October 24, 2008

(Bharti) Airtel புரட்சி! இலங்கையில்.

இப்பதிவினைக் குரல் வடிவில் கேளுங்கள்:





புலிவருது (மன்னிக்கவும் சிங்கம் வருது) கணக்காக கடந்த ஓராண்டுகாலமாக, எப்ப இங்க Airtel வருது என்பதே இளந்தலைமுறையின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாய் போய்விட்டது.

Tower போட்டுட்டாங்களாம், வேலைக்கு ஆளெடுக்கிறாங்களாம், அலுவலகங்கள் திறந்திட்டாங்களாம், டயலொக் ஓட பேச்சு வார்த்தையாம் எண்டு நாளுக்கு நாள் சூடான செய்திகள் வேறு..

அடுத்தமாதம் அடுத்தமாதம் என்று எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது Airtel வருகை.

தற்போது சடுதியாக இங்குள்ள மற்ற செல்பேசிச்சேவை வழங்கும் நிறுவனங்கள் எல்லாம் அதிரடிக் கட்டணக் குறைப்புக்களைச் செய்ய வெளிக்கிட்டிருப்பது வேறு Airtel பீதியை இன்னும் மோசமாக்குகிறது .

கட்டணங்களை அநியாயத்துக்கு அதிகரித்து வைத்திருந்த மகாராஜாவின் டயலொக் கூட விபரீத (!) விலைக்குறைப்புக்களை தற்போது செய்திருப்பது மொபைல் வழிபாட்டாளர்களாக மாறிவிட்டிருக்கும் எங்கள் இளந்தலைமுறைக்கு தீவிர ஆய்வுக்குரிய விடயமாகப் போய்விட்டது.

Airtel வந்தால் சமாளிக்கிறதுக்குத்தான் இப்பவே கட்டணங்களைக்குறைத்து தயாராகிறாங்களாக்கும் எண்டது அவர்களது முடிவு.

இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் சரிகிறது..

அன்றாடம் ஒருவேளைச்சாப்பாட்டை வாங்கும் சக்தியை பெரும்பாலான மக்கள் இழந்து வருகிறார்கள்..

இலங்கைச் சனத்தொகை முழுமையும் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, சீனி விலை ஏறுகிறது .

பெரும்பகுதி பயன்படுத்தும் பெற்றோலும் விலை ஏறுகிறது.

அநேகமாக அனைவரும் பயன்படுத்தும் மின்சாரக்கட்டணம் ஏறுகிறது.

நகரங்கள் எல்லாமே நம்பியிருக்கும் குழாய் நீரும் ஏறுகிறது.

ஆனால் நாட்டில் மிகச்சிறுபான்மையானவர்களே பயன்படுத்தும் மின்னணுக் கருவிகளும், செல்பேசியும், பொழுதுபோக்குப்பண்டங்களும் மட்டும் ஏன் விலைகுறைந்துகொண்டே வருகிறது?

ஏன்?

அரிசி விலையைக்குறைப்பதைவிட, செல்பேசிக்கட்டணத்தைக்குறைத்து அதன் பாவனையைப் பரவலாக்குவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமா?

அல்லது அரிசியை உற்பத்தி செய்வதை விட உயர் தொழிநுட்பம் பயன்படுத்தப்படும் மின்னணுக்கருவிகளின் உற்பத்திச்செலவு குறைவானதா?

யார்காதில் யார் பூச்சுற்றுகிறார்கள்?

இதற்குப்பதிலைத்தான் எங்கள் தலைமுறை தேடக்காணோம்.


சடாகோபனும் அவரது துணைவியாரும் மேடையேற்றிய உலகமயமாக்கல் குறித்த நடன ஆற்றுகையில் ஒரு காட்சி வரும், பெரிய செல்பேசி ஒன்றை பூப்போட்டு பூசைகாட்டி கண்ணில் ஒற்றி வழிபட்டு "நாக்கியா சாமிக்கு அரோஹரா!" ஊர்வலாமாய் எல்லோரும் தூக்கிக்கொண்டு திரிவார்கள்.

எங்கும் Airtel, எதிலும் Airtel..


அதுசரி, இந்த Airtel என்றால் என்ன?

இந்தக் கம்பனி மீது இப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆர்வமும் எப்படி இலங்கையர்க்கு வந்தது?

ஒருகாலத்தில் இலங்கையில் சீரிய சேவை வழங்கி பின் மூடப்பட்ட கம்பனியா இது?

அல்லது இலங்கை மக்கள் விசுவாசிக்கும் பெருவணிகரின் அடுத்த கம்பனியா இது?

அல்லது மில்க்வைற் முதலாளி Airtel நடத்தப்போறாரா?

யார் இந்த Airtel?

இலங்கையில் முன்பின் யாவாரம் செய்திராத இந்த கம்பனி, இலங்கையின் மற்றக்கம்பனிகளை அச்சுறுத்தவும், மக்களிடம் இவ்வளவு எதிர்பார்ப்பு அலையை தோற்றுவிக்கவும் நிச்சய வெற்றி ஒன்றைப்பெறும் வாய்ப்பினைப்பெற்றுக்கொள்ளவும் கூடியதாக ஆனது எப்படி?

Airtel இன் அந்த மூலதனம் எது?

இந்தக் கேள்விக்கான பதிலைத்தேடும்போது இந்தியாவிலுள்ள பெரிய முதலாளிகளின் வணிக நலனோடு தொடர்புபட்ட இந்திய ஆளும் வர்க்கத்தின் இலங்கை மீதான ஊடக, கலாசாரப் படையெடுப்பினைப் புரிந்துகொள்ள முடியும்.

சிங்கள மக்கள் இந்தி, பொலிவூட் மாய்மாலங்களுக்கூடாகவும், தமிழ் முஸ்லிம் மக்கள் தென்னக சினிமா, தொலைக்காட்சிகளின் ஏமாற்றுக்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டு இந்திய கலாசாரத்திணிப்புக்கு மிக இலகுவாக ஆட்பட்டுவிடுகிறார்கள்.

பொலிவூட் ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும் எல்லாமே மனிதர்களை இலகுவாக சுண்டியிழுக்கும் வணிக உத்திகளை மிகச்சீரான முறையில் பயன்படுத்துகின்றன.

பாலியல் தேவைகள் வன்முறையோடு ஒடுக்கப்பட்டு நோய்க்கூறுகளுடன் நிற்கும் மக்கள் கூட்டத்திடம், போரழிவுகளால், போர்ப் பேரங்களால் நாளும் சுரண்டப்படும் மக்களிடம், மலினமான பாலியல் , மட்ட அரசியல் சரக்குகளை, வெற்று விளையாட்டுச்சரக்குகளைக் கடைவிரித்தபடி இந்த ஊடகங்கள் ஆக்கிரமிப்புப் போர் புரிகின்றன.

இந்த தொலைக்காட்சி ஊடகங்கள் இப்படையெடுப்பைச்செய்வதற்கு பணம் கொடுப்பவர்கள்யார்? இத்தகைய பகட்டு நிகழ்ச்சிகளையும் சினிமா வரைகலை மாய்மாலங்களையும் செய்யச் செலவழியும் காசினை வழங்குபவர்கள் யார்?

இந்தியப் பெரு முதலாளிகளே.

அவர்களுக்கு என்ன லாபம்?

அரை மணிநேர நிகழ்ச்சியைப் பார்க்க உட்கார்ந்து, அதில் 20 நிமிடங்களை விளம்பரம் பார்த்தே தொலைக்கிறோமே... எங்களுடைய நேரம் தான் அவர்களுடைய லாபம்.

எமது நேரத்தைச்சுரண்டி அதனுள் தமது விளம்பரங்களை வலிந்து திணித்து எமது சிந்தனையை அடைத்துக்கொள்ள முடிவதே அந்த முதலாளிகளின் பெரு வெற்றி.

அவர்களது ஊடகப்பொறிகளுக்குள் மாட்டுப்பட்டு , நேரத்தையும் காவுகொடுத்து மூளைக்குள்ளும் அவர்களுக்கு வசதியான போதனைகளை தூக்கிச்சுமந்துகொண்டு அவர்கள் ஆட்டிவைத்த பொம்மைகளாக நாம் அலைகிறோம்.

அவர்கள் திரும்பத்திரும்ப ஆயிரம் முறை போதிப்பதை அப்படியே குடித்து உள்வாங்கி பேச்சிலும் எழுத்திலும் நினைவிலும் கனவிலும் ஒழுகவிட்டுத்திரிகிறோம்.

ஊடகங்கள் வழியான இந்தச் சிந்தனை ஆக்கிரமிப்பு, போதனை எவ்வளவு வெற்றிகரமான யாவார உத்தி என்பதைத்தான், இலங்கையின் தற்போதைய Airtel காய்ச்சல் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறது.

முதலாளிகளின் ஏவற் கூலிகளாக வலம் வரும் ஏ ஆர் ரஹ்மானின், இன்னும் பல கலைஞர்களின் உழைப்பு எல்லாவற்றையும் அழகாய் தொகுத்து கோடிக்கணக்காய் காசைக்கொட்டி திணி திணி என்று எம்மீது திணித்த திணிப்பின் பெறுபேறு, கோடிகோடியாய் விளைச்சல் கொடுக்கப்போகிறது.


கண்ணால் பார்க்கும்படி மிகத்தெளிவாக இந்த ஊடக/கலாசார ஆக்கிரமிப்பின் முற்றுமுழுதான வணிகமுகத்தை விளங்கப்படுத்தியதற்காக, இந்த Airtel காய்ச்சலுக்கு நன்றிகூடச்சொல்லலாம்.

தெற்காசியப்பிராந்தியத்தின் ஏகாதிபத்திய சக்தியான இந்திய ஆளும் வர்க்கத்தின் இலாபப்பெருக்க உத்தியே இவ்வளவென்றால், அந்த இந்தியாவிலேகூட தனது கலாசார ஆதிக்கத்தை நிலைநிறுத்தி சுரண்டிக்கொழுக்கும் உலக ஏகாதிபத்தியங்களின் உத்திகளும் முறைவழிகளும் எவ்வளவு நுணுக்கமாயிருக்கும்? எவ்வளவு கோரமாயிருக்கும்?

கலாசாரக் கலப்பாம், சிறுபான்மைக் கலாசாரங்கள் பொதுப்போக்குக்கு (mainstream) கொண்டுவரப்படுகின்றனவாம்.

ஐயோ ஐய்ய்ய்ய்ய்யோ...

October 21, 2008

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - பரிந்துரைக்கிறேன் பயமுறுத்துகிறேன்.

ஏறத்தாழ ஒராண்டு தள்ளிப்போட்டுக்கொண்டு வந்துவிட்ட பதிவு இது.

கள் வாசகர் வட்டங்களுக்கு இந்நூலைப் படிக்கக்குடுக்குமுன் சிறு குறிப்பொன்றையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பியிருந்தேன்.

இப்போது ஷசீவனுக்கு நூல்தர மறுத்ததற்கு இதைக்காரணமாகச் சொல்லிவிட்டபிறகு இனியும் தள்ளிப்போடும் எண்ணமில்லை. :-)




அவசர வாசிப்புக்கான குறிப்புக்கள்:

* இந்நூல் மிக எளிய முறையில் தமிழில் கதைசொல்லும்பாங்கில் அமெரிக்காவின் கேவலமான அரசியல் பொருளாதார உத்திகளை விளக்கிச்செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது.


* இதே விஷயத்தை சொல்லும் ஏராளம் புத்தகங்கள் உலகில் கிடைத்தாலும், தமிழில் அதுவும் எளிமையாக, மிக அண்மைய சம்பவங்களையும் சேர்த்துக்கொண்டு சொல்வதால் இந்தப்புத்தகம் கவனம் பெறுகிறது.


* ஈக்குவடோர், பனாமா, இந்தோனேஷியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா விரித்த பொருளாதாரச் சிலந்தி வலைப்பின்னலில் முக்கிய பாத்திரங்கள் ஏற்றுப் பங்கெடுத்தவர் என்ற வகையில் ஆசிரியர் தனது சொந்த அனுபவங்களூடாகக் கதையைச்சொல்லும்போது, வெளியிலிருந்து வரும் விமர்சனத்தை விடவும் தாக்கம் மிகுந்ததாக இப்புத்தகம் அமைந்துவிடுகிறது.


* இப்புத்தகத்தை எழுதியவர் கம்யூனிச எதிர்ப்பு நிலை நின்று ஒருவகை நன்மை தீமை, பாவபுண்ணியக் கண்ணோட்டத்தில் எழுதிப்போக முயன்றுள்ளார்.


* கம்யூனிச எதிர்ப்பு மனநிலை கொண்டவரால் இது எழுதப்பட்டாலும் இது முதலாளியத்தை விமர்சிக்கும் தன்மை, தகவல்கள் கவனிக்கத்தகுந்தவை.


* இன்று உலக, நாட்டு நடப்புக்களை அவதானிக்கும் ஒருவர், ஊடகங்கள் சொல்லும் விளக்கங்களுக்கு மேலதிகமான கூர்மையான பார்வையுடன் அவற்றை விளங்கிக்கொள்ளவும், ஒவ்வொரு நடப்புக்கும் பின்னால் பொதிந்திருக்கும் ஏகாதிபத்தியங்களின் கேவல அரசியல்களைக் கண்டுபிடிக்கவும் இப்புத்தகத்தைப்படிப்பது உதவக்கூடும்.


* இப்புத்தகத்துக்கு எதிரான வாதங்களை எவ்வாறு அமெரிக்க அதிகாரபீடம் முன்வைத்திருக்கிறது என்று தேடியபோதுதான் இப்ப்புத்தகத்தைச் சந்தேகப்பட நேர்ந்தது. அமெரிக்க அதிகாரபீடம் பெரிதாக பதிலளிக்க முயலவில்லை. சில மறுப்புக்களோடு நிறுத்திக்கொண்டுள்ளது.


* இப்புத்தகம் அமெரிக்காவின் bestseller ஆக இருக்கிறது. இந்த bestseller கலாசாரம் சந்தேகத்துக்குரியது.


* இப்புத்தகத்தை எழுதியவர் தன்னை மையப்படுத்தி ஒரு சிறு இயக்கம் வைத்துள்ளார். இணையத்தளமும் அதற்குண்டு. அவ்வப்போது செய்தி மடல்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்புகிறார்கள். அவர்களது போதனைகள் பெரும்பாலும் அடிப்படைப்பிரச்சினையான பொருளாதார அமைப்புப்பற்றிய ஆழ்ந்த பார்வையற்று வெறுமனே "நல்ல' அமெரிக்காவைக் கட்டியெழுப்பும் கனவாகவே அமைகின்றது. இவரது குழு சிறு மதபோதகக்குழுபோன்ற எண்ணத்தை என் மனதில் உருவாக்குகிறது.



