August 26, 2008

திருகோணமலையும் திருக்கோணமலையும்.

பள்ளிக்கூட மாணவனாயிருந்தபோது "திருக்கோணமலைக் கவிராயர்" எனும் புனைபெயர்கொண்ட எங்களூரின் பெயரறியப்பட்ட கவிஞர் ஒருவர் பற்றி அறியக்கிடைத்தது.

அவர் பற்றி அப்பாவின் தலைமுறையினர் பகிர்ந்துகொண்ட நினைவுகளும், அவரது ஆளுமை குறித்த வர்ணனைகளும் அக்காலத்தில் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

வியப்படையவைக்கும் துணிச்சலும் சொல்லாளுமையும் முட்டிமோதிப்பொங்கும் வாழ்க்கைமுறையும் கொண்ட அவர், யாராவது "திருகோணமலை", "திருமலை' என்று ஊர்ப்பெயரை உச்சரித்தால் கடும் சீற்றம் கொள்வாரெனவும் பெருங்கோபத்தோடு பேசுவார் எனவும் கேள்விப்பட்டேன்.

அந்தக்காலப்பகுதியில்தான் திரு-கோணமலைக்கு நடுவில் "க்" வரவேண்டுமா என்பதுபற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

ஏ எல் முடித்த கையோடு கழகப்புலவர் என்று அடைமொழியால் இனங்காட்டப்படும் பெ. பொ. சிவசேகரம் அவர்களது கட்டுரை ஒன்று படிக்கக்கிடைத்தது. அது திருக்கோணமலை என்ற பெயர்வரக் காரணங்களாக எவை இருக்க முடியும் என ஆராய்ந்தது.

ஏற்கனவே சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்த இந்த விசயம் சின்ன ஆய்வு ஒன்றைக்கோரலாயிற்று.

முதலில் இந்த ஊரின் பெயர் எப்படி வந்திருக்க முடியும் என்று அறிவது அவசியமாகப்பட்டது. இதுதான் பெயர்க்காரணம் என்று அறுதியிட்டு கூற முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஊகம்.

சில காரணங்களை வரிசைப்படுத்தலாம்.



பெயர்க்காரணம் 1:

"திரிகோணமலை" என்று பெயர் இருந்திருக்கலாம். மூன்று புறம் மலை அப்படி ஏதாவது காரணம்.

பெயர்க்காரணம் 2:

கிழக்குத்திசையை குணதிசை என்று சொல்வர். "குணக்கு மலை" மருவி குணமலையாகிக் கோணமலையாகியிருக்கலாம்.
பிறகு கோவில், சைவம் வழியே "திரு" வந்து சேர்ந்திருக்கலாம்.

தமிழகத்திலும் இலங்கையிலும் நிறைய ஊர்ப்பேர்களில் சைவம் வந்து "திரு" வை ஒட்டியது.

பெயர்க்காரணம் 3:

"கோகர்ணம்" என்றொரு ஆதிப்பெயர் இவ்வூருக்கு உண்டு. அது திரு கோகர்ணம் ஆகி பின் மருவியிருக்கலாம்.

இன்னும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இவற்றில் தெளிவாக ஒரு விசயம் புலப்படுகிறது. "திரு" பிறகுதான் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வூர் புகழ்பெற்ற , பாடல் பெற்ற சிவத்தலம் ஒன்றைக்கொண்டிருக்கிறது.

சம்பந்தர் வேறு "திருக்கோணமாமலை அமர்ந்தாரே" என்று பாடிவைத்த்ருக்கிறார்.

அருணகிரி நாதர் இப்படி பாடிவைத்திருக்கிறார்: (அவர் பாடியது இந்தத் திருக்கோணமலையைத்தான் என்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் என்னால் தரமுடியாது ;-))

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே


"திரு" ஒட்டப்பட்ட ஏனைய ஊர்ப்பேர்களைக் கவனிக்கலாம் என்று தோன்றியது.


