January 26, 2008

சிங்கள முப்பரிமாணக் கணினி விளையாட்டு : தொப்பிகலை நடவடிக்கை

இன்றைக்கு மின்னஞ்சலில் இத்தளத்துக்கான தொடுப்பு எனக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இவ்விளையாட்டு வின்டோசுக்கானது என்பதோடு Directx 10 தேவைப்படுவதாகவும் இருப்பதால் நிறுவி விளையாடிப்பார்க்கமுடியாதுள்ளது.
யாராவது இதனை நிறுவிப்பார்த்துச் சொன்னால் மகிழ்ச்சி. (ஏதாவது ஏமாற்று வேலையோ என்ற சந்தேகம் வேறு எனக்கு. போலி தளம் ஒன்றை வைத்திருக்கிறார்களோ என்றும் நினைக்கத்தோன்றியது. அப்படியும் நடப்பதுண்டு)

[நண்பர் மதி இதனை நிறுவிப்பார்த்து உறுதிப்படுத்தியிருக்கிறார். நன்றி மதி. ]

அவர்கள் தளத்தில் தந்திருக்கும் நிகழ்படங்கள், தகவல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணம்.


தொப்பிகலை நடவடிக்கை என்ற பெயரில் புதிய முப்பரிமாணக் கணினி விளையாட்டு இலங்கையில் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.

தரப்பட்டிருக்கும் நிகழ்படத்தின்படி முழுக்க முழுக்க சிங்களத்தில் அமைந்த இவ்விளையாட்டில் விடுதலைப்புலிகள் பேசும் இடங்களில் தமிழ் உரையாடலும் இடம்பெறுகிறது. விடுதலைப்புலிகள் அவர்களது சீருடையுடனும் குறியீடுகளுடனும் இருக்கிறார்கள். பெண்புலிகள் வேறு.



அமெரிக்காவை அடிப்படையாகக்கொண்டு வெளிவரும் பெரும்பாலான கணினி விளையாட்டுக்கள் மிக மிக ஆழமான அரசியல் நோக்கங்களை உடையன. வெகுமக்களின் உளவியலைத் தீர்மானிப்பதற்காக அமெரிக்க உளவு நிறுவனங்களின் மறைமுக ஆதரவிலேயே பெரும்பாலான இராணுவம் சார்ந்த விளையாட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன.

அமெரிக்கா தனது மூலதன வளம், அதனால் பெற்று வைத்திருக்கும் மூளை வளம் போன்றவற்றைப் பயன்படுத்தி தமது அரசியல் நலன்களைக்காக்கும் விளையாட்டுக்களை, மென்பொருட்களை உருவாக்குகிறது. Red Alert, Age of Empires, IGI போன்றன ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்.

சோவியத் யூனியன், மூன்றாம் உலகின் போராட்டங்கள், இஸ்லாமிய அடிப்படைப் போராட்டங்கள் குறித்த அமெரிக்க சார்பான, ஏகாதிபத்திய நலன்களுக்குச்சார்பான சுயநலப்பார்வையினை அணுவணுவாக, மிகச்செறிவாக குழந்தைகள், இளைஞர்கள் மனதில் விதைப்பதே இவ்விளையாட்டுக்களின் முதன்மை நோக்கமாக அமைகிறது. உலகின் மற்றைய பாகங்களில் வாழ்பவர்களுக்கோ இதற்கு எதிராக இதே ஆயுதத்தை கையிலெடுப்பதற்கான மூலதன வளம் போதாது.

இந்த உளவியல் போராட்டத்துக்கென அமெரிக்க முதலாளிகள் கோடி கோடியாக டாலர்களைக் கொட்டுகிறார்கள்.

(இந்த உளவியல் போராட்டத்தின் பலிகடாக்களாகி உதிரிகளாக, ஏகாதிபத்திய முதலாளித்துவ சார்பு ஊடகங்களின் வாசகங்களை கேள்விகணக்கற்று ஏற்று ஓதிக்கொண்டு உலகெங்கும் தமிழ்மணி போன்ற பலர் உருவாக்கப்பட்டு நடமாடவிடப்படுகிறார்கள்.)

அதிகாரமும், பலமும் கையிலுள்ளவர்களுக்குச்சார்பாகவே தொழிநுட்பமும், எல்லாமும் ஆடுகின்றன. ஆகவே எல்லாவற்றையும்போல, கணினி விளையாட்டுக்களுக்கும் பின்னணி அரசியல்கள் உண்டு.