* இப்புத்தகம் எதை எதிர்க்கிறதோ, அந்த ஏகாதிபத்தியம் தன்னை ஓர் எதிர்க்க முடியாத பூதமாகவும், தோற்கடிக்கப்படவே முடியாத பெரும் சக்தியாகவும் கட்டமைக்க இதே புத்தகத்தைப் பயன்படுத்தக்கூடும்.


* அதாவது, அமெரிக்கா எங்கும் எதற்கும் தன் பலம் மிக்க கேவலமான அரசியலைப் பிரயோகிக்கும். எனவே அமெரிக்காவை சிறு குழுக்களாக எதிர்தல் எல்லாம் சாத்தியமில்லை. அப்படியே நீங்கள் எதிர்த்தாலும் அமெரிக்கா அதைச்சுலபமாக அடக்கி ஒடுக்கிவிடும். எனவே செய்ய ஒன்றுமில்லை, எங்கள் வாழ்க்கைமுறைய சீர்படுத்தி, அமெரிக்காவிற்கான கண்டனத்தோடு அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருவதே நாம் செய்யச்சாத்தியமான ஒன்று என்ற மனநிலையை இப்புத்தகம் வாசகரிடம் தோற்றுவிக்கக்கூடும்.


* இவ்வாறான சந்தேகங்கள் இருப்பினும், வெகுமக்கள் ஊடகங்களால் பொய்யாக கட்டமைக்கப்படும் பிரசாரங்கள், விளக்கங்களுக்கு அடிமையாகியிருக்கும் வாசகர், தன்னைச்சுற்றி நடப்பவற்றின் பின்னணி பற்றிய ஓரளவு தெளிவான பார்வைபெற இப்புத்தகம் உதவும் என்பதால் அவர் இதனைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.


* அமெரிக்க ஏகாதிபத்தியதின், முதலாளித்துவத்தின் உண்மை முகம் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை புதிய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த புத்தகத்தை பயன்படுத்தலாம். அதுவே இந்தப்புத்தகத்தின் சிறப்பு. ஆனால் இப்புத்தகத்தை அவதானத்துடன் அணுகும்படி வாசகர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.


* வெளியிட்ட விடியலுக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் நன்றி.


* இன்றைய சூழலில், இந்தியா ஈழத்தின்மிது நிகழ்த்திய இராஜதந்திர கொடூரங்களுக்குப் பின்னாலுள்ள இந்திய அதிகார வர்க்கத்தின் பொருளாதார நலன் குறித்து "உள்ளிருந்து" எழுதப்பட்ட இலகுதமிழ் ஆவணம் வருவது வரவேற்கத்தக்கது.



ஜான் பெர்க்கின்ஸ்

தமிழில்: இரா. முருகவேள்

விடியல் பதிப்பகம்

விலை ரூ 150


கிடைக்குமிடம்

கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367


கள் வாசகர் வட்டத்துக்கான விரிவான குறிப்பினை கள்ளுக்கு பின்னர் அனுப்புவதாய்த் திட்டம்.



இந்நூல்பற்றி மேலும் தமிழில்:

October 17, 2008

இருக்கிற தண்ணியை எங்கே இறைப்பது? - உத்தமம் அமையத்துக்கு - கணிநீதிக் கதைகள்

== நடந்த கதை ==


சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசொஃப்ட் நிறுவனம் பாஷா இன்டியா என்றொரு திட்டத்தை அறிவித்து அதற்கெனத் தமிழில் ஒரு சமுதாயச் சொல்லகராதி உருவாக்கும் பணியில் இறங்கியது.

இச்சொல்லகராதித் திட்டத்திற்கு மாலன் மட்டுறுத்துனராக இருந்தார்.

எமது தமிழ்ச்சமுதாயத்துக்கென ஒரு கணிச்சொல்லகராதியை அமைக்க மைக்ரோசொஃப்ட் உதவுகிறதென்றும், இதற்கு சமுதாய நன்மை கருதி நாம் தன்னார்வ உழைப்பினை வழங்கவேண்டுமென்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டது.

இதற்கு உழைக்கும் தன்னார்வலர்களுக்கு மைக்ரோசொப்ட் சில உறுதிமொழிகளை வழங்கியது.

இப்படிச் சமுதாயத்தன்னார்வ உழைப்பால் உருவாகப்படும் சொற்கள் சமுதாயம் எப்போதும் பயன்படுத்தத்தக்கதாயிருக்கும் என்றும் இச்சொல்லகராதியை வைத்து உருவாக்கப்படும் வின்டோஸ் தமிழ் இடைமுகப்பு மொழியாக்கப்பொதியானது என்றென்றைக்கும் இலவசமாகவே வழங்கப்படும் என்றும் அவ்வுறுதி மொழிகள் கூறின.

தமிழுக்கு தொண்டாற்றும் புளகாகிதத்துடனும் இளைஞனுக்குரிய உற்சாகத்துடனும் என்னிடம் வீட்டில் இணைய இணைப்பு இல்லாத நிலையில், உலாவு நிலையத்தில் காசு செலவழித்து இத்திட்டத்தில் பங்களிக்கத்தொடங்கினேன்.

சிறந்த பங்களிப்பாளர் என்று பாஷா இன்டியா எனது பெயரையும் பட்டியலிட்டு வைத்திருக்கிறது


கடைசியில் பணிகள் முடிவடந்தது. இடைமுகப்புப்பொதியும் இலவசமாகவே வழங்கப்பட்டது.

ஆனால் இன்றுவரை ஆசைக்குக்கூட ஒருமுறை ஒரு வின்டோஸ் கணினியில் என்னால் அந்த பொதியை நிறுவிப் பார்க்க முடியவில்லை. அப்பொதி மைக்ரோசொஃப்டுக்கு காசுகொடுத்து வாங்கப்படாத வின்டோசில் இயங்காது. எனக்குத்தெரிந்தவர்களெல்லாம் பக்கத்துக்கடைக்கு நூறு ரூபா கொடுத்து வின்டோஸ் வாங்கிப் பயன்படுத்துபவர்களே.

அன்றுதான் முதல் தடவையாக வாழ்க்கையில் தன்னார்வ உழைப்பினை பெரு நிறுவனமொன்று தனது இலாபப்பெருக்கத்துக்கு எவ்வளவு இலாவகமாகச் சுரண்டும் என்பதைப் பட்டறிந்தேன்.

இச்செயற்றிட்டம் நடந்துகொண்டிருந்த போதே அதன் சுரண்டல்தன்மையை பலர் மடற்குழுக்களில் தீவிரமா எதிர்த்தனர். எதிர்ப்புக்கள் பதிவாகியுள்ளன. அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

இதுபற்றி முத்து நெடுமாறன் அவர்களை நேரில் சந்தித்தபோது கேட்டிருந்தேன்.

