளர்கள் எல்லாம் ஒன்றுகூடி புறக்கோட்டைக்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கவேண்டும் என்கிறீர்களா?
அல்லது ஏதாவது பெயரில் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்கிறீர்களா?
இதே மெர்வின் சில்வாவுக்கு எதிராக இதுவரை ஊடகவியலாளர்கள் எத்தனை போராட்டங்களைத்தான் அமைதியாக நடத்தி ஓய்ந்துவிட்டார்கள்?
என்ன நடந்தது?
ஏதாவது ஏதாவது, ஏதாவதொரு நீதி கிடைத்ததா?
ஜனாதிபதி தலையிடுமளவு பிரச்சினையாக கருதப்பட்டிருக்கிறதா?
இந்த ரவுடி நல்ல உல்லாசமாக தனது உலகத்தில் இருந்திருப்பான்.
சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் என்ற மாய மூளைச்சலவைக்குள் நீங்கள் அகப்பட்டுப்போனீர்கள் போலிருக்கிறது.
இரண்டாம் பெயரிலி,
//Both work for authorites and all are rich. So all affected are higher class people//
ஆம். நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கம்..
தொலைக்காட்சி ஊழியர்கள் பெரும்பாலும் சாதாரண அரச ஊழியர்களே பெரிய நலவாழ்வு எதுவும் இல்லை. நடுத்தர வர்க்கம் என்றுதான் சொல்ல முடியும்.
ஆம். உங்கள் அவதானம் கருத்திலெடுக்கப்படவேண்டியது.
வித்தியா,
சந்திரிகாவும், மகிந்தவும் தான் தமது அரசியல் இலாபங்களுக்காக இவனை நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள். இந்தமுறைகூட இவனை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. மகிந்த தேசியப்பட்டியலில் எடுத்துப்போட்டு அமைச்சராக்கிய ஒரு ஆள் தான் இவன்.
//இந்தமுறைகூட இவனை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. மகிந்த தேசியப்பட்டியலில் எடுத்துப்போட்டு அமைச்சராக்கிய ஒரு ஆள் தான் இவன்.//
அட நாதாரியே, அமுக்கிட்டு கெடந்திருக்கலாமில்ல. கும்மிட்டாங்களே:))
சூப்பர்.
இதில் குதூகலிக்க ஒன்றுமில்லை!
நாளையே இந்த அமைச்சர் 50 புலியை கொன்றுவிட்டேன் என பேசினால் விழுந்து விழுந்து வாசிப்பார்கள்.
இப்படித்தான் 1977இல் ஸ்ரீமாவோ படுதோல்வி அடைய தமிழ்ச்சனம் ஏதோ தமிழீழமே கிடைச்ச மாதிரியும் சிங்களவன் நல்ல ரேடியோ சிலோனுக்கு பாடம் படிப்பிச்சிட்டான் என வழிஞ்சு கொண்டு திரிஞ்சதுகள்.
இலங்கையில் ஊடகத்துறை எவ்வாறு இனரீதியாக பிளவுபட்டுள்ளது என சொல்லித்தெரியவேண்டியதில்லை!
மயூரன்,
சில தகவல்கள்..
மாற்று ஊடகப் பாணியை பின்பற்றும் விக்டர் ஐவன் போன்ற பத்திரிகையாளர்கள் 90 களின் ஆரம்பத்தில் ஐ.தெ.க வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, முன்னைய ஜனாதிபதி சந்திரிக்காவை ஊடகங்களில் முன்னிலைப்படுத்தினர். சந்திரிக்கா மூலம் இனப்பிரச்சினைக்கு ஏதோ ஒரு விதத்தில் தீர்வு கண்டுவிட முடியுமென நம்பிய விக்டர் ஐவன் தனது ஊடக நண்பர்கள் ஊடாக மிகப்பெரிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தார். சமாதான தேவதையாக பீடமேறிய சந்திரிக்கா இறுகிய சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பை மீற முடியாமல் தனது பாதையில் இருந்து வழுவ எத்தனித்த போது விக்டர் ஐவன் போன்றோரால் தீவிரமாக விமர்சனத்துக்கு உள்ளானார். ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இடையிலான உறவு முற்றாக முடிவுக்கு வந்தது. அதன் பின் சிங்கள மாற்று ஊடக கலாச்சாரத்தின் மூலம் விக்டர் ஐவன் போன்றோர் சந்திரிக்காவை தீவிரமாக விமர்சைத்து வந்தனர். ஒரு கட்டத்தில் சந்திரிக்கா பாதாள உலக கோஸ்டியின் தலைவனான மேர்வின் சில்வா விற்கு விக்டர் ஐவனைப் 'போட்டுதள்ளுவதற்கான' பொறுப்பை வழங்கினார். விக்டர் ஐவனின் நண்பர் ஒருவருடன் தண்ணியடித்துக் கொண்டிருந்த போது மேர்வின் சில்வா இக்கதையை உளறிவிட, அது விக்டர் ஐவனின் காதுக்கு போக சந்திரிக்கவின் திட்டம் பிசுபிசுத்துப் போனது. இவ்வாறு சுதந்திரக் கட்சியின் பாதாள நடவடிக்கைக்கு பொறுப்பானவராக இந்நபர் இருந்து வந்துள்ளார். சுதந்திரக்கட்சி தனகு தேவையான கொலைகளை மேர்வினை வைத்தே நிறைவேற்றி வந்துள்ளது. குடு பிசினஸ் உட்பட பல சட்டவிரோத நடவடிகைகளில் ஈடுபட்டு வந்தவரே கலாநிதி மேர்வின் சில்வா.
மற்றும்,
இவரது அடாவடிக்கும்பல் அதிகாரம்-அரசியல் போன்றவற்றால் அமர்த்தப்பட்டவர்களே. தவிர கொழும்பின் பிரபல வத்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாதாள உலகக் கோஸ்டி உறுப்பினர்கள் அனைவரும் இவரால் உள்வாங்கப்பட்டவர்களே. அத்துடன் கொழும்பு பாதாள உலகம் என்பது மூவினத்தவரையும் சம அளவில் கொண்டது. சிங்கள தகஸ் களுக்கு சமனாக தமிழ் மற்றும் முஸ்லிம் களும் அங்கம் வகித்த போதும் சிங்களவர்களே இவரது தொடர்புகளில் இருந்துள்ளனர். மற்றைய இனங்கள் மீது தீவிரமான வெறுப்பை எப்போதுமோ வெளிப்படையாக காட்டி வந்தவர் தான் மேர்வின் சில்வா. களனி பாலத்தை அண்டிய பகுதிகளில் வசித்துவரும் சேரிகள் இவரது செல்வாக்குட்பட்ட பிரதேசங்களாகும். மற்றும் பிரபல வத்தையான கசல் வத்தையின் சில உறுப்பினர்களும் இவருடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். ஆயினும் இந்திய வம்சாவளி தமிழரை அதிக அளவில் கொண்ட 'தமிழ்நாடு' போன்ற வத்தைகள் இவரது செல்வாக்குக்கு அப்பாற்பட்டவையே. மேர்வின் சில்வாவை மோசமான தக்ஸாக சித்தரிக்க முற்படும் ஐ.தே.க பாதாள உலகத்தொடர்புகளுடன் ஒப்பிடும் போது இவரது விளையாட்டுக்கள் வைகைப்புயல் வடிவேல் தனமானவையே. கைப்புள்ளையை விட மோசமானவை.