திரு + ஆனைக்கா = திருவானைக்கா
திரு + கேதீச்சரம் = திருக்கேதீச்சரம்
திரு + கைலாயம் = திருக்கைலாயம்
திரு + சிறு + அம்பலம் = திருச்சிற்றம்பலம்

திரு ஒட்டப்பட்ட ஊர்களிலெல்லாம் இந்த "திரு" தமிழ்ப்புணர்ச்சி விதிகளின் படித்தான் ஒட்டியிருக்கிறது.

உயிரெழுத்தொன்று மெய்யோடு புணருமெனில் வருமெய் மிகும் என்பது இலக்கணம்.

தெரு + கோடி = தெருக்கோடி என்பது நல்ல எடுத்துக்காட்டு.


ஈழத்தின் வடக்கு கிழகுப்பிரதேசங்களில் பல ஊர்ப்பெயர்கள் இவ்வாறு புணர்ச்சி விதிகளின் படித்தான் அமைகின்றன.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கூனித்தீவு என்று...

புணர்ச்சி விதிகளின்படி "க்" மிகுந்து "திருக்கோணமலை" என்றே அமையவேண்டும் என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே படுகிறது.


சரி, இலக்கணங்களும் விதிகளும் இருந்தாலே அதற்கு மாறான மக்களின் நடைமுறை ஒன்று இருக்க்கக்கூடும் என்ற சந்தேகம் நமக்கெல்லாம் வந்தாகவேண்டுமல்லவா?

மக்கள் எப்படி இந்த ஊரை அழைத்திருப்பார்கள் என்று தேடலாம் என்று வெளிக்கிட்டேன்.


கொஞ்சம் மூத்த தலைமுறை இவ்வூரை "திருக்கணாமலை" என்றே சோல்வார்கள்.

அத்தோடு பிறமொழிக்காரரும் ஐரோப்பிய வல்வளைப்பாளரும் தமிழ் இலக்கணத்தைப்பார்த்தா ஊர்ப்பேரை ஊகித்து தமது கொச்சையில் வரைபடம் செய்திருக்க முடியும்?

ஆட்கள் என்னத்தை பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை பிறமொழிப்பேர்களில் ஊகிக்க முடியுமா என்று தேடலானேன்.

சிங்களம்: திருக்குணாமலய
ஆங்கிலம்: ட்ரின்கமலீ (trincomalee)

இந்த இரண்டு பெயர்களிலும் "க்" மிகுவதை தெளிவாகவே அவதானிக்க முடிகிறது.
அத்தோடு தமிழ் மக்கள் யாழ்பாணம் என்றோ மட்டகளப்பு என்றோ "தமிழ்த்தன்மை" இல்லாத வழக்கொன்றைக்கொண்டிருக்கவில்லை.



பிறகு ஏதோ ஒரு புள்ளியில் இந்தப்பெயர் தமிழ்த்தன்மைய இழந்து திருகோணமலை ஆகியிருக்க வேண்டும்.
தம்பலகாமம் தம்பலகமுவ ஆன காலமோ தெரியாது :-)

அடிக்கடி இப்படி ஒரு வடமொழிச்சொல் போன்று இதை உச்சரித்து ஆட்களுக்கு இதுவே பழகிப்போயிருக்கவும் வேண்டும்.

தவறான வடிவம் பழகிப்போக சரியானவடிவம் இப்போது உறுத்தலாக இருக்கிறது.

"திருசிற்றம்பலம்" என்று தொடர்ந்து சொல்லிவந்தால் "திருச்சிற்றம்பலம்" உறுத்தத்தொடங்கும்.

எனக்கென்னமோ திருக்கோணமலை என்று தமிழ்த்தன்மையோடு க் மிகச் சொல்வதே சரியெனப்படுகிறது. அப்படியே பயன்படுத்தியும் வர முயல்கிறேன்.

நண்பன் சத்தியன் இல்லை என்று அடம்பிடிக்கிறான். அவனிடம் எனது நம்பிக்கையை மறுக்கும் ஆதாரங்கள் உண்டு.