அவர், வலிய பெரும் நிறுவனமொன்று இவ்வாறான மொழி-இடைமுகப்பு ஒன்றை வெளியிடும்போது அது வெகுமக்கள்மத்தியில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும், ஒரு நிறுவனம் ஓரளவு தாண்டி பெரிதாகும்போது அதற்கு இயல்பாகவே சமூகத்தின் மீது அக்கறை கொள்ளவேண்டிய தேவை உண்டாகுமென்றும், அவ்வாறானதொரு தேவையே இச்சமுதாயக் கலைச்சொல்லாக்கத்திட்டத்தை நோக்கி மைக்ரோசொஃப்டைக் கொண்டுவந்திருக்கிறதென்றும் பதிலளித்ததாக நான் புரிந்துகொண்டுள்ளேன்.

பின்னர் நானும் க்னூ லினக்சுக்கு மாறிவிட்டேன். இடைமுகப்புத்தமிழாக்கமெல்லாம் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அழகாக நடந்துகொண்டிருக்கும் சூழலுக்குள் வந்துவிட்டேன். மைக்ரோசொஃப்டின் சமுதாயச்சொல்லகராதியை மறந்தும்போனேன்.




== தற்போது கதைக்கும் கதை ==



கூளிளின் மொழிபெயர்ப்புக்கருவி ஹிந்திக்கு வந்துவிட்டது. தமிழுக்கு கூகிள் ஒரு மொழிபெயர்ப்புக்கருவியை உருவாக்கவேண்டும் என்பதும், அதற்கான முயற்சியையும் உழைப்பையும் நாம் ஆரம்பிக்க வேண்டும் என்பது உத்தமம் மடற்குழுவுக்கு கல்யாணால் எழுதப்பட்ட ஒரு மடலின் சாரம்.

Sure. Google could build a Tamil system, as long as they can get
enough Tamil parallel data.


If you have lots and lots of parallel Tamil data, where lots probably
equals millions of documents, then you can help Google by providing
that data. I think there's a link to do that on the FAQ.

Google in fact is soliciting help from general public to extend the
number of languages they can include in their translator. Anyone
can sign up via their webpage


பிறகு மயூரனால் அங்கு அளிக்கப்பட்ட பதில்

கூகிளில் தமிழ் மொழிபெயர்ப்பு வசதி உருவாகுவது சிறப்பானதே.
ஆயினும், அது கட்டுப்பாடுகளற்றதாக, அதன் செயற்பாடுகளை மற்றவர் கற்கக்கூடியதாக, தமது வேறு செயலிகளில் நிபந்தனையற்றுப் பயன்படுத்தக்கூடியதாக இருக்குமானால் மேலும் சிறப்பு.

கூகிளின் இவ்வசதி கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்குமானால், எமது கூட்டுழைப்பினை கூகிளுக்கு மாற்றாக கட்டற்ற வேறொரு மொழிபெயர்ப்புக்கருவியை உருவாக்குவதற்கு செலவிடுவது தமிழ்ச் சமூகம் முழுமைக்கும் நன்மை தரும்.

அல்லாது விட்டால் கூகிள் இதற்கென நிரலாளர்களுக்கும் பங்குபற்றிவோருக்கும் சம்பளம் வழங்க வேண்டும்.

இலவச உழைப்பினை, எமக்கு தன்னார்வலர்கள் பற்றாக்குறையாக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மூடப்பட்ட தொழிநுட்பம் ஒன்றுக்கு வழங்குவது எவ்வகையிலும் நன்மை தராது.

இவ்விடயத்தைக் கவனத்திற் கொள்ளும்படி வேண்டுகிறேன்.



தோழமையுடன்
மு.மயூரன்




இதற்கு அடுத்தடுத்து தரப்பட்ட பதில்களை இங்கே தொகுக்காமல் விடுவது நீளமான விவாதங்களை இந்தப்பதிவில் தவிர்ப்பது சொல்ல வந்த விசயத்தில் கவனம் குவிப்பதற்காகவே. இலவசம் - பன்னாட்டுக்கம்பனிகள் - சமூக உழைப்பு தொடர்பாக உரையாட வேறொரு பதிவை பின்னர் துணைகொள்கிறேன்.



நான் உங்களுக்கு இப்போது மூன்று வெவ்வேறு கற்பனைக் கதைகளைச் சொல்கிறேன்.


== கதை எண் 1 ==


2008ம் ஆண்டுவாக்கில் உலகத்தில் கூகிள் என்றொரு இணையக்கம்பனி இருந்தது.

அக்கம்பனி ஏறத்தாழ தனது எல்லாச்சேவைகளையும் இலவசமாகவே வழங்கிவந்ததோடு, அதன் மூலமாக இலாபம் சம்பாதிக்கும் உத்திகளைக் கண்டறிந்து கையாண்டு வெற்றிகரமாக இயங்கி வந்தது.

ஆணைமூலத்தை மக்களுக்கு வெளிப்படையாகவும் இலவசமாகவும் கட்டற்றும் வழங்கும் ஏராளமான மென்பொருட்களை கூகிள் தயாரித்து வழங்கிவந்ததுடன் அவ்வாறான பிற திட்டங்களுக்கு பண உதவியும் வழங்கி வந்தது.

இதனால் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பினை அந்நிறுவனம் சம்பாதித்திருந்தது.

அக்காலகட்டத்தில் தமிழ் என்றொரு மொழியும் அதைப்பயன்படுத்தும் சிலகோடி மக்களும் உலகில் இருந்தனர்.

அம்மக்களிடையே ஒப்பீட்டளவில் பொது வேலைகளில் ஆர்வம் காட்டக்கூடிய மென்பொருள் நிரலாளர்கள் குறைந்தளவே இருந்தனர்.

கூகிள் நிறுவனம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு உரைப்பகுதிகளை மொழிபெயர்க்கும் கருவி ஒன்றைச் செய்து வைத்திருந்தது. அதை இலவசமாக எல்லோரும் பயன்படுத்தவும் அனுமதித்திருந்தது. ஆனால் அக்கருவி இயங்கும் முறை, அதன் மூல நிரல் என்பவற்றை எவரும் பார்க்க முடியாவண்ணம் மூடி வைதிருந்தது.

மூல நிரலினை திறந்து வைத்திருந்த, இயங்கும் முறையை எவரும் கற்க வாய்ப்பளித்திருந்த சில தன்னர்வத்திட்டங்களும் உலகில் இதே பணியைச்செய்ய முயன்றுகொண்டிருந்தன. ஆனால் அவை கூகிளின் கருவி அளவுக்குச் சிறப்பானதாக இருக்கவில்லை.

தமிழர் என்ற இந்த மக்களுக்கு ஒரு மொழிபெயர்ப்புக்கருவி நீண்டகாலமாக அவசியமாக இருந்தது.

தமிழர் மத்தியில் இவ்வாறான தொழிநுட்ப விடயங்களை முன்னெடுத்துச்செல்வதற்கென அமைக்கப்பட்டிருந்த செல்வாக்கு மிக்க "உத்தமம்" என்ற நிறுவனம் இம்மொழிபெயர்ப்புக்கருவி உருவாக்கத்தில் ஆர்வம் காட்டத்தொடங்கியது.

அப்போது கூகிள் நிறுவனம் தனக்கு சில தன்னார்வலர்களின் உழைப்பை இலவசமாகத் தந்துதவினால் தமிழுக்கான மொழிபெயர்ப்பு வசதியையும் தனது மொழிபெயர்ப்புக்கருவியில் சேர்ப்பதாக வாக்களித்தது.

உத்தமம் நிறுவனம் கொஞ்சம் அமைதியாக, கணினிக்கு முன்னாலிருந்த தனது கதிரையை சற்றே பின்னகர்த்தி தலைசாய்த்து கண்கள் மூடி யோசித்தது.


மூல நிரல்களை, இயங்கும் முறையினை வெளிப்படையாக, மக்களுக்குச்சொந்தமாக வழங்கும் மொழிபெயர்ப்புக்கருவிகளோ அரைகுறையாகவே வேலை செய்கின்றன. கூகிளின் கருவி நேர்த்தியாய் இயங்குகிறது. கூடவே அது இலவசம் வேறு.

எவ்வளவு பெரிய கம்பனி எம்மையும் மனிதராய் மதித்து உதவவேறு முன்வந்திருக்கிறது. வாய்ப்பை விடலாமா?

உடனடியாக செயற்றிட்டம் ஒன்றை அறிவித்தது அந்த செல்வாக்கு மிக்க நிறுவனம்.

"தமிழின் அதி சிறந்த நிரலாளர்களும், மொழிவல்லுனர்களும் வாருங்கள்.. கூகிளுக்கு உதவுவோம், அவர்களுக்கு எமது தன்னார்வ உழைப்பை வழங்குவோம். தமிழுக்கென நல்ல மொழிபெயர்ப்புக்கருவியை உருவாக்குவோம்!"

ஒரு சில குரல்கள் இத்தீர்மானத்துக்கெதிராக ஏதோ முணுமுணித்தபோதும், அவற்றை "conservative" அலட்டல்கள் என்று புறம்தள்ளியவாறு உத்தமம் தன் மகத்தான திட்டத்தினை முன்னெடுத்தது.

தமிழ் மிக நேர்த்தியான, திறன் மிக்க மொழிபெயர்ப்புக்கருவி ஒன்றினைப் பெற்றுக்கொண்டது.
எல்லா இடங்களிலும் கொண்டாட்டம்.. வாழ்த்துக்கள் வந்து குவிந்தன, வலைப்பதிவுகள் இரவிரவாய்க் குறிப்பெழுதின...

கூகிளின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. கூகிள் மிகப்புனிதமான இடத்தினை தமிழர் மனங்களில் பெற்றுக்கொண்டது.


== கதை எண் 2 ==

(கதை 1 இனைப்படித்தால் மட்டுமே இக்கதையின் சம்பவங்களைப்புரிந்துகொள்ள முடியும்)

2008ம் ஆண்டு வாக்கில் உத்தமம் நிறுவனத்துக்குத் தமிழுக்கென்றொரு மொழிபெயர்ப்புக்கருவியை உருவாக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

அக்காலத்தில் கூகிள் யாஹூ எனும் இரு புகழ்பெற்ற இணையக் கம்பனிகள் இலவசமாக மொழிபெயர்ப்புக்கருவிகளைச்செய்து மக்கள் பயன்படுத்த வழங்கியிருந்தன.

மூல நிரலினை திறந்து வைத்திருந்த, இயங்கும் முறையை எவரும் கற்க வாய்ப்பளித்திருந்த சில தன்னர்வத்திட்டங்களும் உலகில் இதே பணியைச்செய்ய முயன்றுகொண்டிருந்தன. ஆனால் அவை கூகிளின், யாஹூவின் கருவிகள் அளவுக்குச் சிறப்பானதாக இருக்கவில்லை.

தமிழர் என்ற இந்த மக்களுக்கு ஒரு மொழிபெயர்ப்புக்கருவி நீண்டகாலமாக அவசியமாக இருந்தது.

ஆனால் அவ்வினத்திடம் தன்னார்வமாக இதனைச்செய்யக்கூடியவர்களாக இருந்த வல்லுனர்கள் மிகச்சொற்ப அளவிலேயே இருந்தனர்.

அப்போது கூகிள் நிறுவனம் தனக்கு சில தன்னார்வலர்களின் உழைப்பை இலவசமாகத் தந்துதவினால் தமிழுக்கான மொழிபெயர்ப்பு வசதியையும் தனது மொழிபெயர்ப்புக்கருவியில் சேர்ப்பதாக வாக்களித்தது.

கூகிள் இவ்வாறான சலுகை ஒன்றை வழங்க முன்வந்திருப்பதுபற்றி உத்தமம் அறிவித்தபோது சில ஆர்வலர்கள் வேறு மாதிரி கருத்துச்சொன்னார்கள், கூகிளை விடுத்து தொழிநுட்பத்தைத் திறந்து வழங்கும் திறந்தமூலத்திட்டங்களில் பங்களித்து மொழிபெயர்ப்புக்கருவியை உருவாக்கும்படி அறிவுரை சொன்னார்கள்.

உத்தமம் நிறுவனம் கொஞ்சம் அமைதியாக, கணினிக்கு முன்னாலிருந்த தனது கதிரையை சற்றே பின்னகர்த்தி தலைசாய்த்து கண்கள் மூடி யோசித்தது.

மூல நிரல்களை, இயங்கும் முறையினை வெளிப்படையாக, மக்களுக்குச்சொந்தமாக வழங்கும் மொழிபெயர்ப்புக்கருவிகளோ அரைகுறையாகவே வேலை செய்கின்றன. கூகிளின் கருவி நேர்த்தியாய் இயங்குகிறது. கூடவே அது இலவசம் வேறு.

உத்தமம் தானொரு பொது நிறுவனம் என்ற அடிப்படையில், திறந்த மூலமாக, மக்கள் உடைமையாக இதே பணியைச்செய்யும் திட்டங்கள் இருக்க, நிரலையும் தொழிநுட்பத்தையும் மூடிவைக்கும் வணிக நிறுவனத்தை தெரிவு செய்ய முடியாது என்ற தார்மீக உண்மையை உணர்ந்தது.

"முற்போக்காக" சிந்தித்து கருத்துச்சொன்னவர்களை ஆதரித்துக்கொண்டு உள்ளதில் சிறந்த திறந்தமூல, கட்டற்ற செயற்றிட்டம் ஒன்றுக்கு ஆதரவளித்து அதனோடு சேர்ந்து உழைத்து தமிழுக்கான மொழிபெயர்ப்புக்கருவியை உருவாக்க வருமாறு அனைவரையும் அழைத்தது.

செல்வாக்கு மிக்க உத்தமத்தின் அழைப்பை ஏற்று சிறந்த நிரலாளர்களும் மொழிவல்லுனர்களும் கூடி உழைக்க முன்வந்தனர். உத்தமம் தன் மகத்தான திட்ட்டத்தினை முன்னெடுத்தது.

தமிழ் மிக நேர்த்தியான, திறன் மிக்க மொழிபெயர்ப்புக்கருவி ஒன்றினைப் பெற்றுக்கொண்டது.
எல்லா இடங்களிலும் கொண்டாட்டம்.. வாழ்த்துக்கள் வந்து குவிந்தன, வலைப்பதிவுகள் இரவிரவாய் குறிப்பெழுதின...