இன்னும்,
இவரை மோசமாக திட்ட முற்படும் ஊடக உணர்வுகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள மேற்கு மனநிலையையும் சிந்திக்கவேண்டியுள்ளது. மேர்வினை விட மோசமான எத்தனையோ அரசியல்வாதிகள் மிகவும் நாசுக்காக தமது அதிகார வேர்களை பரவவிட்டுள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எத்தனையோ ஊடகங்களுக்கு மிரட்டும் பாணியில் உத்தரவிட்டுள்ளது யாருக்கும் தெரியாதது. விடிய வேலைக்கு சென்ற பத்திரிகை ஆசிரியரை வேலையை விட்டு நீக்கிய சம்பவங்கள் உட்பட. சிவராம் போன்ற பத்திரிகையாளர்கள் யாரால் கொல்லப்பட்டனர் என்பது உலகத்துக்கே தெரியும். அவ்வாறே ரிச்சட் டீ சொய்சா வை கொன்றவரை சொய்சாவின் தாயார் தொலைக்காட்சியில் கண்டு அடையாளம் காட்டியும், அவரைக் கைது செய்ய முடியவில்லை. நிமலராஜனைக் கொன்றவர் ஐரோப்ப நாடொன்றில் வசித்து வருகின்றார். இவர்களை யாரும் எதுவும் செய்துவிடவில்லை.
இன்னும்,
மேர்வின் சில்வாவின் மகனது அட்டகாசம் கொழும்பின் உயர் கேளிக்கை விடுதிகளுக்கு செல்பவர்களுக்கு தெரியும். அண்மையில் கூட இரவு விடுதியொன்றில் கணக்காளர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இவ்வாறே ஒரு காலத்தில் எஸ்.பி.திசநாயக்கவின் மகன்மாரும் மற்றும் முன்னைய பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தையின் மகன்மாரும் இரவு விடுதிகளில் அட்டகாசம் புரிபவர்களே. அப்போதெல்லாம் உலகம் அசையவில்லை. ரத்வத்தையின் மகன்களில் ஒருவ்ரே மொரட்டுவ சமன் எனும் பாதாள உலக தலைவனை வைத்து குமார் பொன்னம்பலத்தைப் போட்டுத் தள்ளியது. அப்போதெல்லாம் சட்டம் சிரங்கு சொறிந்து கொண்டிருந்தது.
இவ்வாறு,
இலங்கையின் அரசியல் என்பதே பாதாள உலகத்துடன் பின்னிப்பிணைந்தது. பாதாள உலக உறுப்பினர்கள் எவ்வறு உருவாகின்றார்கள்.? எவ்வகைக் கட்டமைப்பு அதை தொடர்ந்து பேணுகின்றது? என்பன முக்கியமான ஆராயப்பட வேண்டிய விடயங்கள். அன்றாடம் வன்முறை இல்லாமல் சாப்பாடு இல்லை என்ற நிலைமைக்குள் வாழ்பவர்கள் இலகுவாகவே இவ்வாறான கோச்டிகளுடன் இணைந்து கொண்டு விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை வன்முறை தான் சோறு தரும் என்ற நிலை. எனக்கு சில பாதாள உலக நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற வகையில் அவர்களது வாழ்வு உருவாக்கப்படும் விதம் தொடர்பாகவும் அவர்களை சமூகம் பார்கும் பார்வை தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் உண்டு. சமூக கட்டமைப்பு அவர்களை அவ்வாறு உருவாக்குகின்றது. நடுத்தர வர்க்க நாதேரிகளுடன் ஒப்பிடும் போது அவர்களது நட்பு மிகவும் இயல்பானது. எப்போதும் கண்ணீரைத் துடைக்க தயாராக நிற்கும் கைகள் அவர்களுடையது.
மயூரன், பாதாள பரிவாரங்கள் என்னும் உங்களது பார்வை 'வேட்டையாடு விளையாடு', 'காக்க காக்க' போன்ற படங்களில் வரும் பொலிசாரின் பார்வையை ஒத்தது. என்கவுண்டரை நியாயப்படுத்தும் நடுத்தரவர்க்க போலிசமூக மனநிலையை நீங்கள் கொண்டிருப்பது எவ்வாறு நியாயப்படுத்த போகிறீர்கள்.? சமூகக் கட்டமைப்பை மாற்றும் வரை என்கவுண்டர்களின் அதிகரிப்பு என்றைக்கும் குறையப்போவதில்லை. பாதாள உலக உறுப்பினர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாகவே மீள்நிரப்படும்.
