DRM: காப்புரிமை எவர் உரிமை? (இருக்கிறம்)
[காப்புரிமை, புலமைச்சொத்து, DRM (Digital Rights Management) பற்றிய மாற்று அறிமுகம்]
-மு.மயூரன்
"இருக்கிறம்" சஞ்சிகை (15-02-09)
உண்மையான கலையுழைப்பைச் செலுத்தும் கலைஞரை ஊக்குவிக்காதவரை, நசிவுப்பண்டங்களை ஒதுக்கி தரமான படைப்புக்கள் வருவதை உறுதிப்படுத்தாதவரை, ஆபாசப்பண்டங்கள் உண்மையன கலைப்படைப்புக்களை ஒதுக்கிதள்ளும் நிலையை மாற்ற முடியாதவரை, படைப்பொன்றின் மொத்த பயனும் படைப்பாளிக்கும், மக்களுக்கும் ஆரோக்கியமான முறையில் பகிர்ந்தளிக்கப்படாதவரை எந்தவொரு காப்புரிமையும், புலமைச்சொத்துரிமையும் பெரு முதலாளிகளின் உரிமைகளாக மட்டுமே இருக்கும்.
"DRM".
இன்று தகவல் தொழிநுட்ப உலகில் பரவலாக உரத்த குரலில் பேசப்படும் சொல். இதன் விரிவு Digital Rights Management. அதாவது, எண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம்.
அதென்ன எண்முறை உரிமைகள்?
இப்போதெல்லாம் பாடல்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் போன்றன எண்முறை (டிஜிடல்) வடிவத்திலேயே பெரிதும் விநியோகிக்கப்படுகின்றன. இவை இணையத்தில் பரிமாறப்படுவதோடு கணினிகளிலும் அவற்றுக்கென வடிவமைக்கபப்ட்ட கருவிகளிலும் பயன்படுத்தப்படக்கூடியனவாயிருக்
இவ்வாறு எண்முறையில் பரிமாறப்படும்போது புதிய பிரச்சினை ஒன்று எழுகிறது.
எண்முறை வடிவங்களை இலகுவாக நகலெடுத்து தேவையானளவு நகல்களை உருவாக்கி விநியோகிக்க முடியும். நகலெடுப்பதற்கான செலவு மிகவும் குறைவானது. அத்தோடு நகலின் தரமும் அச்சொட்டாக மூலத்தை ஒத்தே இருக்கும்.
நாங்கள் தெருவோரங்களில் காணும் நீண்ட இறுவட்டுக்(CD) கடைகள், நூறு ரூபாய்க்கும் குறைந்த விலையில் பெறக்கூடியதாயிருக்கும் திரைப்பட, பாடல், மென்பொருள் வட்டுக்கள் எல்லாம் இதற்கான சாட்சிகள்.
சட்டரீதியாக திரைப்படங்கள், பாடல் பேழைகள், புத்தகங்கள், மென்பொருட்கள் அனைத்தும் காப்புரிமைச்சட்டத்தின் கீழ் / புலமைச்சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவற்றை நகலெடுப்பதையும் விநியோகிப்பதையும் இந்தக் காப்புரிமைச்சட்டம் கடுமையாகத் தடுக்கிறது.
தற்போது இலங்கையில் புலமைச்சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் இவ்வாறு காப்புரிமையை மீறி மென்பொருள் விற்பவர்களின் கடைகள் காவல்துறையினரால் இனம்காணப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுவருகிறது.
மைக்ரோசொஃப்ட், அடோப், நிறுவனங்களின் மென்பொருள் உற்பத்திகளை தற்போது சட்டப்படி விலைகொடுத்தே வாங்கிப்பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கணினிகளை விற்கும் நிறுவனங்கள் கூட தற்போது தாம் நிறுவி வழங்கும் வின்டோஸ் இயங்குதளங்களின் உண்மையான விலையினை வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
(இவ்வளவுக்கும், இம்மென்பொருட்களை தயாரித்த நிறுவனங்களே அவற்றை அடிமட்ட விலைக்கு இங்கே விற்பதை ஊக்குவித்தன ஒருகாலத்தில். இலவசமாக சிகரெற் வழங்குவதைப்போன்று, எம்மை குறித்த உற்பத்திகளுக்கு இலகுவில் அடிமையாக்கும் நோக்கமே அது)
அடுத்தடுத்து திரைப்டங்கள், இசை வட்டுக்களுக்கும் இந்நிலை இலங்கையில் வரக்கூடும்.
