(Bharti) Airtel புரட்சி! இலங்கையில்.
இப்பதிவினைக் குரல் வடிவில் கேளுங்கள்:
புலிவருது (மன்னிக்கவும் சிங்கம் வருது) கணக்காக கடந்த ஓராண்டுகாலமாக, எப்ப இங்க Airtel வருது என்பதே இளந்தலைமுறையின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாய் போய்விட்டது.
Tower போட்டுட்டாங்களாம், வேலைக்கு ஆளெடுக்கிறாங்களாம், அலுவலகங்கள் திறந்திட்டாங்களாம், டயலொக் ஓட பேச்சு வார்த்தையாம் எண்டு நாளுக்கு நாள் சூடான செய்திகள் வேறு..
அடுத்தமாதம் அடுத்தமாதம் என்று எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது Airtel வருகை.
தற்போது சடுதியாக இங்குள்ள மற்ற செல்பேசிச்சேவை வழங்கும் நிறுவனங்கள் எல்லாம் அதிரடிக் கட்டணக் குறைப்புக்களைச் செய்ய வெளிக்கிட்டிருப்பது வேறு Airtel பீதியை இன்னும் மோசமாக்குகிறது .
கட்டணங்களை அநியாயத்துக்கு அதிகரித்து வைத்திருந்த
Airtel வந்தால் சமாளிக்கிறதுக்குத்தான் இப்பவே கட்டணங்களைக்குறைத்து தயாராகிறாங்களாக்கும் எண்டது அவர்களது முடிவு.
இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் சரிகிறது..
அன்றாடம் ஒருவேளைச்சாப்பாட்டை வாங்கும் சக்தியை பெரும்பாலான மக்கள் இழந்து வருகிறார்கள்..
இலங்கைச் சனத்தொகை முழுமையும் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, சீனி விலை ஏறுகிறது .
பெரும்பகுதி பயன்படுத்தும் பெற்றோலும் விலை ஏறுகிறது.
அநேகமாக அனைவரும் பயன்படுத்தும் மின்சாரக்கட்டணம் ஏறுகிறது.
நகரங்கள் எல்லாமே நம்பியிருக்கும் குழாய் நீரும் ஏறுகிறது.
ஆனால் நாட்டில் மிகச்சிறுபான்மையானவர்களே பயன்படுத்தும் மின்னணுக் கருவிகளும், செல்பேசியும், பொழுதுபோக்குப்பண்டங்களும் மட்டும் ஏன் விலைகுறைந்துகொண்டே வருகிறது?
ஏன்?
அரிசி விலையைக்குறைப்பதைவிட, செல்பேசிக்கட்டணத்தைக்குறைத்து அதன் பாவனையைப் பரவலாக்குவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமா?
அல்லது அரிசியை உற்பத்தி செய்வதை விட உயர் தொழிநுட்பம் பயன்படுத்தப்படும் மின்னணுக்கருவிகளின் உற்பத்திச்செலவு குறைவானதா?
யார்காதில் யார் பூச்சுற்றுகிறார்கள்?
இதற்குப்பதிலைத்தான் எங்கள் தலைமுறை தேடக்காணோம்.
சடாகோபனும் அவரது துணைவியாரும் மேடையேற்றிய உலகமயமாக்கல் குறித்த நடன ஆற்றுகையில் ஒரு காட்சி வரும், பெரிய செல்பேசி ஒன்றை பூப்போட்டு பூசைகாட்டி கண்ணில் ஒற்றி வழிபட்டு "நாக்கியா சாமிக்கு அரோஹரா!" ஊர்வலாமாய் எல்லோரும் தூக்கிக்கொண்டு திரிவார்கள்.
எங்கும் Airtel, எதிலும் Airtel..
அதுசரி, இந்த Airtel என்றால் என்ன?
இந்தக் கம்பனி மீது இப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆர்வமும் எப்படி இலங்கையர்க்கு வந்தது?
ஒருகாலத்தில் இலங்கையில் சீரிய சேவை வழங்கி பின் மூடப்பட்ட கம்பனியா இது?
அல்லது இலங்கை மக்கள் விசுவாசிக்கும் பெருவணிகரின் அடுத்த கம்பனியா இது?
அல்லது மில்க்வைற் முதலாளி Airtel நடத்தப்போறாரா?
யார் இந்த Airtel?