அவ்வாறே,
மேர்வின் சில்வா பற்றிய உங்களது விமர்சனம் மேற்பார்வைக்கு சமூக நல நோக்கில் எழுதப்பட்டதாக தோன்றினாலும், அடிப்படையில் சினிமா பட பாணியையும் போலி தத்துவ நெடியையும் கொண்டிருப்பதை ஆழமான வாசகர் நிச்சயமாக உணர்ந்து கொண்டிருப்பர். அதிக காலமாக கொடுமைப்படுத்தும் வில்லனைக் கொன்ற கதையாக போய்விட கூடாது. அதற்கப்பால் அதன் சமூக உளவியல் மற்றும் அது தொடர்பாக எம்முன் உள்ள சவால்கள் போன்றவற்றை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அதை விடுத்து வெறுமனே கூச்சலிடுவதென்பதின் பின்னுள்ள அரசியலையும் நாம் அறிவோம்.
இன்று கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பல்வேறு ஊடகவியலளர்கள் கலந்து கொண்டனர். அதில் சிங்களத்தில் பிரபல மாற்றூடக காரர்களான சனத் பாலசூரிய, மங்சுள வெடிவர்த்தன போன்றோருடன் பல FMM அமைப்பினரும் கலந்து கொண்டனர். இச்சம்பவத்தினூடாக அவர்கள் ஊடக கலாச்சாரத்தை மாற்றியமைக்க விரும்பும் விதம் அற்புதமானது. அவர்கள் எழுத்து மற்றும் செயற்பாடு சார்ந்து கட்டமைக்க விரும்பும் சமூக நோக்கு அலாதியானது. வெறும் விமர்சன எழுத்தினது தேவை போலிசமூக நல விரும்பிகளிடம் மட்டுமே இருந்துவருகின்றது.
மக்கள் எதற்காக கிளர்ந்தார்கள்? அவர்கள் இனிமேலும் எவ்வாறான விடயங்களுக்கு கிளர்ந்து எழப்போகின்றார்கள் என்பன விவாதிக்கப்பட வேண்டியவை. மேர்வின் சில்வா வை விட மோசமமான ராஜபக்சவிடம் மேர்வினை கட்சியில் இருந்து நீக்குங்கள் என கேட்பது அதிகாரம் தன்ன்னை முறையாக கட்டமைக்கும். இது முறயாக்கப்படாதவிடத்து அதிகாரம் ஊடகங்களை அடக்குவதற்கான அராய்ச்சியை செய்வதற்கு அத்திவாரம் நட்டது போலாகிவிடும் அபாயமும் உள்ளது.
மற்றையது கோட்பாடு பற்றிய உங்களது புரிதல்கள் உண்மையிலேயே எமக்கு அயர்சியை ஏற்படுத்துவன. அங்கும் போலிசமூக மனநிலை அப்பட்டமாக தெரிகின்றது மயூரன். ஒரு விடயத்தை தெரியாமலே அதைப் பற்றி விமர்சிக்கலாம் என்ற விடயம் அதிர்ச்சியடைய வைக்கின்றது. தமிழ்ச் சூழல் அவ்வளவு மோசமாகிவிட்டதா என்ன?
தர்மா
-கிருலப்பனை-
தர்மா,
ஓர் ஊடகவியலாளருக்குரிய தகவற் தெளிவுடனான உங்கள் பின்னூட்டம் மிகவும் பயன்மிக்கது.
நானும் நிறய புது விடயங்களை அறிந்துகொண்டேன் . நன்றி.
//நடுத்தர வர்க்க நாதேரிகளுடன் ஒப்பிடும் போது அவர்களது நட்பு மிகவும் இயல்பானது. எப்போதும் கண்ணீரைத் துடைக்க தயாராக நிற்கும் கைகள் அவர்களுடையது.//
எனக்கும் இவ்வாறான நண்பர்கள் உள்ளனர். அவர்களூடாக அந்த வாழ்க்கைக்கட்டமைப்புப்பற்றிய புரிதலை நான் பெற்றுக்கொண்டுமிருக்கிறேன்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
//மேர்வின் சில்வா பற்றிய உங்களது விமர்சனம் மேற்பார்வைக்கு சமூக நல நோக்கில் எழுதப்பட்டதாக தோன்றினாலும், அடிப்படையில் சினிமா பட பாணியையும் போலி தத்துவ நெடியையும் கொண்டிருப்பதை ஆழமான வாசகர் நிச்சயமாக உணர்ந்து கொண்டிருப்பர்//
நீங்கள் இந்த பதிவை ஆழமாக வாசித்திருப்பீர்களோ என்னவோ தெரியவில்லை.
