January 25, 2008

ரிச்சர்ட் ஸ்டால்மன் : இலங்கை வருகை

இந்தப்பதிவு என்னுடைய எந்த வலைப்பதிவுக்கானது என்று தெரியவில்லை. அண்மையில் பேராதனையில் தத்துவம் படிக்கும் நண்பரொருவர் யார் இந்த ஸ்டால்மன் என்று கேட்டபோது, வாழ்ந்துகொண்டிருக்கும் முக்கியமான தத்துவாசிரியர்களுள் ஒருவர் என்று பதிலளிக்க வேண்டி வந்ததால், "ம்..." இல் இந்தப்பதிவைப் போடுவது பொருத்தமானதாக இருக்குமோ என்று தோன்றியது.

[கொழும்பில் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த விருந்தளிப்பின் பின் ஓய்வாகக் குழலூதும் ஸ்டால்மன்]

==> ஸ்டால்மன் குறித்த விக்கிபீடியாக் கட்டுரை |தமிழ்|ஆங்கிலம்

"அடேய், உன்ட ஆள்; அதுதான் தாடிவச்சவர் இலங்கை வந்திருக்கிறாராமே மறக்காம ஒருக்கா போய்ப்பார். டெய்லி நியூசில விளம்பரம் வந்திருக்கு" என்று அப்பா ஒருநாள் தொலைபேசியில் அழைத்துச்சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஸ்டால்மன் இங்கே வருகிறார் என்று அறிந்திருந்தபோதும் வந்துவிட்டார், சந்திப்பிற்கான நாட்கள் இவைதான் என்பன போன்ற செய்திகளை திருக்கோணமலையில் இருக்கும் அப்பா மூலமே அறியக்கிடைக்கவேண்டியிருந்தது என்பதிலிருந்து எமது லினக்ஸ் பயனர் குழுமத்தின் தொடர்பாடல் நெருக்கத்தை அறிந்துகொள்ளலாம் ;-)

மறைந்த பேராசிரியரும் இலங்கையின் தகவற் தொழிநுட்பத்துறை வளர்ச்சியில், குறிப்பாக கட்டற்ற மென்பொருட்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றியவருமான சமரநாயக்க அவர்களது அழைப்பின் பேரிலேயே ஸ்டால்மன் இலங்கை வந்திருந்தார்.

==> வருகை தொடர்பான நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்புப்பற்றிய தகவல்களை இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

பேராதனையில் நடந்த மாநாட்டுக்குப் போக வசதிப்படவில்லை. மாலபேயில் நிகழ்ந்த " அறத்திலும் நடைமுறையிலும் கட்டற்ற மென்பொருள்" என்ற தலைப்பிலான மாநாட்டுக்கு முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்தேன்.


இலங்கைப் பல்கலைக்கழகங்களின் செக்குமாட்டுக் கல்விச்சூழலில் ஸ்டால்மன் யார் என்றே அறிந்திருக்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்திருக்காது. ஓரளவுக்கேனும் தொழிநுட்பத் துறை வாழ்வியலில் துணைக்கலாசாரக் கூறுகளை உள்வாங்கிக்கொண்டவர்கள் மத்தியிலேயே இவரது வருகையின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கும்.


SLIIT போன்ற தனியார் கல்விக்கழகங்களிலேயே இவருக்கான பெரு வரவேற்பினை எதிர்பார்க்க முடியும்.

இவரது வருகைக்கான வசதிகளை ஒழுங்குசெய்த அரச நிறுவனங்களாகட்டும், பேராதனைப் பல்கலைக்கழகச் சூழலாகட்டும், இவரை ஒரு முன்னணி நிரலாளர் என்பதைத்தாண்டி எந்த வகையில் உள்வாங்கிக்கொண்டிருப்பார்கள் என்பது சந்தேகமே.

அதிர்ச்சியளிக்கும் சனக்கூட்டம் மாநாட்டு மண்டபத்தை நிறைத்திருந்தது. ஏறத்தாழ ஆயிரம் பேர் தேறுவார்கள். இதுவரை எனது கொழும்பு வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தகவற் தொழிநுட்ப மாநாட்டை நான் கண்டதில்லை.


மிதமிஞ்சிய உணர்ச்சிவசப்பாடுகளும், நாயகவணக்கமும் நிரம்பி வழிய ஒரு அவதார புருஷருக்குக் கொடுக்கும் பக்திவணக்க மரியாதையோடு மேடைக்கு ஸ்டால்மனை அழைத்து வந்தார்கள்.



மாநாட்டின் ஏனைய நிகழ்வுகள் குறித்த வர்ணனைகளை விட்டுவிட்டு அங்கே ஸ்டாமன் தெரிவித்து நான் குறிப்பாகக்கவனித்த சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது பயன்மிக்கது.