எண்முறை வடிவத்தில் திரைப்படம், இசை, மென்பொருள் போன்ற பண்டங்களை உருவாக்கி இணையத்திலும் இறுவட்டுக்களாகவும் உலகம் முழுவதும் விநியோகித்து, விற்று பொருளீட்டிவரும் வர்த்தகம் இன்று மிகப்பெரிதாக வளர்ந்திருக்கிறது. பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் இவ்வர்த்தகத்தை நம்பி வளர்ந்து வியாபித்திருக்கின்றன.
Piracy என்று அவர்களால் அழைக்கப்படும் காப்புரிமை மீறல், அடிமட்ட விலைக்கு அவர்களது பண்டங்களின் நகல்களைத் தெருவில் விற்கும் நிலை, அவர்களது இலாபத்தின் பெரும் பகுதிக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
ஏறத்தாழ 1500 ரூபாய் பெறுமதியான ஐங்கரன் இன்டர்நஷனல் நிறுவனத்தின் தமிழ்த் திரைப்பட இறுவட்டு ஒன்றின் அச்சொட்டான நகல் தெருவில் 80 ரூபாய்க்கு வாங்கப்பட முடியும் என்ற நிலை. 25,000 ரூபாய் பெறுமதியான Windows XP இயங்குதளத்தின் நகல் 50 ரூபாவுக்கு தெருவில் வாங்கப்படக்கூடிய நிலை.
இவ்வாறு தமது இலாபத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தடுக்க இப்பெரும் நிறுவனங்கள் காப்புரிமை/புலமைச்சொத்துரிமைச் சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்தும்படி அரசாங்கங்களை நெருக்குகின்றன. நெகிழ்வான புலமைச்சொத்துரிமைச் சட்டங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் சட்டங்களை கடுமையானதாக மாற்றும்படி அரசியல் ரீதியில் அச்சுறுத்தல் விடுக்கின்றன.
இவ்வாறான நெருக்குவாரங்களின் பெறுபேறே நாம் தற்போது காணும் காவல்த்துறையினரின் கண்டிப்பான நடைமுறைகள்.
ஆனால் இப்படி விற்பனை நிலையங்களை இனங்கண்டு தண்டிப்பதும், பெருமளவான காவல்த்துறையினரை ஈடுபடுத்திக் கண்காணிப்பதும் செலவும், வீண்விரயமும் கூடிய நடைமுறைகள்.
திட்டம்போட்டு திருடிற கூட்டம் திருடிக்கொண்டே இருக்க, அதைச் சட்டம்போட்டு தடுக்கிற கூடம் சைரன்கள், கக்கிச்சடைகள், ஆயுதங்கள் சகிதம் தடுத்துக்கொண்டே இருக்கவேண்டியதாகிறது. திருடராய்ப்பார்த்து திருந்தலாம் என்றால் அதற்கும் வாய்ப்பற்ற அரசியல் பொருளாதார அமைப்பு.. என்ன செய்வது?
எனவே இதை வேறு வகையில் தடுக்கவேண்டும் என பன்னாட்டுப் பகாசுரக்கம்பனிகள் சிந்தித்தன.
அவர்களுக்குத் தொழிநுட்பம் கைகொடுத்தது. இப்பன்னாட்டு கம்பனிகளின் முதலாளிகளின் இலாபத்தைக் காக்க வந்த தெய்வத்தின் மென்பொருள் அவதாரமாக DRM அவதரித்தது.
DRM இனது செயற்பாடு மிகவும் சிக்கலானது. அதை மிக எளிமைப்படுத்தி ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளங்கிக்கொள்ள முயல்வோம்.
ஏ ஆர் ரஹ்மானின் இசைத்தொகுப்பொன்றை Sony நிறுவனம் வெளியிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த இசைத்தொகுப்பு அடங்கிய இறுவட்டின் ஒவ்வொரு பாடல் கோப்பினுள்ளும் DRM நிரற் துண்டினை Sony நிறுவனம் பொதிந்து வெளியிடும்.
நமது தெரு முனையில் கடை வைத்திருப்பவர் தனது வீட்டுக்கணினியில் அந்த இசைத்தொகுப்பினை சட்டத்துக்குப்புறமாக நகலெடுத்து ஒரு நூறு நகல்கள் தயார் செய்து 50 ரூபாய்க்கு விற்கிறார்ர்.நீங்கள் அதை வாங்கிக்கொண்டுவந்து உங்கள் கணினியில் போட்டு இயக்க முயல்கிறீர்கள்.
ஏன் அவ்வளவு? உங்கள் நண்பியிடமிருந்து அவ்வட்டினது நகல் ஒன்றை பெற்றுக்கொண்டு வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோமே..
DRM பொதியப்பட்ட அக்கோப்புக்கள் குறித்த மென்பொருள் இருந்தால் மட்டுமே இயக்கப்பட முடியும். அதற்கான மென்பொருளில் நீங்கள் இயக்குகிறீர்கள்.
அம்மென்பொருள் உங்கள் கணினியில் இணைய இணைப்பு உண்டா என்று பார்க்கும். இல்லாவிட்டால் கோப்பினை இசைக்க முடியாதென்று சொல்லிவிடும். இணைய இணைப்பு இருந்தால், எந்தக்கணினியில், எந்த நாட்டில், எந்த வீதியிலிருந்து எத்தனை மணிக்கு இக்கோப்பினை இசைக்கிறீர்கள் என்ற தகவலை இணையம் வழியாக Sony நிறுவனத்துக்கு பொதியப்பட்ட DRM நிரற்துண்டு அறிவித்துவிடும். கூடவே அந்த குறித்த கோப்பிற்குரிய சுட்டெண்ணையும் அறிவித்துவிடும்.
இத்தனை தகவல்களையும் வைத்துக்கொண்டு Sony நிறுவனத்தின் வழங்கி தன்னியக்கமாகவே நீங்கள் இசைக்கும் வட்டு சட்டத்துக்குப் புறம்பானது என்று கண்டறிந்து உங்களை இசைக்க முடியாமற் செய்துவிடுஅதோடு உங்களைப்பற்றிய தகவல்களையும் காவல்த்துறைக்கு அறிவித்துவிடும்.
உங்கள் கணினியின் மென்பொருட்கள் மட்டுமல்ல, வானொலி, இறுவட்டு இயக்கிகள் DVD இயக்கிகள், தொலைபேசி iPod போன்றனவெல்லாம் DRM வசதி பொதியப்பட்டு சந்தைக்கு வந்துவிட்டன.
DRM மக்களின் தோழமைச்சக்தி என்றும், காப்புரிமையைக் காக்கவந்த காவல் தெய்வம் என்றும் தூக்கிக் கொண்டாடப்படுகிறது.
கட்டற்ற மென்பொருள் அமையம் (FSF) போன்ற அமைப்புக்கள் இந்த DRM இனை போர்முனைப்போடு எதிர்த்து வருகின்றன.
காப்புரிமை நல்ல விசயம்தானே? அதை எதிர்ப்பானேன்?
புலமைச் சொத்துரிமை/ காப்புரிமை போன்ற வார்த்தைகளை நாம், ஓர் ஆக்கத்தினை ஆக்குவோரது, இயற்றுவோரது உரிமை என்றவாறே விளங்கி வைத்திருக்கிறோம்.
ஓர் ஆக்கத்தினை இயற்றும் தனிநபருக்குத் தானே உரிமைகள் போய்ச் சேரவேண்டும்? அவரின் வருமானத்தை வீழ்த்தும் Piracy இனை ஒழிக்கத்தானே வேண்டும்? இதற்கு உதவி செய்யும் DRM நல்லதுதானே என்றவாறாக நாம் சிந்திக்கத் தொடங்கி விடுகிறோம்.
