ஹோகனேக்கல், நன்னீர் அரசியல், சில கேள்விகள்.
இந்தக் காவிரிப்பிரச்சினை, ஹோகனேக்கல் பிரச்சினை எல்லாம் வணிகத் திரைத்துறைக் கலைஞர்களின் தலையீடுகளுடன் மிகப்பிரபலமாகிப்போய்விட்டன.
இதில் பெரும்பாலும் தமிழ்நாடு சார்பான செய்திகளே, ஊடகங்கள் வழியாக மட்டும் இப்பிரச்சினையை அவதானித்துக்கொண்டிருக்கும் எனக்குத் தரப்படுகின்றன.
Sometimes in April படத்தில் ஒரு வசனம் வரும் "Ok, but.. Who are the good guys?" என்று. அப்படித்தான் கேட்கவேண்டும்போலிருக்கிறது. ஆனால் என்னிடமுள்ள இந்தக்கேள்வி, கன்னடக்காரர்களா தமிழ்நாட்டுக்காரர்களா good guys என்பதை அடிப்படையாகக்கொண்டதல்ல.
1. ஹோகனேக்கல் பகுதியில் நிறுவப்படவுள்ள தமிழக அரசின் குடிநீர்த்திட்டத்துக்கு ஜப்பான் பணம் கொடுக்கிறது. இதில் எதிர்காலத்தில் ஜப்பானின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது?
2. இப்போ உள்ளதுபோல நதிநீர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் , ஏதாவது பிரச்சினை வந்தால் சுப்ரீம் கோர்டில் வழக்குப்போடலாம். எல்லோரும் கேட்பதுபோல தேசியமயமாக்கி விட்டால் இப்படி வழக்குப்போட முடியாது. வரலாற்றில் நிறையத்தடவைகள் மத்திய அரசு தமிழ்நாட்டை ஏமாற்றியிருக்கிறது. நாளைக்கு இந்த விசயத்திலும் ஏமாற்றினால் என்ன செய்வது? அதை இப்பவே செய்ய முடியாதா?
3. 21ம் நூற்றாண்டின் உலகளாவிய நன்னீர் அரசியலுக்கும் இப்போது அடிக்கடி வெடிக்கும் இந்திய மாநிலங்களுக்கிடையேயான நன்னீர் முரண்பாடுகளுக்குமிடையேயான தொடர்புகள் என்ன? (நன்னீரை நீலத்தங்கம் என்கிறார்கள். எதிர்கால உலகின் போர்களின் அடிப்படை நன்னீராகத்தான் இருக்கப்போகிறது என்கிறார்கள். இதை வைத்துத்தான் கேட்கிறேன்)
4. நதி நீரைத் தேசிய மயமாக்கு என்ற கோரிக்கை எழுப்பப்பட வேண்டும் என்று எவராவது மறைமுகமாக எதிர்பார்க்கின்றனரா?
5. நதிநீரைத் தேசியமயமாக்கி விட்டால், நாளைக்கு நதிநீரைத் தனியார் மயமாக்கும்போது எழக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே இலகுவாகத் தீர்த்துவிடலாம் என்ற எண்ணம் எவருக்கும் இருக்கிறதா? (தேசியமயமாக்கற் பொருளாதாரக்கொள்கை பின்னர் எவ்வாறு யாருக்கெல்லாம் சேவகம் செய்தது என்பதை நினைவிற்கொள்க)
6. நதிநீர் இணைப்பு, நதி நீர் தேசிய மயமாக்கல் இரண்டும் இந்தியாவின் வளமான எதிர்காலத்துக்கான வழிமுறைகளாகப்போதிக்கப்பட்டு மிகக்கவர்ச்சிகரமாகப் பரப்புரைக்கப்படுகிறதே, இவையிரண்டும் இந்திய மக்களுக்கு நன்மைதருமா அல்லது வேறேதாவது நிகழ்ச்சிநிரலின் எதிர்பார்ப்புக்களா?
7. சேது கால்வாய்த்திட்டத்துக்குள் ராமன் வந்ததுபோல, இந்தப்பிரச்சினையிலும் தமிழர் - கன்னடர் முரண்பாடு தூக்கிக்கொண்டாடப்படுவது அடிப்படைப்பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் சதிவேலையா?
தொலைக்காட்சி, இணையத்தளங்கள் வாயிலாக மட்டுமே உங்கள் நன்னீர்ப்பிரச்சினையை அவதானித்துவரும் ஓர் ஈழத்தமிழனுள் எழுந்த கேள்விகள் இவை.
இதற்கான பதில்களை இப்பிரச்சினைக்கு அண்மையில் இருக்கும், இப்பிரச்சினையின் அரசியலை அணுகி அவதானிக்கும், மக்கள் நிலைச்செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டிருக்கும் அன்பர்கள் மட்டுமே மிகத்தெளிவாகத்தர முடியும்.
