படிக்கும் உரிமை - புனைகதை (மூலப்பிரதிக்கு நேர்மையாக அமையாத மொழியாக்கம்)
(மக்களின் புலமைச்சொத்து மீதான பெரு நிறுவனங்களின் ஏகபோகத்தை நோக்கிய முதலாளித்துவ- ஏகாதிபத்திய- உலகமயமாக்க நிகழ்ச்சி நிரலின் மற்றொரு சிறு பகுதி குறித்த செய்தி இது. அடோப் நிறுவனம் தனது Flash உற்பத்திகளில் DRM (எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்) சட்டகத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இணைய ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் Flash தொழிநுட்பம் மற்றும் DRM மீதான காதலும், எதிர்பார்ப்புக்களும் கொண்ட நண்பர்களுக்கு விநியோகிக்கவென ஏற்கனவே நான் மொழி பெயர்த்த கதை ஒன்றினை இந்தச்சந்தர்ப்பத்தில் எளிமைப்படுத்தியும், மாற்றங்கள் செய்தும் மீள எழுதவேண்டியதானது. இம்மொழியாக்கம் இக்கதையின் மூலப்பிரதிக்கு நேர்மையானதல்ல. ரிச்சர்ட் ஸ்டால்மனால் எழுதப்பட்ட இக்கதையின் மூலத்துக்கு முடிந்த வரை நேர்மையாக அமையும் மொழியாக்கத்தை இந்தத்தொடுப்பில் நீங்கள் காணலாம். )
குறிப்பு 0: தைக்கோ என்பது நிலவில் காணப்படும் கிண்ணக்குழிகளில் பரப்பால் பெரிதான ஒன்று.
[நிலவுப்புரட்சிக் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பாக வெளிவந்த "தைக்கோவுக்கான பாதை" என்ற நூலிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நூல் 2096ம் ஆண்டு சந்திரனில் வைத்து வெளியிடப்பட்டிருந்தது.]
செம்புலனைப் பொறுத்தவரைக்கும் "தைக்கோவுக்கான" அவனது பாதை ஆரம்பித்த இடம் கல்லூரிதான். நல்ல வடிவாக ஆராய்ந்துபார்த்தால் அருவி வந்து அவனுடைய கணினியை இரவல் கேட்டாள் பாருங்கள், அந்தக்கணத்திலிருந்துதான் அவனது வாழ்க்கையே மாறிப்போனது.
அருவிக்கு இடைத்தவணைச் சோதனை. அந்த நேரம்பார்த்து அவளது கணினி (Computer) பழுதாகித் தொலைத்தது. இப்பொழுது அவசரமாகக் கணினி ஒன்று வேண்டும். எங்காவது யாரிடமாது இரவல்தான் வாங்க வேண்டும். வாங்காது போனால் சோதனையில் தோல்வி நிச்சயம் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
துணிந்து ஒரு கணினியை இரவல் கேட்பதற்கு இப்போதைக்கு செம்புலனைத் தவிர அவளுக்கு வேறு யாரும் இல்லை.
செம்புலனின் நிலை இக்கட்டுக்குள் மாட்டிக்கொண்டுவிட்டது. அவனுக்கென்னவோ அவளுக்கு உதவ விருப்பம்தான். ஆனால் கணினியில் தன்னுடைய பாடப் புத்தகங்களை வேறு சேமித்து வைத்திருக்கிறான். இரவல் கொடுத்தால் அவனுடைய புத்தகங்களை அவள் படித்துவிடக்கூடுமே?
வேறொருவரை உங்கள் பாடப்புத்தகங்களைப் படிக்க அனுமதித்த குற்றத்துக்காக பல ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்கு போக வேண்டி வரும் என்ற உண்மை ஒருபுறமிருக்க, அவள் தனது புத்தகங்களைப் படித்துவிடக் கூடும் என்ற நினைப்பே அவனை ஒரு முறை உலுப்பிப் போட்டது.
எல்லோரையும் போலச் சின்னச் செம்புலனுக்கும் அவனது ஆரம்பப்பள்ளிக் காலத்திலிருந்தே ஒழுக்கங்களும் சட்டங்களும் காலத்துக்குக் காலம் போதிக்கப்பட்டிருந்தது.