கட்டாயம் எழுத்தெண்ணி படித்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் அதிகாரத்தையும் நான் கொண்டிருக்கவில்லை.
இந்தப்பதிவு, மேர்வின் சில்வா சம்பவத்தை கவனப்படுத்தவேண்டிய , அந்த சம்பவத்தின் முக்கியத்துவம் குறித்த அக்கறையை, ஆதரவை பதிவு செய்ய வேண்டிய தேவையின்பால் எழுதப்பட்டது.
இச்சம்பவத்தின் முக்கியத்துவம் யாரை உறுத்தாமல் போய்விடக்கூடும் என்று பயப்படமுடியுமோ, அவர்களை நோக்கி, நேரடியான வார்த்தைப்பிரயோகங்களோடு எழுதப்பட்டது.
கோட்பாட்டுத்தெளிவோடு தத்துவ விசாரங்களில் ஈடுபட விரும்புபவர்களுக்காக எழுதப்பட்டதல்ல.
அது ஒருபுறமிருக்க
இந்த சம்பவத்தை நாயகத்தன்மைகொண்ட வெற்றித்தாக்குதலாக சித்தரிப்பதையோ, நிலைபேறுடைய பெருவெற்றி என்பதாக அலங்கரிப்பதையோ துஷ்டன் ஒழிந்தான் இனி எல்லாம் சுபமே என்ற மனநிலையை விதைக்கவோ நான் முயன்றிருக்கவில்லை.
அத்தோடு பதிவின் வார்த்தைகளினூடே இப்படியான மனநிலை கட்டமைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களையும் சிதைத்தே இருக்கிறேன்.
அதுமட்டுமன்றி, இதை வர்க்க முரண்பாடாகக்காட்டும், தட்டையான கோட்பாட்டு எடுத்துக்காட்டாக உருவகப்படுத்தும் வேலைகள் எதையும் நான் செய்ய முயலவும் இல்லை.
முடிந்த வரை இந்த தாக்குதல் அதனோடு சம்பந்தப்பட்டவர்களின் பல பக்கங்களையும் காண்பித்து, வரடு கோஷமாக இது மாறிவிடாதிருக்கும் படியான சிதைப்புக்களை நேர்மையுடன் செய்தே இருக்கிறேன்.
பாதாள உலகக்கரர்கள் என்ற வார்த்தையால் நான் சொல்ல வருவது மிகத்தெளிவானது.
மக்கள் எப்போதும் தமது ஆயுத, ஆள்பல அதிகாரத்துக்கு ஒடுங்கிக்கொண்டு தம்மை எதிர்த்து எதுவும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற அதிகாரம். அப்படி எதிர்த்துக்கேட்டாலும் கருவறுத்துவிடுவோம் என்கிற திமிர்.
பாதாள உல்கத்தின் அந்தமுகத்தையே நான் சாடி நிற்கிறேன்.
மக்கள் சட்டத்தை தம் கையில் எடுக்கும்போது இந்த வன்முறை அதிகாரம் நிலைத்து நிற்க வாய்ப்பில்லை என்ற உண்மையைத்தான் சொல்ல வந்தேன்.
