இந்தக் காவிரிப்பிரச்சினை, ஹோகனேக்கல் பிரச்சினை எல்லாம் வணிகத் திரைத்துறைக் கலைஞர்களின் தலையீடுகளுடன் மிகப்பிரபலமாகிப்போய்விட்டன.
இதில் பெரும்பாலும் தமிழ்நாடு சார்பான செய்திகளே, ஊடகங்கள் வழியாக மட்டும் இப்பிரச்சினையை அவதானித்துக்கொண்டிருக்கும் எனக்குத் தரப்படுகின்றன.
Sometimes in April படத்தில் ஒரு வசனம் வரும் "Ok, but.. Who are the good guys?" என்று. அப்படித்தான் கேட்கவேண்டும்போலிருக்கிறது. ஆனால் என்னிடமுள்ள இந்தக்கேள்வி, கன்னடக்காரர்களா தமிழ்நாட்டுக்காரர்களா good guys என்பதை அடிப்படையாகக்கொண்டதல்ல.
1. ஹோகனேக்கல் பகுதியில் நிறுவப்படவுள்ள தமிழக அரசின் குடிநீர்த்திட்டத்துக்கு ஜப்பான் பணம் கொடுக்கிறது. இதில் எதிர்காலத்தில் ஜப்பானின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது?
2. இப்போ உள்ளதுபோல நதிநீர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் , ஏதாவது பிரச்சினை வந்தால் சுப்ரீம் கோர்டில் வழக்குப்போடலாம். எல்லோரும் கேட்பதுபோல தேசியமயமாக்கி விட்டால் இப்படி வழக்குப்போட முடியாது. வரலாற்றில் நிறையத்தடவைகள் மத்திய அரசு தமிழ்நாட்டை ஏமாற்றியிருக்கிறது. நாளைக்கு இந்த விசயத்திலும் ஏமாற்றினால் என்ன செய்வது? அதை இப்பவே செய்ய முடியாதா?
3. 21ம் நூற்றாண்டின் உலகளாவிய நன்னீர் அரசியலுக்கும் இப்போது அடிக்கடி வெடிக்கும் இந்திய மாநிலங்களுக்கிடையேயான நன்னீர் முரண்பாடுகளுக்குமிடையேயான தொடர்புகள் என்ன? (நன்னீரை நீலத்தங்கம் என்கிறார்கள். எதிர்கால உலகின் போர்களின் அடிப்படை நன்னீராகத்தான் இருக்கப்போகிறது என்கிறார்கள். இதை வைத்துத்தான் கேட்கிறேன்)
4. நதி நீரைத் தேசிய மயமாக்கு என்ற கோரிக்கை எழுப்பப்பட வேண்டும் என்று எவராவது மறைமுகமாக எதிர்பார்க்கின்றனரா?
5. நதிநீரைத் தேசியமயமாக்கி விட்டால், நாளைக்கு நதிநீரைத் தனியார் மயமாக்கும்போது எழக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே இலகுவாகத் தீர்த்துவிடலாம் என்ற எண்ணம் எவருக்கும் இருக்கிறதா? (தேசியமயமாக்கற் பொருளாதாரக்கொள்கை பின்னர் எவ்வாறு யாருக்கெல்லாம் சேவகம் செய்தது என்பதை நினைவிற்கொள்க)
6. நதிநீர் இணைப்பு, நதி நீர் தேசிய மயமாக்கல் இரண்டும் இந்தியாவின் வளமான எதிர்காலத்துக்கான வழிமுறைகளாகப்போதிக்கப்பட்டு மிகக்கவர்ச்சிகரமாகப் பரப்புரைக்கப்படுகிறதே, இவையிரண்டும் இந்திய மக்களுக்கு நன்மைதருமா அல்லது வேறேதாவது நிகழ்ச்சிநிரலின் எதிர்பார்ப்புக்களா?
7. சேது கால்வாய்த்திட்டத்துக்குள் ராமன் வந்ததுபோல, இந்தப்பிரச்சினையிலும் தமிழர் - கன்னடர் முரண்பாடு தூக்கிக்கொண்டாடப்படுவது அடிப்படைப்பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் சதிவேலையா?
தொலைக்காட்சி, இணையத்தளங்கள் வாயிலாக மட்டுமே உங்கள் நன்னீர்ப்பிரச்சினையை அவதானித்துவரும் ஓர் ஈழத்தமிழனுள் எழுந்த கேள்விகள் இவை.
இதற்கான பதில்களை இப்பிரச்சினைக்கு அண்மையில் இருக்கும், இப்பிரச்சினையின் அரசியலை அணுகி அவதானிக்கும், மக்கள் நிலைச்செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டிருக்கும் அன்பர்கள் மட்டுமே மிகத்தெளிவாகத்தர முடியும்.
கடந்த இரு நாட்களாக இந்தப்பின்னணி அரசியல்கள் குறித்து ஏதேனும் பதிவுகள் வருமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
கர்நாடகாவா தமிழ்நாடா என்பதைத்தாண்டி, திரையுலகத்தினரின் அதிரடிப்பேச்சுக்கள் என்பதைனைத்தாண்டி, தமிழுணர்வு என்பதைத்தாண்டி என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கவில்லை.
தமிழ்சசி, தமிழரங்கம் போன்ற பதிவுகளில் கூட இப்பிரச்சினை பற்றிய அலசல்களைக் கொஞ்சம் எதிர்பார்த்தேன்..
வெங்கட் சொன்னதுபோல எசப்பாட்டுக்களை எதிர்பார்க்கிறேன் :-)
மேலும் படிக்க:
இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து - தமிழரங்கம்