புத்தகங்களை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளுதல் தவறு. கெட்ட பிள்ளைகள் செய்வது. கொள்ளைக்காரர்களின் வேலை அது. பொலிஸ் மாமாவுக்கும் கடவுளுக்கும் அது பிடிக்காது என்று ஆரம்பப் பள்ளிப் பாடத்திட்டங்கள் சொல்லிக்கொடுத்த எல்லாமே அவன் மனதில் ஆழப்பதிந்திருந்தன.
அரசாங்கம் அவனைக் கையும் களவுமாகப் பிடிக்கத் தவறுவதற்கு வாய்ப்புக்களும் அதிகம் இருக்கவில்லை.
அவன் "படித்த" பையன்.
ஒவ்வொரு புத்தகம் தன்னுள்ளே ஒரு "கண்காணி" (Monitor) யைக் கொண்டிருக்கும் என்று அவனுக்குத் தெரியும். அந்தக் கண்காணியின் பெயர் "காப்புரிமைக் கண்காணி (Copyright Monitor)" என்ற அளவுக்கு மட்டுமல்ல, குறித்த புத்தகம் யாரால், எப்பொழுது, எங்கே படிக்கப்படுகிறது என்ற தகவலை அது கணந்தோறும் அரசாங்கத்துக்கு அறிவித்தவண்ணமிருக்கும் என்ற தொழிநுட்பத்தையும் புரிந்துகொண்டிருக்கும் அளவுக்கு அவன் "படித்திருக்கிறான்".
அரசாங்கத்தின் "உரிமைப்படுத்தல் நடுவம்" என்கிற அமைப்பு இந்தக் கண்காணிப்புக்களை செய்துவந்தது.
(படிக்கும் கொள்ளைக்காரர்களைப் பிடிப்பதற்காக மட்டுமல்லாது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கள் பற்றிய தகவல்களைச் சில்லறை வர்த்தகர்களுக்கு விற்கவும் இந்த வசதியை "நடுவம்" பயன்படுத்தியது)
அடுத்த தடவை அவனது கணினி இணைய( Internet) வலையில் இணைக்கப்பட்ட கையோடு "நடுவம்" இதனைக் கண்டுபிடித்துவிடும்.
பிறகென்ன, அடுக்கடுக்காகக் குற்றங்கள். எதிலிருந்து தப்பினாலும் நடந்த குற்றசெயலை தடுக்க முயலாமைக்கான குற்றம் அவனைச் சனிபோல் துரத்தி வந்து சிறையிலடைத்துப் பூட்டும்.
ஆமா இவருக்கு நினைப்புத்தான்!
அருவிக்கு அவனது கணினியில் சேமிக்கப்பட்டுள்ள புத்தகங்களை தோண்டியெடுத்துப் படிப்பதுதான் இப்போ ரொம்ப முக்கியம் பாருங்க. அதொன்றும் அவளுக்கு அவசரமாயிருக்கவில்லை. என்ன, தனது இடைத்தவணைச்சோதனைக்கு ஆயத்தப்படுத்த வேண்டும். ஒப்படைகள் கொஞ்சம் எழுதவேண்டும். இதற்குத்தான் இப்போது அவசரமாகக் கணினி தேவைப்படுகிறது அவளுக்கு .
ஆனால் அருவி நடுத்தர வர்க்கக் குடும்பத்துப் பெண். பாடக்கட்டணங்களைச் செலுத்தவே அவள் மிகுந்த சிரமப்படுகிறாள் என்பது செம்புலனுக்குத் தெரியும்.
போதாக்குறைக்கு புத்தகம் வாசிப்பதற்கான மேலதிகக் கட்டணங்கள்...
அவள் பகுதிநேரமாகச் செய்யும் வேலையும் அதற்கான கூலியும் மட்டுமட்டுத்தானே?
அவனது பாடப்புத்தகங்களைப் படிப்பது மட்டுமே அவள் பட்டம் பெறுவதற்கான ஒரே வழியாகவும் சிலவேளை இருகக்கூடும்.
அவனால் அருவியையும், அவளது சூழ்நிலையையும் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.