இலங்கையில் முப்பரிமாண விளையாட்டுக்கள் விருத்தி செய்யபடுவது மகிழ்ச்சிக்குரியதே. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. இது இளைஞர்கள் மத்தியில் இத்தொழிநுட்பம் குறித்த புதிய உத்வேகத்தை உண்டுபண்ணும். ஆனால் இவ்வாறான விளையாட்டுக்களின் பின்னணி அரசியல் எதை உண்டுபண்ணக்கூடும்?


இலங்கை மக்களின் எதிர்கால நல வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான சிந்தனைகளுக்கும் இவை எவ்வாறு உதவிடப்போகின்றன? இலங்கைவாழ் அனைத்து இன மக்களின் மனதிலும் நாம் எந்த மாற்றங்களை எதிர்பார்க்கிறோம்? இத்தகைய விளையாட்டுக்களை தடை செய்ய முடியாது. தூற்றவும் முடியாது. இனி இவை வரத்தொடங்கும். அதுதான் கள யதார்த்தம். எதிர்கொள்ளும் வழிமுறைகளை ஆராய வேண்டும்.

இலங்கை இராணுவத்தின், அதிகாரத்தின் நலன் நோக்கிய இப்படியான விளையாட்டுக்கள் தொடர்ச்சியாக வருமிடத்து என்ன செய்யப்போகிறீர்கள்?

--

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்று நினைக்கிறேன். தோழர் மெத்தவிகாரியுடன் இலங்கையில் முப்பரிமாண விளையாட்டுக்களை உருவாக்க வேண்டிய தேவை, சாத்தியங்கள் குறித்து உரையாடிக்கொண்டிருந்தேன். அவற்றைப்பயன்படுத்தி ஏற்கனவே இருக்கும் விளையாட்டுக்களின் அதிகார நலன்களுக்கு எதிரான ஆரோக்கியமான சிந்தனைகளை நமது குழந்தைகளின் மூளைகளில் எப்படி விதைக்க முடியும் என்ற எனது பார்வையினைத் தெளிவு படுத்திக்கொண்டிருந்தேன்.


சிங்களத்தில் ஆழமான அழகான கதைப் பாரம்பரியம் ஒன்று உண்டு.

சிறு சிறு கதைகள் குவியலாய், புதையலாய் சிங்களத்தில் இருக்கிறது. தேவதைக்கதைகள், இதிகாசக்கதைகள், நகைச்சுவை என ஏராளம். இவைகளிலிருந்து பெறத்தக்க ஆழமான ஆரோக்கியமான அடிப்படையினைக்கொண்டு நாம் சிறுவர்களுக்கான விளையாட்டுக்களை விருத்தி செய்யலாம் என்றேன்.

போருக்கெதிரான, பழிதீர்க்கும் உளவியலுக்கு எதிரான மாற்று உளவியல் அபிவிருத்தியை தூண்டக்கூடிய "பிரபல' விளையாட்டுக்களை நாமும் உற்பத்தி செய்வதுதான் காலம் எமக்குத் தந்துள்ள கடமை என்று எமது உரையாடல் தொடர்ந்தது.


எம்மிடம் இதற்கெல்லாம் பணம் இல்லை. அரசாங்கத்திடம் விண்ணப்பித்தால் அவர்கள் எவ்வளவு தூரம் உதவி செய்வார்கள் என்று தெரியவில்லை. பவுத்தத்தை அடிப்படையாகக்கொண்டு, மக்கள் சார்ந்த அரசியலை அடிப்படையாகக்கொண்டு விளையாட்டுக்களை உருவாக்க வேண்டும் என்றே நான் விரும்பினேன்.
அவரும் அதையே விரும்பினார்.

மெத்தவிகாரி மிகுந்த ஆர்வமாக இருந்தார். இதற்குரிய தொழிநுட்பவியலாளர்கள் யாரை எல்லாம் அழைத்து உதவி கேட்கலாம் என்று ஒரு தொழிநுட்பவியலாளரான அவர் சிந்திக்கத்தொடங்கினார்.

அவரோ ஒரு துறவி, நானோ ஒரு உதவாக்கரை.