[மு.மயூரன், ஸ்டால்மன், அப்துல் ஹலீம், துறவி மெத்தவிகாரி - நான்கு மதபோதகர்கள் ;-) ]

1.

ஜோர்ஜ் புஷ், அமெரிக்க அரசு போன்றவற்றுக்கெதிரான நேரடியான வலுவான கண்டனங்களை ஸ்டால்மன் முன்வைத்தார். அமெரிக்க அரசு என்பது பெருவணிக நிறுவனங்களின் நலன்காக்கும் அமைப்பொன்றேயொழிய அதற்கு வேறெந்த நல்ல முகமும் கிடையாது என்று ஆணித்தரமாகக் கருத்துரைத்தார்.

2.

"தனியுரிமை மென்பொருளாளர்களும் வணிக நிறுவனங்களும் தம்மை கம்யூனிஸ்டுக்கள் என்று அழைக்கின்றனர். உண்மையில் அவர்கள்தான் கம்யூனிஸ்டுக்கள். அங்கேதான் மேலிருந்து கீழான இறுகி நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பு இருக்கிறது. மேலிருந்து ஆணைவரும் , அதனை எல்லோரும் நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்கள்தான் கம்யூ னிஸ்டுக்கள். தனி நபர் சுதந்திரத்தை, அதிகாரத்தின் பரவலாக்கத்தை மறுக்கும் கம்யூனிஸ்டுக்கள் அவர்கள்தான்" என்று கண்டித்தார்.

(கம்யூனிசம் என்பது ஒரு பயங்கரக் கெட்ட வார்த்தை ;))

3.

"மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் வேலை செய்த பணியாள் ஒருவர் அல் கொய்தாவுக்கு தகவலனுப்பிய காரணத்தால் கைது செய்யப்பட்டார். அல்கொய்தாவுக்கு தகவலனுப்பும் ஊழியரைக் கைது செய்கிறார்கள், உலகின் அதிபயங்கர பயங்கரவாத அமைப்பான அமெரிக்க அரசுக்கு உங்களைப்பற்றிய தகவல்களை களவாக அனுப்பும் வின்டோஸ் இயங்குதளத்தை என்னசெய்வது" என்றார்.



4.

க்னூ/லினக்ஸ் என்று சொல்ல வேண்டியதன் அவசியத்தை வழக்கம் போல் வலியுறுத்தினார். அத்தோடு இது ஈகோ சம்பந்தப்பட்ட பிரச்சனைதான் என்றாலும் இந்தப்பெயர்ப்பாவனையில் இருக்கும் மறைமுக அரசியலை நாம் புறக்கணிக்க முடியாது. லினக்ஸ் என்று மட்டும் பயன்படுத்தும்போது அங்கே லீனஸ் டோவால்ட்ஸ் மட்டுமே நாயகராகிறார். பிறகு இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துபவர்கள் அவரைப் பெரிய ஆளாக்குவார்கள். அவருக்கோ மென்பொருள் உலகின் சுதந்திரம், விடுதலை குறித்து எந்த அக்கறையும் இல்லை. உண்மையில் அவர் விடுதலைக்கு எதிரான கருத்துக்களையே கூறி வருகிறார். இந்த அபாயமும் லினக்ஸ் என்ற பெயர்ப் பயன்பாட்டில் உண்டு என்றார்.

ஆனாலும் பெயர்களைத் தெரிவு செய்யும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு என்றார்.

5.

வின்டோஸ் உங்களை உளவு பார்ப்பது எப்படி என்பதை எடுத்துக்காட்டுக்களோடு விளக்கினார். அத்தோடு விஸ்தாவினால் ஏற்பட்டிருக்கும் என்றைக்குமில்லாத அபாயம் குறித்துப்பேசினார்.

6.

கே டீ ஈ -எதிர்- க்னோம் சர்ச்சைக்கு இனியும் இடமில்லை. இன்று கே டீ ஈ யும் கட்டற்ற மென்பொருளே என்றார்.

7.

சுவீடனின் கொள்ளையர் கட்சிக்கு (pirate party) ஆதரவளிக்கிறீர்களா என்றும், பதிப்புரிமை நின்று நிலைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்றும் நான் கேட்ட கேள்விக்கு,

கொள்ளையர் கட்சியின் கொள்கைகளில் ஒரு சிறு விடயத்தைத்தவிர மற்ற எல்லாவற்றோடும் உடன்படுகிறேன். மென்பொருட்கள் பொதுமக்கள் உடமையாக வேண்டும் என்று அவர்கள் நினைப்பது மட்டும்போதாது, மென்பொருட்களின் ஆணைமூலமும் பொதுத்தளத்துக்கு வரவேண்டும் என்றார். அத்தோடு காப்புரிமை இன்னும் பத்து வருடத்துக்குத் தேவையானதாகவே இருக்கிறது என்றும் பதிலளித்தார்.

8.

பாடசாலைகளில் கற்பிப்பதற்கான மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாக மட்டுமே இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அறத்தையும் வலியுறுத்தினார்.


--

ஸ்டால்மனின் வருகையும் அவரது கருத்துக்களும், தொழிநுட்பத்துறையின் அரசியல் குறித்த விழிப்புணர்வினை இலங்கையில் ஏற்படுத்துமாயின் அது ஆரோக்கியமானது. க்னூ/லினக்ஸ் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கே கூட அதன் பின்னாலியங்கும் அரசியல், தத்துவப்போக்குக்கள் குறித்து எந்த பிரக்ஞையும் இருப்பதில்லை.

தொழிநுட்பத்தின் அரசியலின் தகவற் தொழிநுட்பக் குறியீடாக ஸ்டால்மன் நிற்கிறார். நடக்கிறார், உலகெங்கும் போய்ப் பேசுகிறார்.

---

மாலை வேளையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஸ்டால்மனை சந்திக்கக்கிடைத்தது இனிமையான அனுபவம். ஸ்டால்மன் என்கின்ற மனிதர் ஆர்வமூட்டும் ஆளுமை. மிக மிக எளிமையானவர். உலகின் மிகப்புத்திசாலியான நிரலாளர்களில் ஒருவர். ஆனால் அதற்கான எந்தப் பகட்டும் ஒளிவட்டங்களும் இல்லாமல் வாழ்பவர். எளிமையான வாழ்க்கை முறையை உடையவர்.



---

இந்த நிகழ்ச்சியோடு நிகழ்ச்சியாக நூறு டொலர் மடிக்கணினி ( OLPC) யினை நேரில் பார்க்கும், தொட்டுப்பார்க்கும் வய்ப்புக்கிடைத்தது. அது எதிர்பார்த்து கற்பனை பண்ணியதை விட கொஞ்சம் எடை கூடியதாக இருந்தது ;-)


----


* இங்கே இணைத்துள்ள நிகழ்படங்கள் தரம் குறைந்தவை. எனது செல்பேசியில் தரமான நிகழ்படக்கருவி இல்லை. என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்க்க உதவும் என்பதற்காக இணைத்துள்ளேன்.

* ஸ்டால்மன் பேசிய ஏராளம் விடயங்கள் இங்கே பகிரப்படவில்லை. இவை எல்லாம் ஸ்டால்மன் அடிக்கடி பல இடங்களிலும் பேசி வரும் முக்கியமான விஷயங்கள். இணையம் பூராகவும் இவற்றை நீங்கள் பெற்றுப் பார்க்கலாம்.

* மேலே நான் தந்த தொடுப்பில் உள்ள ஆங்கில வலைப்பதிவுகளினூடாக ஸ்டால்மனின் இலங்கை வரவு குறித்த வெவ்வேறு கோணங்களிலான பார்வைகளை நீங்கள் படித்துக்கொள்ளலாம்.


* ஸ்டால்மன் சில படங்களில் அணிந்திருக்கும் "ஈமாக்ஸ் தேவாலயத்தின் புனித இக்னூசியஸ் " ஆடை பற்றி தெரியாதவர்கள் இங்கே போய்ப் பார்த்தறிந்துகொள்ளவும். படத்தில் புனித இக்னூசியசும் துறவி மெத்தவிகாரியும் ஆளையாள் ஆசீர்வதித்துக்கொள்கிறார்கள் :-)

6 பிற்சேர்க்கைகள்:

said...

காலங் கார்த்தால நல்ல சேதி தந்தீங்க மயூரன். குஞ்சன்னா கூகில் டாக்கில் வரும்போதெல்லாம் கேட்பதுண்டு இந்நிகழ்வு குறித்து. இலங்கையின் குனு/ லினக்ஸ் பயனர் குழுத் தாண்டி எப் எஸ் எப் பின் நேரடி பிரதிநிதித்துவம் உண்டா?

said...

ஆமாச்சு,

நானறிந்தவரை இங்கே FSF இன் நேரடிப் பிரதிநிதித்துவம் இல்லை.

foss.lk போன்ற தளங்கள் கூட பயனர் குழுமம் என்ற அளவில்தான் இருக்கிறது. பயனர் குழுமமும் கூட கொழும்பைத்தாண்டி வெளியில் இருப்பதாகத் தெரியவில்லை.

இன்னமும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் இலங்கையில் சரியாக நிறுவனமயப்படவில்லை.