இலங்கையில் முன்பின் யாவாரம் செய்திராத இந்த கம்பனி, இலங்கையின் மற்றக்கம்பனிகளை அச்சுறுத்தவும், மக்களிடம் இவ்வளவு எதிர்பார்ப்பு அலையை தோற்றுவிக்கவும் நிச்சய வெற்றி ஒன்றைப்பெறும் வாய்ப்பினைப்பெற்றுக்கொள்ளவும் கூடியதாக ஆனது எப்படி?
Airtel இன் அந்த மூலதனம் எது?
இந்தக் கேள்விக்கான பதிலைத்தேடும்போது இந்தியாவிலுள்ள பெரிய முதலாளிகளின் வணிக நலனோடு தொடர்புபட்ட இந்திய ஆளும் வர்க்கத்தின் இலங்கை மீதான ஊடக, கலாசாரப் படையெடுப்பினைப் புரிந்துகொள்ள முடியும்.
சிங்கள மக்கள் இந்தி, பொலிவூட் மாய்மாலங்களுக்கூடாகவும், தமிழ் முஸ்லிம் மக்கள் தென்னக சினிமா, தொலைக்காட்சிகளின் ஏமாற்றுக்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டு இந்திய கலாசாரத்திணிப்புக்கு மிக இலகுவாக ஆட்பட்டுவிடுகிறார்கள்.
பொலிவூட் ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும் எல்லாமே மனிதர்களை இலகுவாக சுண்டியிழுக்கும் வணிக உத்திகளை மிகச்சீரான முறையில் பயன்படுத்துகின்றன.
பாலியல் தேவைகள் வன்முறையோடு ஒடுக்கப்பட்டு நோய்க்கூறுகளுடன் நிற்கும் மக்கள் கூட்டத்திடம், போரழிவுகளால், போர்ப் பேரங்களால் நாளும் சுரண்டப்படும் மக்களிடம், மலினமான பாலியல் , மட்ட அரசியல் சரக்குகளை, வெற்று விளையாட்டுச்சரக்குகளைக் கடைவிரித்தபடி இந்த ஊடகங்கள் ஆக்கிரமிப்புப் போர் புரிகின்றன.
இந்த தொலைக்காட்சி ஊடகங்கள் இப்படையெடுப்பைச்செய்வதற்கு பணம் கொடுப்பவர்கள்யார்? இத்தகைய பகட்டு நிகழ்ச்சிகளையும் சினிமா வரைகலை மாய்மாலங்களையும் செய்யச் செலவழியும் காசினை வழங்குபவர்கள் யார்?
இந்தியப் பெரு முதலாளிகளே.
அவர்களுக்கு என்ன லாபம்?
அரை மணிநேர நிகழ்ச்சியைப் பார்க்க உட்கார்ந்து, அதில் 20 நிமிடங்களை விளம்பரம் பார்த்தே தொலைக்கிறோமே... எங்களுடைய நேரம் தான் அவர்களுடைய லாபம்.
எமது நேரத்தைச்சுரண்டி அதனுள் தமது விளம்பரங்களை வலிந்து திணித்து எமது சிந்தனையை அடைத்துக்கொள்ள முடிவதே அந்த முதலாளிகளின் பெரு வெற்றி.
அவர்களது ஊடகப்பொறிகளுக்குள் மாட்டுப்பட்டு , நேரத்தையும் காவுகொடுத்து மூளைக்குள்ளும் அவர்களுக்கு வசதியான போதனைகளை தூக்கிச்சுமந்துகொண்டு அவர்கள் ஆட்டிவைத்த பொம்மைகளாக நாம் அலைகிறோம்.
அவர்கள் திரும்பத்திரும்ப ஆயிரம் முறை போதிப்பதை அப்படியே குடித்து உள்வாங்கி பேச்சிலும் எழுத்திலும் நினைவிலும் கனவிலும் ஒழுகவிட்டுத்திரிகிறோம்.
ஊடகங்கள் வழியான இந்தச் சிந்தனை ஆக்கிரமிப்பு, போதனை எவ்வளவு வெற்றிகரமான யாவார உத்தி என்பதைத்தான், இலங்கையின் தற்போதைய Airtel காய்ச்சல் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறது.
முதலாளிகளின் ஏவற் கூலிகளாக வலம் வரும் ஏ ஆர் ரஹ்மானின், இன்னும் பல கலைஞர்களின் உழைப்பு எல்லாவற்றையும் அழகாய் தொகுத்து கோடிக்கணக்காய் காசைக்கொட்டி திணி திணி என்று எம்மீது திணித்த திணிப்பின் பெறுபேறு, கோடிகோடியாய் விளைச்சல் கொடுக்கப்போகிறது.