== கதை எண் 3 ==



கதை எண் 1 இனூடாக 2013ம் ஆண்டுக்கு ஒரு இருபது வயது மதிக்கதக்க இளைஞன் இப்பொழுதுதான் வந்து சேர்ந்துவிட்டிருந்தான் . அங்கு ஏற்கனவே கதை எண் 2 இனூடாக வந்து சேர்ந்திருந்த அந்தச்சின்னப்பெண் அவனை நட்பாய்ப்புன்னகைத்து அழைத்துத் தன்னருகில் இருத்திக்கொண்டாள்.


இவன் தன்னைச்சற்றே நாகரிகமாக அறிமுகப்படுத்திக்கொள்வதாக நினைத்து ஆங்கிலத்தில், தன்னைபப்ற்றியும் கதை எண் 1 இனூடாக தான் வந்த விபரங்கள் குறித்தும் சிறு அறிமுக உரை ஆற்றினான் ;-)

சில செக்கன்கள் அவள் தன் செல்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பதிலெதுவும் சொல்லவில்லை. பையனுக்கு முகம் வாடிப்போன நேரத்தில், அவன் சொன்ன வார்த்தைகளை அழகாக தமிழில் மொழிபெயர்த்து அவளது செல்பேசி சொல்லத்தொடங்கியது.

போதாக்குறைக்கு அவள் தமிழில் தன்னை அறிமுகப்படுத்த அந்தச்செல்பேசி அவனுக்கு ஆங்கிலத்தில் அதனை மொழிபெயர்த்துச்சொல்லிக்காட்டியது..

அவள் தன் தெளிந்த கருநிற முகத்தில் வெண்கண்கள் மின்னக் குறும்பாய்ச் சிரித்தாள்.

இதெப்படி சாத்தியம்? நான் கதை எண் 1 இனூடாக பயணத்தை ஆரம்பிக்க சற்று முன், ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்னர்தானே தமிழில் மொழிபெயர்ப்புக்கருவியொன்றினையே கூகிள் வெளியிட்டது. அதற்கிடையில் இவ்வளவு வளர்ச்சியா?

எனது பாடசாலைச்செயற்றிட்டத்துக்கென சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்புக்கருவி ஒன்றினைக்கூட என்னால் அமைக்க முடியாமபோனது. மொழிபெயர்புக்கருவிகளை எப்படி நேர்த்தியாக இயங்கவைப்பது என்று எனக்கு புரியவில்லை. கூகிள் நிறுவனம் தனது கருவி இயங்கும் முறை, அதன் நிரல்கள் பற்றி விலாவரியாக எங்குமே குறிப்பிடாததால் முதலிலிருந்து எல்லாவற்றையும் நான்தான் உருவாக்க வேண்டி இருந்தது, முடியாமல் திட்டத்தையே கைவிட்டு விட்டேன்.

இருந்த ஒரு சில திறந்த மூலக்கருவிகளும் ஆதரிப்பார் இன்றி விருத்தி பெறாமல் நின்று விட்டன.

ஐந்து வருடங்களுக்கு முன் கூகிளுக்கு நிரலெழுதிக்கொடுத்த தன்னார்வலர்களில் சிலர் இறந்தும் போனார்கள்.

உங்களிடம் இவ்வளவு நவீன கருவி எப்படி வந்து சேர்ந்தது?


ஆச்சரியமாய் நெற்றியைச்சுருக்கிக்கொண்ட அந்தப்பெண், தன் கணீரென்ற குரலில்,

ஒ.. கதை எண் 1 இல் இப்படித்தான் கடைசியாய் நடந்ததா?

கதை எண் 2 இனூடாக நான் பயணத்தை ஆரம்பித்தபோது மொழிபெயர்ப்புக்கருவி ஒன்றினை திறந்த மூலமாக அக்காலத்திலிருந்த உத்தமம் நிறுவனத்தின் ஆதரவில் சில தமிழ் வல்லுனர்கள் வெளியிட்டிருந்தார்கள்.

வேறு பல மொழிகளையும் சேர்ந்த ஆர்வலர்கள் அத்திட்டத்தில் இணைந்து நிரல்களையும் தொழிநுட்பத்தையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்ததும் அத்திட்டம் சூடுபிடித்து அதிவேகமாக வளரத்தொடங்கிவிட்டது.

தமிழ் வல்லுனர்கள் வேறு வேலைகள்பார்க்கப்போன பின்பும் சிலர் இறந்த பின்பும் பிற மொழிகளைச்சேர்ந்தவர்கள் அக்கருவியின் அடிப்படை இயந்திரத்தினை மிக நேர்த்தியாக வளர்த்தெடுத்து விட்டனர். பின்னர் பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டிருந்த தமிழ் மாணவிகளும் மாணவன்களும் ஏற்கனவே விருத்தியாகிக்கொண்டிருந்த நிரல்களைப்பெற்று கற்றுக்கொண்டு புதுப்புது உத்திகளைப்பயன்படுத்தி தமிழ் மொழிபெயர்ப்புக்கருவியை இன்னும் நேர்த்தியாக வளர்த்தெடுத்துக்கொண்டனர்.

இப்பொழுது பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும் எனது காதலன் தன் நண்பர்களோடு சேர்ந்து முக்கியமான வேலை ஒன்றைச்செய்தான். ஏற்கனவே வேறு சிலரால் திறந்த மூலமாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் குரல் உணரும் இயந்திரத்தை இம்மொழிபெயர்ப்பு இயந்திரத்தோடு இணைப்பதற்கான நிரல்களை எழுதி இரு திட்டங்களோடும் பகிர்ந்துகொண்டான். இதற்கு சீன, ஈரானிய மாணவர்களும் அவனுக்கு உதவியிருந்தனர்.

நான் இப்போது என் பல்கலைக்கழகத்தின் ஒப்படை ஒன்றுக்காக, லினக்ஸ் கருனியில் இயங்கும் செல்பேசியொன்றில் மொழிபெயர்ப்புக்கருவி, குரல் உணரி ஆகியவற்றை ஒன்றிணைத்து மக்கள் பயன்பாட்டுக்கான மின்னணுக்கருவி ஒன்றினை செய்துமுடித்திருக்கிறேன்.

என்னோடு படிக்கும் வேறு மொழி மாணவர்களும் என்னிடம் நிரல்களைப்பெற்றுக்கொண்டு தத்தமது மொழிகளுக்கென இவ்வாறான கருவிகளை உருவாக்கத்தொடங்கிவிட்டனர்.

நான்கு வருடங்களுக்கு முன்னரே சிறீலங்காவின் மாணவர் குழு ஒன்று உத்தமத்தால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புக்கருவியின் நிரல்களிலிருந்து சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்புக்கருவியை செய்து விட்டதே?

இந்தச்சேதி உங்களுக்கு தெரியவரயில்லையா?

என்னசெய்வதென்று தெரியாமல் இவ்வளவு நேரமும் தன் மடிக்கணினியைத்திறந்து வைத்திருந்தபடி கதை கேட்ட அவன் ,

ஆங்கிலம் வழியாகவன்றி நேரடியாக சிங்களத்திலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்புக் கருவியை கூகிள் வெளியிட வேண்டியதன் அவசியம் குறித்து தான் எழுதி வைத்திருந்த வலைப்பதிவு இடுகை ஒன்றினைப் பரிதாபமாக உருட்டி உருட்டிப் பார்த்துகொண்டிருந்தான்.



== சில தொடுப்புக்கள் ==

ரவிசங்கருடனான உரையாடல் : வணிக நிறுவனங்களுக்குத் தன்னார்வ உழைப்பைத் தருவது சரியா?