ஆனால் உண்மை வணிக உலகின் முகம் வேறு மாதிரியானதாக இருக்கிறது.
புத்தக எழுத்தாளர்களாக இருக்கட்டும், இசையமைப்பாளர்களாக, திரைப்பட இயக்குநர்களாக இருக்கட்டும் மிகவும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே தமது படைப்புக்களைத் தாமே சந்தைப்படுத்தி இலாபம் பார்ப்பதற்கான மூலதன பலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் மலினமான கலைப்படைப்புகளை விற்று காசு பார்ப்பவர்களே, ஏனையவர்கள், தரமான கலையுழைப்பைச் செலுத்திப் படைப்பவர்கள் வருமானத்தில் பின்தங்கிய சராசரி நிலையிலேயே வாழ்கிறார்கள்.
பெரிய நிறுவனங்கள், இவ்வாறு சந்தைப்படுத்த, விநியோகிக்க வசதியற்ற கலைஞர்களின் படைப்பை அடிமட்ட விலைக்கு வாங்கிக்கொள்கின்றன. வாங்கி, அப்படைப்பினை விநியோகிக்கும், வெளியிடும் மொத்த உரிமையையும் தமதாக்கிக்கொள்கின்றன. இப்போது காப்புரிமையானது அந்த நிறுவனத்துக்கே போய்ச் சேருகிறது. உண்மையாக கலையுழைப்பைச்செலுத்திய கலைஞர் பிச்சைக்காசைப்பெற, மூலதனம் இருந்த ஒரே காரணத்தால் அப்படைப்பினை வாங்கிய நிறுவனம் மொத்த லாபத்தியும் தனதாக்கப்போகிறது.
இதற்கே உண்மையில் புலமைச்சொத்துரிமைச்சட்டங்களும்
இதனாலேயே பெரிய முதலாளிகளால் வழிநடத்தப்படுகிற பெரிய அரசாங்கங்கள் உலக அரசுகளை நெருக்கியும் மிரட்டியும் புலமைச்சொத்துரிமைச்சட்டங்களை இறுக்கமாக்கும்படி செய்கின்றன.
இதனால் கலைப்படைப்பு ஒன்று அதை உருவாக்கியவருக்கோ, வாங்கிப்பயன்படுத்துபவருக்கோ அல்லாது இடைத்தரகர்களுக்கே பெரும் இலாபத்தினை ஈட்டித்தரும் விற்பனைச்சரக்காக மாற்றப்படுகிறது.
மலினமான படைப்புக்களைத்தரும் வியாபாரக்கலைஞர்களை விட தரமான கலைப்படைப்பை உருவாக்கும் சீரிய கலைஞர்களையே இப்போக்கு அதிகமதிகம் சுரண்டுகிறது.
இதனை நன்றாகப் புரிந்துகொண்டாலேதான், புலமைச்சொத்துரிமை என்ற அழகான சொல், மனித குலத்துக்கு எதிரானதாக மாற்றப்பட்டிருப்பதை புரிந்துகொள்ள முடியும்.
இந்த இலாபப்பெருக்க வேட்கையானது எவ்வளவு தூரம் தனி மனிதர்களைத் தீவிரமாகப் பலிகொள்கிறது என்பதற்கு இந்த DRM மிகப்பிந்திய எடுத்துக்காட்டு. ஓவொருவருக்கும் தனிமனித சுதந்திரம் எனும் உரிமை உண்டு. அந்தரங்கங்களைக் காக்கும் உரிமை உண்டு.
உங்களுக்கு தெரியாமல் இயங்கும் நிரல் ஒன்று, உங்களைப்பற்றிய தகவல்களை, நீங்கள் எத்தகைய படைப்புக்களை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள் என்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொடக்கம், உங்கள் கணினியிலிருந்து திரட்டக்கூடிய உங்கள் சொந்த தனிப்பட்ட தகவல்கள் வரை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குகிறதென்றால் அது தனி மனித உரிமைகளை மதிக்காத குற்றம் இல்லையா?