மற்றபடி பாதாள உலகத்தை ஒழிப்பதானால் சமூகக்கட்டமைப்பை, பொருளாதாரக்கட்டமைப்பை மாற்ற வேண்டியதைத்தவிர செய்ய வேறு வழி இல்லை என்பதைக்கூட "தெரிந்து" கொள்ளாமலா நான் " கோட்பாட்டு நெடியுடன்" எழுதுமளவுக்கு இருக்கிறேன்? ;-)
//இன்று கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பல்வேறு ஊடகவியலளர்கள் கலந்து கொண்டனர்//
நீங்களும் அதில் கந்துகொண்ட ஊடகவியலாளர்களுள் ஒருவர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
//மற்றையது கோட்பாடு பற்றிய உங்களது புரிதல்கள் உண்மையிலேயே எமக்கு அயர்சியை ஏற்படுத்துவன. அங்கும் போலிசமூக மனநிலை அப்பட்டமாக தெரிகின்றது மயூரன்//
:-)
கோட்பாடு பற்றிய புரிதல் என்னை விட உங்களுக்கு அதிகமாக இருக்ககூடும் அதற்காக நான் கோட்பாடெல்லாம் படித்து, அதற்காக ஆங்கிலம் லத்தீன் எல்லாம் படித்து பிறகு அதன் ஆழ அகலங்களை ஆழ்ந்து சிந்தித்துவிட்டுத்தான் எனது எதிர்ப்பையும் ஏற்பையும் பதிவு செய்யவேண்டுமானால், அதை விட வேறு "போலிச்சமூக மனநிலை" இருக்க முடியாது.
மனதைத்தைத்த ஒன்றை பாராட்டவும், விமர்சிக்கவும் நான் படித்து விட்டு வரும்வரை காத்துக்கொண்டிருக்க முடியாது.
நான் சார்ந்த கோட்பாடு உனக்கு புரியவில்லை. அதனை படித்து விட்டு வந்து சமூகத்தைப்பற்றி அக்கறைப்படு என்று கூறும் அறிவுலக மேட்டிமை மனநிலையையும், அந்த அறிவின் பிராமணீய அதிகாரத்தையும் நீங்கள் மறுபடி மறுபடி இங்கே வலியுறுத்தியமைகூட நீண்ட நெடுநாட்களாக சாதாரண மக்களுக்கு அயர்ச்சியைத் தந்துவருவதுதான்.
//விடயத்தை தெரியாமலே அதைப் பற்றி விமர்சிக்கலாம் என்ற விடயம் அதிர்ச்சியடைய வைக்கின்றது. தமிழ்ச் சூழல் அவ்வளவு மோசமாகிவிட்டதா என்ன? //
எந்த விடயம்?
ரூபவாகினியில் மேர்வின் சில்வா அடிவாங்கியதா?
அல்லது நீங்கள் சார்ந்திறுகி நிற்கும் கோட்பாடுகள் எதையும் நான் விமர்சிக்க வெளிக்கிட்டதா?
அருமையாக எழுதியிருக்கிறீங்க மயுரன்
உண்மையில் ஜனநாயகம் நாகரிகம் பற்றிய எல்லா நம்பிக்கைகளும் இவனப் போல நக்குத்தின்னிகளாலதான் சீரழிந்திருக்கிறது நம் நாட்டில்.
அத்தோடு கீர்த்தனா சொல்கின்ற உண்மை மிகவும் நிதர்சனமானது
//இந்த புரிந்துணர்வு நெடுங்காலமாகவே சிங்களவர்களுக்கு இருக்கிறது என்பது தான் என் அபிப்பிராயம்.அதுவும் வறுமைககோட்டுக்கு கீழ் இருக்கும் சிங்கள மக்களுக்கு நெடுங்காலமா இந்த மனோநிலை இருக்கிறது.//
நானும் பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன் இதில் இம்மக்களின் துரதிஷ்டம் என்னவென்றால் அதிகாரமும் வன்முறையும் சிங்களத்தின் பெயராலேயே அவர்களையும் ஒடுக்கப்பார்க்கும் சந்தர்ப்ப வாதத்தை உணர்ந்த சிங்களவர்கள் என்பதுதான்.
ஆனால் மயுரன் நிச்சயமாக மேர்வின் போன்ற காவலிகளின் சப்போர்ட் இல்லாமல் ராஜபக்ஷ தன்னைத் தக்க வைக்க முடியாது என்பது நிச்சயம்.