திறந்த மூல மொழிபெயர்ப்புச்செயலி 1
திறந்த மூல மொழிபெயர்ப்புச்செயலி 2




== குறிப்பு ==

மைக்ரோசொஃப்ட் போன்றே கூகிளும் ஒரு பன்னாட்டு வணிக நிறுவனம்.

ஆனால் மைக்ரோசொஃப்ட் மரபான பழைய வணிக உத்திகளை இணைய உலகில் கையாண்டு வரும்போது கூகிள் இக்காலத்துக்குரிய வளர்ச்சியடைந்த உத்திகளைப் பயன்படுத்தி காசு உழைக்கிறது.

இந்த வளர்ச்சியடைந்த உத்தி, வளர்ச்சியடையும் எதனையும்போன்று இடைக்காலத்தில் ஏற்பட்ட மக்கள்சார்பு எதிர்ப்புக்களை உள்வாங்கி ஓரளவு தன்னைத் திருத்திக்கொண்ட வடிவமாக
அமைகிறது. (முதலாளியம் தனது சாகும் கட்டங்களை, கம்யூனிசத்தை உள்வாங்கியபடி வெற்றிகரமாக் கடந்து வந்ததை இங்கே சும்மா நினைத்துக்கொள்ளலாம்)

இக்காரணத்தினால்தான் எவரும் மைக்ரோசொஃப்டை எதிர்க்குமளவு கூகிளை எதிர்க்க மினக்கடுவதில்லை. நானும் கூட சுருதி குறைத்தே மடலாடவும் இப்பதிவை எழுதவும் முனைகிறேன்.

October 12, 2008

தமிழில் ஒரு கோட்பாட்டு நூல் - கட்டற்ற மென்பொருள்

மரபான சுரண்டல் முறைகளுக்கு மேலதிகமாக, புதுப்புது வழிமுறைகளையும் கண்டுபிடிப்புக்களையும் கையிலெடுத்துக்கொண்டு மற்றவரையும் இயற்கையையும் சுரண்டிப்பிழைப்பவர்கள் தம்மால் நிறுவப்பட்ட அதிகார அமைப்புக்களின் துணையுடன் எம்மை நோக்கி வந்தவண்ணமே இருக்கிறார்கள்.

நிலம், நீர், அறிவு இவற்றை வணிகப்பண்டங்களாக மாற்றிக் கைப்பற்றிச் சுரண்டும் மிகத் திறமையான வியூகங்களை வகுத்துக்கொண்டு தற்போது (1994 வாக்கில் இருந்து) இவர்கள் எம்மிடம் வருகிறார்கள்.

இப்புதிய வியூகங்களை எதிர்கொள்வதற்கான மக்கள் சார்புக் கோட்பாடுகளும் செயற்பாடுகளும் ஒன்றிலிருந்தொன்று தம்மை உற்பத்தி செய்துகொண்டு போராட்டக்களத்தில் இறங்கவும் தொடங்கிவிட்டன.

இந்தப்புறநிலையில் மின்னணுத்தொழிநுட்பம் உலகின் எல்லா இயக்கங்களிலும் தன்னைப்புகுத்தி வியாபித்து வரும் நேரத்தில், தகவற் தொழிநுட்பம் தகவல் தொடர்பாடல் யுகத்தினை நிகழ்த்திக்காட்டிக்கொண்டிருக்கும் வேளையில் மின்னணுத்தொழிநுட்ப உலகில் நிகழும் சுயநலச்சுரண்டல் போக்குகளுக்கெதிரான கோட்பாடுகளும் இயக்கங்களும் தம்மைக் காலத்தேவைகளின் உந்துதலில் உற்பத்தி செய்துகொண்டுள்ளன.



இப்புதிய போக்குகள் முற்போக்காளர்களால் கண்டெடுக்கப்பட்டு தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டே வந்துள்ளன.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் பெரும் பகட்டான வணிக ஜாலங்களாகவே இளைஞர்களுக்கும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் முற்றிலும் வணிகமயப்படுத்தப்பட்ட நசிவுச்சூழலில் இத்தகைய முற்போக்கான கோட்பாடுகள் கண்டெடுக்கப்படுவதும் புரிந்துகொள்ளப்படுவதும், அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான அடிப்படையாகக்கொள்ளப்படுவதும் மிக அரிதானதே.



அதீத சுயநலச்சுரண்டலை எதிர்த்து உருவான க்னூ/லினக்ஸ் போன்ற கட்டற்ற மென்பொருட்கள், விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் போன்றன மிகப்பெருமளவானவர்களால் பயன்படுத்தப்பட்டும் விருபப்பட்டும் வருகின்றபோதும், அவற்றின் பின்னாலுள்ள கோட்பாடு, அரசியல் பற்றிய அறிவு மிகச்சிறிதளவானவர்களிடமே இருக்கிறது.

கட்டற்ற மென்பொருட்களை மிகவிரும்பிப்பயன்படுத்தும் நண்பர்கள் எத்தனையோ பேருக்கு தாம் பயன்படுத்தும் பொருட்களின் பின்னாலுள்ள அரசியல் தெரிந்திருப்பதில்லை. அரசியல் பற்றிய அக்கறை இல்லாதபோது அவர்களைச் சுரண்டலாளர்கள் இலகுவில் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.


இவ்வாறான சூழலில் என்னுடைய வயதொத்தவராக கட்டற்ற மென்பொருட்களின் கோட்பாட்டுத்தளத்தினை, அரசியலினை நன்கு புரிந்துகொண்டு, அது சார்ந்த இயக்கத்திற்கென தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தமிழகத்தில் இயங்கிவரும் ஆமாச்சு என்று நாம் செல்லாமாக அழைக்கும் ம. ஸ்ரீ ராமதாஸ் மிகுந்த நிறைவையும் பெருமையையும் தருகிறார்.

அவரது பெரும் உழைப்பில் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் முதன்மைக் கோட்பாட்டாளரான ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களின் முக்கியமான கட்டுரைகள் சில தமிழாக்கம் செய்யப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.



மிகச் சிறப்பான வடிவமைப்புடன் இந்நூலினை ஆழி பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இந்நூல் கொண்டுள்ள கட்டுரைகள் அனைத்தும் கட்டற்றது.

இணையத்தில் நீண்டகாலமாக கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பான கோட்பாட்டு விஷயங்கள் பலராலும் எழுதப்பட்டே வந்துள்ளது, அவ்வபோது சிறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன.

ஆனாலும் நூலுருவில், கட்டற்ற மென்பொருள்களின் பின்னாலுள்ள கோட்பாட்டு விளக்கத்தினை அளிக்கக்கூடிய வகையில் முழுமையான ஆவணமொன்று கிடைப்பது மிக மிக இன்றியமையாதது.

கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய நூலொன்றின் தேவை கொதிநிலையை அடைந்துவிட்டிருந்தது. ஆமாச்சு தனது உழைப்பினைச்சரியான நேரத்தில் செலுத்தி அத்தகைய நூலினைக்கொண்டுவரும் தனது கடமையை நன்கு செய்து முடித்திருக்கிறார்.


ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படும் நூலொன்று, அதிலும் கோட்பாட்டு விடயங்களடங்கிய நூலொன்று கொஞ்சம் இடக்கு முடக்கான இயல்பற்ற மொழிநடையைக் கொண்டிருப்பது தவிர்க்கச் சிரமமானதே.