January 25, 2008

ரிச்சர்ட் ஸ்டால்மன் : இலங்கை வருகை

இந்தப்பதிவு என்னுடைய எந்த வலைப்பதிவுக்கானது என்று தெரியவில்லை. அண்மையில் பேராதனையில் தத்துவம் படிக்கும் நண்பரொருவர் யார் இந்த ஸ்டால்மன் என்று கேட்டபோது, வாழ்ந்துகொண்டிருக்கும் முக்கியமான தத்துவாசிரியர்களுள் ஒருவர் என்று பதிலளிக்க வேண்டி வந்ததால், "ம்..." இல் இந்தப்பதிவைப் போடுவது பொருத்தமானதாக இருக்குமோ என்று தோன்றியது.

[கொழும்பில் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த விருந்தளிப்பின் பின் ஓய்வாகக் குழலூதும் ஸ்டால்மன்]

==> ஸ்டால்மன் குறித்த விக்கிபீடியாக் கட்டுரை |தமிழ்|ஆங்கிலம்

"அடேய், உன்ட ஆள்; அதுதான் தாடிவச்சவர் இலங்கை வந்திருக்கிறாராமே மறக்காம ஒருக்கா போய்ப்பார். டெய்லி நியூசில விளம்பரம் வந்திருக்கு" என்று அப்பா ஒருநாள் தொலைபேசியில் அழைத்துச்சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஸ்டால்மன் இங்கே வருகிறார் என்று அறிந்திருந்தபோதும் வந்துவிட்டார், சந்திப்பிற்கான நாட்கள் இவைதான் என்பன போன்ற செய்திகளை திருக்கோணமலையில் இருக்கும் அப்பா மூலமே அறியக்கிடைக்கவேண்டியிருந்தது என்பதிலிருந்து எமது லினக்ஸ் பயனர் குழுமத்தின் தொடர்பாடல் நெருக்கத்தை அறிந்துகொள்ளலாம் ;-)

மறைந்த பேராசிரியரும் இலங்கையின் தகவற் தொழிநுட்பத்துறை வளர்ச்சியில், குறிப்பாக கட்டற்ற மென்பொருட்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றியவருமான சமரநாயக்க அவர்களது அழைப்பின் பேரிலேயே ஸ்டால்மன் இலங்கை வந்திருந்தார்.

==> வருகை தொடர்பான நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்புப்பற்றிய தகவல்களை இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

பேராதனையில் நடந்த மாநாட்டுக்குப் போக வசதிப்படவில்லை. மாலபேயில் நிகழ்ந்த " அறத்திலும் நடைமுறையிலும் கட்டற்ற மென்பொருள்" என்ற தலைப்பிலான மாநாட்டுக்கு முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்தேன்.


இலங்கைப் பல்கலைக்கழகங்களின் செக்குமாட்டுக் கல்விச்சூழலில் ஸ்டால்மன் யார் என்றே அறிந்திருக்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்திருக்காது. ஓரளவுக்கேனும் தொழிநுட்பத் துறை வாழ்வியலில் துணைக்கலாசாரக் கூறுகளை உள்வாங்கிக்கொண்டவர்கள் மத்தியிலேயே இவரது வருகையின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கும்.


SLIIT போன்ற தனியார் கல்விக்கழகங்களிலேயே இவருக்கான பெரு வரவேற்பினை எதிர்பார்க்க முடியும்.

இவரது வருகைக்கான வசதிகளை ஒழுங்குசெய்த அரச நிறுவனங்களாகட்டும், பேராதனைப் பல்கலைக்கழகச் சூழலாகட்டும், இவரை ஒரு முன்னணி நிரலாளர் என்பதைத்தாண்டி எந்த வகையில் உள்வாங்கிக்கொண்டிருப்பார்கள் என்பது சந்தேகமே.

அதிர்ச்சியளிக்கும் சனக்கூட்டம் மாநாட்டு மண்டபத்தை நிறைத்திருந்தது. ஏறத்தாழ ஆயிரம் பேர் தேறுவார்கள். இதுவரை எனது கொழும்பு வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தகவற் தொழிநுட்ப மாநாட்டை நான் கண்டதில்லை.


மிதமிஞ்சிய உணர்ச்சிவசப்பாடுகளும், நாயகவணக்கமும் நிரம்பி வழிய ஒரு அவதார புருஷருக்குக் கொடுக்கும் பக்திவணக்க மரியாதையோடு மேடைக்கு ஸ்டால்மனை அழைத்து வந்தார்கள்.