அதனால்தான் இன்னுமொரு நூற்றாண்டும் இப்படியேதான் போகுமோ என்பது வேதனையாயிருக்கிறது
//மனதைத்தைத்த ஒன்றை பாராட்டவும், விமர்சிக்கவும் நான் படித்து விட்டு வரும்வரை காத்துக்கொண்டிருக்க முடியாது.//
மயுரன் எல்லா இடத்திலும் இந்தச்சிந்தனை உங்களைக் காப்பாற்றும் என்று எண்ணாதீர்கள் உங்களின் ஆரோக்கியத்தின் மீது பல வேளை அது கேள்வியாகிவிடும்.
நன்றி அபூபக்கர்.
//மயுரன் எல்லா இடத்திலும் இந்தச்சிந்தனை உங்களைக் காப்பாற்றும் என்று எண்ணாதீர்கள் உங்களின் ஆரோக்கியத்தின் மீது பல வேளை அது கேள்வியாகிவிடும்//
அந்தப்பின்னூட்டத்தில் இருக்கிற அறிவின் அதிகாரத்தொனிக்கு அதிராக, மேட்டிமை மனநிலைக்கு எதிராகவே இதனைச்சொன்னேனே அல்லாமல், அறிவின் தேவையை, தேடலின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல.
இந்தப்பிரச்சினை தொடர்பான அதிமேதகு ஜனாதிபதியின் நிலைப்பாட்டையும் அவர் கட்சிக்கூட்டத்தில் பேசியிருப்பதையும் பார்த்தீங்களா மயுரன்!!
இனி என்னத்தப் பேசி என்ன நடக்கப் போகிறது
வித்யா சொல்லியிருப்பதப் போன்றும் நடந்திருந்தால் இன்னும் கொஞ்சம் ஆறுதலாயிருந்திருக்கும்
///After the cabinet decided to annul the CFA, the next matter to be discussed was the Mervyn Silva
Rajapakse approached the topic when Minister Maithripala Sirisena and several other senior SLFP members were on public record that Silva should be subject to disciplinary action.
The President to the surprise of many spoke in support of Silva, whose conduct has been criticised by everyone in the country.
"Yes, he made a small mistake. But he was punished before the whole country for that. Why should he be punished even further? There is a much serious issue behind it. That is the manner in which the Sri Lanka Rupavahini Corporation behaved. This is a state institution. But the government has no use of it. When it is a state institution it should work according to the needs of the government and not to suit the agendas of various people. The behaviour of SLRC was very ugly that day. How did they take the law unto their hands to show live how a government minister was being beaten," Rajapakse questioned.
The ministers who earlier made statements against Silva just nodded and agreed with the President.
However, Minister John Seneviratne, who had not made any public statements on Silva's actions said, "Mervyn did not act like a minister that day. The people do not only scold Mervyn, they have found fault with the government. Therefore, we should not remain silent, we have to make some decision and show the people."
The President cut in and said, "You cannot punish people just like that. A decision has to be made after holding an inquiry. The inquiry is going on and the central committee too will discuss this." He also said that while the Daily Mirror did not carry any stories on the issue, it was only The Sunday Leader and it sister paper, Irudina that still carried the story.///
இது 06-01-2008 அன்றைய SUNDAY LEADER பத்திரிகையில் பிரசுரமான கட்டுரையின் ஒரு பகுதி
மயூரன் அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிலரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது என அறிந்தேன் அந்த உரையையும் சலசலப்பு விவகாரத்தையும் கொஞ்சம் எமக்கும் அறியத்தாருங்களேன்
செய்தி:
Mervyn’s bodyguard 'Nuwan' granted bail
செய்தி:
Lal Hemantha Mawalage, a Rupavahini news producer who made a protest speech at the Rupavahini Corporation on the day Minister Mervyn Silva entered the television station, had been attacked by a gang last night. The gang had cut his hand and he is slated to be operated on soon. He had received several death threats after the Minister’s incident.
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=4927
Post a Comment