ஆமாச்சு கூடியவரை இத்தகைய இயல்பற்ற மொழியைக் களைய முயன்றிருக்கிறார், கூடவே தமிழ்ச்சூழலோடு ஒத்திசையக்கூடிய வகையில் மொழியாக்கத்தினை செய்ய முயன்றிருக்கிறார்.

எடுத்துக்காட்டாக ஸ்டால்மனின் வரிகளை இவர் மொழியாக்கியிருக்கும் சில பகுதிகளைப்பாருங்கள்,

proprietary software rejects their thirst for knowledge: it says, “The knowledge you want is a secret—learning is forbidden!”

தனியுரிமை மென்பொருட்கள் இவர்களின் அறிவுப்பசிக்குத் தடை போடுகிறது., "தாங்கள் கோரும் அறிவு இரகசியமானது; கசடறக் கற்பது தடை செய்யப்பட்டுள்ளது" எனக் கூறிகிறது.



This line of persuasion isn't designed to stand up to critical thinking; it's intended to reinforce a habitual mental pathway.

தாஜா செய்யும் இப்போக்கானது கூர்ந்த சிந்தனையின் முன் நிற்பதற்குத் திராணியற்றது. பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட மனம்போன பாதைகளை மீண்டும் சுமத்த முற்படுகிறது.

.

நூலெங்கும் இவ்வாறான பயன்பாடுகள் விரவிக்கிடக்கின்றன.

சாதாரண வாசகருக்கு பெருமளவில் உறுத்தலில்லாத மொழிநடையிலேயே இந்நூல் அமைந்திருப்பது நிறைவளிக்கிறது.


க்னூ வலைத்தளத்தில் காணப்படும் ஆமாச்சுவின் மூல மொழிபெயர்ப்புக்கும் நூலின் பகுதிகளுக்குமிடையில் நிறைய திருத்தங்களும் வித்தியாசங்களும் காணப்படுகின்றன.
பார்த்துப்பார்த்து திருத்தங்கள் செய்து நுலினை எளிமைப்படுத்தவும் சீர்படுத்தவும் உழைத்திருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.


ஸ்டால்மனின் பெரும்பாலான கட்டுரைகள் மேடைப்பேச்சு வடிவத்திலேயே அமைந்திருப்பதால், அவற்றுக்கு தனித்துவமான எள்ளலும் எளிமையும் கலந்த மொழிநடை வாய்த்திருக்கிறது. அதைத் தமிழாக்கும்போது அப்பண்புகள் சிதையாமற்காக்கும் சிக்கலான வேலையை ஆமாச்சு எதிர்கொண்டு கடந்திருக்கிறார்.


இத்தமிழாக்கத்துக்கு ரிச்சர்ட் ஸ்டால்மன் தனியான குறிப்பொன்றை அனுப்பி வைத்திருப்பது சிறப்பு.

"கேரளத்தின் அரசுப்பள்ளிகளில் கட்டற்ற மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அதே வழியில் தமிழகமும் செல்வதற்காக எடுக்க வேண்டிய முன் முயற்சிகளுக்கு இந்த நூல் உறுதுணை புரியும் என்று நான் நம்புகிறேன்"


என்கிறார் ஸ்டால்மன்.


இணைய வாசகர்களைத் தாண்டி மற்றவர்களுக்கு, இணைய வாசகர்களுக்கும்கூட, அச்சுவடிவில் கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பான கோட்பாடுகளை அறிமுகப்படுத்தும் நூற்கள் எழுதப்பட வேண்டும்.

இதற்கான நல்ல தொடக்கமாக இம்மொழியாக்க நூல் அமையும்.


தற்போது வீரமணி நமக்கெல்லாம் செய்த நன்மையின் ;-) விளைவாக தமிழ் எழுத்துலகில் பதிப்புரிமை, புலமைச்சொத்து தொடர்பான உரையாடல்கள் திடீரென அதிகரித்திருக்கின்றன. சிலர் க்னூ/லினக்ஸ், கட்டற்ற மென்பொருள் குறித்தெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர். ஆரம்ப நிலையில் பல போதாமைகளுடனேயே இவ்வாறான அறிமுகங்கள் அமைகின்றன. துறை சார்ந்தவர்களால் கொண்டுவரப்படும் இவ்வாறான நூல்கள் இத்தகைய போதாமைகளைக் களைந்து தமிழ்ச்சூழலில் கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பான தத்துவப்பின்னணிகளை தெளிவாக அறிமுகம் செய்ய உதவக்கூடும்.



இதுவரை இணையத்தில் வெளியான கட்டற்ற மென்பொருட் கோட்பாடுகள் சார்ந்த எழுத்துக்களை எவராவது தொகுத்தளிக்க முன்வந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

ஆமாச்சு உபுண்டு தொடர்பான அடுத்த தமிழ் நூலினை தொகுக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.


கட்டாயம் இந்த நூலினை வாங்கிப்படியுங்கள். இணையத்தில் இவ்வலைப்பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு மின்னணுவியல் செல்வாக்குக்கு நீங்கள் உட்பட்டிருக்கும் இந்நிலையில் இந்நூல் உங்களுக்கு அவசியமானதே.


ஆமாச்சுவின் இத்தகைய பயன்மிகு உழைப்பினை மதித்து ஊக்கப்படுத்தவேண்டியது எம் கடமை.

ஆமாச்சு ஒரு வலைப்பதிவாளர். வலைப்பதிவாளர் நூல்களை அறிமுகப்படுத்தும் பகுதியில் தமிழமணம் இந்நூலினையும் சேர்த்துக்கொள்ளப் பரிந்துரைக்கிறேன்.



நூல்விபரம்: கட்டற்ற மென்பொருள்
தமிழில் ம. ஸ்ரீ ராமதாஸ்.

முதல் பதிப்பு: செப்டெம்பர் 2008

ஆழி வெளியீடு எண்: 11

எல்லாத் தொடர்புகளுக்கும்:

ஆழி பப்ளிஷர்ஸ்

12, முதல் பிரதான சாலை,

யுனைட்டட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை 600 024,

அழைக்க: 044 43587585

வலை: http://www.aazhipublishers.com/

மின்னஞ்சல்: aazhieditor(at)gmail(dot)com

அச்சாக்கம்: மணி ஆஃப்செட், சென்னை


பக்கங்கள்: 104
விலை 60 (இந்திய ரூபாய்)



இலங்கையில் இந்நூலைக் கிடைக்கப்பண்ணுவது தொடர்பில் ஆமாச்சுவிடம் பேசியிருக்கிறேன். தகவல்கள் கிடைக்கும்போது பின்னூட்டம் வழியாக அறியத்தருகிறேன்.

October 10, 2008

ஒரு வலைப்பதிவு வடிவமைப்பு


இன்று காலை diggகிக்கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட வலைப்பதிவொன்று.

வாய்ப்பாடுகளை, குண்டுச்சட்டிகளை உடைத்துக்கொண்டு சிந்திப்பதென்பதற்கு இதுவும் ஒரு எடுத்தாக்காட்டு போல் தோன்றியது.

Flash அப்படி இப்படி எதுவும் பயன்படுத்தப்படவில்லை. வெறும் html , css தான்.


பாருங்க.

http://acko.net/