கவிஞர் இ.முருகையன் (23-04 -1935 - 27 -06 -2009)
http://tamilgarden.blogspot.com/2009/06/blog-post.html
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவருமான இ. முருகையன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையைப் பெருந் துயரில் ஆழ்த்தியுள்ளது.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தொடக்கத்திலிருந்து அதற்குத் துணையாயிருந்து இளம் படைப்பாளிகளை நெறிப்படுத்தி ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிகப் பெரிது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகத்தின் ஆசிரியர் குழுவிற் பெரும் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வந்ததுடன் அதன் நூல் வெளியீடுகளிலும் அவர் ஆக்கபூர்வமான ஒரு வழிகாட்டியாயிருந்தார்.
மூத்த கவிஞர் முருகையன் கவிஞராக மட்டுமன்றித் தமிழறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவராவார். அரசகரும மொழித் திணைக்களத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவை முன்னோடியானதும் முற்போக்கானதுமாகும். அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் சமூகப் பயனுமுடையவையுமாவன. அவர், தன்னைச் சூழத் தவறுகள் நடந்த போதெல்லாம் அவற்றைக் கண்டிக்த் தயங்காது காய்தல் உவத்தலியன்றி ஆக்கமான விமர்சனங்களை முன்வைத்து வந்தவருமாவர். அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் தமிழ் அறிவுத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் தவமணிதேவி அவர்கட்கும் பிள்ளைகட்கும் குடும்பத்தினருக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, தனது ஆழ்ந்த துயரை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
பொதுச் செயலாளர்
தேசிய கலை இலக்கியப் பேரவை




7 பிற்சேர்க்கைகள்:
முருகையனின் வாழ்க்கை, செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள் அவர்குறித்த விக்கிபீடியா கலைக்களஞ்சியக் கட்டுரைக்கு பங்களித்து வளர்த்தெடுக்க உதவவும்.
யாழ் பல்கலைக்கழகத்தில் இவர் பதிவாளராக இருந்தபோது முருகையனை நன்கு அறிவேன். பழகுவதற்கு மிகவும் இனியவர். நிறைய மேடைகளில் கண்டிருக்கிறேன். அன்னாரின் மறைவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருந்துயரை ஏற்படுத்தியிருக்கும் தமிழின் இழப்பு. மயூரன், மேலே குறித்ததுபோல அவர் குறித்த விபரங்களை மேலும் திரட்ட முயற்சிக்கவும். "நூலகம்" அவரின் ஏனைய நூல்களையும் தர முயற்சித்தால் மகிழ்ச்சியாயிருக்கும். அவரின் குரல் யாரிடமேனும் பதிவாகியிருந்தால் அதையும் திரட்டலாம்.
துயர் தரும் செய்தி.
அன்னாரின் மறைவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூத்த கவிஞன் முருகையன்.
-------------------
முருகையன் ஈழ்த்தின் முதன்மைக் கவிஞர்களுள்
அருமைச் சீராடல் அனைத்திற்கும் அமைந்தவரே!
பெருமைப் படுமளவு பாட்டாளி வர்க்கத்தின்
உரிமைக்காய்க் குரல்கொடுக்கும் தாயகத்தின் வாயிலாக
ஒருமைப்பட்ட இதயத்துடன் ஒத்துழைப்பும் வழங்கி
சரியான பார்வையுடன் சரித்திரக் கவிதைகள்...
வரிசையில் முற்போக்கு வதனத்தில் ஓரமைதி
பரிபாலன சேவையாம் பல்கலைக் கழகப்பதிவாளர்
தெரிவுசெய்த மார்க்கமது முற்போக்குச் சிந்தனைகள்..
பெரியோன் இவரென்று எல்லோரும் போற்றுவரே!
* * *
அல்லும் பகலும் தேசியகலை இலக்கியச்
சொல்லும் செயலும் சுடரான சிந்தனையும்
வல்லவராம் இருமொழியில் தாய்மொழிக்குத் தனியிடமாம்
எல்லையில்லாத கவிதைகள் ஆயிரம் ஆயிரம்
நல்ல கருத்துடன் நயம்பட வடித்தகவி
அத்தனையும் மானிடத்தின் அரிய விடியலுக்கு
சத்தமில்லா எதிர்கால விழிப்புணர்வுச் சூரியனாய்
திங்களென்ற குயிலித் திருமகளும் மங்காத்
தங்கமகன் கண்ணன் மாநிலத்தில் கண்மணிகள்...
முல்லைச் சிரிப்பும் முறுவலித்த முகமுமாய்..
இல்லையே இவனென்று நினைக்க முடியவில்லை!
* * *
மானிடன் அழிவதுண்டு மானிடம் அழிவதில்லை
நானிலத்தே வாழுகையில் நலிந்தோர்க்குக் குரல்கொடுத்து
இறுதிமூச்சு இருக்கும்வரை என்னிதயக் கருத்துக்களை
அறுதியாக உரைபேனென அரும்பெரும் கவிதைகளில்
வடித்து வைத்துச் சென்றதெல்லாம் மக்களின்
துடிப்பை வெளிக்காட்டும் துல்லியப் பளிங்குபோல
அடியொற்றி வாழ்வோரின் அடிமனதில் ஒளிவிடும்
விடிவெள்ளி ஆனவருள் முருகையன் முதற்கவிஞன்.
------------------
திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம். சிங்கப்பூர்
ஐயா முருகையன் மிகச்சிறந்த ஒரு ஈழத்தின் படைப்பாளி. தயவு செய்து அவரது படைப்புக்களை தொகுத்து வெளிக்கொணருங்கள்..!
கவிஞர் முருகையன் அவர்களைப் பற்றி அறிய நானும் ஆர்வலமாய் இருக்கிறேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment