April 13, 2009

ஜனநாயகக் குசு




அணிந்திருந்த போலி அரசியல்முகத் திரைகள்
அவலத்தில் கிழிந்ததடீ - சற்றுக்
குனிந்தெழும்பிக் கொஞ்சம் குரலும்குடுக்காத
கொலைகாரக் கூட்டமடி

புலியெல்லாஞ்செத்துப் பொன் னுலகொன்று வந்தாலே
புரட்சிபுரிவாராமடி - கடலின்
அலையெல்லாம் ஓய்ந்தபின்னர் அழகான கப்பலிலே
அரசியலும் விடுவாரடி

ரெட்டைப் பிசாசெல்லோ பிணமாக்கி நம்மக்கள்
ரெத்தத்தைக் குடிக்குதடி - ரெண்டில்
நட்புப் பிசாசொன்று மிஞ்சியதன் பிற்பாடு
நல்லஜன நாயகமாண்டி

நல்லாப்படிச்சம்கை நிறையப் பணம்பாத்தம்
நாமறியாக் கோட்பாடுண்டா? - வன்னிச்
செல்லாலே அடிவாங்கி நாய்கள் சாகும் எண்டு
சொல்லாத நாளும் உண்டா?

சொன்னாற்போல் எல்லாமே சிறப்பாய் நடந்தாச்சு
சரியெல்லோ நம்கோட்பாடு? - ரோட்டில்
உண்ணாவிரதம் எல்லாம் இருக்கேலுமா எங்கள்
உயர்பதவி இடங்குடாது

செத்தாரோ இழிகுலத்துப் புலிவாலில் கொடிபிடித்தோர்
செத்தால் நாம் அழ ஏலாது - எங்கள்
உற்றார் யார், நாம் சொல்லும் ஒரு சொல்லின் செல்வாக்கு
உனக்காதெரியப் போகுது?

ஐநா வில் அரசுகளில் அதியுயர்ந்த பதவியெலாம்
அலங்கரிப்பாராமடி - அகதிகளை
ஐயோ பொறுப்பெடுங்கள் என்று கத்திச் சாகின்றோம்
ஒரு வார்த்தை பேசாரடி

சனமெல்லாம் செத்தாலும் சகபாடிச் சக்திகளைச்
சங்கடத்திலாழ்த்தாரடி - கெட்ட
ஜனநாயக் குசுவைக் குளிரூட்டி அறைக்குள்ளும்
கூசாமல் விடுவாரடி

11 பிற்சேர்க்கைகள்:

said...

ட்வீட்டிய போது புரியாத பாடல் இப்போது புரிகிறது! ஒலிவடிவக் கவிதைக்கு நன்றி மயூரன்.
இக்கவிதை யாரைத் தன் பேசுபொருளாய்க் கொள்கிறது என்பது மிக மங்கலாய் -நானும் அதற்குள் நிற்கிறேனா என ஐயுறும் அளவுக்கு- தெரிந்து கொண்டிருப்பதால் எதிர்வினையாற்ற முடியவில்லை.
குரல் கொடுப்பது என்பதை அவரவர் அரசியலுக்கும் வல்லமைக்கும் ஏற்றபடி எல்லாருமே பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது என்னுடைய அவதானம்.
இக்கவிதை யாரைத் தன் `எதிரி`யாக (ஸிசேக்கிய அர்த்ததில) கொள்கிறது என்பதைப் பொறுத்தே என்னால் உரையாட முடியும்... அது தெளிவில்லாதவரை நான் கப்சிப்

said...

ஐயையோ இது உங்கள எதுக்கு எதிரியாப்பாக்கோணும்?

அதிகார பீடங்களோட மறைவாயும் நேராயும் கைகுலுக்கிக்கொண்டு அவங்கட பீடங்களில உட்கார்ந்துகொண்டு நல்ல பதவிகளையும் வாங்கிக்க்ண்டு அல்லது பெரிய பெரிய பல்கலைக்கழகங்களில மாண்புமிகு "அக்கடமிக்ஸ்" ஆ உலாவந்துகொண்டு, தாங்க படிச்ச, ப்றீச்சுற கோட்பாடுளுக்குள்ள முடங்கியபடி இவ்வளவு நாளும் ஓயாமல் புலியெதிர்ப்புப்பேசின ஆக்கள், இப்ப மக்கள் சாகும் அவலத்துக்குள்ள குனிஞ்சு ஒரு துரும்பையும் எடுத்துப்போடாம அதே புலியெதிர்ப்ப பாடிக்கொண்டிருக்கிறாங்க எல்லோ?

அவங்களப்பற்றித்தான் இது பாடுது.

அதில பலர் ஐ நா வோடயும் இலங்கை அரசோடயெல்லாம் நல்ல உறவில இருக்கிறவங்க. சாகிற மக்களுக்காக தங்களால முடிஞ்ச அளவுக்கு இந்த அமைப்புக்களுக்கு அழுத்தம் குடுக்க முடியாதா?

கொலரில தூசுபடாத அழுத்தமெல்லாம் குடுத்து அத அழுத்தமெண்டு வேற சொல்லுறாங்க.

புலி அழிஞ்சபிறகு, ரெண்டு பிசாசில ஒரு பிசாசு செத்தபிறகு , ஜனநாயகச்சூழல உருவாக்கி சொர்க்கத்தை நிறுவப்போறதா சொல்லுற இவங்கட நட்புப்பிசாசு அரசுதான் எண்டது வெட்ட வெளிச்சமா தெரியுதுதானே?

தங்கட அதிகார பீட நட்புக்கள சங்கடப்படுத்தாம வச்சபடி, தங்கட தங்கட இருப்புக்கள காப்பாத்தத்தான் இந்த புலியெதிர்ப்பும், "மக்கள்" எண்ட சொல்லை அடிக்கடிச் சொல்லி பேசித்திரியிற அரசியலும்.

said...

மேலதிக வாசிப்புக்கு

said...

அது தான் அடைப்புக் குறிக்குள்ள ஸிசேக்கிய அர்த்தம் என்று சொன்னேன்.
சிற்றாசான் ஸ்லோவக் ஸிசேக் சொல்றதன் படி ஒரு பிரதி எதைப் பேசுகிறது என்பதை விட, அது யாரை/யாவற்றை தன் முன்னே வைத்து இயக்கம் கொள்கிறது என்பதே மிகவும் முக்கியமான சமாசாரம்.

நானும் புலி எதிர்ப்பாளனாய் அறியப்படுகிற ஆளில்லையா (இதென்ன கேள்வி அப்பிடியேதான்!)அதுதான் இது ஒரு ஜெனரலைசேசன் சிக்கலோ (எல்லா புலி எதிர்ப்பாளர்களையும் ஒரு கன்னையில் நிறுத்துவது!) என்னும் கிலி வந்துவிட்டது ஒருகணம்.

ஆக, உங்களுடைய பிரதியின் முன்னிருக்கிற ஆள்களில் நான் இல்லை. whew.

ப்யூரோக்கிரட்டுகளை நம்பிக் கொண்டு அங்கிருக்கும் சனங்கள் இல்லையெண்டு நினைக்கிறன். ஏனெண்டால், யூ.என் ஒண்டுமே செய்ததில்லை - சனங்களிட்ட சொன்னால் செருப்பால அடிக்குங்கள். என்னுடைய அனுபவங்களில இருந்து கதைக்கலாமெண்டாலும் அதை விடுத்து 'No Man's Land' படத்தில அய்.நா வகித்த அருமந்த வகிபாகத்தை நினைவூட்ட விரும்புறன்.

நம்பி ஏமாறவேண்டாம் என்பதே நான் சொல்லுறது

said...

//ப்யூரோக்கிரட்டுகளை நம்பிக் கொண்டு அங்கிருக்கும் சனங்கள் இல்லையெண்டு நினைக்கிறன். ஏனெண்டால், யூ.என் ஒண்டுமே செய்ததில்லை - சனங்களிட்ட சொன்னால் செருப்பால அடிக்குங்கள். என்னுடைய அனுபவங்களில இருந்து கதைக்கலாமெண்டாலும் அதை விடுத்து 'No Man's Land' படத்தில அய்.நா வகித்த அருமந்த வகிபாகத்தை நினைவூட்ட விரும்புறன்.