கடந்த இரு நாட்களாக இந்தப்பின்னணி அரசியல்கள் குறித்து ஏதேனும் பதிவுகள் வருமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
கர்நாடகாவா தமிழ்நாடா என்பதைத்தாண்டி, திரையுலகத்தினரின் அதிரடிப்பேச்சுக்கள் என்பதைனைத்தாண்டி, தமிழுணர்வு என்பதைத்தாண்டி என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கவில்லை.
தமிழ்சசி, தமிழரங்கம் போன்ற பதிவுகளில் கூட இப்பிரச்சினை பற்றிய அலசல்களைக் கொஞ்சம் எதிர்பார்த்தேன்..
வெங்கட் சொன்னதுபோல எசப்பாட்டுக்களை எதிர்பார்க்கிறேன் :-)
மேலும் படிக்க:


8 பிற்சேர்க்கைகள்:
தமிழரங்கக் கட்டுரை படித்து விட்டு உங்கள் கட்டுரையைப் படித்தால் கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கிறது. ஆறுகள் நாட்டுடைமையாக்கம் பற்றி யாரும் இந்தக் கோணத்தில் இது வரை கேள்வி எழுப்ப வில்லை.
**
s.v. சேகர் நாடகம் ஒன்றில் மெரினா கடற்கரையை விற்கப்போவதாக நகைச்சுவைக்குச் சொல்வார்கள். உண்மையிலேயே, இப்போது ஆறுகள், மலைகள், கடல்களை விற்று விடுவார்கள் போல் இருக்கிறது :(
**
குளங்களை அரசுடைமை ஆக்கிய பிறகு, உள்ளூர் மக்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை போகிறது. ஆறுகளை நாட்டுடைமை ஆக்கினால், மாநில அரசுகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் என்னென்ன உரிமைகள் போகுமோ?
உங்கள் கேள்விகளுக்கு வட்டாள் நாகராஜ்-இன் செவ்வியில் பதில்கள் இருக்குமென நினைக்கிறேன்.
குமுதம் ரிப்போட்டரில் அவரது செவ்வி வெளிவந்துள்ளது.
வாழ்த்துக்கள் !!
//உங்கள் கேள்விகளுக்கு வட்டாள் நாகராஜ்-இன் செவ்வியில் பதில்கள் இருக்குமென நினைக்கிறேன்.//
செவ்வி பார்த்தேன்.
:-)
நீங்கள் எந்த உள்குத்தை வைத்து இதைச்சொன்னீர்களோ தெரியாது, ஆனால் அந்தச்செவ்வியும் அட்டைக்கட்டுரையும் சில பயனுள்ள தகவல்களைக்கொண்டிருந்தன.
செவ்வியைப்படித்தபிறகு, இந்திய மாநில ஒருமைப்பாட்டின்/பிரிவினையின் அரசியல் குறித்தும் கேள்விகள் எழுகின்றன.
அறியத்தந்தமைக்கு நன்றி.
//s.v. சேகர் நாடகம் ஒன்றில் மெரினா கடற்கரையை விற்கப்போவதாக நகைச்சுவைக்குச் சொல்வார்கள். உண்மையிலேயே, இப்போது ஆறுகள், மலைகள், கடல்களை விற்று விடுவார்கள் போல் இருக்கிறது :(//
வருத்தமாய் இருந்தாலும் சிரித்தேன்.
நதிகள் நாட்டுடைமையாக்கப்படுவது பற்றி ஏன் இவ்வளவு சந்தேகம்? மத்திய அரசு தனியாருக்கு விற்கும் என்ற அச்சம் இருக்கிறதென்றால், மாநிலங்கள் விற்காது என்பது என்ன நிச்சயம்?
பார்க்க:
ஒகேனக்கல்-பைத்தியக்காரக் கூச்சல்களுக்கு நடுவே ஒரு தெளிவின் குரல்
மயூரன்,
தமிழரங்கக் கட்டுரையையும் உங்கள் பதிவையும் பார்த்தேன்.
மும்பையின் நீரா ஆற்றின் விவகாரத்தின் விவரங்கள் எனக்கு இல்லை;இது பற்றிய அச்சங்கள் நியாயமானவையாகவே தோன்றுகின்றன.
ஆனால் நந்நீர் அரிய பொருளாக அறியப்பட்டு விட்ட உலகச் சூழலில் இது போன்ற நதியை விற்கும் சூழல் எல்லா நேரத்திலும் நடக்க இயலாதெனவே நான் நம்ப விரும்புகிறேன்.
இந்த பயங்களை மீறி இவை நடக்கும் என்றால்,தேசியமோ,மாநிலமோ எல்லாம் பொய்யெனவாகும்.
Post a Comment