ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - பரிந்துரைக்கிறேன் பயமுறுத்துகிறேன்.
ஏறத்தாழ ஒராண்டு தள்ளிப்போட்டுக்கொண்டு வந்துவிட்ட பதிவு இது.
கள் வாசகர் வட்டங்களுக்கு இந்நூலைப் படிக்கக்குடுக்குமுன் சிறு குறிப்பொன்றையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பியிருந்தேன்.
இப்போது ஷசீவனுக்கு நூல்தர மறுத்ததற்கு இதைக்காரணமாகச் சொல்லிவிட்டபிறகு இனியும் தள்ளிப்போடும் எண்ணமில்லை. :-)
அவசர வாசிப்புக்கான குறிப்புக்கள்:
* இந்நூல் மிக எளிய முறையில் தமிழில் கதைசொல்லும்பாங்கில் அமெரிக்காவின் கேவலமான அரசியல் பொருளாதார உத்திகளை விளக்கிச்செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது.
* இதே விஷயத்தை சொல்லும் ஏராளம் புத்தகங்கள் உலகில் கிடைத்தாலும், தமிழில் அதுவும் எளிமையாக, மிக அண்மைய சம்பவங்களையும் சேர்த்துக்கொண்டு சொல்வதால் இந்தப்புத்தகம் கவனம் பெறுகிறது.
* ஈக்குவடோர், பனாமா, இந்தோனேஷியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா விரித்த பொருளாதாரச் சிலந்தி வலைப்பின்னலில் முக்கிய பாத்திரங்கள் ஏற்றுப் பங்கெடுத்தவர் என்ற வகையில் ஆசிரியர் தனது சொந்த அனுபவங்களூடாகக் கதையைச்சொல்லும்போது, வெளியிலிருந்து வரும் விமர்சனத்தை விடவும் தாக்கம் மிகுந்ததாக இப்புத்தகம் அமைந்துவிடுகிறது.
* இப்புத்தகத்தை எழுதியவர் கம்யூனிச எதிர்ப்பு நிலை நின்று ஒருவகை நன்மை தீமை, பாவபுண்ணியக் கண்ணோட்டத்தில் எழுதிப்போக முயன்றுள்ளார்.
* கம்யூனிச எதிர்ப்பு மனநிலை கொண்டவரால் இது எழுதப்பட்டாலும் இது முதலாளியத்தை விமர்சிக்கும் தன்மை, தகவல்கள் கவனிக்கத்தகுந்தவை.
* இன்று உலக, நாட்டு நடப்புக்களை அவதானிக்கும் ஒருவர், ஊடகங்கள் சொல்லும் விளக்கங்களுக்கு மேலதிகமான கூர்மையான பார்வையுடன் அவற்றை விளங்கிக்கொள்ளவும், ஒவ்வொரு நடப்புக்கும் பின்னால் பொதிந்திருக்கும் ஏகாதிபத்தியங்களின் கேவல அரசியல்களைக் கண்டுபிடிக்கவும் இப்புத்தகத்தைப்படிப்பது உதவக்கூடும்.
* இப்புத்தகத்துக்கு எதிரான வாதங்களை எவ்வாறு அமெரிக்க அதிகாரபீடம் முன்வைத்திருக்கிறது என்று தேடியபோதுதான் இப்ப்புத்தகத்தைச் சந்தேகப்பட நேர்ந்தது. அமெரிக்க அதிகாரபீடம் பெரிதாக பதிலளிக்க முயலவில்லை. சில மறுப்புக்களோடு நிறுத்திக்கொண்டுள்ளது.
* இப்புத்தகம் அமெரிக்காவின் bestseller ஆக இருக்கிறது. இந்த bestseller கலாசாரம் சந்தேகத்துக்குரியது.
* இப்புத்தகத்தை எழுதியவர் தன்னை மையப்படுத்தி ஒரு சிறு இயக்கம் வைத்துள்ளார். இணையத்தளமும் அதற்குண்டு. அவ்வப்போது செய்தி மடல்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்புகிறார்கள். அவர்களது போதனைகள் பெரும்பாலும் அடிப்படைப்பிரச்சினையான பொருளாதார அமைப்புப்பற்றிய ஆழ்ந்த பார்வையற்று வெறுமனே "நல்ல' அமெரிக்காவைக் கட்டியெழுப்பும் கனவாகவே அமைகின்றது. இவரது குழு சிறு மதபோதகக்குழுபோன்ற எண்ணத்தை என் மனதில் உருவாக்குகிறது.
* இப்புத்தகம் எதை எதிர்க்கிறதோ, அந்த ஏகாதிபத்தியம் தன்னை ஓர் எதிர்க்க முடியாத பூதமாகவும், தோற்கடிக்கப்படவே முடியாத பெரும் சக்தியாகவும் கட்டமைக்க இதே புத்தகத்தைப் பயன்படுத்தக்கூடும்.
* அதாவது, அமெரிக்கா எங்கும் எதற்கும் தன் பலம் மிக்க கேவலமான அரசியலைப் பிரயோகிக்கும். எனவே அமெரிக்காவை சிறு குழுக்களாக எதிர்தல் எல்லாம் சாத்தியமில்லை. அப்படியே நீங்கள் எதிர்த்தாலும் அமெரிக்கா அதைச்சுலபமாக அடக்கி ஒடுக்கிவிடும். எனவே செய்ய ஒன்றுமில்லை, எங்கள் வாழ்க்கைமுறைய சீர்படுத்தி, அமெரிக்காவிற்கான கண்டனத்தோடு அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருவதே நாம் செய்யச்சாத்தியமான ஒன்று என்ற மனநிலையை இப்புத்தகம் வாசகரிடம் தோற்றுவிக்கக்கூடும்.