எஸ். சத்தியதேவன் பின்னூட்டமிட அழைக்கப்படுகிறார் ;-)



நூலகத்தில் செயற்றிட்டம் ஒன்றுக்கு திருக்கோணமலை என்று பெயர்வைக்கப்போக பத்மநாப ஐயர் விளக்கம் கேட்டு எழுதியதில்தான் இந்த பிரச்சினை இப்படி அலுவலகத்திலிருந்து வலைப்பதிவு எழுதவேண்டிய படி அருட்டலுக்குள்ளானது.

ஐயர் அனுமதித்தால் அவரது மின்னஞ்சலை இங்கே பின்னூட்டமாக இடுகிறேன்.


பகிடி என்ன என்றால், எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என் கருத்தை மதித்து, சாதாரண உரையாடல்களிலும் மின்னஞ்சல்களிலும் கூட "திருக்கோணமலைக்கு போறியா?" "திருக்கோணமலையால வந்தாச்சா" என்று எழுதுவார். எனக்கே அந்தரமாக இருக்கும். நான் பஞ்சியில் "க்" போடாமல் திருகோணமலை என்றே எழுதியும் பேசியும் விடுவதுண்டு.

இலகுவான பயன்பாடும், வினைத்திறன் மிக்க பயன்பாடுமே இலக்கணங்களைத்தோற்றுவிக்கும். ஆட்களுக்கு பொருந்தாத இலக்கணத்தை வைத்து என்ன செய்வது?

ஆனால் சம்பந்தமில்லாமல் இலக்கணப்பிழை விட்டுக்கொண்டிருக்கக்கூடாது என்ன?


எனக்கிருப்பதெல்லாம் இது தொடர்பாக ஒரே ஒரு கவலைதான் இப்போது.
கூகிளில் திருகோணமலை என்று தேடினால் திருக்கோணமலை என்று இருக்கும் தகவல்கள் வராமல் போய்விடக்கூடுமா என்பதே அது (மறுதலையாகவும்).

நீங்க என்ன நினைக்கிறீங்க?

10 பிற்சேர்க்கைகள்:

said...

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோகர்ணம் என்று ஒரு ஊர் உண்டு. ஆனால், அருகிலேயே மிகப் பெரிய மலைகள் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை.

said...

தகவலுக்கு நன்றி

said...

'திருக்கோணமலை' யே சரி.

said...

திருவை விடுத்து
கோணமலை என்றே அழைத்தால் என்ன?

said...

http://www.noolaham.net/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%2C_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_2007

said...

திருக்கோணமலை கட்டுரை நன்றாக இருக்கிறது. இது போன்ற பல கட்டுரைகளை உங்களிடமிருந்து நான் எதிர் பார்க்கிறேன். நிறையவும் நேரம் செலவு செய்து எழுதுபவர்களை இப்போது காண்பதே அரிது. நல்ல ஆய்வு நோக்கு உங்களிடம் உள்ளது. எழுதுங்கள்.

said...

திருக்கோணமலையில் பின்னால் இவ்வளவு இருப்பது இப்பதான் விளங்குது. படஆதாரங்களுடன் சுட்டியிருப்பது மிகவும் எளிதாக விளங்கிக்கொள்ள கூடியதா இருக்கு மயூரன்.

said...

ஞானசம்பந்தர் திருக்கோணமலை என்று பாடியிருப்பதாக எனது பதிவில் வரும் தகவல் பிழையானது. சம்பந்தர் எல்லாப்பாடல்களிலும் "கோணமாமலை அமர்ந்தாரே" என்றுதான் சொல்லி இருக்கிறார்.

பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு பாடல் முடிவிலும் நாம் "திருக்கோணமாமலை அமர்ந்தாரே" என்று பாடி முடிப்போம்.

அது நமது ஆசிரியர்கள் உருவாக்கி வைத்த வழக்கமே அன்றி பாடலில் அவ்வாறில்லை.

இப்பிழையைச் சுட்டிக்காட்டிய சத்தியனுக்கு நன்றிகள்.

ஆனால் அருணகிரிநாதர் திருப்புகழில் திருக்கொணாமலை என்று பயன்படுத்தி இருக்கிறார்.

பதிவு திருத்தப்பட்டுள்ளது.

said...

திருகோணமலையைத் திருக்கோணமலை ஆக்கியவர்கள்

தங்களுடைய பதிவும் அது கூறுகின்ற விடயங்களும் முக்கியமானது. எனினும் தங்கள் பதிவுகள் சுட்டிநிற்கும் அரசியலுக்கு அது பொருத்தமானதா என்பது விவாதிக்கவேண்டியது. தங்களுடைய வாதங்கள் நியாயமானது ஆனால் நான் இதை வெறுமனவே இலக்கண விதிகளுக்குள்ளும் ஒரு குறிப்பிட்ட அரசியலை மையப்படுத்துவதற்கும் அப்பால் வரலாற்றுணர்வோடு அணுகுதல் மிகப்பயனுடையது. இன்னும் சொல்லப்போனால் திருகோணமலையின் தொன்மையையும் அதில்வாழ்பவர்களின் வராலாற்று நியாயங்களையும் உள்ளடக்கியது.

ஒன்றைக்கவனியுங்கள் ‘திருக்கோணேஸ்வரம்’ என்றுதான் பிரதான சிவன்கோயிலை எல்லோரும் அழைக்கிறார்கள் எழுதுகிறார்கள். யாரும் ‘திருகோணேஸ்வரம்’என்று அழைப்பதில்லை. ஆனால் நகரை “திருகொணமலை” என்றுதான் பெரும்பாண்மையோர்(90வீதம்) பயன்படுத்தகிறார்கள். இது தொன்று தொட்டுவரும் மரபு என்பதை “நிலாவெளிக் கல்வெட்டு” தெளிவாகக் குறித்துள்ளது. இது இலக்கணப்படி பிழையாயினும் இது பிறழ்வாக மரபில் பதிந்து விட்டது. இது அந்த ஊரின் தனித்தன்மையும்கூட இப்படியான வழக்குகள் தமிழில் உள்ளன தவிரவும் பெயர்களுக்கும் ஊர்ப்பெயர்களுக்கும் இலக்கணவிதிகள் மீறப்படும் என்று இலக்கண நூலார்களே கூறியுள்ளாதாகவும் அறியக்கிடைக்கிறது.

தொன்மையாக வழங்கிவரும் ஒரு பெயரை இலக்கணவிதிகளுக்கு ஏற்ப மாற்றுவது அதன் பெருமையைக் குறைப்பதுடன் அவ்வூரின் மரபான அறிஞர்களின் புலமையை சிறுமைப்படுத்தவதாகவும் அமையும். அத்துடன் அந்நகரில் வாழ்பவர்களை வந்தேறுகுடிகள் என்று சொல்வதற்கு வாய்ப்பாகவும் அமையலாம்.

‘திருக்கோணமலை’ பிரச்சினையை எழப்பியவர்களின் பின்னால் திருகொணமலைக்கு ஒரு சைவ அடையாளத்தை வழங்கவேண்டம் என்ற நோக்கம் தீவிரமாக இருக்கிறது இருந்திருக்கிறது என்பதை தாங்களும் மறுக்கமாட்டீர்கள். அவர்களுடைய மத அரசியல் நோக்கத்திற்காக மரபை மாற்றுவதை மானிடவியல் மற்றும் பண்பாட்டில் அக்கறையுள்ளவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆயினும் திருக்கோணமலையாளர்கள் திருகொணமலையின் முக்கிய ஆவணங்களில் ‘திருக்கோணமலை’ என்று சில காலங்களாக பதித்து விட்டனர். முன்பு குறிப்பிட்டபடி சைவ அடையாளத்துக்குகாக கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் திருக்கோணமலை என்பதை புகுத்தியள்ளார்கள். தாங்கள் குறி;ப்பிட்டபடி சம்பந்தர் தோவராத்தை பாடசாலையில் மட்டுமல்லாது முக்கிய ஆலயங்கிளலும் ‘திருக்கோணமலையமர்ந்தாரே’ என்று பாடச்சொல்லி வற்புறுத்தியதுடன் அதை வழமையாக்க பெருமுயற்சி எடு;த்தார்கள் எடுக்கிறார்கள்.