மாநாட்டின் ஏனைய நிகழ்வுகள் குறித்த வர்ணனைகளை விட்டுவிட்டு அங்கே ஸ்டாமன் தெரிவித்து நான் குறிப்பாகக்கவனித்த சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது பயன்மிக்கது.

[மு.மயூரன், ஸ்டால்மன், அப்துல் ஹலீம், துறவி மெத்தவிகாரி - நான்கு மதபோதகர்கள் ;-) ]

1.

ஜோர்ஜ் புஷ், அமெரிக்க அரசு போன்றவற்றுக்கெதிரான நேரடியான வலுவான கண்டனங்களை ஸ்டால்மன் முன்வைத்தார். அமெரிக்க அரசு என்பது பெருவணிக நிறுவனங்களின் நலன்காக்கும் அமைப்பொன்றேயொழிய அதற்கு வேறெந்த நல்ல முகமும் கிடையாது என்று ஆணித்தரமாகக் கருத்துரைத்தார்.

2.

"தனியுரிமை மென்பொருளாளர்களும் வணிக நிறுவனங்களும் தம்மை கம்யூனிஸ்டுக்கள் என்று அழைக்கின்றனர். உண்மையில் அவர்கள்தான் கம்யூனிஸ்டுக்கள். அங்கேதான் மேலிருந்து கீழான இறுகி நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பு இருக்கிறது. மேலிருந்து ஆணைவரும் , அதனை எல்லோரும் நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்கள்தான் கம்யூ னிஸ்டுக்கள். தனி நபர் சுதந்திரத்தை, அதிகாரத்தின் பரவலாக்கத்தை மறுக்கும் கம்யூனிஸ்டுக்கள் அவர்கள்தான்" என்று கண்டித்தார்.

(கம்யூனிசம் என்பது ஒரு பயங்கரக் கெட்ட வார்த்தை ;))

3.

"மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் வேலை செய்த பணியாள் ஒருவர் அல் கொய்தாவுக்கு தகவலனுப்பிய காரணத்தால் கைது செய்யப்பட்டார். அல்கொய்தாவுக்கு தகவலனுப்பும் ஊழியரைக் கைது செய்கிறார்கள், உலகின் அதிபயங்கர பயங்கரவாத அமைப்பான அமெரிக்க அரசுக்கு உங்களைப்பற்றிய தகவல்களை களவாக அனுப்பும் வின்டோஸ் இயங்குதளத்தை என்னசெய்வது" என்றார்.



4.

க்னூ/லினக்ஸ் என்று சொல்ல வேண்டியதன் அவசியத்தை வழக்கம் போல் வலியுறுத்தினார். அத்தோடு இது ஈகோ சம்பந்தப்பட்ட பிரச்சனைதான் என்றாலும் இந்தப்பெயர்ப்பாவனையில் இருக்கும் மறைமுக அரசியலை நாம் புறக்கணிக்க முடியாது. லினக்ஸ் என்று மட்டும் பயன்படுத்தும்போது அங்கே லீனஸ் டோவால்ட்ஸ் மட்டுமே நாயகராகிறார். பிறகு இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துபவர்கள் அவரைப் பெரிய ஆளாக்குவார்கள். அவருக்கோ மென்பொருள் உலகின் சுதந்திரம், விடுதலை குறித்து எந்த அக்கறையும் இல்லை. உண்மையில் அவர் விடுதலைக்கு எதிரான கருத்துக்களையே கூறி வருகிறார். இந்த அபாயமும் லினக்ஸ் என்ற பெயர்ப் பயன்பாட்டில் உண்டு என்றார்.

ஆனாலும் பெயர்களைத் தெரிவு செய்யும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு என்றார்.

5.

வின்டோஸ் உங்களை உளவு பார்ப்பது எப்படி என்பதை எடுத்துக்காட்டுக்களோடு விளக்கினார். அத்தோடு விஸ்தாவினால் ஏற்பட்டிருக்கும் என்றைக்குமில்லாத அபாயம் குறித்துப்பேசினார்.

6.

கே டீ ஈ -எதிர்- க்னோம் சர்ச்சைக்கு இனியும் இடமில்லை. இன்று கே டீ ஈ யும் கட்டற்ற மென்பொருளே என்றார்.