நம்பி ஏமாறவேண்டாம் என்பதே நான் சொல்லுறது//

ருவாண்டாவில் நேட்டோப் படைகளாலேகூட ஒண்டும் சாதிக்க முடியாமற்போனது. அத்தோடு ஐ நா என்பது சில வல்லரசுகளின் கைப்பாவையாக அவர்களின் நலன்களுக்காக ஆடுவதென்பதும் பிரக்ஞையில் எப்போதும் எனக்குள்ளது.

தற்போது இலங்கையின் பிரச்சினை, இடம்பெயரும் மக்களை பொறுப்பேற்பது தொடர்பானது. போரை உடனடியாக நிறுத்துவது தொடர்பானது. இங்கே ஐநா போன்றவற்றில் பதவி வகிக்கும், வேறு பல செல்வாக்குகளோடு இருக்கும் புத்திசீவிகள் நிறையச் செய்ய முடியும்.

ஆகக்குறைந்தது உடனடிப் போர் நிறுத்தமொன்றுக்காக தம்மால் முடிந்தளவு அழுத்தங்களை தாம் சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்க முடியும் அதனூடாக இலங்கையரசை அழுத்தத்துக்கு உள்ளாக்க முடியும்.

அழுத்தங்கள் சரிவராதவிடத்து பதவிகளை விட்டுவிட்டு வீதிக்கு வரவேண்டும்.

ஏனென்றால் அந்தளவுக்கு "மக்கள்" பற்றி வாய்கிழியப் பேசி கைவலிக்க எழுதிவிட்டார்கள்.

இந்தப் புத்திசீவிகளை நம்பி மக்கள் இல்லைதான். ஆனால் எவ்வளவு காலத்துக்கு இவர்கள் தாம் மக்களைச் சார்ந்தவர்கள் என்று பொய் சொல்லி தங்கள் உண்மையான சார்பு நிலையை மறைக்க முடியும்?

இந்த அவலத்தில் இவர்களது உண்மையான சார்பு வெளுக்கத் தொடங்குகிறது என்பதுதான் விசயம்.

said...

புலியெதிர்ப்பு அரசியல் என்பது அவர்கள் தங்களை தக்க வைத்துக்கொள்ளும் அரசியல்....இந்த இருப்புவதிகளைப் பற்றி பேசுவதில் பயனில்லை.
நல்ல பாடல்..

said...

இவ்வாறான கட்டுரைகளுக்காக இராயகரனுக்கே புலி முத்திரை குத்துகிறார் சிறிரங்கன்.
பதிலுக்கு சிறிரங்கன் ஒரு பழைய புலி என்கிறார் இராயகரன்.

ஆளாளுக்கு அடிபட்டு சாகட்டும்

அங்கால எல்லாம் முடியட்டும்.

said...

//புலியெதிர்ப்பு அரசியல் என்பது அவர்கள் தங்களை தக்க வைத்துக்கொள்ளும் அரசியல்...// சோமீ

புலியெதிர்ப்பு அரசியல் என்று `ஒன்று` இல்லை சோமீ. எஸ்.மனோரஞ்சனுடையதும் என்னுடையதும் ஒன்று அல்ல. ஷோபா சக்தியினுடையதும் இராகவனுடையதும் ஒன்று அல்ல. வேறு வேறான பரிமாணங்கள் கொண்ட எதிர்ப்பு அரசியல்களை ஒரு கன்னையில் நிறுத்தி இருப்புவாதிகள் என்று சொல்லவருவது முட்டாள்தனம்.
உங்களுடைய புலிஆதரவு(/விமர்சனத்துடனான/?) அரசியலுக்கும் புதுவை இரத்தினதுரை அவர்களின் புலியாதரவு அரசியலுக்கும் வேறுபாடுகள் உண்டு இல்லையா? உங்கள் இரண்டு பேருடைய வித்தியாசங்களையும் காணமறுத்து ஒரு கன்னையில் பூட்டி அடைத்து இவர்கள் `தமிழ்த்தேசிய இன வெறியர்கள்` என்று முத்திரை உத்துவது நல்லாவா இருக்கு???