‘திருக்கோணமலையை’ வலிமையாக ஆதரித்த கலாபூசணம் கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் அவர்கள் தாம் பதிப்பித்த நூல்கள் வரலாற்று நூல்களில் திருக்கோமலையென்றே குறிப்பிட்டுள்ளார். இது தவறானது என்பது வராலாற்றுப்பெயரை திரிபுபடுத்தும் செயலுமாகும்

அண்மைய உதாரணம் அவரைப்பதிப்பாசிரியராக கொண்டு அவரது மறைவுக்குப்பின்னர் வெளிவந்த “திருக்கோணமலை புலவர் வே.அகிலேசப்பிள்ளை நூற்றிரட்டு” நூலையே இதற்கு ஆதாரமாக காட்டலாம்.

ஆக்கியோன் : புலவர் வே. அகிலேசப்பிள்ளை

விளக்கவுரை : பண்டிதர் இ.வடிவேல்

பதிப்பாசிரியர் : சித்தி அமரசிங்கம்

வெளியீடு : ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்
ஹம், ஜேர்மனி – செப்ரம்பர் 2007

ஆக்கியோர் விளக்கவுரை ஆசிரியர் பதிப்பாசியர் பெருமைகளை திருகோணமலை பற்றிய பிரக்ஞை உள்ளவர்கள் அறிவார்கள். (மயூரன் நீங்கள் என்னை அவர்கள் பற்றி அதிகமாகத் தெரிந்தவர் தேவைஏற்படின் இது தொடர்பில் நீங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் ) நூலின் பெயர் தொடக்கம் அணிந்துரை, பதிப்புரையின் எல்லா இடங்களிலும் ‘திருக்கோணமலை’ பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் புலவர் வே அகிலேசப்பிள்ளையின் வரலாற்றை எழுதும் பண்டிதர் இ.வடிவேல் ‘திருகோணமலையில் சைவாசாரமுடைய’ என்று தொடக்க வரிகளில் குறிப்பிடகிறார்.

பிறகு ‘அகஸ்தியர் ஸ்தாபனம்’ பற்றி கூறவரும்போதும் ‘திருகொணமலை’ என்று குறிப்பிடுகிறார்.தவிர வே. அகிலேசப்பிள்ளையின் நூல்கள் பற்றி குறிப்பிடுகையில்

01. திருக்கோணநாதர் பதிகம்
02. திருகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி பத்துபதிகம்
03. ……………….
04. திருகோணமலை வில்லூன்றி கந்தசாமிப் பதிகம்
05. …………..
06. திருகோணமலை விசாலாட்சியம்மன் விருத்தம்
07. ……………….
08. திருகோணமலை சிவகாமியம்மன் கும்மி …………


என்றுதான குறிப்பிடுகிறார். ஆனால் வரலாற்று குறிப்பின் முடிவுவரியில் ‘திருக்கோணமலை’ எனக் குறிப்பிடப்படப்படவதுடன் ஒப்பத்தின் திகதியின் மேல் ‘திருக்கோணமலை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது திருக்கோணமலைக்காரர்களின் கைங்கரியம் என்பது சொல்hமலே விளங்கும்.

தவிர பொருளடக்கத்தி;ல் ‘திருகோணமலை’ என முன்பு குறிப்பிட்தெல்லாம் ‘திருக்கோணமலை’ என குறிக்கப்பட்டுள்ளது. அதிலும் ‘திருக்கோண நாதர் பதிகம்’ ‘திருக்கோணமலை நாயகர் பதிகம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பத்து பதிகங்களில் 8பதிகங்களில் ‘திருகோணை’ எனவும் 3வது பதிகத்தில் ‘திருக்கோணை” எனவும் 10வது பாட்டில் ‘திரிகோணை’ எனவும் குறிப்பிட்ப்பட்டுள்ளது.
தவிர விளக்கவுரை குறிப்புரைகளில் 5 இடங்களில் ‘திருகோணமலை’ என்றும்2 இடங்களில் ‘திருக்கோணமலை’ எனவும் 2 இடங்களில் ‘திரிகோணமலை’ எனவும் உள்ளது. இறுதியில் ‘கோணைநாயகர் பதிகமும் விளக்கவுரையும் முற்றிற்றது’ எனக் குறிப்பிடப்படுவதுடன் நூலின் எல்லா இடங்களிலும் ஒப்பத்தில் ‘திருக்கோணமலை’ எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