கண்ணால் பார்க்கும்படி மிகத்தெளிவாக இந்த ஊடக/கலாசார ஆக்கிரமிப்பின் முற்றுமுழுதான வணிகமுகத்தை விளங்கப்படுத்தியதற்காக, இந்த Airtel காய்ச்சலுக்கு நன்றிகூடச்சொல்லலாம்.
தெற்காசியப்பிராந்தியத்தின் ஏகாதிபத்திய சக்தியான இந்திய ஆளும் வர்க்கத்தின் இலாபப்பெருக்க உத்தியே இவ்வளவென்றால், அந்த இந்தியாவிலேகூட தனது கலாசார ஆதிக்கத்தை நிலைநிறுத்தி சுரண்டிக்கொழுக்கும் உலக ஏகாதிபத்தியங்களின் உத்திகளும் முறைவழிகளும் எவ்வளவு நுணுக்கமாயிருக்கும்? எவ்வளவு கோரமாயிருக்கும்?
கலாசாரக் கலப்பாம், சிறுபான்மைக் கலாசாரங்கள் பொதுப்போக்குக்கு (mainstream) கொண்டுவரப்படுகின்றனவாம்.
ஐயோ ஐய்ய்ய்ய்ய்யோ...



13 பிற்சேர்க்கைகள்:
பொருத்தமான நேரமொன்றில் வந்துள்ளது இந்தக் கட்டுரை. இலங்கையில் இந்தியாவின் வணிக நலன்கள் பற்றி பலர் கண்டுகொள்வதில்லை. அது தமது அரசியல் நிலைப்பாட்டை பாதிக்கும் என நினைக்கின்றதால், சிலர் தெரிந்தும் தெரியாதது போல இருக்கின்றனர். இலங்கையின் நிலைமையை உங்கள் கட்டுரைகள் மூலம் துல்லியமாக அறிந்து கொள்ள முடிகின்றது.
மயூரன்,வணக்கம்!
தங்களின் இக்கட்டுரை இந்த வர்த்தகச் சமுதாயத்தின் ஒரு முனையைக்காட்டவிரும்புகிறது.
வரவேற்கத்தக்கது.
இனிவரும் நாட்களில் உலகத்துள் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகும்.அங்கே, நடுத்தெருவுக்கு நடுத்தரவர்க்கம் வந்துவிடும்.அத்தகைய வரவுக்குக் காரணமான பொருளாதார நெருக்கடி பலாத்தகாரமான சர்வதிகாரப் போக்குடைய அரச நடவடிக்கைகளை முடுக்கிவிடும்.இங்கே,ஜேர்மனியப் பங்குச் சந்தை இன்று பதினொரு வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.டக்ஸ்சினது வீழ்ச்சியில் பல தொழிற்சாலைகள் பலகோடி யூரோக்களை இழந்துள்ளன.இது, உலகம் பூராகவும் பெரிய நெருக்கடியை உருவாக்கும்.இலங்கைபோன்ற நாடுகள் 1975 ஆம் ஆண்டுகளில் பாணுக்குக் கியூவரிசையில் நின்றதைவிடப் பெரும்பாடு பட்டுவிடப்போகின்றது.
இனிவரும் காலம் அபாயமிக்கதானது.
மனித நடத்தையில் பெரும் மாற்றங்கள்வரும்.
உப்புக்கான போராட்டம் இது.இங்கே,முதலாளித்துவம் சர்வதிகாரத்தால் உயிர்வாழ முற்படும்.இது, மனிதவுரிமைகளைப் பறிக்கும்-தொழிலாளர்களைப் பலாத்தகாரப்படுத்தி அடிமைச் சேவகத்துக்குத் தள்ளிவிட முனையும்.இதைத் தேசியத்தின் பெயரால் செய்து முடிக்கும்.
இது நடக்கப் போகிறது.
இந்தப்பொருளாதார நெருக்கடி 1930 ஆம் ஆண்டைவிட மிகக் பெரிய குழறபடிகளைச் செய்யும்.
யூரோ நொருங்கும்.
ஜப்பானின் பெரும் எலக்றோனிக் நிறுவனங்கள் உயிர்வாழத் தென்னாசிய நாடுகளுக்கு இன்னும் புதிய தெரிவோடு வருவார்கள்.
உலகம் இராணுவவாத்தால் இத்தகைய நெருக்கடிக்காக வளமுடைய(கனிவளம்)நாடுகளை மீளத்தமது கட்டுப்பாடுகளுக்குள்கொணர்வதற்கான முயற்சியில் இறங்கும்.இங்கே,சீனாவின் கை மேலோங்கும்.இருஷ்சியா தவிர்க்கமுடியாது அடுத்தசுற்றுப் போருக்குள் மூழ்கும்.அது, பெரும்பாலும் கிழக்கைரோப்பிய நாடுகளில் மையங்கொள்ளும்.ஐரோப்பா"பழைய ஐரோப்பா"நிலைக்கு மாறும்.அமெரிக்கா சிதலமடைந்து அணுவாயுதப் போரை நாட்டமுடன் நடாத்த முனையும்.அமெரிக்காவில் எவன் ஜனாதிபதியானாலும் இதுதாம் கதை!
கலையரசன்,
நீங்கள் சொல்வது மிக முக்கியமான ஒன்று.
தற்போதைய அரசியல் எழுச்சிகள் மிக்க சூழலில், ஈழப்பிரசினை தொடர்பான இந்திய-தமிழக மக்களின் தார்மீக ஆதரவொன்று ஈழ மக்களுக்கு கிடைக்கவாரம்பிக்கும் நேரத்தில், அந்த ஆதரவு அலையை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பினை புரட்சிகர அரசியல் சக்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கூட்டத்தோடு கோவிந்தாபோடும் ஆதரவினை சரியான முறையில் ஆற்றுப்படுத்தவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
எந்த இந்திய மக்கள் இன்று ஆதரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களோ அதே இந்தியமக்களின் பெயராலேயே ஈழப்பிரச்சினை சின்னாபின்னமாக்கப்பட்டு இந்த கொடும் சூழலுக்குள் தள்ளப்பட்டது.
இது இந்திய மக்களின் தோள்களில் ஏறிநிற்கும் அதிகார வர்க்கத்தின் கட்டமைப்புக்களின் சொந்த நலன்கள் சார்ந்த விஷயம்.
மக்கள் ஆதரவு, இந்த அதிகார வர்க்கத்தினை அம்பலப்படுத்தித் தனிமைப்படச்செய்வதன் மூலமே சக்திவாய்ந்த அரசியல் பங்கினை ஆற்ற முடியும்.
என்னுடைய கடந்த பதிவிலும் இந்திய அதிகார வர்க்க நலன்கள் தோலுரிக்கப்படவேண்டிய காலம் இது என்பதை குறிப்பிட்டிருந்தேன்.
இலங்கைத்தீவின் சிங்கள மக்களை ஏய்த்து ஏறி நின்று தமது நலன்களுக்காக போரை ஊதி ஊதி குளிர்காயும் சக்திகளும், இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளோடும், உலக ஏகாதிபத்தியங்களோடும் கைகோர்த்துக்கொண்டு தமது வர்க்க நலன்களை பேணுவதற்காக மக்களைப்பலிகடாக்களாக்கும் இந்திய அதிகார வர்க்கமும் தனிமைப்படுத்தப்படவேண்டிய தருணம் இது.
இப்படித் தனிமைப்படுத்துவதன் ஊடாகத்தான் நிரந்தர தீர்வினை, அமைதியை நோக்கிய திசைவழியே மக்கள் வரலாற்றினை வழி நடத்த முடியும்.
தமிழ் நாட்டில் சுடரும் இந்தப்பொறி, சரியான எதிரியைத் தனிமைப்படுத்துவதை நோக்கி ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்.
நன்றி சிறீரங்கன்.
தற்போதைய நிதி நெருக்கடி குறித்த விடயங்களை ஆர்வமாகப் படித்து வருகிறேன். கருத்தெதுவும் சொல்லுமளவுக்க்கு இன்னமும் ஆழம் போதாது.
தங்களது கருத்துக்கள் தொடர்பாக சிந்திக்கிறேன்.
இந்தப்பதிவினையும் படியுங்கள்
Bharti Airtel today said it expects to roll out services in Sri Lanka by December as inter-connection issues with local telecom firms are expected to be sorted out.
"We find the (Sri Lankan) regulator extremely supportive," Bharti Airtel Chief Executive Officer Manoj Kohli told reporters on the sidelines of the South Asian Telecommunication Regulators' Council conference here.
"We are on track to launch the services .... Inter-connection issues have been nearly sorted out and the roll out is likely by December 2008," he said.
The Indian telecom major was facing problem for getting interconnection from the local operators in the island country.
Airtel had said that the incumbent operators in Lanka are not giving interconnections to the company.
Bharti Airtel Lanka Private Ltd, a subsidiary of Bharti Airtel Ltd, had already announced plans to launch 2G and 3G services in Sri Lanka under the same brand Airtel.
It had signed a $150-million deal with China's Huawei Technologies to set up a mobile phone network in Sri Lanka.
அப்படியென்றால் ஒரு வேளை இந்தியாவில் இந்த சிங்கத்துக்கு மன்னிக்கவும் Airtel லுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்
வணிககுறியிசையமைத்திருக்காமல் விட்டால் இந்த பாழாய்ப்போன Airtel க்கு இந்தியாவில் முதன்மையிடம்
கிடைத்திருக்காமல் போயிருக்குமா? ஒரு வேளை அரசவுடமையான BSNL ஏ.ஆர்.ரஹ்மானை தனது வணிககுறியிசை
யை உருவாக்க அழைத்திருந்தால், அதன் மூலமாக இந்தியாவில் தனது இருப்பை வியாபித்து இலங்கையிலும் தனது
இறக்கையை விரித்திருக்குமா? இல்லையென்றால் ஏ.ஆர்.ரஹ்மான் தான் ஒரு நிறுவனத்தின் வெற்றி ஆட்டையை
நிர்ணயிக்கிறாரா? இதற்கு 'ஆம்' என்ற பதில் கிடைக்கப்பெற்றால் இந்தியாவில் நலிந்து போன நிறுவனங்களுக்கு
ஏ.ஆர்.ரஹ்மானை வணிககுறியிசையை பணித்தால் இந்தியாவில் முதன்மையிடமும் அடுத்த ஆட்டையை
இலங்கையிலும் போடலாமா? ஒரு நிறுவனத்தின் வெற்றியை தீர்மானிப்பது அதன் தரமான சேவையும் அது
கொண்டுள்ள விலையும் தான். தரத்தை எது கொண்டுயிருந்தாலும் விளம்பரம் இரண்டாம் பட்சமே. அதன் தரத்தை
உணர்ந்த மக்களே முதன்மை விளம்பரமூலம்.
இந்தியாவின் குப்பைகூடையாகிவரும் இலங்கையின் நிலையில் இதுவும் ஒரு குப்பைதான். திருகோணமலை எண்ணைக்குதத்தில் தொடங்கி எல்.ஐ.சி வரைக்கும் உறிஞ்சத்தெடங்கிவிட்டன. போரினால் அழிந்துவரும் பொருளாதாரத்தில் குளிர்காயும் இந்திய ஆளும் வர்க்கம் தனது சந்தையை விரிவாக்காமல் இலங்கைப்பொருளாதாரத்தை சப்பி துப்பத்தான் போகிறது. காத்திருங்கள்
மயூரன், நான் அறிந்தவரை டயலொக் மகாராஜாவிடமிருந்து மலேசியக் கம்பனி ஒன்றுக்குக் கைமாறிக் கனகாலம் ஆகுது... (http://en.wikipedia.org/wiki/Dialog_GSM) அதனுடைய உயருத்தியோகத்தர்கள் ஊடகங்களுக்கு வழங்குகிற நேர்காணல்களில் இலங்கைக் கொடியும் மலேசியக் கொடியும் பின்னணியில் இருக்கக்காணலாம்...
நலதொரு கருத்தாழமுள்ள பதிவு.. வினாக்களை மட்டும் தான் எம்மால் எழுப்ப முடியும்.. விடைகள் தெரிந்தாலும் சொல்லிப் பயன் ஏதும் இல்லை.. உங்கள் சமூகப் பொறுப்புணர்வும் தெரிகிறது..
நன்றி லோஷன்.
இங்குள்ள செல்வாக்குமிக்க ஊடகங்களோடு நெருக்கமாக பணிபுரிந்துவருபர் என்ற வகையில் என்னை விடவும் இந்த விடயங்களின் பின்னணிகள், அடியாழங்கள் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும்.
தற்போது இப்பதிவின் குரல்வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.
காலத்துக்கேற்ற அவசிய பதிவு.
Post a Comment