said...

just finished staring onto the screen where Rayakaran's webpage was on display! :-S
i wonder, avarai eppadiththaan padikkiriingkaLo endu. intha varusham ithuthaan first time Rayakaran-in website paarkiRean! His style is so disgusting.

said...

அணிந்திருந்த போலி அரசியல் முகத்திரைகள் அவலத்தில் கிழிந்ததடீ என்னே அற்புதமான வார்த்தைகள்.

இலங்கையில் இருந்து போர் நிறுத்தம் வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்ட போதெல்லாம் போர் நிறுத்தம் கோரிய எல்லாத் தரப்பினரையும் புலியாகப் பார்த்து வந்தது புலம் பெயர் ஜனநாயக இடது சாரிய மார்க்சிய உலகம்.

போர் நிறுத்தம் கோரியவர்கள் எல்லாம் தேசியவாதிகளாகவும் புலிஆட்களாகவும் பார்க்கப்பட்டு இவர்களுடைய வலைகளிலே திட்டப்பட்டார்கள்.

புலம் பெயர்ந்த தேசத்திலுள்ள ராகவன் குழுவுடைய பார்வையும் அது தான். அதற்கெதிரான தேசம் ரிபிசி குழுவினருடைய பார்வையும் அதுதான். சுகன் சோபாசக்தியினுடைய சத்தியக்கடதாசியும் புலியெதிர்ப்பையே பிரதானமாகக் கொண்ட தேனியுடைய நிலைப்பாடும் அதுதான். இவர்களையெல்லாம் திரிபுவாதிகளாகவும் ஓடுகாலிகளாகவும் கண்ட மார்ச்சியவாதியான சிறிரங்கனுடைய நிலைப்பாடும் இந்த விடயத்தில் மாற்றம் ஏதும் கொண்டதாக இருந்தததில்லை. இப்போது சிறிரங்கனை திரிபுவாதி என்ற பொருள்படத் திட்டும் ரஜாகரனும் இதேநிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.

அதே ரஜாகரன் இப்போது குத்துக்கரணம் அடித்து புலிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறார். ஆனால் இலங்கையிலிருக்கும் நாங்களோ புலியின் காலில் விழவுமில்லை. புலியைப் பிடிக்கும் சிங்கத்தின் காலில் விழவுமி;ல்லை. அப்போது போலவே இப்போதும் போர் நிறுத்தம் வேண்டும் என்றே கோருகிறோம். எங்களுக்கு மார்க்சியமும் தெரியாது. இடதுசாரித்துவமும் தெரியாது. அனால் மக்களுடைய வலியும் துயரும் தெரியும். அவர்களுக்கு எது தேவை என்பதும் அவர்களுடன் வாழ்வதனாலோ என்னவோ தெரியும்.

கோட்பாடுகள் வாழ்வதற்காகவே அன்றி கோட்பாடுகளை யாரும் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு வாழ்வதில்லை.

அணிந்திருந்த போலி அரசியல் முகத்திரைகள் அவலத்தில் கிழிந்ததடீ என்னே பொருத்தமான வார்த்தைகள்.
இதற்காக மய+ரனுக்குப் பாராட்டுக்கள்.

ராவணா

said...

//ஜனநாயக் குசுவைக் குளிரூட்டி அறைக்குள்ளும்
கூசாமல் விடுவாரடி//

புலி பாசிசம்! புலி பாசிசம்!! என்றே பொல்லாத புரட்சியும் வெடிக்குமாடி...

மக்கள் மக்கள் எனும் மாயைச் சொற்களுக்குள்ளே தன் மனகழிசல்களை தினசரி கடன்களாக நாளும் களிப்பாராடி...