****************************************************

‘திருகோணமலை விசாலாட்சியம்மை பெரங்கழில் விருத்தத்தில்’ முதற்பிரதியில் (1928) முன்பக்கத்தில் 3 இடங்களில் ‘திருகோணமலை’ என்று குறிக்கப்பட்டுள்ளது.ஆனால் முதலாவது பாட்டின் விளக்கவுரை ‘திருக்கோணமலை’ என்று தொடங்குகிறது.

****************************************************

அதே மாhதிரி ‘நரேந்திர சிங்கள் வசந்தன் சிந்து; முதற்பிரதியில் (1908) முற்பக்கத்தில் ‘திருகோணமலை’ என்றே உள்ளது. ஆனால் இப்பதிக வராலற்றில் ‘திருக்கோணமலை’ என்று உள்ளது. ஓப்பத்திலும் வழமைபோல ‘திருக்கோணமலை’ என்று உள்ளது.

****************************************************

பாருங்கள் நூலாசியர் சிறந்த தமிழறிஞர் அவர் ‘திருகோணமலை’ என்று குறிப்பிடுவது மரபின் நிமித்தமே

விளக்கவுரை ஆசிரியர் ஒரு பண்டிதர் அவர் ‘திருகோணமலை’ ‘திருக்கோணமலை’ என்று மாறிமாறிப் பயன்படுத்தமாட்டார். அவர் ‘திருகோணமலை’ என்றுதான் அநேக இடங்களில் பயன்படுத்துகிறார். ஏனைய ‘திருக்கோணமலை’ எல்லாம்சைவ அடையாளத்தை முன்னிறுத்த முயன்றவர்கள் திரத்தியது அல்லது திரிபு படுத்தியது. ‘திருகோணமலை’ என்பதுதான் மரபு அதைவிடுத்து சைவத்துவேசிகளின் ‘திருக்கோணமலை’யைப் பயன்படுத்துவது வரலாற்றுத்தவறாகும். துவிர அவர்கள் தங்கள் வாதத்திற்கு தவறான பெயரைப்பதிந்து வராலற்றுப்பெயரை திரிபுபடுத்துவதை நிறுத்தச்சொல்ல வேண்டும். ஒரு நகரம் சைவ அடையாளம் அவர்களுக்கு சைவ அடையாளம் அல்ல ‘இந்து’ அடையாளம் பூச முனைவோருக்கு நாம் உதவிசெய்யவது சரியானதல்ல

தோழமையுடன்
எஸ்.சத்யனதேவன்

said...

அன்புடன் மயூரனுக்கு,

அண்மைக் காலமாக தங்களது "ம்" எனும் வலைப்பின்னலை பார்வையிடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது, அதில் உங்களது ஆக்கங்கள் மிகவும் அருமையாக இருந்தன. நானும் உங்களது ஊராகிய திருக்கோணமலையை வசிப்பிடமாக கொண்டபடியாலும், உங்களுடன் கல்வி பயின்ற சக மாணவி என்ற படியாலும் உங்களை எனக்கு முன்பே நன்றாக தெரிந்திருந்தது. மேலும் நீங்கள் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் எங்களது உயர்தர வகுப்பொன்றின் மீட்டல் வகுப்பொன்று இடம் பெற்ற போது நீங்கள் பாடிய பாடல் இன்னும் எனக்கு நன்றகாவே ஞாபகம் இருக்கிறது. எனினும் தங்களுக்கு என்னை அவ்வளவாக தெரிந்த்திருக்க நியாயமில்லை என்றே நினைக்கிறேன், எனினும் தங்களது எழுத்தாற்றல் எனக்கு பெரும் வியப்பளிக்கிறது, தங்களது சமுதாய அக்கறை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களது இத்தகைய பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்............உங்களை போன்றவர்கள் தான் எங்கள் நாட்டுக்கு தேவை. அதுவே இத் தழிழ் பெண்ணின் ஆசை.

அன்புடன்,
நண்பி