December 4, 2008

கவிஞர் சு. வில்வரெத்தினம் - நினைவு நிகழ்வு - திருக்கோணமலை

எதிர்வரும் 09-12-2008 (செவ்வாய்க்கிழமை) மாலை 3. 30 மணிக்கு திருக்கோணமலை நகரசபை மண்டபத்தில் கவிஞர் சு. வில்வரெத்தினத்தின் இரண்டாமாண்டு நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சு. வி யின் வருகையும் வசிப்பும் திருக்கோணமலை நகரின் அக்காலகட்டத்து சமூக - வாசிப்பு - எழுத்து - நாடகத் துறையில் கணிசமானளவு பங்களிப்பினையும் அதிர்வினையும் ஏற்படுத்தியது.

அதையும் தாண்டி ஈழத்து எழுத்துத்துறையில் அன்னாரது பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து, அத்துறையில் பரிச்சயம் கொண்டவர்கள் கருதுவதை கண்டும் கேட்டும் வாசித்தும் நாம் அறியக்கூடியதாயிருக்கும்.

தனிப்பட, அவரது ஆளுமையும், பழகும் முறையும், திறந்த மனதும் அதிகமதிகம் கவர, அவரது கனிவின் இசை லயத்தில் கட்டுண்டு கிடந்தவர்களாக நம்மில் சிலர் இருந்திருப்போம்.

ஆற்றலும், ஆளுமையும், கவிதையும், தமிழும், கலையும், கனிவும், ஆன்மீகமுமாய் இன்னும் பலவுமாய் வாழ்ந்து பின் நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடுவழியில் பிரிந்து சென்ற அந்தக் கவிஞனை நினைத்து திருக்கோணமலை நண்பர்கள் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள இணைய வாசிகள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்...


வர வாய்ப்பற்றவர்கள் அன்னார் நினைவாய் உங்கள் செய்திகளைப் பதிவு செய்யும்படி வேண்டுகிறேன்.






நினைவுகளில்........ கவிஞர் சு.வில்வரத்தினம்

இடம் : நகரசபை மண்டபம் திருகோணமலை. காலம் : 09-12-2008 (செவ்வாய்க்கிழமை) நேரம் : மாலை. 3.30 மணி ஏற்பாடு : கலை இலக்கிய நண்பர்கள் + 'நீங்களும் எழுதலாம்' கவிதை இதழ்




காலத்துயரும் காலத்தின் சாட்சியும்

தனது கவிதைகளில் வாழும் கவிஞர் சு.வி எம்மைவிடடுப்பிரிந்து இரண்டுவருடங்களாகின்றன. காலம் அப்படித்தான், அது நம் ஆயுளைக் கரைத்துக்கொண்டு அதன் போக்கில் நகர்ந்து கொண்டேயிருக்கும். இந்த கால நகர்வில் நாம் பலரை இழந்திருக்கின்றோம். அவர்களில் சு.வியும் ஒருவர்.

பல கொந்தளிப்பான அரசியல் காலகட்டங்களின் சாட்சியான கவிஞர்சு.வி. இப்படித்தான் ஒரு பொழுதில் எம்மைத் துயரில் ஆழ்த்திச் சென்றார். காலத்தின் சாட்சியாக விளங்கும் அவரது கவிதைகளில் சு.வி. என்றும் வாழ்வார். விடுதலை அரசியலில் பெரும் பற்றுக்கொண்டிருந்த சு.வி. கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் நட்புக்கொள்ளும் மனிதராகவும் இருந்தார். சமூகத்தை ஆழ்ந்து நேசிப்பது என்பதன் அர்த்தம்; தனது காலத்தை நிமிர்ந்து எதிர்கொண்ட மனிதர்களை நினைவுகொள்வதில் முழுமை பெறுகிறது. சு.வி. அப்படியொரு மனிதரா? என்ற கேள்விக்கு அவரது கவிதைகளே சாட்சி.


சமூகத்தை ஆழ்ந்து நேசிப்பவர்களை அழைக்கின்றோம்.






நிகழ்வுகள் :



அஞ்சலிச்சுடர்



தலைமை : நந்தினி சேவியர்


உரை : "சு.வி. கவிதைகளின் பாடுபொருள்" கலாநிதி செ.யோகராசா (கிழக்குப் பல்கலைக்கழகம்)


கருத்தாடல் : ஆர்வலர்கள்



"பாரதி
விடுதலை அவாவிய நின்

சிட்டுக்குருவி
எங்கள் வீட்டு முற்றத்திலும்
மேய்தல் கண்டேன்
..................................


முற்றத்தில் மேயும் போதும்
திண்ணையில் திரியும் போதும்

வீட்டு வளையின் மேலும்
விண்ணை அளக்கும் போதும்

'விடு விடு' என்ற ஓரே ஜபம்தான்..."