ஓர் இசைதட்டை நீங்கள் வாங்கினால் அதை இன்னொருவருக்குக் கொடுக்க முடியாதென்று தடுப்பதும், இன்னொரு கருவியில் இசைக்க முடியாதென்று மறுப்பதும் நியாயமானதா?
இது ஒரு சர்வாதிகாரப்போக்கில்லையா?
ஒரு கலைப்படைப்பினைக் காசு கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும் என்றும், அதை உங்கள் கணினியில் மட்டுமே இயக்க முடியுமென்றும், உங்கள் சொந்தத்தகவல்கள் உளவுபார்க்க வழங்க வேண்டுமென்றும் அதை நீங்கள் வேறெவருக்குக் கொடுக்கக்கூடாதென்றும் உங்கள் கைகளை சட்டத்தினால் கட்டி வைப்பது மனிதகுலத்துக்கு எதிரானதில்லையா?
புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டால் அதை வசதிஉள்ளவர்கள் வாங்கிப்படித்து, அதை வசதியற்றவருக்குப்படிக்கக்கொடு
ஆனால் DRM வந்துவிட்டது. தற்போது வெளிவரும் மென்பொருட்கள் பலவும், DVD players , iPod, Blue-ray disk போன்றனவும் DRM பொதியப்பட்டே வருகின்றன.
இன்று இணையத்தைப்பெறுவதற்கான செலவு குறைக்கப்பட்டுவருவதும், இணையம் கிராமம் கிராமமாக பரவலாக்கபப்ட்டு வருவதும் இந்த வியாபார நலன்களுக்கு வசதி செய்துகொடுக்கதான் போலிருக்கிறது.
இந்தப் புலமைச்சொத்துரிமை, காப்புரிமை போன்ற அழகான, நியாயமானவையாகத் தோற்றம் காட்டும் சொற்களில் நாம் மயங்கிவிடாமல் சரியான பார்வையினைப்பெற்று அநியாயங்களை இனம் காணக்கூடியவர்களாக மாறிக்கொள்ள வெண்டும் அல்லது எமது ஆரோக்கியமான வாழ்க்கைமுறையையே சிதைக்கும் தொழிநுட்பங்களை அழகான சொற்களைப்போட்டு எம் தலையில் கட்டி விடுவார்கள்.
தொழிநுட்பம் என்பது தனது கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்குப்பின்னல் பெரும் தந்திரங்களையும் பொறிகளையுமே பொதிந்து வைத்திருக்கிறது. இதுவே தொழிநுட்பத்தின் அரசியல்.
திறந்த மூலம், கட்டற்றமென்பொருட்கள், திறந்த புலமைச்சொத்துக்கள், அளிப்புரிமை போன்ற மாற்றுத் தொழிநுட்பங்களின் பால் நாம் சார்ந்துகொள்வதே பாதுகப்பானது என்று தோன்றுகிறது.
உண்மையான கலையுழைப்பைச் செலுத்தும் கலைஞரை ஊக்குவிக்காதவரை, நசிவுப்பண்டங்களை ஒதுக்கி தரமான படைப்புக்கள் வருவதை உறுதிப்படுத்தாதவரை, ஆபாசப்பண்டங்கள் உண்மையன கலைப்படைப்புக்களை ஒதுக்கிதள்ளும் நிலையை மாற்ற முடியாதவரை, படைப்பொன்றின் மொத்த பயனும் படைப்பாளிக்கும், மக்களுக்கும் ஆரோக்கியமான முறையில் ப்கிர்ந்தளிக்கப்படாதவரை எந்தவொரு காப்புரிமையும், புலமைச்சொத்துரிமையும் பெரு முதலாளிகளின் உரிமைகளாக மட்டுமே இருக்கும்.
இப்பரப்பில் மேலும் வாசிக்க:
mauran.blogspot.com/2008/03/
en.wikipedia.org/wiki/Digital_
www.defectivebydesign.org
drm.info
mauran.blogspot.com/2008/10/