எல்லாம் பயனர் குழுமங்கள்தான். அல்லது ICTA வில் இருக்கும் தனிப்பட்ட தொடர்புகளைப்பயன்படுத்தி சில காரியங்களைச் செய்கிறார்கள்.

said...

மயூரன் நலமா?
மிகத்தரமான பதிவொன்றை தந்திருக்கிறீர்கள். ஸ்டால்மனைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன். தகவல்களை அறிவதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தமைக்கு நன்றி. அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கம் பற்றி அவர்கூறும் கருத்துக்கள் வளர்ந்துவரும் நாடுகளில் அதிகபிரசித்தி பெற்றுள்ளன. மற்றும் இவரது எளிமை தன்னடக்கம் என்பன மற்றவர்களுக்கும் படிப்பினைதான்.

பணி தொடரட்டும்.

said...

மயூரன், rmsஐ மேள தாளத்துடன் அழைத்து வந்தது வேடிக்கையாய் இருந்தது !

அவர் ஏன் அந்த கருப்பு அங்கி அணிந்து கொண்டு உரையாற்றுகிறார்?

பதிப்புரிமை இன்னும் பத்தாண்டு காலத்துக்குத் தேவைப்படும் என்று சொல்வதன் காரணம் என்ன? குறிப்பாகப் பத்தாண்டுகள் என்பது என்ன எல்லை?

விண்டோஸ் போன்ற இயக்குதளங்கள் மூலம் நாம் எப்படி உளவு பார்க்கப்படுகிறோம்? மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்கும் அமெரிக்கா போன்ற அரசுகளுக்கும் உள்ள புரிந்துணர்வு என்ன?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை எப்படியும் இணையத்தில் தேடிப் பிடித்துப் படிக்கலாம் என்றாலும் இவற்றின் முக்கியத்துவம் கருதி இவற்றை விரித்து தனி இடுகையாக எழுதினால் நன்றாக இருக்கும். சில விசயங்கள் தமிழில் படித்தால் சட்டென்று உரைப்பதும் காரணம்.

said...

//மயூரன், rmsஐ மேள தாளத்துடன் அழைத்து வந்தது வேடிக்கையாய் இருந்தது !//

அந்த மேளமும் தாளமும் நடனமும் சிங்களவர்களின் பாரம்பரியக் கலைவடிவம்.
தமது கலாசார முறையில் அவரை அழைத்து வருகிறார்கள். பேராதனையிலும் இதேபோன்று தான் வரவேற்பளித்தார்கள்.

மகிழ்ச்சியே.

//அவர் ஏன் அந்த கருப்பு அங்கி அணிந்து கொண்டு உரையாற்றுகிறார்?
//

//* ஸ்டால்மன் சில படங்களில் அணிந்திருக்கும் "ஈமாக்ஸ் தேவாலயத்தின் புனித இக்னூசியஸ் " ஆடை பற்றி தெரியாதவர்கள் இங்கே போய்ப் பார்த்தறிந்துகொள்ளவும்.// என்ற பகுதியில் தரப்பட்ட தொடுப்பினைப்போய்ப் பார்க்கவும்.


//
பதிப்புரிமை இன்னும் பத்தாண்டு காலத்துக்குத் தேவைப்படும் என்று சொல்வதன் காரணம் என்ன? குறிப்பாகப் பத்தாண்டுகள் என்பது என்ன எல்லை?//


எனக்கும் அது முழுமையாகப் புரியவில்லை.

சிலவேளை பதிப்புரிமைச்சட்டங்கள் இறுக்கமாக இருப்பதால் அப்படிக்குறிப்பிட்டிருக்கலாம். இதுபற்றி அவருக்கு தனிப்பட மின்னஞ்சல் அனுப்பிக்கேட்க உத்தேசம்.


//இவற்றின் முக்கியத்துவம் கருதி இவற்றை விரித்து தனி இடுகையாக எழுதினால் நன்றாக இருக்கும்.//

ஆம். நீண்டநாட்களாக இதைப்பற்றி எழுத ஆசை, தகவல்களைச் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.

said...

//
விண்டோஸ் போன்ற இயக்குதளங்கள் மூலம் நாம் எப்படி உளவு பார்க்கப்படுகிறோம்? //

இது குறித்த ஒரு சிறு கட்டுரை

http://www.gnu.org/philosophy/can-you-trust.ta.html

விண்டோஸ் போன்ற இயக்குதளங்கள் மூலம் நாம் எப்படி உளவு பார்க்கப்படுகிறோம்?

மேலும் அடுத்த முறை இத்தகைய நிகழ்வுக்கு எபன் மோகலனை அழைக்க ஏற்பாடு செய்யலாம்.