7.

சுவீடனின் கொள்ளையர் கட்சிக்கு (pirate party) ஆதரவளிக்கிறீர்களா என்றும், பதிப்புரிமை நின்று நிலைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்றும் நான் கேட்ட கேள்விக்கு,

கொள்ளையர் கட்சியின் கொள்கைகளில் ஒரு சிறு விடயத்தைத்தவிர மற்ற எல்லாவற்றோடும் உடன்படுகிறேன். மென்பொருட்கள் பொதுமக்கள் உடமையாக வேண்டும் என்று அவர்கள் நினைப்பது மட்டும்போதாது, மென்பொருட்களின் ஆணைமூலமும் பொதுத்தளத்துக்கு வரவேண்டும் என்றார். அத்தோடு காப்புரிமை இன்னும் பத்து வருடத்துக்குத் தேவையானதாகவே இருக்கிறது என்றும் பதிலளித்தார்.

8.

பாடசாலைகளில் கற்பிப்பதற்கான மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாக மட்டுமே இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அறத்தையும் வலியுறுத்தினார்.


--

ஸ்டால்மனின் வருகையும் அவரது கருத்துக்களும், தொழிநுட்பத்துறையின் அரசியல் குறித்த விழிப்புணர்வினை இலங்கையில் ஏற்படுத்துமாயின் அது ஆரோக்கியமானது. க்னூ/லினக்ஸ் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கே கூட அதன் பின்னாலியங்கும் அரசியல், தத்துவப்போக்குக்கள் குறித்து எந்த பிரக்ஞையும் இருப்பதில்லை.

தொழிநுட்பத்தின் அரசியலின் தகவற் தொழிநுட்பக் குறியீடாக ஸ்டால்மன் நிற்கிறார். நடக்கிறார், உலகெங்கும் போய்ப் பேசுகிறார்.

---

மாலை வேளையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஸ்டால்மனை சந்திக்கக்கிடைத்தது இனிமையான அனுபவம். ஸ்டால்மன் என்கின்ற மனிதர் ஆர்வமூட்டும் ஆளுமை. மிக மிக எளிமையானவர். உலகின் மிகப்புத்திசாலியான நிரலாளர்களில் ஒருவர். ஆனால் அதற்கான எந்தப் பகட்டும் ஒளிவட்டங்களும் இல்லாமல் வாழ்பவர். எளிமையான வாழ்க்கை முறையை உடையவர்.



---

இந்த நிகழ்ச்சியோடு நிகழ்ச்சியாக நூறு டொலர் மடிக்கணினி ( OLPC) யினை நேரில் பார்க்கும், தொட்டுப்பார்க்கும் வய்ப்புக்கிடைத்தது. அது எதிர்பார்த்து கற்பனை பண்ணியதை விட கொஞ்சம் எடை கூடியதாக இருந்தது ;-)


----


* இங்கே இணைத்துள்ள நிகழ்படங்கள் தரம் குறைந்தவை. எனது செல்பேசியில் தரமான நிகழ்படக்கருவி இல்லை. என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்க்க உதவும் என்பதற்காக இணைத்துள்ளேன்.

* ஸ்டால்மன் பேசிய ஏராளம் விடயங்கள் இங்கே பகிரப்படவில்லை. இவை எல்லாம் ஸ்டால்மன் அடிக்கடி பல இடங்களிலும் பேசி வரும் முக்கியமான விஷயங்கள். இணையம் பூராகவும் இவற்றை நீங்கள் பெற்றுப் பார்க்கலாம்.

* மேலே நான் தந்த தொடுப்பில் உள்ள ஆங்கில வலைப்பதிவுகளினூடாக ஸ்டால்மனின் இலங்கை வரவு குறித்த வெவ்வேறு கோணங்களிலான பார்வைகளை நீங்கள் படித்துக்கொள்ளலாம்.


* ஸ்டால்மன் சில படங்களில் அணிந்திருக்கும் "ஈமாக்ஸ் தேவாலயத்தின் புனித இக்னூசியஸ் " ஆடை பற்றி தெரியாதவர்கள் இங்கே போய்ப் பார்த்தறிந்துகொள்ளவும். படத்தில் புனித இக்னூசியசும் துறவி மெத்தவிகாரியும் ஆளையாள் ஆசீர்வதித்துக்கொள்கிறார்கள் :-)