* இவ்வாறான சந்தேகங்கள் இருப்பினும், வெகுமக்கள் ஊடகங்களால் பொய்யாக கட்டமைக்கப்படும் பிரசாரங்கள், விளக்கங்களுக்கு அடிமையாகியிருக்கும் வாசகர், தன்னைச்சுற்றி நடப்பவற்றின் பின்னணி பற்றிய ஓரளவு தெளிவான பார்வைபெற இப்புத்தகம் உதவும் என்பதால் அவர் இதனைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
* அமெரிக்க ஏகாதிபத்தியதின், முதலாளித்துவத்தின் உண்மை முகம் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை புதிய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த புத்தகத்தை பயன்படுத்தலாம். அதுவே இந்தப்புத்தகத்தின் சிறப்பு. ஆனால் இப்புத்தகத்தை அவதானத்துடன் அணுகும்படி வாசகர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.
* வெளியிட்ட விடியலுக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் நன்றி.
* இன்றைய சூழலில், இந்தியா ஈழத்தின்மிது நிகழ்த்திய இராஜதந்திர கொடூரங்களுக்குப் பின்னாலுள்ள இந்திய அதிகார வர்க்கத்தின் பொருளாதார நலன் குறித்து "உள்ளிருந்து" எழுதப்பட்ட இலகுதமிழ் ஆவணம் வருவது வரவேற்கத்தக்கது.
ஜான் பெர்க்கின்ஸ்
தமிழில்: இரா. முருகவேள்
விடியல் பதிப்பகம்
விலை ரூ 150
கிடைக்குமிடம்
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367
கள் வாசகர் வட்டத்துக்கான விரிவான குறிப்பினை கள்ளுக்கு பின்னர் அனுப்புவதாய்த் திட்டம்.
இந்நூல்பற்றி மேலும் தமிழில்:
- புத்தகப்பிரியன்
- தலித்முரசு
- புதிய ஜனநாயகம்
- டோண்டு ராகவன்
- முக்கியமான வேறு தொடுப்புக்கள் கட்டாயம் விடுபட்டிருக்கும், பின்னூட்டங்கள் வழியாக பட்டியலை நிரப்பிக்கொள்ளலாம்.


7 பிற்சேர்க்கைகள்:
வணக்கம் நண்பரே
நானும் இந்நாவலை வாசித்திருக்கிறேன்.மெயின் நிறுவனம் அளித்த எல்லா சலுகைகளையும் பணம் செல்வாக்கு இப்படி அனைத்தையும் பெற்றுக்கொண்டு பின் அந்நிறுவனத்தை பற்றியே அவர் விவரித்திருப்பது சரியில்லை என்றே எனக்குப்படுகிறது.
இதுபோல ஒரு நூல் விரைவில் நம்நாட்டிலும் வரலாம் அணு ஒப்பந்தத்திருக்கு நான் இவ்வளவு வாங்கினேன்.இப்போ எம் மனசு உறுத்துது அப்படின்னு யாரவது எழுதுவாங்க.
இந்நாவலை படிச்ச பின்னாடி மறைந்த பணமா அதிபர் டோரி ஜோஸ்,இராக் சதாம் மற்றும் தற்ப்போதைய வெனிஸ் அதிபர் சாவோஸ் இவங்க மேல இருக்க மதிப்பு கூடியது.அதுவும் சதாம் உயிரோட இருக்கப்பவே அவரு இந்த நாவல எழுதி முடிச்சிட்டாரு.அவரு சொன்னபடி தான் சதாம் முடிவும் அமைஞ்சது.பாக்கி இருக்குறது சாவோஸ் தான்.
இரா முருகவேல் அவர்கள் மொழிபெயர்ப்பு மிகவும் அருமையைருக்கும்.
உங்கள் பதிவைப் பார்த்து மிகச் சந்தோசம். நானும் படித்தேன் மிக முக்கியமான நூல். கதைபோல வாசிக்கக் கூடியது. இந் நூல் பற்றி நான் அண்மையில் தினக்குரலில் எழுதியிருந்தேன். இன்னுமும் இணையத்தில் போடவில்லை. இத்தகைய ஆழமான நால்களை அறிமுகப்படுத்தும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
//மெயின் நிறுவனம் அளித்த எல்லா சலுகைகளையும் பணம் செல்வாக்கு இப்படி அனைத்தையும் பெற்றுக்கொண்டு பின் அந்நிறுவனத்தை பற்றியே அவர் விவரித்திருப்பது சரியில்லை என்றே எனக்குப்படுகிறது.//
அதைவிட கோடி மடங்கு சரியில்லாத வேலைகளை மெய்ன் செய்திருப்பதால் இது பரவாயில்லை என்ன?
:-)
நன்றி டொக்டர்.
உங்கள் தினக்குரல் கட்டுரையை நான் தவறவிட்டுவிட்டேன். வலைப்பதிவில் போடுங்கள். படிக்க ஆர்வமாயுள்ளேன்.
John Perkinsன் பேச்சின் link இங்கு உள்ளது.
http://tamilfuser.blogspot.com/2008/01/blog-post.html
புத்தகம் கிடைக்காதவர்கள் இதை பார்த்து தெரிந்து கொள்ளளாம். அந்த புத்தகத்தின் சாராம்சம் இந்த பேச்சில் உள்ளது
தொடுப்புக்கு நன்றி சதுக்கபூதம்.
Dear Mauran,
I too have read the TAmil translation of this book. Its great that u have taken some effert to promote the book.
I wish u wriet more this year
Fazeena Saleem
Post a Comment