செம்புலனுக்கே அவன் வாசித்த ஆய்வுக்கட்டுரைகளுக்கான பணத்தினை செலுத்துவதற்குக் கடன்பட வேண்டியிருந்தது.குறிப்பு 1: இவ்வாறு செலுத்தப்படும் பணத்தின் 10% அக்கட்டுரைகளை எழுதிய ஆய்வாளர்களுக்குப் போய்ச்சேரும். செம்புலன் கொஞ்சம் படிப்பு, ஆய்வு, எழுத்து என்று கவனம் செலுதுவதால் அவனது கட்டுரைகளும் கூட எவராலும் பார்க்கப்படக்கூடும். அப்படி அவனது கட்டுரைகளை ஆட்கள் அடிக்கடி வாசிப்பார்களாக இருந்தால் அதிலிருந்து கொஞ்சம் பணம் அவனுக்குக் கிடைக்கும். அதை வைத்து கடன்களை ஒருவாறு அடைத்துவிடலாம்.
முன்பெல்லாம் யார் வேண்டுமானாலும் நூலகங்களுக்கு போய்வரக்கூடிய நிலை இருந்தது என்பதை செம்புலன் பின்னாட்களில் அறிந்துகொண்டான்.
நூலகத்துக்குப்போய்க் கட்டுரைகளை, ஏன் புத்தகங்களைக்கூட காசெதுவும் கொடுக்காமல் உட்கார்ந்திருந்து திறந்து வாசிக்கக்கூடிய காலமொன்று இருந்தது.
அரசாங்கத்தின் நூலக மானியம் இல்லாமலே நூலகங்களில் ஆயிரக்கணக்கான பக்கங்களை, ஆய்வுக்கட்டுரைகளைப்படித்து தமது ஆய்வுகளைச்செய்த சுயாதீனமான அறிஞர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.
அட நாசமாய்ப்போக, புத்தகங்களை இணையத்தில் பெற்று உங்கள் கணினியிலேயே படிக்கக்கூடிய வண்ணம் மதுரைத்திட்டம், நூலகத்திட்டம் என்று பாரிய திட்டங்களை வேறு தொடங்கிச் செயற்படுத்தி வந்திருக்கிறார்கள்.
ஆனால் 2010களில் வர்த்தக ரீதியான மற்றும் இலாபநோக்கற்ற வெளியீட்டாளர்கள் படிப்பதற்கான கட்டணங்களை அறவிட ஆரம்பித்துவிட்டார்கள்.
2047ம் ஆண்டுவாக்கில் புலமை இலக்கியங்களை இலவசமாக பொதுமக்களின் உசாவலுக்கு வழங்கிய நூலகங்கள் எல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப்போயிற்று.குறிப்பு 2: செம்புலனுக்கு ஓரளவு நன்றாகவே நினைவிருக்கிறது அவனது தாயாரின் அண்ணன், ஒரு மெலிந்த வழுக்கத்தலைக்கிழவர் மயூரனின் நண்பர்களான ஷசீவன், கோபிநாத் போன்றவர்கள் இணையத்தில் காப்புரிமைச் சட்டங்களைக் கவனிக்காமல் இலவசமாக நூல்களை விநியோகித்த குற்றத்துக்காக நூலகத் திட்டம் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டபோது சிறைக்குப் போக நேர்ந்தது.
கூடவே அந்தத்திட்டத்தோடு சம்பந்தப்பட்ட உலகலாவில முகவர்களாகச் செயற்பட்ட ஈழநாதன், நற்கீரன், பிரதீபன், கானா பிரபா போன்றவர்களும் அந்தந்த நாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
பாவம் சிங்கப்பூரில் பிடிபட்ட ஈழநாதன் அந்தத் தள்ளாத வயதிலும் கடுமையான தண்டனைக்ளை எதிர்கொண்டார். (இத்தனைக்கும் நூலகத் திட்டம் தொடர்பாக யாரும் புகார் வழங்கவில்லை. அவர்கள் பயன்படுத்திய pdf வடிவமே அவர்களுக்கு ஆப்படித்தது. pdf செயலிகள் DRM பொதியப்பட்டு வரத்தொடங்கியதும் அவை தன்னியக்கமாக அரசாங்கங்களுக்கு வழங்கிய தகவல்களையடுத்து இவ்வாறு பலர் பிடிபட்டுப்போயினர்)
ஆனால் இந்த மாதிரி "கண்காணிகளையும்" அரசாங்கத்தையும் ஏய்ப்பதற்கான வழிகளும் அப்போது இருக்கத்தான் செய்தன.
அவை சட்டத்துக்குப் புறம்பானவை.
செம்புலனோடு மென்பொருள் வகுப்பில் கூடப்படித்த "ஈழா" என்றொரு மாணவி இவ்வாறான சட்டத்துக்குப்புறம்பான மென்பொருள் ஒன்றினை வைத்திருந்தாள். அடிப்படையில் அது ஒரு வழுத்திருத்தி(Debugger) மென்பொருள்தான். கொஞ்ச காலத்துக்கு முன்பு ஆணைத்தொடர்களை (Code) சரிபார்க்க, திருத்த என்று இந்த வழுத்திருதி மாணவர்களுக்குப் பயன்பட்டு வந்தது இப்போது தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இவ்வாறான ஏய்ப்பு வேலைகளுக்கு அதனைப் பயன்படுத்தக்கூடிய வழிகளை அவள் கண்டுபிடித்து வைத்திருந்தாள்.
புத்தகம் ஒன்றில் பொதியப்பட்டுள்ள கண்காணிக்கும் அமைப்புக்களை இதனைப்பயன்படுத்தி ஈழா ஏய்த்துவந்தாள்.
ஈழாவுக்கோ ஓட்டை வாய் :-)
யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்த ஏய்ப்பு வேலை பற்றி ஒவ்வொரு மாணவருக்கும் பொறுப்பாக சொல்லி முடித்துவிட்டுத்தான் அவள் மூச்சே விட்டாள் என்றால் பா.......ருங்களேன்.
அவளின் நண்பர்களில் ஒருத்தன் மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அவளைப் "போட்டுக் கொடுத்து" விட்டான். மாணவர்களுக்கு நிறையக் கடன் பிரச்சினைகள். போட்டுக்கொடுத்தால் அரசாங்கம் கொஞ்சம் பணம் கொடுக்கும் வழக்கத்தை வேறு வைத்திருந்தது.
2047 இல் ஈழா சிறையிலடைக்கப்பட்டாள். ஈழாவின் அப்பா ஒரு வழக்கறிஞராக இருந்தபடியால் களவாகப் புத்தகம் படித்த குற்றத்திலிருந்து அவளை மீட்க முடிந்தபோதும், குறித்த வழுத்திருத்தி மென்பொருளை வைத்திருந்த குற்றத்திற்கு யாராலும் எந்த மன்னிப்பையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
குறிப்பு 3: யார் வேண்டுமானாலும் வழுத்திருத்திக் கருவிகளை வைத்திருக்கக்கூடிய காலம் ஒன்று முன்பு இருந்தது என்பதைச் செம்புலனால் பின்னாட்களில் அறிந்துகொள்ள முடிந்தது.
இறுவட்டில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக, இணையத்தில் இறக்கக்கூடியதாக, ஏன் இலவசமாக தரவிறக்கிப் பயன்படுத்தக்கூடியதாகக்கூட வழுத்திருத்தி மென்பொருட்கள் ஒரு காலத்தில் கிடைத்தன. காலப்போக்கில் இத்தகைய வழுத்திருத்திகள் பலராலும் "காப்புரிமைக் கண்காணிகளை" ஏய்ப்பதற்குப் பயன்படுத்தப்படலானது.
ஒருமுறை வழக்கொன்றில் தீர்ப்பளிக்கும்போது நீதிபதி ஒருவர், இக்கருவிகளின் முதன்மைப்பயன்பாடே கண்காணிகளை ஏய்ப்பதுதான் என்று தீர்ப்பளித்துத் தொலைத்தார். இச்சம்பவம் வழுத்திருத்திகள் சட்டவிரோதமாகக் காரணமானது. வழுத்திருத்திகளை எழுதி வெளியிட்ட மென்பொருளாளர்கள் பலர் இதனைத்தொடர்ந்து சிறைக்குப் போயினர்.
செம்புலன் ஒரு நிரளாளன் (Programmer) என்ற வகையில் வழுத்திருத்திகளின் பயன்பாட்டினை நன்கறிவான். இப்பொழுதும் அவனைப்போன்ற நிரலாளர்களுக்கு படிப்புக்கும் தொழிலுக்கும் வழுத்திருத்திகள் அத்தியாவசியமானவையாக இருந்தன. அரசாங்கத்தில் பதிவு செய்த நிரலாளர்களுக்கு மட்டும் மிகக்கடுமையான சட்டவிதிகளின் கீழ் வழுத்திருத்தி மென்பொருட்கள் தனித்தனியாக உற்பத்தி செய்யப்பட்டு அதிக விலைக்கு வழங்கப்பட்டுவந்தது. வகுப்பில் செம்புலன் பயன்படுத்திய வழுத்திருத்தி சிறப்பான தீயரண்களுக்கு (Firewalls) நடுவே மிக மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. வகுப்பறைப் பயிற்சிகளுக்கு மட்டுமே அதனைப் பயன்படுத்த முடியும்.
கதையின் மிச்சத்துக்கு வருவதற்கு முன் இன்னும் சில தகவல்களை இந்த இடத்தில் சொன்னால் பயன்மிக்கதாயிருக்கும்.
இந்த கண்காணி இருக்கெல்லோ, காப்புரிமைக் கண்காணி?
இதனை ஏய்ப்பதற்கு இன்னொரு வழியும் இருந்தது.
உங்கள் கணினியின் அடிப்படை மென்பொருளான "கருனி(Kernel)" யை மாற்றிக்கொள்வதன் மூலம் கண்காணிகளின் கண்ணில் மண்ணைத்தூவலாம்.
குறிப்பு 4: இந்த நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் இவ்வாறான கருனிகள் பல இருந்தன. கட்டற்ற திறந்த கருனிகள் கூட இருந்தன. லினக்ஸ், ஓப்பன் சோலாரிஸ் என்று பல.
ஆனால் அவை எல்லாம் செத்துப்போய் கனநாளாகிப்போனது. கட்டற்ற இயங்குதளங்கள் போன்றவை தடைசெய்யப்படுவிட்டன. அவற்றின் நகல்களை இப்போ எங்கேயாவது பெற்றாலும் கூட கணினியில் அதையெல்லாம் நிறுவ முடியாது. அதற்கு கணினியின் மூலக் கடவுச்சொல் வேண்டும்.
மூலக்கடவுச்சொல்லைத்தான் இப்போதெல்லாம் எந்த நிறுவனமும் கணினி வாங்குபவர்களுக்குக் கொடுப்பதில்லையே. அப்படியே கெட்டாலும் உளவுத்துறையோ மைக்ரோசொஃப்ட் நிறுவனமோ அந்தக் கடவுச்சொல்லை உங்களுக்கு தந்துவிடுமா என்ன?
சரி எங்கள் கதைக்கு என்ன நடந்தது?
அருவிக்கு கணினியை இரவல் கொடுப்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியமாக இருக்கப்போவதில்லை என்ற முடிவுக்கு செம்புலன் இவ்வளவு நேரத்துக்குள் வந்துவிட்டிருந்தான்.
ஆனாலும் அவனால் அவளுக்கு உதவ மறுத்துவிட முடியுமா?
கொஞ்ச நாளாகவே அருவியைப் பார்க்கும்போதெல்லாம் சிறு சிறு மின்னருவிகள் நெஞ்சுக்குள் ஈரமாய் ஊற்றெடுப்பதையும், உதட்டோரங்கள் பூப்பூப்பதையும் ... தா...ண்டி.. அவளுக்கு உதவவாவது செம்புலன் மறுப்பதாவது..
அந்தப் பெண்ணோடு பேசக்கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும், ஒவ்வொரு மணித்தியாலமும் மனசை நிரப்பி மெல்லிசைக்குள் மிதக்கவைப்பதையும் தன்னையும் தாண்டி அவள் மீது இயல்பாகவே எழும் நேசத்தையும் அவன் இனங்காணத்தொடங்கியிருந்தான்.
இக்கட்டான இந்த நிலையிலும் உதவி கேட்பதற்கு அவள் ஏன் அவனைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்? அருவிக்குள்ளும் மழை பொழியத் தொடங்கிற்று என்ற முடிவுக்கு நாம் வரலாமா?
எல்லாத்தையும் யோசித்து கடைசியில் நினைத்துக்கூடப்பார்க்க முடியாத ஒரு வேலையைச் செய்து செம்புலன் இந்த இக்கட்டுக்குத் தீர்வினைக் கண்டான்.
அவளுக்கு கணினியை இரவல் கொடுத்ததோடு தன்னுடைய கடவுச்சொல்லையும் (Password) சொல்லிவிட்டான்.
இது ஒரு குற்றமாக இருந்தபோதும் அரசாங்கத்தாலோ, அதன் துணை நிறுவனங்களாலோ தன்னியக்கமாக இதனைக் கண்டுபிடிக்க முடியாது.
அருவியே போய் இவனை "மாட்டி" விட்டல்தான் உண்டு.
தனது சொந்தக்கடவுச்சொல்லை இவன் அருவிக்குக் கொடுத்தான் என்பதை கல்லூரி நிர்வாகம் கண்டுபிடித்தது என்று வைத்துக்கொள்வோம். எதற்கு பயன்படுத்தினார்கள், என்ன செய்தார்கள் என்றெல்லாம் எவரும் கேட்கப்போவதில்லை. தொலைந்தார்கள் இருவரும்!
குறிப்பு 5:மாணவர்கள் கணினிகளில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் கல்லூரியின் நடைமுறைகளில் ஏதாவது தலையீடு செய்தால் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனப்து கல்லூரியின் சட்டம்.
பாரதூரமான வேலைகள் எதுவும் நீங்கள் செய்தீர்களா இல்லையா என்படு பற்றியெல்லாம் யாரும் கவலைப்படப்போவதில்லை. நிர்வாகிகள் உங்களைக் கண்காணிப்பதை சிரமமாக்கினீர்கள் என்பதுதான் குற்றம்.
அவர்களைப்பொறுத்தவரை நீங்கள் ஏதோ கள்ளம் செய்ய எத்தனித்திருக்கிறீர்கள் என்பதாகத்தான் அர்த்தப்படும். அந்தக் கள்ளம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் தேவை கூட அவர்களுக்கு இல்லை. ஆனால் வழக்கத்தில் இந்தக்குற்றத்துக்காக மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவதில்லை. கல்லூரியின் கணினி வலையமைப்பிலிருந்து அவர்கள் விலக்கப்படுவர்.
அவ்வளவுதான். பிறகென்ன, அவர்களால் பரீட்சைகளில் வெல்லவா முடியும்?
பெரும் எண்ணிக்கையான பல்கலைக்கழக மாணவர்கள் கணினியை பயன்படுத்த ஆரம்பித்தபோது, 1980 களிலேயே இம்மாதிரியான பல்கலைக்கழக கொள்கைகள் ஆரம்பித்தன என்பதை பின்னர் செம்புலன் அறிந்துகொண்டான்.
நல்லவேளையாக அருவி செம்புலனை மாட்டிவிடவில்லை.
"செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே" (நன்றி : குறுந்தொகை)
செம்புலன் அருவிக்கு உதவுவதாக எடுத்த முடிவு அவர்களிருவரும் சேர்ந்து வாழத்தொடங்குமளவுக்கு கதையைக் கொண்டுபோய் விட்டது.
சிறுவர்களாக இருந்தபோது "கொள்ளை" அடிப்பது பற்றி தமக்கு கற்பிக்கப்பட்டவை மீதான கேள்விகளோடு அவர்களின் ஆய்வுப்பயணம் தொடங்கியது. .
காப்புரிமையின் வரலாற்றினைப்பற்றியும் , சோவியத் யூனியனைப்பற்றியும் அதன் "நகலெடுத்தல்" மீதான கட்டுப்பாடுகள் பற்றியும், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மூல அரசியல் யாப்பினையும் கூட அந்தக் காதல் சோடி தேடிப்படிக்க ஆரம்பித்தது. (பிறகு? படிப்பு, தொழில் நேரம் போக, வீட்டிலிருக்கும் மிச்ச நேரங்களில், இரவில் காதலர்களுக்கு வேறு என்ன வேலைதான் இருக்க முடியும்? ;-))
தம்மைப்போலவே மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபையின் நீள் கரங்களைத்தாண்டிப் பறந்து சென்ற மற்றவர்கள் குடியிருந்த நிலவிற்கு அவர்களும் குடிபெயர்ந்தனர். தைக்கோ எழுச்சி 2062 இல் ஆரம்பமானபோது, அண்டந்தழுவிய "படிப்பதற்கான உரிமை" அதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக ஆகியது.
இதையும் படியுங்கள் : தரகு முதலாளிகளின் பிடியில் தமிழ் சினிமா! -தமிழரங்கம்


